அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மலையேற்றம் தொடக்கம் - பாம்பின் சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் செய்தி/தகவல் : பாய்மரக் கப்பல்
பயணம் மீதான எனது காதல் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் தினமலர் இணைய நாளிதழில் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. அந்தச் செய்தியிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு…
கடலுாரை சேர்ந்தவர் அழகிரிசாமி மகள் ரூபா, 32; கடலுாரில் பள்ளி படிப்பை முடித்த இவர், சென்னையில் பொறியியல் படித்தார். கடற்படை பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய அவர், கல்லுாரியில் படிக்கும்போதே, என்.சி.சி.,யில் சேர்ந்து, அதற்காக தயாரானார்.
அவர் விரும்பியபடியே, 2018ம் ஆண்டு இந்திய கடற்படையில் ஆயுதங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர் பதவிக்கு, தேர்வு செய்யப்பட்டார். தான் விரும்பிய பணியில் சேர்ந்தது முதல், தன் தனித்தன்மையை வெளிப்படுத்தி வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில், இந்திய கடற்படை பாய்மர கப்பல், ஐ.என்.எஸ்.வி., தாரிணியில் கடல் கடந்த நீண்ட பயணத்தை முடித்த முதல் பெண்கள் என்ற சாதனையை, கேரளாவைச் சேர்ந்த கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் தில்னாவோடு சேர்ந்து படைத்துள்ளார்.
முழுச் செய்தியும் சுட்டி கீழே…
கடல் வழியாக பாய்மர கப்பலில் உலகை வலம் வரும் கடலுார் மங்கை
******
பழைய நினைப்புடா பேராண்டி : சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் அரங்கனின் சீர்
2018-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் அரங்கனின் சீர் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
தை மாத சமயத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு திருவரங்கத்தில் இருக்கும் அரங்கன், அண்ணன் சீர் தரும் வைபவம் தை மாதத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த முறை திருவரங்கம் சென்றபோது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது [ஜனவரி 31]. சமயபுரத்திலிருந்து மாரியம்மனின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக சமயபுரத்திலிருந்து புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் வழியாக திருவரங்கம் கொண்டு வருவார்கள். கொள்ளிடம் ஆற்றின் உள்ளே ட்ராக்டர் கொண்டு வாகனம் இழுத்து வரப்படும். வழியெங்கும் உற்சாகம் தான்.
சமயபுரம் மாரியம்மனின் உற்சவ மூர்த்தி வரும் சமயத்தில் இம்முறை கொள்ளிடம் ஆற்றின் இக்கரையிலிருந்து கணுக்கால் அளவு மட்டுமே இருந்த தண்ணீரைக் கடந்து மண்டப வாசலுக்குச் சென்று விட்டோம். மண்டபத்திற்குப் போவதற்கு முன்னர் ஆற்றில் தீர்த்தவாரி. அவை முடிந்த பிறகு ட்ராக்டர் ஓட்டிக்கொண்டு வந்தவருக்கும் மற்றவர்களுக்கும் மாலை மரியாதை, மாரியம்மனின் பிரசாதங்கள் கொடுக்கப்பட்டு, மாரியம்மன் மண்டபத்தில் எழுந்தருளினார். பெரும்பாலும் அரங்கனின் சீர் மாலை நேரத்தில் கொடுத்து விடுவார்கள். ஆனால் இம்முறை, அன்றைய தினம் சந்திர கிரகணம் என்பதால், இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் அரங்கனின் சீர் மேளதாளத்தோடு கொண்டு வரப்படும் என்பதால் மாரியம்மனை தரிசித்து வீட்டுக்குப் புறப்பட்டோம்.
திருவரங்கத்தில் இந்த நிகழ்வு சமயத்தில் கொள்ளிடம் ஆற்றுக்குள்ளேயே பந்தல்கள் போடப்பட்டு மண்டபங்கள் அமைத்து சமயபுரம் மாரியம்மனின் உற்சவ மூர்த்தி வைக்கப்பட்டிருக்க, திருவரங்கம் அரங்கன் கோவிலிலிருந்து அரங்கனின் உற்சவ மூர்த்தி மேளதாளத்துடன், தங்கைக்குச் சீரோடு வர அண்ணன் அரங்கனையும் தங்கை மாரியம்மனையும் பக்தர்கள் ஒரு சேர தரிசித்து மகிழ்வார்கள். அண்ணன் கொண்டு வந்த சீரை தங்கை மாரியம்மனுக்குக் கொடுத்த பிறகு பல்வேறு நிகழ்வுகள் நடக்கும். பின்னர் அவரவர் கோவிலுக்குத் திரும்புவார்கள். இம்முறை நிகழ்வுகள் இரவு முழுவதும் இருந்தன!
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் தகவல் : ஒகாபி
சமீபத்தில் படித்த தகவல் ஒன்று இதுவரை அறிந்திறாத ஒரு உயிரினம் குறித்தது. காங்கோ நாட்டில் இருந்த/மிகவும் அரிதாக இருக்கும் விலங்கினங்களில் ஒன்று இந்த ஒகாபி என்று தெரிகிறது. பார்ப்பதற்கு ஒட்டகச்சிவிங்கியின் ஒன்று விட்ட தம்பி/தங்கை போல தெரியும் இந்த விலங்கு அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சில காணொளிகளும் நிறைய தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. அவற்றிலிருந்து சில தகவல்களை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களுக்கும் விருப்பமிருந்தால் இந்த உயிரினம் குறித்த தகவல்களை கீழே உள்ள சுட்டி வழி படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன். ஸ்வாரஸ்யமாக தகவல்களாக இருக்கிறது!
Okapi | San Diego Zoo Animals & Plants
******
இந்த வாரத்தின் நிழற்படம்/கவிதை : அன்பு
முகநூலில் நண்பர் விஜயகுமார் வேல்முருகன் அவர்கள் பகிர்ந்த படம் ஒன்றும் அதற்கான அவரது கவிதையும் உங்கள் பார்வைக்கு…
இணையத்தின் இணைப்பை துண்டித்து
இதயத்தின் துடிப்பை உணர்வோம்..
வலைதள வலையை கடந்து
வசந்தத்தின் இனிமையை ரசிப்போம்..
உன் விழியை என்விழி நோக்க
என்விழியை உன்விழி நோக்க
கரங்கள் கோர்த்து அலைகடல் கரையில் நடப்போம்..
காதல் கொள்வோம் உணர்வோடு காதல் கொள்வோம் இனிதாக
இருவரும் காதல் கொள்வோம். அன்பே!
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : பணி ஓய்வு
சென்ற வாரத்தில் நெடுநாள் நண்பர் ஒருவர் தன் விருப்பமாக பணி ஓய்வு பெற்றார். காரணம் பணியில் இருக்கும் சிக்கல்களும் அழுதங்களும். சாதாரணமாக அரசுப் பணி என்றால் மிகவும் சுலபம் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது இங்கே. ஆனால் இதில் இருக்கும் மன அழுத்தங்கள் பலருக்கும் புரியாதவை. சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நண்பருக்கு பல விதங்களில் வேலையின் காரணமாக மன அழுத்தங்கள். ஒரு நிலையில் அது தாங்க முடியாமல், ஓய்வு பெற இரண்டு வருடங்களுக்கு மேலாக இருக்கையில் தற்போதே விருப்ப ஓய்வு பெற்று விட்டார். பல விஷயங்கள் வெளியே சொல்ல முடியாதவையாக இருக்கிறது. ஆனாலும் இவை எல்லாம் தேவையில்லாத ஆணியாக இருப்பதால் பிரச்சனைகள் இன்றி பணி ஓய்வு பெற்றுக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார். இப்போது இப்படி விருப்ப பணி ஓய்வு பெறுவது நிறையவே நடக்கிறது என்பதையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. அவருக்கு நண்பர்கள் சார்பாக Louis Philippe Blazer ஒன்று பரிசளித்தோம். அவர் எங்களுக்கு கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் ராணிசா உணவகத்தில் இரவு விருந்து அளித்தார்.
******
இந்த வாரத்தின் நினைவுகள் : காசி தமிழ் சங்கமம்
இன்று முதல் 24-ஆம் தேதி வரை காசி மாநகரில் மூன்றாம் காசி தமிழ் சங்கமம் நடக்க இருக்கிறது. இந்த முறையும் நண்பர் அங்கே சென்று இருக்கிறார். சென்ற காசி தமிழ் சங்கமத்தில் (டிசம்பர் 2023) கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் காசி மாநகரில் தங்கியதும், அங்கே பார்த்த ஆலயங்கள், சுவைத்த உணவுகள், பெற்ற அனுபவங்கள் என அனைத்தும் மனதில் இனிய நினைவுகளாக இன்றைக்கும். அந்த நினைவுகளை இங்கேயும் வாரணாசியில் ஒன்பது நாட்கள் என்ற தலைப்பில் பதிவுகளாக பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம்! இந்த முறையும் அழைப்பு வந்தாலும் அங்கே செல்ல முடியாத சூழல். அது சரி வருடா வருடம் காசிக்குச் செல்ல முடியுமா என்ன? :) வாய்ப்பு கிடைத்த வரை சந்தோஷம் தான்.
******
இந்த நாளின் ரசித்த காணொளி : எதுவும் வீணல்ல…
பெரிய பெரிய ஆலயங்களில் டன் கணக்கில் தினம் தினம் பூக்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவை எல்லாம் பூமியில் போடப்படுகின்றன. நதிகளில் போடுவதும் உண்டு. ஆனால் அந்தப் பூக்களை வைத்து விதம் விதமான பொருட்களைத் தயாரிக்கிறார் - மறு சுழற்சி முறையில். காணொளியில் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது. இது நல்லதொரு முயற்சியாக எனக்குத் தோன்றியது. காணொளி ஹிந்தியில் தான் இருக்கிறது என்றாலும், செய்முறைகளை காணொளி வழி பார்த்து ரசிக்கலாம், புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளாலாம். பாருங்களேன்.
https://www.facebook.com/watch/?v=966066488865840
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
15 ஃபிப்ரவரி 2025
Retirement matter was superb and regarding cuddlore was very interesting one
பதிலளிநீக்குஅலுவலக அழுத்தங்கள் அதிகம் தான் அரசியல் அங்கும் புகுந்து பழிவாங்குதல்கள் என்பது ஒரு சாதாரண வினையாகிவிட்டது.
பதிலளிநீக்குJayakumar
பாய்மர நங்கை!! சூப்பர் செய்தி. சுவாரசியமானதும் கூட.
பதிலளிநீக்குஅரங்கனின் சீர் பதிவு வாசித்த நினைவு இருக்கிறதே. இப்பவும் பார்த்துவிட்டேன். கமென்ட் இருக்கு
ஆஹா!! ஒகாபி பத்தி நானும் எடுத்து வைத்திருக்கிறேன். டாப்பிர் பற்றியும்.
கீதா
கவிதை நன்று.
பதிலளிநீக்குஅலுவலக அழுத்தங்கள் பற்றி நிறைய அனுபவங்கள் உண்டு. அதுவும் அரசு அலுவலகங்களில். அங்கும் அரசியல். இப்போது ரொம்பவே அதிகமாகிவிட்டது,
காசி தமிழ் சங்கமம் - உங்கள் பதிவுகள் நினைவுக்கு வருகின்றன.
எதுவும் வீணல்ல…: அசத்திவிட்டார் அந்த இளைஞர்!!! பிரமிக்க வைக்கிறார். அசாத்தியமான வித்தியாசமான சிந்தனை. எத்தனை எத்தனை பொருட்கள் செய்கிறார் கோயில்களில் இருந்து இப்படிப் பெறப்படும் பூக்களில் இருந்து!!! ரொம்ப ரசித்துப் பார்த்தேன் ஜி. இதில் பொருட்கள், அதனால் ஒரு சிறிய வாழ்வாதாரம் கிடைக்கப் பெறும் நபர்கள் என்று ....ஆம் எதுவுமே வீணல்ல!
மிகவும் ரசித்த ஒன்று இன்று.
கீதா
காப்பி வித் கிட்டு பல வித தகவல்களுடன் கண்டோம்.
பதிலளிநீக்குமுதுமைபடம் பார்க்கும்போது நெஞ்சை அழுத்துகிறது.
முதுமையில் காதலுடன் சேர்ந்து நடப்பதும் வரம்தான்.
ரூபாவை பாராட்டுவோம்.
பதிலளிநீக்குசமயபுரம் அம்மன் கோவில் சிறுவயதில் சென்று வந்தது. இப்போது சமீபத்தில் பார்த்தபோது (ஆம், தாண்டிச் சென்றபடி பார்த்தபோது) நிறைய மாறி விட்டது அரங்கனுக்கு அம்மனும் அண்ணன் தங்கச்சியா? அட!
என்று அப்போது எழுதி இருந்தாலும், அப்புறம் சென்று வந்து விட்டேன்!!
விஜயகுமார் ரசித்தேன்.
பதிலளிநீக்கு//சாதாரணமாக அரசுப் பணி என்றால் மிகவும் சுலபம் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது இங்கே. ஆனால் இதில் இருக்கும் மன அழுத்தங்கள் பலருக்கும் புரியாதவை. //
உண்மையிலும் உண்மை.
மிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குஅன்பு பகிர்ந்த படமும், கவிதையும் மிக அருமை.
அழிந்து வரும் உயிரினங்கள் கவலை அழிக்கிறது.
காசி பதிவு நினைவில் இருக்கிறது.வாய்ப்பு கிடைத்த வரை சந்தோஷம் தான். மறுமுறை வாய்ப்பு கிடைத்தால் போய் வரலாம், எல்லாம் அவன் செயல்.
காணொளி என்னை கவர்ந்தது. எதுவும் வீணாகுவதில்லை என்பது மகிழ்ச்சி. நான் செடிகளுக்கு உரமாக போடுவேன். எத்தனை பொருட்கள் தயார் செய்து இருக்கிறார்கள். எல்லாம் அழகு.
வணக்கம், நீங்கள் எந்த அரசு துறையில் என்ன வேலை பார்க்கிறீர்கள்
பதிலளிநீக்குதகவல்களும் தொகுப்பும் நன்று.
பதிலளிநீக்கு