திங்கள், 4 ஜனவரி, 2021

ராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு ஸ்வாரஸ்யமான பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பலகீனமான மனங்களே சோம்பலிடம் தஞ்சம் அடைகின்றன. முட்டாள்களின் சுகமான பொழுதுபோக்கு தான் சோம்பல். 


******


இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே வெளியில் சென்று சாப்பிடுவது குறைந்து விட்டது. அதுவும் மார்ச் மாதத்திலிருந்து தீநுண்மி காலம் ஆரம்பித்து விட்டதால் வெளியே சென்று சாப்பிடுவதே இல்லை. சற்றேறக்குறைய பத்து மாதத்திற்குப் பிறகு இந்த சனிக்கிழமை அன்று மதிய உணவிற்காக வீட்டின் அருகே இருக்கும் கனாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள ஒரு ராஜஸ்தானி உணவகத்திற்குச் சென்று இருந்தோம். என் நண்பர் ஒரு உணவுப் பிரியர் - விதம் விதமாக உணவுகளைச் சுவைத்து ருசிப்பதில் அதீத ஈடுபாடு உள்ளவர்.  இந்த உணவகம் சமீபத்தில் திறந்திருப்பது பற்றி அறிந்தபோதே அது பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.  சனிக்கிழமை மதியம் வந்தபோது மதிய உணவிற்காக அந்த உணவகத்திற்குச் செல்லலாமா என்று கேட்டபோது, உடனே புறப்பட்டுவிட்டோம். வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரம் தான் இந்த உணவகம்.

உணவகத்தின் பெயர் என்ன என்று தானே கேட்கிறீர்கள்?  ”ராணிசா”  என்பது தான் அந்த ராஜஸ்தானி உணவகத்தின் பெயர். பாரம்பரிய ராஜஸ்தானி உணவுகள் இந்த உணவகத்தில் கிடைக்கிறது.  இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் இந்த உணவகத்தினை திறந்து இருகிறார்கள்.  உணவகத்தின் Ambience மிகவும் நன்றாக இருக்கிறது. உள்ளே நாம் உணவு உட்கொள்ளும் சமயத்தில் ஒரு பாரம்பரிய இசைக் கலைஞர் தனது இசைக்கருவியை இசைத்தபடி பாடலும் பாடுகிறார். இசையைக் கேட்டபடியே பாரம்பரிய உணவினை உண்பது ஒரு ரம்மியமான உணர்வு!  உணவு பற்றி சொல்லவே வேண்டாம் - மிகவும் சிறப்பாக, சுவையாக இருந்தது அவர்கள் கொடுத்த உணவு!  உணவுப் பட்டியல் மிகவும் நீளமானது!  அந்தப் பட்டியலைப் பார்க்கும் முன்னர் அவர்கள் உணவு பரிமாறிய தட்டினைப் பார்த்து விடலாம் வாருங்கள்! கீழே அந்த தட்டின் படம் சேர்த்திருக்கிறேன் - அழகாக இருக்கிறது அல்லவா?


அது சரி, தலைப்பில் என்னவோ “பதாரோ சா” என்று எழுதி இருக்கிறீர்களே அது என்ன என்று நீங்கள் கேட்கலாம்! “ப(dh)தாரோ”, “ப(dh)தாரியே” என்ற சொல்லுக்கு வாருங்கள் என்ற அர்த்தம்! பாரம்பரிய ராஜஸ்தானி உடை, தலைப்பாகை அணிந்த பணியாளர்கள், அதே போல பாரம்பரிய உடை அணிந்த இசைக்கலைஞர் என மிகவும் சிறப்பாக இருக்கிறது இந்த உணவகம்.  தேவையில்லாத கூச்சல்கள் இல்லை! பணியாளர்கள் கூட உள்ளே இருக்கும் மற்ற பணியாளர்களை அழைக்க Sign Language தான் பயன்படுத்துகிறார்கள்! “இரண்டு ப்ளேட் பூரி” என்று சத்தமாக குரல் கொடுப்பது இல்லை! பூரி என்று சும்மா சொன்னாலும், இங்கே கிடைப்பது (th)தாலி முறை! (th)தாலி என்றால் தட்டு - ஒரு ராஜஸ்தானி (th)தாலி சொல்லி விட்டால், அன்றைய மெனுவில் இருக்கும் அனைத்து வகை உணவுகளும் அடக்கம்! ஒவ்வொரு நாளும் மெனுவில் மாற்றமும் உண்டு! 


நாங்கள் சென்று சேர்ந்ததும், கைகளை சுத்தம் செய்து கொள்ள முதலில் எலுமிச்சை Flavour-இல் ஒரு  Hand Sanitiser! பிறகு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள ஒரு பெரிய பித்தளை ஜக் எடுத்துக் கொண்டு வந்து, வித்தியாசமான வடிவில் பித்தளைக் கூடை போன்ற ஒரு பாத்திரத்தினையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் விடும்போது கூடைக்கு நேரே கைகளை நீட்டி நம் கைகளை சுத்தம் செய்து கொள்ளலாம்! பிறகு ஒரு அழகிய தட்டு, கிண்ணங்களோடு நம் முன்னர் வைத்து, ஒவ்வொன்றாக பெயரைச் சொல்லிச் சொல்லி உணவு வகைகளை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்!  நீண்ட பட்டியல் அது!  உணவு வகைகளை வைக்கும்போது நான் காணொளி எடுக்க நினைத்தும் எடுக்கவில்லை. ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்ததோடு சரி.  காணொளியாக இணையத்தில் கிடைத்தது - அதைக் கீழே இணைத்திருக்கிறேன்.




நான்கு விதமான சட்னிகள், ஆறு வித சப்ஜி, மூன்று வகை ரொட்டி, மூன்று வகை இனிப்பு, கிச்சடி, சாதம் என தொடர்ந்து பல வித உணவு இந்த ராஜஸ்தானி தாலியில் உண்டு - ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது! முடிந்தவரை நினைவில் வைத்து இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன் - 1.  வெங்காயம், 2. எலுமிச்சை துண்டம் 3.  பீட்ரூட் துண்டுகள், 4. கொத்தமல்லி+புதினா சட்னி, 5. பூண்டு சட்னி, 6. இனிப்பு சட்னி, 7. அப்பளத் துகள்கள் (Paappad Choori), 8. பச்சை மிளகாய் துண்டுகள் 9. ஊறுகாய், 10. டோக்ளி (Dhokli), 11. வெஜ் கபாப், 12. (Dh)தால் (B)பாட்டி (CH)சூர்மா 13. வெல்லத் துகள்கள், 14. நெய் - இது வரை சொன்னது ஸ்டார்ட்டர் மட்டுமே! இன்னும் மெயின் கோர்ஸ் இருக்கிறது!!  15.  கோதுமை ரொட்டி, 16.  சோள ரொட்டி, 17. பராட்டா, 18. பூரண் போளி 19. Bபாஜ்ரா கிச்சடி (கம்பு கிச்சடி) 20. மட்டர் புலாவ் 21. சர்சோன் கா சாக், 22. ஷாஹி பனீர் 23. ஆலு ரசீலி சப்ஜி 24.பஞ்ச்மேல் (dh)தால் 25. பதோட் கி சப்ஜி 26. ராய்தா 27.  மால் புவா 28. குலோப் ஜாமூன் 29. பைனாப்பிள் ஹல்வா 30. மோர்!  சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்குகிறது.   சாப்பிட்டு முடித்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்! 



மேலே சொல்லி இருக்கும் அத்தனையும் Unlimited - எது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்! இத்தனைக்கும் சேர்த்து எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி விடுகிறேன்!  ஒரு ராஜஸ்தானி தாலியின் விலை (வரிகள் உட்பட!) ரூபாய் 450/- (ஒரு நபருக்கு!)  அனைத்தும் ருசி பார்த்தாலே வயிறு நிறைந்து விடும் அபாயம் உண்டு.  ஆனாலும் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடலாம்!  நான் சில உணவுகளை மட்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிட்டேன் - குறிப்பாக பைனாப்பிள் ஹல்வா மற்றும் ரொட்டி!  சின்னச் சின்ன ரொட்டிகள் என்பதால் நான்கு ஐந்து சாப்பிடலாம்!  மதிய நேரத்தில் சுவையான விருந்து இந்த ஞாயிறில் அமைந்தது.  உணவு உண்டு முடித்தபின் இசைக்கலைஞருக்கு சிறிது சன்மானமும், உணவு பரிமாறியவர்களுக்கு சிறிது சன்மானமும் கொடுத்து, உணவின் தரத்தினையும் பாராட்டி விட்டு புறப்பட்டோம்.  இந்த உணவகம், கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் ஜெயின் chசாவல் வாலே என்று பழைய உணவகம் ஒன்றின் உரிமையாளர்களால் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.  ஜெயின் Chசாவல் வாலே கடையும் இப்போது திறந்திருக்கும் கடைக்கு பின் சாலையில் இருக்கிறது.  


தில்லி வந்தால், வரும் வேலை இருந்தால், நிச்சயம் இங்கே சென்று பாரம்பரிய ராஜஸ்தானி உணவினை ருசிக்கலாம்!  நானும் இங்கே இருக்கும் பட்சத்தில், முன்தகவல் தந்தால் அழைத்துச் செல்வேன்! :) 


என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!  மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ் 

புது தில்லி


22 கருத்துகள்:

  1. தில்லிதானே வந்துடலாம் ஒரு விசாவும் டிக்கெட்டும் அனுப்பி வைச்சிடுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுப்பிடலாம் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ராஜஸ்தானி உணவகம் சென்னையில் ராயப்பேட்டை அருகிலுள்ள மால் ஒன்றில் இருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு உறவினர்களைக் கூப்பிட்டு (10-12 பேர்கள்) விருந்தளித்தேன். அப்போ நான் டயட்டில் இருந்தபோதும் வற்புறுத்தலுக்காக நானும் சாப்பிட்டேன். இந்த உணவு நாம் சாப்பிட்டுக் கட்டுப்படியாகாது (உடல் நலத்துக்கு) என்பதுதான் என் மனதில் உதித்த எண்ணம். நெய், அத்தனை இனிப்பு வகைகள். ஏதாவது ஐந்து ஐட்டங்களை ரசித்து உண்ணலாம். தில்லியல் நான் பிகானிர்வாலா(?) உணவகத்தில் 200 ரூபாய்க்குச் சாப்பிட்ட மதிய உணவுதான் மனதில் நிற்கிறது.

    காலையில் வித வித உணவுவகைகள் படிக்க ஆசை வருவதென்னவோ உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிகானேர்வாலா உணவகங்கள் தில்லியில் பல இடங்களில் இருக்கிறது. ஏதாவது ஒன்றில் நீங்கள் சாப்பிட்டிருக்கலாம்! சில இடங்களில் நன்றாக இருக்காது! சில வருடங்களுக்கு முன்னர் கரோல் பாக் பகுதியில் பூசா ரோடில் ஒரு பிகானேர்வாலா திறந்திருக்கிறார்கள். அங்கே உணவு நன்றாக இருக்கிறது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. எங்க போனாலும் போட்டோ எடுத்துவைத்துக்கொள்வேன். தேடிப்பார்த்து அதனைப் பகிர்கிறேன். உங்களுக்கு அது எந்த இடத்தில் இருந்தது என்று தெரிந்துவிடும்.

      நீக்கு
    3. படம் கிடைத்தால் அனுப்பி வையுங்கள் நெல்லைத் தமிழன். பார்க்கலாம் தெரிகிறதா என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சார்.
    சென்னையில் இது போன்று ஒரு ராஜஸ்தானி அன்லிமிட்டட் உணவு சாப்பிட்டிருக்கிறேன்.
    அது ஒரு சுற்றுளா இடம், பெயர் சாந்த்னிசௌக் என்று நினைக்கிறேன்.
    ஆங்ஙாங்கே விதவிதமாய் ரொட்டி, மோர் வகைகள் இருந்தன, ஒட்டக சவாரியும் இருந்துச்சு.
    கடைசியில் சிறந்த உணவு.
    தாங்கள், அஹமதாபாத்திலும் இது போன்ற ஒரு உணவகம் குறித்து எழுதியுள்ளீர்கள்.
    வாழ்வது முக்கியமாக சாப்பிடத்தானே?
    அது குறித்து படிப்பதும் பழைய நினைவுகள் வருவதும் சுவையஆனதே.
    ராஜஸ்தானி உணவு சாப்பிடும்போது, அவர்களின் பிரத்யேக கடி என்ர மோரையும் குடித்தால்தான் எனக்கு உணவு செரிக்கும்.
    இல்லையேல் நெஞ்செரிச்சல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      நீங்கள் சென்றது சௌக்கி தானி என்ற இடமாக இருக்கலாம்! ஜெய்ப்பூரில் தான் முதன் முதலில் அமைத்தார்கள். தற்போது சென்னை தவிர வேறு சில ஊர்களிலும் திறந்திருக்கிறார்கள். முதலில் இருந்த அளவு இப்போது நன்றாக இல்லை.

      அஹமதாபாத் உணவகம் குறித்து நான் எழுதியது உங்கள் நினைவில் இருப்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படத்தை பார்த்தாலே சுவைக்கும் ஆசை வருகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... ஒரு முறை தில்லி வாருங்கள் கில்லர்ஜி. அழைத்துச் செல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஹாஹா... கண்ணைக் கட்டும்படி இருக்கிறதா இந்த உணவுப் பட்டியல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. நாங்களும் உணவகத்தை பார்த்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டது வெங்கட்ஜி. உங்கள் பதிவின் மூலம் தில்லியில் ராஜஸ்தான் உணவகம் பற்றி அறிந்தேன். உங்கள் பதிவு உடனே அங்கு உணவு அருந்த வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று சாப்பிட்டு வாருங்கள் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமை. நாங்கள் டெல்லி வந்து 9 மாதங்கள் ஆகிறது. இப்போது case குறைவாக உள்ளது. ஆனால் border locked. சாப்பிட வேண்டும். நீங்கள் கொடுத்த விவரங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் உணவகம் சென்றேன் கயல் இராமசாமி மேடம். வரும்போது சொல்லுங்கள். சந்திக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆஹா! இப்படி ஒரு உணவகம் இப்போத்தான் இங்கே/தலைநகருக்கு வந்திருக்கா? அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் "ராஜ்போக்" என்னும் பெயரில் இதே மாதிரியான ராஜஸ்தானி உணவகம் இருக்கு. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் கட்டுப்படி ஆகாது. இடமே கிடைக்காது. நாங்க ஒரே முறை குஞ்சுலுவின் பிறந்தநாளைக்கு முன் பதிவு செய்துட்டுப் போய்ச் சாப்பிட்டோம். எனக்கு அவ்வளவு ரசிக்கலை. ஆனால் நல்லவேளையாக எல்லாமே கொஞ்சமாய்க் கொடுத்தார்கள்/பரிமாறினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற ராஜஸ்தானி உணவகங்கள் ஏற்கனவே தலைநகரில் நிறைய உண்டு கீதாம்மா. இந்த உணவகம் புதியது! சுருச்சி என்ற பெயரில் உள்ள உணவகம் பற்றி ஏற்கனவே எழுதி இருப்பதாக நினைவு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. இன்னொரு மஹாராஷ்ட்ரா உணவகத்தில் ஒருத்தருக்கு 2 ரொட்டி தான். மேலே கேட்டால் ஒரு ரொட்டிக்கு 2 டாலர் தனியாகத் தரணும் என்பார்கள். கேட்டால் உங்களுக்காக நான் கஷ்டப்பட்டுப் பண்ணணுமே என்பார் அந்த அம்மா! அதுக்கப்புறமா அங்கே போவதே இல்லை. "தாலி" "போஜன்" என்னும் பெயர்களில் இருந்த குஜராத்தி உணவகத்தில் பூரண் போளியும், இனிப்பு வகைகளும் அருமையாக இருக்கும். இப்போது அதை மூடிவிட்டார்கள். சென்னையில் போக் ரோடில் ஆம்டாவாடி ஓட்டல் இருக்கு! ஒரு முறையாவது போகணும்னு நினைச்சுப் போக முடியலை. ghகாடியாவாடியை விட ஆம்டாவாடி கொஞ்சம் காரம் குறைவாய் இருக்கும். ghகாடியாவாடி கிட்டத்தட்ட ராஜஸ்தானி முறைச் சாப்பாடாகவே கார, சாரமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ரொட்டிக்கு இரண்டு டாலர்! அதிகமாகவே தோன்றுகிறது. இங்கேயும் இப்போதெல்லாம் விலை அதிகமாக ஆகிவிட்டது. தந்தூரி ரொட்டி எனில் இன்னும் விலை அதிகம் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சமீப காலங்களில் வெளிச்சாப்பாடு கொஞ்சம் அதிகம் எங்கள் இல்லத்தில்.  நிலைமை அப்படி!  நீங்கள் சொல்லி இருக்கும் உண்வும் அதுவும் அந்த இடத்துக்கு வந்து அல்லது அதுபோன்ற உணவகத்தில் சாப்பிட ஆசை.  ஆனால் என்ன சொல்லுங்கள்... ஒரு மசால் தோ...சே...ய்...  சத்தங்களுக்கு நடுவில் சாப்பிடுவது போலாகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தம் இல்லாமல் ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்கள் ஸ்ரீராம் - உங்களுக்கும் பிடிக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....