வெள்ளி, 8 ஜனவரி, 2021

Post No.2366: என்ன தவம் செய்தனை...


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மேத்தி மட்டர் மலாய் பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ரசிக்கப்படாத இன்னொரு இளமைப் பருவம் தான் முதுமை!


******

படம்: இணையத்திலிருந்து....

”என்ன தவம் செய்தனை யசோதா…” மெல்லிய ஒலியில் சுதா ரகுநாதனின் குரலில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கோமளவல்லி பாட்டி, பாட்டை கண்மூடி ரசித்தபடி அமர்ந்திருந்தார்.  நாள் முழுவதும் இதே பாடல் தான் ஓடிக் கொண்டிருக்கும் பாட்டியின் அறையில்! அது என்னவோ சில வருடங்களாகவே இந்தப் பாடல் தவிர வேறு எதையும் கேட்பதே இல்லை கோமளவல்லி பாட்டி! அதே போல பாட்டி யாரிடமும் பேசுவதே இல்லை - அந்த அறையை விட்டு வெளியே வருவதும் இல்லை.  கடைசியாக அந்த அறையை விட்டு வெளியே வந்து நான்கு வருடங்களுக்கு மேலாகி விட்டது! அறைக்குள் தானாகவே சிறை வைத்துக் கொண்ட அந்த நாள் நன்றாகவே நினைவிலிருக்கிறது கோமளவல்லி பாட்டிக்கு. 


”டொக்… டொக்…” கதவு தட்டப்படும் ஓசை. ஒரு முறைக்கு இரு முறை தட்டுவதிலிருந்தே பாட்டிக்கு தெரியும் யார் வருவது என்று. ”பாட்டிம்மா, இந்தப் பாட்டை எத்தனை தடவை தான் கேட்பீங்களோ?  உங்களுக்கு அலுக்கவே இல்லையா?” என்று கேட்டபடி உள்ளே வந்தார் அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணான சுந்தரி.  பாட்டியிடமிருந்து எந்த வித பதிலும் வராது என்பது தெரிந்தே இருந்தாலும் சுந்தரி பாட்டியிடம் பேசுவது தவறுவதே இல்லை.  பாட்டிக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து, அறையைச் சுத்தம் செய்து வைத்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு செல்வார் சுந்தரி. பாட்டிக்கு தினம் தினம் பணிவிடை செய்வதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார் மருத்துவர் சுமந்த் - கோமளவல்லி பாட்டியின் ஒரே மகன்.  


பணிப்பெண்ணை ஏற்பாடு செய்து கொடுத்ததோடு தன் வேலை முடிந்து விட்டது என்ற நினைப்பு பாட்டியின் மகனுக்கு! நகரத்திலேயே பிரபல மருத்துவர் - ஒரு நாளைக்கு 30 மணி நேரம் இருந்தால் கூட போதாது - அத்தனை பேர் வரிசை கட்டி வந்து கொண்டே இருப்பார்கள் அவரது மருத்துவமனைக்கு.  காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரது மனைவியும் மருத்துவரே.  அவருக்கும் நேரம் இல்லை என்பதால் வீட்டு வேலைகள் எதுவும் அவர் கண்டுகொள்வதில்லை. பணியாளர்கள் தான் வீட்டை பராமரித்து வருகிறார்கள். ஒரே மகள் - பாட்டியிடம் அவர் பேசிக் கொண்டிருந்த போது ஒரு நாள் பிரச்சனை வெடித்தது!  


”தோ பாரும்மா… என்னோட பொண்ணு கிட்ட பேசணும்னா இனிமே நீ இங்க்லீஷ்-ல தான் பேசணும்… தமிழ்ல பேசி என் பொண்ண கெடுத்துடாதே! இங்க்லீஷ் தான் முக்கியம்! தமிழ் தெரிஞ்சு அவ என்ன பண்ணப் போறா!  இதோட நிறைய தடவை உனக்கு சொல்லிட்டேன்! அப்படி தமிழ்-ல தான் பேசுவேன்னு நீ சொன்னா, இனிமே என் பொண்ணுகிட்ட பேசவே கூடாது சொல்லிட்டேன்!”  கோபமாகச் சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர் சுமந்த். 


இத்தனைக்கும் சுமந்த் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து படித்து, பிறகு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து தற்போது அரசினர் மருத்துவமனையில் பணி புரியும் ஒரு மருத்துவர் தான் .  தமிழ மீடியத்தில் பன்னிரெண்டாம் வரை படித்து வளர்ந்தவர் தான்.  ஆனால் தன் மகளுக்கு மட்டும் ஆங்கிலத்தினை மட்டுமே கற்பிக்கத் துடிக்கிறார். கிராமத்தில் பிறந்த வளர்ந்த அவரது தாயாரால் என்ன பதில் சொல்ல முடியும்! சோகமாக, எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார் - தன் மகனை வளர்க்க தானும், தனது கணவரும் பட்ட கஷ்டங்களை நினைத்தபடியே!


கிராமத்தில் தங்களது வயல்வெளியில் வேலை செய்து கிடைத்த பணத்தில் தான் அவர்கள் மகனை நன்கு படிக்க வைத்தார்கள்.  கிராமத்தினை விட்டு வெளியே சென்றதே கிடையாது என்பதால் உலக விஷயங்களில் அத்தனை சாமர்த்தியம் இல்லை.  மகன் அரசு மருத்துவமனையில் மருத்துவராகச்  சேர்ந்த பிறகு கூட அவர்கள் கிராமத்தினை விட்டு நகருக்குச் சென்று மகனுடன் இருக்கவில்லை.  கிராமத்திலேயே தங்கி விட்டார்கள்.  கோமளவல்லி பாட்டியின் கணவர் இறந்து விட வேறு வழியில்லாமல், தனது ஒரே மகனின் நகரத்து வீட்டிற்குச் வந்தார்.  


ஆனால் கிராமத்துச் சூழலில் இருந்த பாட்டியால் நகரத்து விஷயங்களில் ஈடுபடப் பிடிக்கவில்லை. கிராமத்தில் தொடர்ந்து வேலை செய்து கொண்டும், அக்கம் பக்கத்தினர் இடையே பேசிக் கொண்டும், வேலைக்காரர்களை சமாளித்துக் கொண்டும் இருந்த மூதாட்டியால் சும்மா இருக்க முடியவில்லை.  மகனோ, மருமகளோ மூதாட்டியிடம் பேசுவது கூட இல்லை!  அவர்களுக்கு, மருத்துவமனை, வீடு, நண்பர்களுடனான அரட்டை, கைபேசியில் இருக்கும் பலவித வசதிகளில் உலவுவது போன்றவற்றிற்கே நேரம் இல்லை.  மருமகளை விட்டு விடுங்கள், மகனே பேசுவதில்லை என்பதில் மூதாட்டிக்கு மன வருத்தம் தான்.  வேலைக்காரர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் என யாரிடமும் பேசக் கூடாது, சொந்த பேத்தியிடமும் பேசக் கூடாது என்று கட்டளைகள் தொடர்ந்து மகனிடமிருந்தும் மருமகளிடமும் இருந்தும் வர கோமளவல்லி பாட்டியால் இந்தச் சூழலை விட்டு வெளியே, மீண்டும் தனது கிராமத்திற்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.   


நான்கு வருடத்திற்கு முன்னர் இந்த எண்ணம் வந்தபோது, எப்படியாவது மகன் வீட்டில் இருக்கும்போது கிராமத்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையைச் சொல்ல நினைத்திருந்தார் கோமளவல்லி பாட்டி.  ஆனால் மகனைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.  அவருக்குப் பணிவிடை செய்ய வந்த சுந்தரியிடம் தான் கிராமத்து வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையைப் பகிர்ந்து கொண்ட போது, சுந்தரி அவரை அதிர்ச்சியுடன் பார்த்து சொன்ன விஷயம் தான் கோமளவல்லி பாட்டியை பேசாமல் செய்து விட்டது! அப்படி அவருக்குத் தெரிந்த அதிர்ச்சியான விஷயம் அப்படி! 


கிராமத்தில் அவரும் அவரது கணவரும் இருந்த வீட்டில் தற்போது அவரது மருமகளின் தந்தை இருக்கிறார் என்பதும், அவர்களது வயல்கள் முழுக்க அவர் வசம் ஒப்படைக்கப்பட்டு, வயல்கள் முழுவதும் தோண்டப்பட்டு பெரிய மீன் குட்டைகள் அமைத்து மீன்கள் விற்பனை/ஏற்றுமதி தொடங்கி இருக்கிறார் என்பதும் சுந்தரி சொல்லித் தான் கோமளவல்லி பாட்டிக்கே தெரிய வந்தது!  எத்தனை வருடம் பாடுபட்டு சேர்த்து, தங்களுக்கு வருமானமும், உணவும் அளித்து வந்த வயல்வெளிகளை அழித்து இப்படி மீன் வியாபாரம் செய்கிறார்கள் என்பதே பாட்டிக்கு பெரிய அதிர்ச்சி!  அது மட்டுமல்லாது, தான் உயிருடன் இருக்கும்போதே தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தனது மகன் இப்படிச் செய்து விட்டானே என்ற விஷயமும் நெஞ்சை அழுத்த, அன்று பேசுவதை நிறுத்தியவர் தான் கோமளவல்லி!  


இந்த விஷயத்தினை தன்னிடம் சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை நம் மகன் நன்றாக இருந்தால் போதும் என்று மனதைத் தேற்றிக் கொண்டிருப்பார் பாட்டி - ஒரு பணிப்பெண் மூலம் தன் வீட்டு விஷயம் தெரியவந்தபோது அவரால் இந்தப் பேரிடியைத் தாங்கவே முடியவில்லை.  அன்று அந்த அறையில் தன்னைத் தானே சிறை வைத்துக் கொண்டவர் தான் - வெளியே போவதுமில்லை. யாரிடமும் பேசுவதுமில்லை!  


தவம் செய்து பெற்ற மகன் தனக்கு இழைத்த அநீதியை நினைத்து நினைத்து மனதுக்குள்ளே உருகிக் கொண்டிருக்கும் கோமளவல்லி பாட்டியின் அறையில் இதோ இப்போதும் "என்ன தவம் செய்தனை" பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.


*****


இன்றைய பதிவு ஒரு சிறுகதை முயற்சி என்றும் சொல்லலாம் - நடந்த நிகழ்வுகளை, கதை மாந்தர்களின் கதைகளை,  கதை மாதிரி சொல்ல ஒரு முயற்சி. இதற்கு முன்னரும் இப்படி எழுதியது உண்டு. இன்றைய பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்,
வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


26 கருத்துகள்:

 1. பாட்டியின் அதிர்ச்சி நியாயமானதே.   வருத்தமாக இருக்கிறது.  இப்படியும் பணம் பின்னால் பேயாய் அலையும் மனிதர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணம் பின்னால் பேயாய் அலையும் மனிதர்கள் - நிறையவே இருக்கிறார்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வேதனையான விஷயமே முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கண்ணீரே வந்துவிட்டது. இப்படியும் பிள்ளைகள் இருக்காங்க தான். ஆனால் உண்மை முகத்தில் ஓங்கி அறையும்போது வலிக்கத் தான் செய்கிறது. எத்தனை முறையாக இருந்தால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலிக்கச் செய்யும் உண்மை - ஆமாம் கீதாம்மா. இப்படி பலரைச் சந்திக்க நேர்ந்து விடுகிறது எனக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் உண்மை. கதை கண்களில் நீரை வரவழைத்து விட்டது. இந்த மாதிரி உலக விஷயங்கள் தெரியாதவரை ஏமாற்றி வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றாக இன்றைய உண்மை நிலையை தெளிவாக உணரும்படி கதையாக எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கோமளவல்லி பாட்டியின் நிலைகண்டு மனம் கனக்கிறது ஜி.

  இன்றைய டிஜிடல் வாழ்க்கை இப்படித்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை இப்படித்தான் - உண்மை தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. உங்கள் கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெங்க்ட்ஜி.... ஒரு வேளை கதை வரும் மகன் அமெரிக்காவில் இருந்திருந்தால் அம்மா என் மகளிடம் முடிந்த வரையில் தமிழில் பேசுமா என்று சொல்லி இருப்பார்கள்... அந்த பாட்டியோ தங்க்கும் இங்கீலீஷ் தெரியும் என காண்பிப்பதற்காக அந்த பாட்டியும் இங்கிலீஷிலே பேத்தியிடம் பேசிக்க் கொண்டிருப்பார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்காவில் இருந்திருந்தால் - நீங்கள் சொல்வது போல இருந்திருக்கலாம் மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. காலை வணக்கம் நண்பரே

  அழகான சிறுகதையுடன் இந்த நாளை துவங்குகிறேன்.

  இன்றைய சூழலில், மகன்களை பெற்ற பெரும்பாலும் பெற்றோர்கள் கண்டிப்பாக இந்த வலியினை உணர்ந்திருப்பார்கள்.

  அதிலும் “கணவனை தவறிய பின்னர் மனைவி, மனைவி தவறிய பின்னர் கணவர்” என ஒற்றை பெரும் அவதிகள் வேதனைக்குறியதே!!!

  அழகான சிறுகதை ... சில அசலின் நிழ்லகள் தான் இந்த “கோமளவல்லி பாட்டி”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராம. தேவேந்திரன் ஜி. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. இப்படியும் பிள்ளைகள் :( மனம் கனக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் கனக்க வைக்கும் பதிவு தான் மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மனதை நெகிழ வைக்கும் சிறு கதை! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! இன்றைய உலகில் தொடர்ந்து நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் தானென்றாலும் அந்த பாட்டியின் இயலாமையும் தனிமையும் தார்மீக கோபமும் மனதை கனமாக்குகின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதை கனமாக்கும் பதிவு - உண்மை தான் மனோம்மா. இப்படி பல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. ஏதோ தாய்க்கு ஒரு அறை கொடுத்து பணிவிடை செய்ய ஒரு பணியாளரையும் ஏற்படுத்தியிருக்கிறாரே, அந்த வரை சந்தோஷம்! வயது அதிகரிக்கும்போது வரும் மிகப்பெரிய கவலை பணமோ / உடல் நலமோ இல்லை. நாம் யாருக்கும் பிரயோஜனம் இல்லையோ, அதனால் தான் நம்மை யாரும் மதிப்பதில்லையோ.. என்ற எண்ணம் தான். அதுவே இந்த தாய்க்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஏதோ தாய்க்கு ஒரு அறை கொடுத்து பணிவிடை செய்ய ஒரு பணியாளரையும் ஏற்படுத்தியிருக்கிறாரே, அந்த வரை சந்தோஷம்!// உண்மை தான் Bபந்து ஜி. இதையாவது செய்தாரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. ஆகா "சிறுகதை முயற்சி" அருமை. முயற்சி இன்றுமுதல் தொடர் பயிற்சியாகட்டும். தங்களின் கதைகள் ஒவ்வொன்றும் விதைகளாக மாறட்டும். விதைகள் விருட்சமாக வளர்ந்து சமுதாய வளம் பேண வாழ்த்துக்கள்!!!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....