சனி, 30 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல் - லேஹங்கா - இதுவும் கடந்து போகும் - ஓடு கண்ணா ஓடு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட எண்ட ஃப்ளைட் கிங்ஃபிஷர்… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ATTITUDE MATTERS:  DON”T SAY: “NO ONE LIKES ME”.  JUST SAY: “THERE IS NO ONE LIKE ME”.  FEEL THE CHANGE.  SO LIVE YOUR LIFE AS YOU LOVE!


******இந்த வாரத்தின் உணவு - FIRE PAANI POORI:
எனது இந்த வலைப்பூ பக்கத்தில் ஏற்கனவே ஒரு முறை Fire Paan என்பதைக் குறித்து எழுதி இருக்கிறேன்.  பான் என்பது நம் ஊர் வெற்றிலை தான். அந்த வெற்றிலை பயன்படுத்தி, கூடவே சில பல விஷயங்களைச் சேர்த்து இந்த ஊரில் பான் - அதாவது நம் ஊர் பீடா செய்வார்கள்.  அதில் ஒரு வகை தான் ஃபையர் பான் - எரிந்து கொண்டிருக்கும் பீடாவை (பான் - ஐ) பகாசுரன் மாத்ரி நாம் வாயைத் திறக்க அப்படியே உள்ளே வைத்து விடுவார் கடைக்காரர்!  கேட்கும்போதே கிலி தோன்றுகிறது அல்லவா?  இந்த ஃபையர் பான் தில்லியில் நிறைய இடங்களில் உண்டு.  இப்போது அதே மாதிரி ஃபையர் பானி பூரி என்று ஆரம்பித்திருக்கிறார்கள் - தில்லியில் இல்லை - நாக்பூரில்!  இன்னும் தில்லியில் வந்ததாகத் தெரியவில்லை.  வாருங்களேன் இந்த ஃபையர் பானி பூரி எப்படிச் செய்கிறார்கள், எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்று பார்க்கலாம்! ஒரு ப்ளேட் 15 ரூபாய் மட்டுமே!

இந்த வாரத்தின் மின்னூல்:  ஏழு சகோதரிகள் பாகம் 2:

காசிரங்கா வனப்பயண அனுபவம் மிகவும் சிறப்பான அனுபவம். யானை மீது அமர்ந்து ஒரு வனப்பயணமும், திறந்த ஜீப் உள்ளே அமர்ந்து ஒரு வனப்பயணமும் அதிகாலை நேரத்தில் செய்தோம். குறிப்பாக யானை மீது அமர்ந்து சென்ற பயணம் மறக்க முடியாதது. வரிசையாக சென்று கொண்டிருக்கும்போது காண்டாமிருக நடமாட்டம் ஆரம்பிக்கிறது. தனியாக இருக்கும் காண்டாமிருகம் கண்டவுடன் ஐந்து முதல் ஏழு யானைப்பாகர்கள் அதைச் சுற்றி ஒரு வளையமாக யானைகளை நிறுத்தி விடுகிறார்கள். வளையத்திற்குள் காண்டாமிருகம் இருக்க, அது சத்தமில்லாமல் புற்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது – ஒத்தைக்கு ஒத்தையாக இருந்தால் சண்டை போடலாம்! ஆனால் இங்கோ ஒத்தைக்கு – ஏழு! அதனால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு உணவு உண்டபடி, ஆனால் கவனமாக இருக்கிறது. யானைப்பாகர்கள் சுற்றுலா வந்த மனிதர்களை முன்னரே எச்சரித்து விடுகிறார்கள் – பேசக் கூடாது என்று. தேவையான அளவு நிழற்படங்கள் எடுத்துக்கொள்ளலாம் – ஆனால் பேச்சு கூடாது! பேசினால் காண்டாமிருகம் தாக்குதல் நடத்தக்கூடும்! இப்படி ஒரு இடத்தில் சில நிமிடங்கள் நின்று நிழற்படங்கள் எடுத்தோம். அந்தக் காட்சியை பறவைப் பார்வையாய் நிழற்படம் எடுக்க ஆசை வந்தது! ஆனால் அதற்கு இன்னும் உயரமான இடத்தில் இருக்க வேண்டும் – ஒரு வேளை யானை மீது நின்று கொண்டால் எடுக்கலாம்! அதற்கு வழியில்லை! :)


எனது மின்னூல்களில் ஒன்றான ஏழு சகோதரிகள் பாகம்-2-ஐ இது வரை வாசிக்காதவர்கள், தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.   அதற்கான சுட்டி கீழே.


ஏழு சகோதரிகள் (பாகம் 2): அசாம் (Tamil Edition) eBook: Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store


இந்த வாரத்தின் ரசித்த பாடல்:


இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு பஞ்சாபி பாடல். ”மென்னு லேஹங்கா லே dhதே” என்ற பாடல்.  பஞ்சாபிகள் உடைகளுக்கும் உணவுக்கும் அதிகம் செலவு செய்பவர்கள். அவர்களது கலர்ஃபுல் உடைகள் பார்த்தாலே பரவசம் தான் - கொஞ்சம் ராமராஜன் ஃபீல் வந்தாலும், அவர்களுக்கு அம்மாதிரியான உடைகளே அதிகம் பிடித்தவை!  இந்த வாரத்தின் ரசித்த பாடலைப் பாருங்களேன் - நாயகனின் உடை பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கும் புரியலாம்!


இந்த வாரத்தின் எண்ணம்:  


வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பிரச்சனை - ஆனால் எல்லோரும் தமக்கு இருக்கும் பிரச்சனை மட்டுமே பெரிது என்ற நினைவுடன் தங்களை நொந்தபடியே இருக்கிறார்கள். அடுத்தவர்களின் பிரச்சனைகளைப் பார்க்கும்போது தமது பிரச்சனை ஒன்றுமே இல்லை என்று தெரிந்து விடும்.  ஆனால் யாருக்கும் அதை உணர்ந்து கொள்ள விருப்பம் இருப்பதில்லை.  தன் பிரச்சனைகளை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் பலரை நான் பார்க்கிறேன்.  சில சமயங்களில் “அடப் போங்கய்யா நீங்களும் உங்கள் பிரச்சனைகளும்” என்று வாய்வரை சொல்ல வந்தாலும், சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவதே வழக்கமாக இருக்கிறது.  பிரச்சனைகள் யாருக்குத் தான் இல்லை - உணவிலிருந்து உடை வரை, வேலையிலிருந்து சம்பளம் வரை, நோயிலிருந்து நட்பு வரை ஏதோ ஒரு பிரச்சனை அனைவருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது - நாம் நகர்ந்து கொண்டே இருப்போம் - பிரச்சனைகளும் நம்மிடமிருந்து நகர்ந்து கொண்டே இருக்கும்!  மரத்தை வைத்தவன் தண்ணி ஊத்துவான் என்று சொல்வதுண்டே!  நமக்கான பிரச்சனைகளின் தீர்வும் நம்மிடமே இருக்கிறது.  இதுவும் கடந்து போகும் என்பதை என்றைக்கும் நினைவில் வைத்திருந்தால் நலமே! 


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு:


காஃபி வித் கிட்டு பதிவுகளில் இப்படி இதே நாளில் முந்தைய வருடங்களில் எழுதிய பதிவுகளை பகிர்ந்து கொள்வது ஒரு சுகம்.  நாம் எழுதியவற்றை நாமே நினைவு கூர்ந்து பார்க்க முடிகிறது! அன்றைய தினம் எழுதும்போது எழுதியதற்கும், இப்போது அதே விஷயத்தினை எழுதி இருந்தால் எப்படி எழுதி இருப்பேன் என்று யோசிக்கவும் வைக்கும் விஷயம் இந்தப் பின்னோக்கிப் பார்க்கும் விஷயம்.  இந்த வாரம் அப்படி பின்னோக்கிப் பார்த்த பதிவு - ஓடு கண்ணா ஓடு!  பதிவிலிருந்து சில வரிகள் இங்கேயும்.


நம்மில் யாரையாவது ஓடச் சொன்னால் ஒரு நாளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓட முடியும்?  அதிகபட்சம் 2 முதல் 5 கி.மீ ஓடுவோமா? திரு அருண் பரத்வாஜ் -  ஒவ்வொரு நாளும் ஒரு நெடுந்தொலை ஓட்டம் [மாரத்தான்] அதாவது 42.195 கி.மீ சர்வ சாதாரணமாக ஓடிவிடுவார். இந்தியாவின் திட்டக் கமிஷனில் [Planning Commission] வேலை செய்யும் அருண், 41-வயது இளைஞர்.

 

மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன்.  மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, அதாவது அவரது முப்பதாவது வயதில். தான் மாரத்தான் ஓட்டம் ஓட ஆரம்பித்தது, தனது பெண் குழந்தைக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் என்று சொல்கிறார்.   அதற்கு முன்னர், சதுரங்கம், பளுதூக்குதல் என்று முயன்று பிறகுதான் ஓட்டத்தில் மனதையும் காலையும் பதித்து இருக்கிறார்.  அதை சோதித்துப் பார்க்க, ஹரித்வார் நகரிலிருந்து “பா[B]க்பத்” நகருக்கு ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்தில், ஓடியே செல்வது என முடிவு செய்திருக்கிறார்.

 

ஹரித்வார்-பா[B]க்பத் இடையே இருக்கும் 180 கி.மீ தொலைவினை 23 மணி 25 நிமிடங்களில் கடந்து முடித்த அருண் அவர்கள் தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக மாரத்தான் ஓட்டத்தினை தேர்ந்து எடுத்த பின் திரும்பிப் பார்க்கவே இல்லை.  பயிற்சி..பயிற்சி.. மேலும் கடினமான பயிற்சிதான்.

 

மாரத்தான் ஓட்டம் என்பதே கடினம் என நினைக்கும் பலர் உண்டு. ஆனால் அருண் அப்படி இல்லை.  Ultra Marathon என்று சொல்லப்படும் ஓட்டம் அதைவிட அதிக தூரத்தினை தொடர்ந்து ஓடும், அதாவது சில நாட்கள் வரை தொடர்ந்து ஓடி கடக்கும் தூரங்கள் இதில் உண்டு. இந்தியாவின் ஒரே Ultramarathon ஓடுபவர் அருண் தான்.  பயிற்சியாக தினம் தினம் 40 கி.மீ தூரத்தினை சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.


முழுபதிவும் படிக்க ஏதுவாக அப்பதிவின் சுட்டி கீழே!


ஓடு கண்ணா ஓடு


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம்:என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.  நாளை வேறு ஒரு பதிவின் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


22 கருத்துகள்:

 1. பிரச்சனை யாருக்குத்தான் இல்லை. உலகில் பிறந்த எல்லோருக்கும்தான் உண்டு அதை எப்படி சமாளித்து வாழ் முயல்கிறோம் என்பதுதான் முக்கியம்.. வெளிநாட்டில் வாழ்பவன் எல்லாம் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்கின்றான் அவன் தனக்கு உதவிக் கொண்டே இருக்கமாட்டேங்கிறான் என்று உள்ளூர்வாசிகளில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூர் வாசிக்களூக்கோ உதவ் பலர் இருக்கிறார்கள் ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகளை அவ்ர்களே சமாளிக்க வேண்டி இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரச்சனைகள் குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. புதிதாக இருக்கு பானிபூரி விஷயம். சுட்டிக்குப் போக முடியலை என்பதோடு காணொளியும் வரவில்லை. பக்கத்தை ரீலோட் செய்தும் வரலை. பின்னர் வந்து பார்க்கணும். மின்னூல் சுட்டிக்கும் நன்றி. நிழற்படமும் எரியும் பானிபூரி படமும் நன்றாக இருக்கின்றன. மற்றவற்றிற்குப் பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிக்கான இணைப்பு சரி செய்து விட்டேன். முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. அருணுக்கு பஸ், ஆட்டோ செலவு தேவை இல்லையோ... ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கில்லர்ஜி. ஆனால் உடற்பயிற்சிக்கும் தகுந்த உணவிற்கும் செ்லவுகள் உண்டே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நல்லவேளை நான் சாதா பானி பூரியே சாப்பிடுவதில்லை!

  ஏழு சகோதரிகள் - வாழ்த்துகள்.

  ரசித்த பாடல் -  அந்தக் கண்ணாடியைக் குறிப்பிட  விட்டு விட்டீர்கள்.  நம்மூர் திருவிழாக்களில் அந்தக் காலத்தில் பத்து பைசாவுக்கு வாங்குவோமே..   அதுபோல இருக்கிறியாது!

  எண்ணம் :  "உந்தன் சோகம் சொன்னால் உன் ஏக்கம் போய்விடும்.  எந்தன் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்!"  வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

  நிழற்படம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானிபூரி - நானும் சாப்பிடுவது இல்லை. தில்லிக்கு வந்த புதிதில் ஒன்றிரண்டு முறை சாப்பிட்டதுண்டு. நண்பர்களின் வீடுகளில் தயார் செய்வதுண்டு - அப்போது சாப்பிட்டிருக்கிறேன். கடைகளில் சாப்பிடுவது மிகவும் அரிது.

   பத்து பைசா கண்ணாடி - ஹாஹா....

   எண்ணம் - பாடலை நினைவூட்டியது நன்று ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பானிபூரி திறக்கவில்லை. எரிந்து போயிட்டுது போலும். நிழற்படம் மிகவும் அருமை.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிக்கான இணைப்பினை சரி செய்து விட்டேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 7. ஃபையர் பானி பூரி சூப்பர்...!

  இந்த வாரத்தின் எண்ணமும் அருமை ஜி...

  திரும்பும் நிழற்படம் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பஞ்சாபி பாடல் இப்போதுதான் கேட்டேன் நாயகனின் உடைபோல எனக்கும் இரண்டு டஜன் ஆர்டர் கொடுக்கணும் ஜி அட்ரஸ் ப்ளீஸ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு டஜன் போதுமா கில்லர்ஜி? ஹாஹா... இணையத்திலும் கிடைக்கலாம் கில்லர்ஜி. முயற்சி செய்யுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பான் விபரங்கள் உண்மையிலேயே கிலியை தருகின்றன. அதெப்படி தீபம் மாதிரி எரிந்து கொண்டிருப்பதை வாயில் போட்டுக் கொள்வது? (எரியும் கற்பூரத்தை வாயில் போடும் பக்திகள் நினைவுக்கு வருகிறது.) காணொளி எனக்கு இப்போது சிரமபடுத்துகிறது. பிறகு கண்டிப்பாக பார்க்கிறேன். பான் பூரியும் எரியும் நெருப்புடன் இருக்குமா?:)

  பிரச்சனைகளின் எண்ணங்கள் நன்றாக உள்ளது. பின்னோக்கிச் பதிவும் நன்றாக உள்ளது.

  ஏழு சகோதரிகள் மின்னூலுக்கு வாழ்த்துகள்.நிழற் படம் நன்றாக ரசனையுடன் இருக்கிறது. இந்த வார கதம்பம் அருமை. காணொளிகளை பிறகு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவு குறித்த தங்கள் கருத்துகள் மகிழ்ச்சி அளித்தன. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.

   காணொளிகளை முடிந்த போது பாருங்கள் - அவசரமில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மரத்தை வைத்தவன் தண்ணி ஊத்துவான் என்று சொல்வதுண்டே! நமக்கான பிரச்சனைகளின் தீர்வும் நம்மிடமே இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்பதை என்றைக்கும் நினைவில் வைத்திருந்தால் நலமே! //

  உண்மை.

  பதிவு அருமை. நகரத்தார் பிள்ளையார் நோன்புக்கு இப்படி எரிந்து கொண்டு இருக்கும் மாவில் செய்த விளக்கை உண்பார்கள். அது போல் இருக்கிறது "பையர் பானி பூரி''

  ஏழு சகோதரி மின்னூக்கு வாழ்த்துக்கள்.
  பாடல் நன்றாக இருக்கிறது வண்ண உடையும் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பிள்ளையார் நோன்புக்கு எரிந்து கொண்டிருக்கும் மாவில் செய்த விளக்கை உண்பார்கள்// - மேலதிகத் தகவலுக்கு நன்றி கோமதிம்மா.

   பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. நாக்பூரின் ஃபயர் பானி பூரி.. இப்போதுதான் அறிய வருகிறேன். ஒரு காண்டாமிருகத்தைச் சுற்றி ஏழு யானைகளின் வியூகம்... சுவாரஸ்யம்.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபயர் பானி பூரி - உங்களுக்கும் புதிதாக இருந்ததா? ஒரு வருடமாகத் தான் இந்த விற்பனை.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....