வியாழன், 14 ஜனவரி, 2021

மன்னிக்க வேண்டுகிறேன்...



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட Bபத்துவா கா பராட்டா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வளைந்து நெளிந்து சென்றால் தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியும்…  பாதையிலும் சரி… வாழ்க்கையிலும் சரி!  


******






“மாமா உங்களோட நிழல்லயே நான் இருந்துடறேன் மாமா…  என்னுடைய தப்பெல்லாம் உணர்ந்துட்டேன். என்னோட குழந்தைகளுக்காக, அவர்களுக்கு ஒரு நல்ல தாயாக இருக்க ஆசைப்படறேன்…  நாங்க உங்களுடனேயே வந்துடறேன்…. மன்னிச்சு ஏத்துக்கோங்க மாமா….


இந்த வரிகளைக் கண்ட கடிதத்தினைப் படித்த சின்னராசு நினைவுகளில் மூழ்கினார்.  எவ்வளவு நன்றாக இருந்த வாழ்க்கை - சின்னச் சின்னத் தடுமாற்றங்களால் நாமே நம் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதாகி விடுகிறது. பெண்புத்தி பின்புத்தி என்று சொல்வதை உண்மையாக்கி விட்டாளே இந்த வடிவு வடிவின் கடிதத்திற்கு என்ன பதில் எழுதுவது என்ற யோசனையில் நடந்ததை எல்லாம் மீண்டும் ஒரு முறை தன் மனக்கண்ணில் ஓட விட்டுப் பார்த்தார்.  அந்த நிகழ்வுகள் அனைத்தையுமே மறக்க நினைத்தாலும், அதை மறக்க முடியாமல் செய்து விடுகிறது சில சந்தர்ப்பங்களும் மனிதர்களின் வார்த்தைகளும்.  


எல்லாம் நல்ல விதமாகவே சென்று கொண்டிருந்தது.  சின்னராசு தன் மனைவி செல்லாயி உடன் சந்தோஷமாகவே இருந்தார்.  வயல்களில், வீடுகளில் வேலை பார்த்து தன் சிறு குடும்பத்தை சிறப்பாக நடத்தி வந்தார்.  ஒரே ஒரு மகன் - வடிவேலன் - அவனுக்கு வேலை பார்த்து வைத்ததோடு, தன் உறவிலேயே இருக்கும் வடிவையும் பார்த்து மணம் முடித்து வைத்தார்.  மகனும், தந்தை சின்னராசுவைப் போலவே சிறப்பாக பணியாற்றியதோடு, குடும்பத்தினையும் நன்றாகவே வழி நடத்திச் சென்றான்.  இரண்டு குழந்தைகள் - ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு பேருடனும், மனைவி, தாய்-தந்தை என அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்து வந்தார்கள்.  எல்லாமே நல்லாத்தான் நடக்குது என்று நினைத்திருக்க, விதி வேறொரு விளையாட்டை நிகழ்த்த இருந்தது என்பதை யார் அறிவார்.  


குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்து இருந்தார்கள்.  வடிவேலன் வேலைக்குச் சென்றிருந்த ஒரு நாள் - அங்கே நடந்த விபத்தொன்றில் உடன் பணியாற்றும் நண்பனைக் காப்பாற்றப் போக, நண்பனைக் காப்பாற்றினாலும், வடிவேலு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. காலையில் மகிழ்வாக வீட்டினர் அனைவரிடமும் “மாலை வெளியே போய் பொங்கலுக்கு துணி எல்லாம் வாங்கிக் கொண்டு வரலாம்” என்று சொல்லிக் கொண்டு  போனவன் துணி மூடிய உடலாகவே திரும்பினான்.  சின்னராசு, செல்லாயி, வடிவு, குழந்தைகள் என அனைவருமே அதிர்ச்சியில் அழுது புரண்டார்கள்.  “ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வருவதுண்டோ…”  


மகன் வடிவேலனை இழந்து சில நாட்கள் கூட ஆகியிருக்காது, சின்னராசு-செல்லாயி தம்பதிக்கு அடுத்த பேரிடி! வேலைக்குப் போய்ட்டு வரேன் என்று சென்ற வடிவு அன்றைய மாலை வீடு திரும்பவில்லை!  அம்மாவைக் கேட்கும் குழந்தைகளை என்ன சொல்லி சமாளிப்பது என்ற தவிப்பில் செல்லாயி இருக்க, சின்னராசு ஓடி ஓடி தன் மருமகள் வடிவைத் தேடிக் கொண்டு இருந்தார்.  ஊரெல்லாம் தேடிய பிறகு அசந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.  


”என்ன சின்னராசு, இங்கே உட்கார்ந்துட்ட, என்ன விஷயம்? கண்ணு கலங்கி இருக்கே?” என்று கேட்ட படியே அங்கே வந்தார் வாத்யார் செல்லக்கண்ணு. எப்படிச் செல்வது என்ற அச்சத்தில் பேசாமல் அமர்ந்திருக்க, செல்லக்கண்ணுவே தொடர்ந்தார் - “மருமக வடிவு உங்க உறவுக்கார பையனோட சென்னை போற பஸ்ல பார்த்தேன் இன்னிக்கு?  எதும் விசேஷமா? எங்க அனுப்பி இருக்க?” என்று கேட்க சின்னராசு மனதில் கிலி - நமக்கே சொல்லாம, உறவுக்கார பையனோட போயிருக்கா வடிவு…” என்று கண்ணைத் துடைத்தவாறு, செல்லக்கண்ணுவிடம் ஒன்றும் சொல்லாமல் வீடு திரும்பினார்.  வீட்டில் பேத்தி ஒரு கடிதத்தை நீட்டினார்.


“எனக்கான வாழ்க்கையை நான் அமைத்துக் கொள்கிறேன் - உறவுக்காரரான சண்முகத்துடன் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் - என்னைத் தேட வேண்டாம்”  - இப்படிக்கு வடிவு.  


மகன், மறுமகள் பேரப் பிள்ளைகள் என மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் இப்படி ஆயிற்றே என வருந்தினாலும், தன் பேரப் பிள்ளைகளுக்காக மேலும் அதிகம் உழைத்து அவர்களை நல்லபடியாக வளர்த்தும் வந்தார் சின்ன ராசு.  வடிவு பற்றி எந்தத் தகவலும் இல்லை - இவர்களும் தேடவில்லை. வடிவும் ஒன்றும் இவர்களுக்குத் தகவல் தரவில்லை.  ஆறு வருடங்கள் கழித்து இப்பொழுது தான் கடிதம் வந்திருக்கிறது - திரும்பி வந்து விடவா என்று கேட்டு வந்த கடிதத்தினை மீண்டும் படித்தார் சின்னராசு…


”அன்பின் மாமாவிற்கு, வடிவு எழுதிக் கொள்வது.  நீண்ட வருடங்களாக உங்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். மகனையும் மகளையும் உங்களையும் தவிக்க விட்டு வந்த நான் இப்போது உங்கள் ஆதரவை வேண்டி இக்கடிதத்தினை எழுதுகிறேன். 


உறவினர் சண்முகத்தினைத் திருமணம் செய்து கொண்டால் இழந்து போன என் வாழ்க்கைத் திரும்பி விடும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் கூடச் சொல்லாமல் குழந்தைகளையும் விட்டு விட்டு வந்து விட்டேன்.  இங்கே வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. சண்முகம் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார்.  இப்போது மீண்டும் நான் தனிமையில்.  எனக்கென்று உங்களையும் குழந்தைகளையும் விட்டால் யாரும் இல்லை.  மீண்டும் உங்களுடனேயே வந்து விடலாம் என்று தோன்றுகிறது. இப்படிக் கேட்க எனக்கு எந்தவித அருகதையும் இல்லை என்று தெரிந்திருந்தாலும் எனக்கு வாழ்க்கை அளிக்க உங்களிடம் பிச்சை கேட்கிறேன்.    


மாமா உங்களோட நிழல்லயே நான் இருந்துடறேன் மாமா…  என்னுடைய தப்பெல்லாம் உணர்ந்துட்டேன். என்னோட குழந்தைகளுக்காக, அவர்களுக்கு ஒரு நல்ல தாயாக, இனிமேலாவது இருக்க ஆசைப்படறேன்…  நாங்க உங்களுடனேயே வந்துடறேன்…. மன்னிச்சு ஏத்துக்கோங்க மாமா….


இப்படிக்கு 


வடிவு.”


என்ன முடிவு எடுக்க என்ற குழப்பத்திலேயே அமர்ந்திருக்கிறார் சின்னராசு.  நீங்கதான் சொல்லுங்களேன் என்ன முடிவை எடுக்கலாம்…  வடிவை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா?


*****


என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டம் வழி உங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.  மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


14 கருத்துகள்:

  1. அப்படியே விட்டுவிட வேண்டியதுதான்.  விட்டுப்போனது விட்டுப்போனதாகவே இருந்து விடலாம்.  அந்த வடிவு கஷ்டப்பட்டாலும் தன் காலில் தானே நிற்கப் பழகி விடுவாள்.  இல்லா விட்டால் செய்த தப்பை உணர்ந்து அவளும், அதை நினைவூட்டி இவர்களும் இருக்க வாழ்க்கை நரகமாகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விட்டுப்போனது விட்டுப்போனதாகவே இருந்துவிடலாம்// - லாம்! அப்படித்தான் சின்னராசுவும் விட்டு விட்டார் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குழந்தைகள் தான் நல்லதொரு முடிவை எடுப்பார்கள்; எடுக்கவும் வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுக்காக ஒரு முடிவு எடுக்க வேண்டியது பெரியவரின் கடமையும் கூட. குழந்தைகளுக்கும் தாயின் அரவணைப்பு தேவை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குழப்பம் தான் ..சின்னராசே முடிவெடுக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்பமான விஷயம் தான். சின்னராசு இப்போதைக்கு எடுத்த முடிவு மன்னிக்க வேண்டாம் என்பதே ரமணி ஜி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. உறுக்கமான கதை சார்.
    வாசகர்கள் சொல்லும் முடிவை வைத்தால் அவர்களுக்கே திருப்தியாய் இருக்காது.
    எனவே நீங்களே ஒரு முடிவை வைத்துவிடுங்கள்.
    பின் அது விவாதமாகி கதை வளரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்கள் சொல்லும் முடிவு - இரண்டு விதமாகவும் இருக்கலாம் என்பது உண்மை. சின்னராசு ஏற்கனவே மன்னிக்கக் கூடாது என்ற முடிவினை எடுத்திருக்கிறார் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆஹா உண்மைக் கதைபோல இருக்கே.. குழந்தைகளுக்காக மீண்டும் அழைக்கலாம், சேர்த்துக் கொள்ளலாம், பேரன் பேத்தி வயதாகியிருக்கும், என்ன இருந்தாலும் குழந்தைகளுக்கு தாய் பிற்காலத்தில் இருந்தால் நல்லதுதானே...

    அப்பெண் நடந்துகொண்டது முற்றிலும் தவறுதான், அதிலும் குழந்தைகளோடு போயிருந்தால் தப்பில்லை, இது தனியே தான் மட்டும் ஓடியது மகா தப்பு, அது வயசுக்கோளாறு எனவும் கொள்ளலாம்.... ஆனால் இன்று அக்கணவர் இல்லை எனும்போது, பெண்ணைச் சேர்ப்பதில் பெரிய தப்பில்லை என்றே மனம் சொல்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கொட்டிஸ் சுனாமி அதிரா - ஹாஹா... பெயர் சூட்டிக் கொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே!

      உண்மைக் கதை தான் - சிறிது டிங்கரிங் பார்த்து வெளியிட்டு இருக்கிறேன் அதிரா. சேர்த்துக் கொண்டிருக்கலாம் - ஆனால்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. திண்டுக்கல்லாரை வழி மொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. சுயநலம் தான் அந்தப் பெண்ணிற்குப் பெரிதாக இருந்திருக்கிறது. ஆகவே யோசித்துத் தான் முடிவெடுக்க முடியும். குழந்தைகளும் விபரம் தெரிந்தவர்களாக வளர்ந்திருப்பார்கள். அவர்கள் கருத்தும் தேவையானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுயநலம் அதிகம் தான் அந்தப் பெண்ணிற்கு - குழந்தைகளுடைய கருத்தும் நிச்சயம் தேவையானதே கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....