செவ்வாய், 19 ஜனவரி, 2021

கதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நிலா - லாக்டவுன் ரெசிபீஸ் விமர்சனம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட அனல் மேல் பனித்துளி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில் நல்ல எண்ணங்கள் படைத்தவர்களே அழகானவர்கள் -  வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - உங்கள் மன எண்ணங்களில்!


******கேரளமாகும் திருவரங்கம் - 13 ஜனவரி 2021:


திருவரங்கம் கேரளா மாதிரி மாறிவிட்டது போல!! ஏறக்குறைய பத்து நாட்களாக நினைத்த போதெல்லாம் இங்கு மழை...🙂 பலமான மழையெல்லாம் இல்லை.. நாள் முழுவதும் இடைவெளி விட்டு நசநசவென்று தூறல்!! 


கேரளாவுக்குச் சென்ற போது துவைத்த துணிகளை வெளியே காயப்போடவே முடியலை.. நினைத்தால் மழை...🙂 அது போல் இங்கும் பால்கனி உள்ளேயே தான்  கொடிகளில் உலர்கிறது.. 🙂 சூரிய பகவானுக்கு ஊரடங்கு போல..🙂


தை பிறக்கப் போகிறது.. இதுவரை இந்த மாதத்தில் எல்லாம்  இப்படி மழை பெய்து பார்த்ததில்லை!!! எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.


உங்க ஊர்ல எல்லாம் எப்படி இருக்கு?? சொல்லுங்களேன்.


கனுப்பிடி - 16 ஜனவரி 2021:


பொங்கலுக்கு மறுநாள் உடன்பிறந்தவர்கள் நலமோடு வாழ கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம் தான் கனுப்பிடி வைப்பது.. வடக்கே ரக்‌ஷாபந்தன் கொண்டாடுவார்களே.. அதே போல் அண்ணன், தம்பிகள் நலத்துக்காக ஒரு பிரார்த்தனை!


பொங்கல் பானைக்கு கட்டிய மஞ்சள் கொத்தின் இலையில் காக்கைக்கு உணவு வைத்து பிரார்த்தனை செய்வார்கள்.. அதற்கு முன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் மஞ்சள் கீற்றிக் கொண்டு ஆசி பெறுவார்கள். எல்லாவற்றுக்கும் பாடலும் உண்டு.


நேற்று, டெல்லியில் நான் வைத்த கனுப்பிடி போலாகி விட்டது! அது என்ன?? ஆமாங்க! டெல்லியில் இந்த பொங்கல் சமயத்தில் கடும்பனி இருக்கும்...எதிரே இருப்பவர்களே தெரிய மாட்டார்கள்..பஞ்சு அடைத்தாற் போல் இருக்கும்!!


இதில் எங்கேயிருந்து மொட்டை மாடிக்குச் சென்று கோலம் போட்டு, கனுப்பிடி எல்லாம் வைப்பது..அதனால் வீட்டின் உள்ளேயே ஒரு தட்டில் வைத்து வழிபட்டு விட்டு, மாடிக்கு ஓடிச் சென்று அதை இழுத்து விட்டு வந்துவிடுவேன்..🙂 இப்போது நினைத்தாலும் புன்னகைக்க வைக்கிறது..அருகில் இருக்கும் கட்டிடங்களே தெரியாது..நான் மட்டுமே தனியே நிற்பது போலிருக்கும்..🙂


ஏறக்குறைய பத்து நாட்களாக இங்கே மழை! மழையில் நின்று எப்படி செய்வது? அதனால் டெல்லியில் இருந்தது போலவே வீட்டினுள்ளேயே அதே செய்முறையை பின்பற்றி விட்டு, மாடிக்குச் சென்று இழுத்து விட்டு விட்டு திரும்பினோம். இந்த வருடம் இப்படி .🙂


சிறுதானிய பொங்கல் - 16 ஜனவரி 2021:

சஹானா இணைய இதழ் ஜனவரி மாதப் போட்டியில் என்னுடைய சிறுதானிய பொங்கல் செய்முறை பிரசுரமாகியுள்ளது. சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியது..செரிமானத்திற்கு எளிதானது..அதில் செய்யப்படும் சுலபமான செய்முறை.. அதற்கான இணைப்பு இதோ!


மின்நிலா - 16 ஜனவரி 2021:

எங்கள் ப்ளாக்  'மின்நிலா' பொங்கல் மலரில் என்னுடைய 'டெல்லிப் பொங்கல்' சிறப்புக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. எங்கள் ப்ளாக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


15 வருடங்களுக்கு முன்னர் டெல்லியில் எங்கள் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடிய பொங்கல் விழாவைப் பற்றி இதில்  எழுதியிருக்கிறேன்.


மகள் என் வயிற்றில் ஏழு மாத குழந்தையாக இருந்த அந்த வருடம் தான் இந்த விழாவை முதல்முறையாக ஏற்பாடு செய்து ஆரம்பித்தனர் என்னவரும் அவரது நண்பரும். 


இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதென்றால் சும்மாவா!! மாதக்கணக்கில் இதற்காக உழைப்பு இருக்கும்..🙂 அன்றைய விழாவன்று இப்போது "0" டிகிரி இருக்கிறது என்று வந்திருந்த எல்லோரும் பேசிக் கொண்டது இன்னும் நினைவில் பசுமையாக..🙂


லாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் விமர்சனம் - 16 ஜனவரி 2021:

என்னுடைய 'லாக்டவுன் ரெசிபீஸ்' புத்தகத்துக்கு திரு 'ராம தேவந்திரன்' அவர்கள் தந்த நல்லதொரு விமர்சனம் மகிழ்வைத் தந்தது. முகநூலில் அவர் அளித்த விமர்சனம் கீழே...


வெங்கட் சாரோட பயணகட்டுரைகள் அதிகளவில் வாசித்திருக்கிறேன். அந்த வரிசையில் இதற்கு முன்பு படித்த "அந்தமான் அழகு" நூலினை தொடர்ந்து இந்த வாசிப்பு போட்டியில் பங்கெடுத்துள்ள நூலான திருமதி. ஆதி வெங்கட் அவர்களின்  "லாக்கடவுன் ரெசிபீஸ்” என்ற இந்த நூலினையும் வாசித்து விட வேண்டியது தானே என்று ஆரம்பித்தேன்.


இந்த நூலில், நாவிற்கு ருசியாக மட்டுமல்லாமல் கண்ணுக்கும் நல்லதொரு விருந்தாக 25 வகையான உணவுகளை நமக்குக் கொடுத்துள்ளார். 


நம்ம வீட்டு இட்லியில் ஆரம்பித்துச்  சிறு தானியங்கள், ஸ்வீட் கார்ன். பலாக்கொட்டை, நேந்திரம் பழம்    என வகை வகையான பொருள்களை கொண்டு எவ்வாறு சிற்றுண்டிகளை செய்வதென மிக அழகாகக் தொகுத்து கொடுத்துள்ளார்.


எனக்கு மிகவும் கவர்ந்த சில சிற்றுண்டிகள் ...


நான் மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பலாக்கொட்டை, ஆனால் இதில் புதிதாக "கட்லெட்" செய்து சுவைக்கலாம் என்பதை பார்த்த உடன் 

விரைவில் வீட்டில் சுவைக்க வேண்டும் என்ற ஆசை.....


சூரத் கி கமனி. நான் அடிக்கடி குஜராத்தின்  மிருதுவான "டோக்ளா" ருசித்திருக்கிறேன் ஆனால் இந்த புதிய வகை உணவு பார்ப்பதற்குச் சுவையாக இருக்குமெனத் தோன்றுகிறது - இதனையும் ருசித்துப் பார்க்க வேண்டும்.


உக்காரை - இது ஒரு புதிய வகை உணவென்று பெயரில் தோன்றியது.


பால் கொழுக்கட்டை - இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்து கொடுக்கும் ஒரு உணவு . எங்கள் வீட்டில் முறுக்கு அச்சியினை வைத்துச் செய்வார்கள், ஆனால் இது உருண்டை உருண்டை யாக ஒரு வித்தியாசமா இருக்கிறது. இது எவ்வாறு சர்க்கரை பாகில் ஊறிச் சுவை கொடுக்கும் என்பது தெரியவில்லை!


உப்பு உருண்டை - பார்ப்பதற்கே சுவையாக இருக்கிறது. இது எங்கள் வீட்டில் "நீர் உருண்டை" எனச் சொல்வோம் - தேங்காய் துறுவலுக்குப் பதிலாகத் தேங்காயினை சிறு சிறு துண்டாகச் கட் செய்து சேர்த்துக்கொள்வார்கள். எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டி...


வாழைப்பூ - இப்போது இருக்கும் இந்த அவசரக் காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் வெகு வானோர்கள் உணவில் சேர்ப்பதே இல்லை. எங்கள் கிராமங்களில் இப்போதும் வாழைப்பூவுடன் முருங்கை கீரை சேர்த்துச் சமைத்துப் பரிமாறுவார்கள். இது இந்த வாழைப்பூ வடை கொஞ்சம் புதுமையாகவே இருக்கிறது படத்தில் பார்க்கும் பொழுதே சுவைக்க வேண்டும் போல இருக்கிறது. எங்கள் வீட்டு உணவில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவள் பிடி கொழுக்கட்டை - செய்து சுவைத்தோம். நல்ல சுவையும் ஆரோக்கியமும் உள்ள நல்ல உணவு.


மேலும் பூரி லட்டு, தவலை வடை , டோக்ளா மற்றும் குழிப்பணியாரம் எனச் சுவையான சிற்றுண்டிகளைச் சுவைத்துப் பார்க்கத் தூண்டுகிறது இந்த நூலின் வழியே வகை வகையான உணவுகள் ...


வாழ்த்துகள் 💐💐


தங்கள் எழுத்து பயணம் சிறந்து தொடர வாழ்த்துகள்..


அன்புடன் ,


தேவேந்திரன் ராமையன்

12 ஜனவரி 2021


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.


நட்புடன்ஆதி வெங்கட்


14 கருத்துகள்:

 1. மழை...    திருவரங்கம் போலதான் சென்னையும் இருந்தது.  நாங்கள் சில நாட்களாக சூரியனைப் பார்க்கிறோம்!

  எங்கள் பிளாக் மின்நிலாவுக்கு கட்டுரை அனுப்பியதற்கு நன்றி.  

  பயணக்கட்டுரைகளும் சமையல் ரெசிப்பிகளும் எப்பவுமே வாசிப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. கதம்பம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. எங்க ஊரிலேயே மழை...! வியப்பு தான்... இரண்டு நாட்களாக வெயில் ஆரம்பித்து உள்ளது...

  மின்னூல் விமர்சனம் அருமை... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஊர் திண்டுக்கல்லிலும் மழை - அட!

   மின்னூல் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 4. தமிழகம் பரவலாக தூறலாகத்தான் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழகம் எங்கும் மழை - நல்லது தான் கில்லர்ஜி. அளவோடு இருந்தால் மகிழ்ச்சியே!

   நீக்கு
 5. நல்ல கெட்டிக் கதம்பம், ஏற்கெனவே முகநூலில் பார்த்தும்/படித்தும் மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கெட்டிக் கதம்பம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....