திங்கள், 11 ஜனவரி, 2021

தளிர் மனம் யாரைத் தேடுதோஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 2020 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சந்தேகத்தை எரித்து விடு. நம்பிக்கையை விதைத்து விடு. மகிழ்ச்சி தானாகவே மலரும்.


******சஹானா இணைய இதழின் ஜனவரி மாதத்திற்கான புத்தக வாசிப்புப்போட்டி பற்றிய தகவலை முன்னரும் பகிர்ந்திருந்தேன்.  போட்டிக்கான பத்து மின் நூல்களில் ஒன்றான தளிர் மனம் யாரைத் தேடுதோ என்கிற தீபா செண்பகம் அவர்களின் நெடுங்கதைக்கான வாசிப்பனுபவம் - முக நூல் குழுமத்தில் பகிர்ந்து கொண்டது - இங்கேயும் எனது சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்!  வாருங்கள் நூல் வாசிப்பனுபவத்தினைக் காணலாம். 


நூல்          :  தளிர் மனம் யாரைத் தேடுதோ..

ஆசிரியர்   :   தீபா செண்பகம்.

பக்கங்கள் : 721

விலை:  ரூபாய் 300/- (Kindle Unlimited கணக்கு இருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்)

வெளியீடு:  அமேசான் கிண்டில்.


முதலில் ஒரு விஷயத்தினை தெளிவு படுத்த வேண்டும் - இந்த நூல் நெடுங்கதை - 721 பக்கங்கள்! இவ்வளவு பெரிய நூலை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள்! இது ஆசிரியரின் இரண்டாவது நூல் என்று தெரிகிறது.  தொடரட்டும் அவரது எழுத்துப் பயணம்.  பாராட்டும் அதே சமயத்தில் எனது மனம் ஒரு குறையும் சொல்ல விழைகிறது - அது எழுத்துப்பிழைகள்! பொதுவாக அச்சுப் புத்தகங்கள் வெளியிடும்போதும் சரி, மின்னூல்கள் வெளியிடும் போதும் சரி Proof Reading என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும் விஷயம்.  இதனை தற்போது எழுதும் பலர் கண்டுகொள்வதே இல்லை என்பது வேதனை.  நிறைய எழுத்துப் பிழைகள்! உதாரணத்திற்கு ஒரு வார்த்தை - கதை முழுவதும் “வம்பிலுப்பது” என்றே எழுதி இருக்கிறார் ஆசிரியர் - “வம்பிழுப்பது” என்று எழுதுவது தான் சரி அல்லவா!  அதே போல ஒரு இடத்தில் சில பத்திகள் இரண்டு முறை வந்திருக்கிறது. அதனையும் கவனிக்கவில்லை!  இது போன்ற தவறுகளை Proof Reading பார்த்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!  வரப்போகும் அவரது பகிர்வுகளில் இந்த மாதிரியான தவறுகளைத் தவிர்த்தால் நலம்! 


சரி கதைக்கு வருவோம்… விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி தம்பதியரின் ஒரே புதல்வி திவ்யா. ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த  விஜயராகவன் தனது காதல் புரிந்து கொள்ளப்படாததால் குடும்பத்தையே விட்டுப் பிரிந்தவர். கார்த்திகைச் செல்வியும் தனது குடும்பத்தினையே விட்டு வந்தவர் தான்.  இப்படி காதலித்து  மணம் புரிந்த பெற்றோர்களுக்கு பிறந்த பெண்ணை ஆதித்யராஜன் என்கிற ஆதித்யன் சந்தித்த விதமே சினிமாக்களில் வருவது போல அமைத்திருக்கிறார்!  மலைப்பாதையில் திவ்யா வாகனம் கட்டுப்பாடு இழந்து வேகமாக வருகிறது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டுவிடலாம் என நினைக்கிறபோது ஆதித்யன் சாமர்த்தியமாக அவரை வாகனத்திலிருந்து காப்பாற்றுகிறார் - காப்பாற்றும் சமயத்தில் வாகனத்திலிருந்து திவ்யாவினை விலக்கி புல்வெளியில் அவருடன் உருண்டு காப்பாற்றுகிறார்.  


அப்படிக் காப்பாற்றுகையில் ஆதித்யனுக்கு காலில் அடிபடுகிறது. கையும் ஃப்ராக்சர்.  மருத்துவம் படிக்கும் திவ்யா ஆதித்யாவை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து, பொறுப்பாகப் பார்த்துக் கொண்டு அவரைத் தேற்றி அனுப்புகிறார். திவ்யாவின் அப்பா அம்மாவும் ஆதித்யனுடன் நட்பு பாராட்ட, அவர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள். அப்படிச் சந்திக்கையில் அவர்களுக்குள் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  ஆதித்யன் தனது காதலை வெளிப்படுத்தினாலும், திவ்யா பதில் சொல்லாமல் காலம் கடத்துகிறாள்.  ஆதித்யனிடம் பேசும்போது தான் விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி தம்பதியருக்கு, ஆதித்யன் தங்களது சொந்தம் என்பது புரிகிறது. தங்கள் திருமணத்தால் பிரிந்த குடும்பம் தங்களது மகள் மற்றும் ஆதித்யன் திருமணத்தினால் இணையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். விஜயராகவன் ஜமீன்தாரான தனது அப்பாவைச் சந்தித்து, தனது மகள் திருமணத்தினை அப்பாவின் ஆசிர்வாதத்துடன் நடத்த வேண்டும் என்ற ஆசையைச் சொல்கிறார்.  


ஆறு மாதங்களுக்கு மேலாக ஆதித்யன் - திவ்யா காதல் பறவைகளாக பறந்து திரிகிறார்கள். அப்படி ஒரு சமயம் காரில் வந்து கொண்டிருக்கும்போது ஆதித்யனின் இல்லத்தில் தங்க நேரிடுகிறது. ஆதித்யனின் சகோதரன் நண்பர்கள் குளிர்பானத்தில் கலந்து வைத்த மதுவை, ஆதித்யன் பருக, போதையில் திவ்யாவுடன் உறவு கொள்கிறான்.  திவ்யா போதையில் இல்லாதிருந்தாலும், உணர்ச்சி மிகுதியில் தன்னையே இழக்கிறாள்.  அந்த நாளின் முடிவில் ஆதித்யன் இன்னும் போதையில் இருக்க, வரவேற்பு அறையில் அமர்ந்திருக்கிறாள் திவ்யா - அங்கே இருந்த அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது - அதில் இருக்கும் புகைப்படத்தில் ஆதித்யன் மணக்கோலத்தில் இருக்கிறான் - அழைப்பு வரும் எண்ணும் மனைவி என்ற பெயரில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது.  பார்த்தவுடன் அதிர்ச்சி அடைகிறாள்.  ஆதித்யன் மீது சந்தேகம் கொண்டு அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 


இது நடந்த ஒரு வாரத்திற்குள் விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி, ஆதித்யன் - திவ்யா திருமணம் பற்றி ஆதித்யன் வீட்டிற்குச் சென்று பேசி வரும்போது  எதிர் புறத்திலிருந்து வந்த வாகனம் முன்னால் செல்லும் ஆதித்யனின் சகோதரனான அன்புராஜனின் காரில் மோதி விடப் போகிறதே என அதனை ஓவர் டேக் செய்து போக, ட்ரக் உடன் மோதி விபத்து நடக்கிறது.  அதில் விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி ஆகிய இருவருமே இறந்து விட மகள் திவ்யாவுக்கு பெரிய அதிர்ச்சி.  தனக்கு யாருமே இல்லை என்ற சோகத்தில் இருக்கிறாள்.  காதலித்தவனும் தன்னை ஏமாற்றி விட்டானே என சோகம்.  மேலும் பெரிய இடியாக தான் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.  யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எங்கேயாவது சென்று விட வேண்டும் என்று முடிவு செய்து விடுகிறார்.  


கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அவர் இருக்கும் இடமே தெரியாமல் ஆதித்யன் சோகத்தில்.  தான் போதையில் செய்த தவறினால் திவ்யா கர்ப்பமாக ஆனது கூட தெரியாமல் இருக்கிறான் ஆதித்யா.  திவ்யா இந்த சமயத்தில் மில் தொழிலாளிகளுக்கான ஒரு குடியிருப்பில் தங்கி மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு ஆதரவு மில் முதலாளியும் அவரது மனைவியும்.  சந்தர்ப்பவசமாக ஆதித்யனின் தம்பியான இனியன் அங்கே வரும்போது திவ்யாவையும் அவளது இரட்டையரான குழந்தைகளையும் பார்க்கிறான் - பார்த்தால் அப்படியே அச்சு அசலாக ஆதித்யனை உரித்து வைத்தது போல இருக்கிறார்கள் குழந்தைகள் - அம்மாவுடனான அவர்களின் விளையாட்டை காணொளியாக எடுத்துக் கொண்டு ஆதித்யனிடம் காண்பிக்க, திவ்யாவினைச் சந்திக்க வருகிறான் ஆதித்யன்.   எதனால் தன்னைப் பிரிந்தாள் என்று தெரியாமல் திண்டாடுகிறான்.  


சந்தேகம் கொடும் நோய். அப்படியே தான் விரும்பும் ஒருவரிடம் சந்தேகம் வந்துவிட்டால், சம்பந்தப்பட்டவரிடமே பேசி விட்டால் பல பிரச்சனைகளைத் தீர்த்து விட முடியும்.  திவ்யாவுக்கு வந்த சந்தேகத்தினால் அவள் இழந்தது என்ன?  ஆதித்யன் - திய்வா திருமணம் நடந்ததா?  விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி திருமணத்தில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததா?  வேறு என்ன பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்று விவரமாகத் தெரிந்து கொள்ள தீபா செண்பகம் அவர்களின் தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற நெடுங்கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே! மின்னூலை கீழ்க்கண்ட சுட்டி மூலம் தரவிறக்கம் செய்யலாம்.


Thalir manam yarai thedutho - தளிர் மனம் யாரைத் தேடுதோ. (Tamil Edition) eBook: senbagam, deepa: Amazon.in: Kindle Store


இந்த முறை வாசிப்பனுபவம் சற்றே நீண்டு விட்டது - 721 பக்கங்கள் கொண்ட நெடுங்கதையாயிற்றே!  மீண்டும் வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

12 கருத்துகள்:

 1. கதையை நன்றாக நகர்த்தி இருக்கிறார் என்று தெரிகிறது.  நீங்கள் சொல்லி இருப்பதுபோல குறைகளைத் தவிர்த்தால் நல்ல அளவில் பேசப்படலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு பற்றிய தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நல்ல விமர்சனம்... வாணி, நாவி - இவற்றை பயன்படுத்தி பிழைகளை தவிர்த்து இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாணி, நாவி பற்றி அவர்களுக்கும் முகநூல் வழி சொல்லி இருந்தேன் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 4. நன்றாக இருக்கிறது.. இதை வைத்து ஒரு படம் எடுக்கலாம்.. தொடரட்டும் உங்கள் வாசிப்புக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை வைத்து ஒரு படம் எடுக்கலாம்! - லாம் அதிரா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நல்ல விமர்சனம் சார்.
  ஃபேஸ் புக்கிற்கு தான் இது நீண்ட பதிவு.
  இவ்வலைப்பக்கத்திற்கு இது இயல்பானதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவ்வலைப்பக்கத்திற்கு இது இயல்பானதே - ஆமாம் அரவிந்த். அங்கே எழுதியதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. திரைப்படத்திற்கு ஏற்ற கதை. என்னதான் ப்ரூஃப் ரீடிங்க் பார்த்தாலும் சில சமயங்களில் எழுத்துப் பிழைகள் வரத்தான் செய்கின்றன. இது தட்டச்சும்போது ஏற்படும் பிழை. :( ஆனால் இந்த "ழ""ள" "ல" போன்றவற்றைப் பலரும் உரிய இடத்தில் போடுவது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழை - இருக்கலாம் - ஆனாலும் பெரும்பாலும் சரிபார்க்கும்போது தட்டுப்படும். வாணி, நாவி போன்ற தளங்கள் மிகவும் பயனுள்ளவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....