வியாழன், 7 ஜனவரி, 2021

சாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்புப் போட்டி பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள். இன்பம், துன்பம் எது வந்தாலும், மன அமைதியை மட்டும் இழந்து விடக்கூடாது - விவேகாநந்தர்.


******


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சாப்பிடலாம் வாங்க பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  குளிர் காலம் இங்கே ஆரம்பித்து, காய்கறிகள், கீரைகள் என பலவும் மிகவும் ஃப்ரெஷ்-ஆகக் கிடைக்கிறது. தினம் தினம் மாலை நேரத்தில் ஒரு நடைப்பயணம் - வரும் வழியில் காய்கறி, பால் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வருவது வழக்கமாக இருக்கிறது.  இந்தச் சமயத்தில் தான் “மேத்தி” என்று ஹிந்தியில் அழைக்கப்படும் வெந்தயக் கீரை நன்றாகக் கிடைக்கும்.  பத்து ரூபாய்க்கு ஒரு கட்டாக வாங்கி வந்தேன். கீரை வாங்கினால் அதைச் சுத்தம் செய்வது பெரிய வேலை - அதுவும் தனி ஒரு ஆளுக்கு கீரை சமைப்பது கடினமாக இருக்கும் என்பதால் பொதுவாக வாங்குவதில்லை.  அப்படியே வாங்கினாலும் பராட்டா (கோதுமை பராட்டா) செய்வதற்காகத் தான் வாங்குவேன்.  இங்கே கடைக்காரரே, ஒரு சிறு இயந்திரத்தின் மூலம் கீரையைச் சுத்தம் செய்து, நறுக்கித் தந்து விடுவார் (வீட்டிற்கு வந்த பிறகு நாமும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்!).  நான் அப்படியே கட்டாக வாங்கிக் கொண்டு வந்து விடுவேன்! சமீபத்தில் இந்த மேத்தி கீரை வாங்கிக் கொண்டு வந்த போது வழக்கம்  போல் பராட்டா செய்யாமல் இந்த மேத்தி மட்டர் மலாய் செய்தேன்.  வாருங்கள் எப்படிச் செய்வது, என்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்!  


தேவையான பொருட்கள்: 

மேத்தி எனும் வெந்தயக் கீரை - சுத்தம் செய்து நறுக்கியது - 2 ½ (அ) 3 கப்

மட்டர் எனும் பச்சை பட்டாணி - 1 ½ கப்

மலாய் எனும் பாலேடு (அ) அமுல் ஃப்ரெஷ் க்ரீம் - ½ கப்

வெங்காயம் - 2

பூண்டு - 6 பற்கள்

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு பெரிய துண்டு

கொத்தமல்லி தழை - அலங்கரிக்க!

முந்திரி - 10

தனியா பொடி - ½ ஸ்பூன்

மிளகாய்ப் பொடி - ½ ஸ்பூன்

மஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை

Gகரம் மசாலா - ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 

சீரகம் - 2 ஸ்பூன்

ஏலக்காய் - 4

தேஜ் பத்தா எனும் பிரியாணி இலை - 1 அல்லது 2

கிராம்பு - 4


செய்முறை:


மேத்தி எனும் வெந்தயக் கீரையை தண்டில்லாமல் (ஹிந்தியில் தண்டுக்கு என்ன பெயர் தெரியுமா? Dடண்டல்! :) இலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நன்கு அலசி, பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 


வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 


உரித்த பச்சை பட்டாணியை தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் உப்பும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் - பாதி வேகும் அளவு!


பாலேடு (பாலாடை)-ஐ நன்கு ஸ்பூனால் அடித்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்! அப்படி பாலேடு இல்லை என்றால் கடைகளில் ஃப்ரெஷ் க்ரீம் என கிடைக்கும் (அமுல் பிராண்ட் நம் ஊரிலும் கிடைக்கிறது) வாங்கிக் கொள்ளலாம். 


பட்டாணி வேகும் சமயத்திலேயே ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடானதும், நறுக்கி வைத்திருக்கும் மேத்தி இலைகளைப் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும் - கீரை நன்கு சுருண்டு, அளவு குறைந்து விடும் அளவு வதங்கினால் போதுமானது! அதை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 


அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து, கடைசியாக 10 முந்திரி பருப்புகளையும் சிறு துண்டுகளாக்கி வதக்கிக் கொள்ளவும்.  பிறகு அதையும் ஒரு தட்டில் மாற்றிக் கொண்டு ஆற விடவும்.


ஆறியதும், அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. 


வாணலி அப்படியே இருக்கிறது அல்லவா? அதே வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிந்ததும் தேஜ் பத்தா, ஏலக்காய் மற்றும் கிராம்பு (இப்படி முழுதாகச் சேர்ப்பதை இங்கே ஹிந்தியில் Khaகடி மசாலா என்று சொல்வார்கள்) ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், அடுப்பை ஸிம்மில் வைத்து, அரைத்து வைத்திருக்கும் கலவையை வாணலியில் சேர்க்கவும்.  மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கி வாணலியில் சேர்த்துக் கொள்ளலாம்! தண்ணீர் அதிகம் வேண்டாம் - பிறகு தேவையெனில் சேர்க்கலாம். 


இரண்டு மூன்று நிமிடங்கள் அப்படியே கரண்டியால் கலக்கி விட்டுக் கொண்டே இருந்தால் நன்கு வெந்து விடும்.  


தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் கலக்கிக் கொள்ளவும். 


பிறகு பாதி வெந்திருக்கும் பட்டாணியை மட்டும் வடிகட்டி (தண்ணீர் இல்லாமல்) சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் கரண்டியால் கிளறி விடவும். 


அதன் பின்னர் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் மேத்தியைச் சேர்த்து, கரண்டியால் கிளறி விட்டு வாணலியை ஒரு மூடி கொண்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்களில் நன்கு வெந்து விடும். 


மூடியை எடுத்து விட்டு, கரண்டியால் கலக்கிய பிறகு Gகரம் மசாலா சேர்த்து ஒரு கலக்கு! அதன் பிறகு மலாய் சேர்த்து ஒரு கலக்கு! மேலாக மழைச்சாரலாக கொத்தமல்லி தழையைத் தூவி ஒரு கலக்கு! அடுப்பை நிறுத்தி விடலாம்!  

அவ்வளவு தான் - சுவையான மேத்தி மட்டர் மலாய் சப்ஜி தயார்! சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு சுவையான தொட்டுக்கை இது! பெரும்பாலும் வீடுகளில் செய்வதில்லை - வட இந்தியாவில் ஹோட்டல்களில் வாங்கிச் சுவைப்பது தான் அதிகம்! வேலை அதிகம் என்பதால்! ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான் - சுத்தமாகவும் இருக்குமே!  என்ன நண்பர்களே, இந்த பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்த குறிப்பு உங்களுக்கும் பயனாக இருக்கும் தானே?  வெந்தயக் கீரை கிடைக்கும் சமயத்தில் இந்த மாதிரி சப்ஜி செய்து சுவைத்துப் பாருங்கள்.  உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 


மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

28 கருத்துகள்:

 1. பார்க்கவும் அழகாய் இருக்கிறது.  மட்டர் என்பதை படிக்கும்போதெல்லாம் மனதில் மேட்டர் என்றே பதிகிறது!   அப்புறம் திருத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையும் நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம். மட்டர் - மேட்டர்.. ஹாஹா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. மட்டர் மலாய் படமே அசத்தலாக இருக்கிறது ஜி பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையும் நன்றாகவே இருக்கும் கில்லர்ஜி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் சிறப்பு. மேத்தி மட்டர் மலாய் படங்களுடன் செய்முறை விளக்கமும் மிக அருமை. தங்களின் விபரமான செய்முறை விளக்கங்களை அனுபவித்து படித்ததில் அதன் ருசி என் நாவில் தெரிகிறது. நானும் இதை போன்று கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. புதுவிதமான உணவு சார்.
  முயர்ச்சித்து பார்க்கிறோம்.
  ஒரே ஒரு நெறுடல்.
  வழக்கமான உங்கள் கலகலப்பான "எப்படிச் செய்யனும் மாமு" சொல்லாடல் மிஸ்ஸிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து சுவைக்கலாம் அரவிந்த்.... எப்படி செய்யணும் மாமு அடுத்த பதிவில் சேர்த்து விடலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. மேத்தி மட்டர் மசாலா அருமையான படம், செய்முறைக் குறிப்பு. இங்கு மேத்தி, மட்டர் இரண்டும் கிடைக்கின்றன. வாங்கிச் செய்துவிடுகிறேன்.

  நல்ல கரம் மசாலாவுக்கு எந்த பிராண்ட் உபயோகிக்கலாம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹோம் ப்ரான்ட். வீட்டிலே செய்தது. இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
  2. இரண்டு நாட்கள் முன்னர் தான் மடர் பனீர் செய்தேன். பனீர் அமுல் பனீர் மாதிரி இல்லை. :( உதிர்ந்து விடுகிறது. துண்டங்களாக வரலை! ஆனால் பட்டாணிப் பச்சைப் பட்டாணி இல்லை. காய்ந்த பட்டாணியையே ஊறவைத்து வேகவைத்து ஜெயின் முறையில் பண்ணினேன். இஃகி,இஃகி,இஃகி, பொதுவாகவே வெங்காயம், பூண்டு குறைவாய்ப் பயன்படுத்தினாலும் இப்போக் கொஞ்ச நாட்களுக்கு அறவே இல்லை. :)

   நீக்கு
  3. எனக்கு ஏதோ ஒரு காம்பினேஷன் அலர்ஜி வந்துடும். பஹ்ரைன்ல நார்த் இண்டியன் சைட் டிஷ்னால மூன்று முறை அலர்ஜி வந்தது. இங்கயும் கைலாஷ் பர்வத்தில் சைட் டிஷ்னால மைல்டா அலர்ஜி வந்தது. அதனால ஒரு பிராண்டை ஸ்டாண்டர்டா வச்சுக்கலாம் என நினைத்தேன்.

   காய்ந்த பட்டாணில மட்டர் பனீரா (அப்படிச் சொல்வது தவறுன்னு தெரியுது. ஹோட்டல்கள்ல தேங்காய் பொடியை-அதாவது கொட்டைத் தேங்காயைத் துருவியது. மிகக் குறைவான விலை, தண்ணீரில் நன்று பல மணி நேரங்கள் ஊறவைத்து அதனை தேங்காய் சட்னிக்கு உபயோகிப்பாங்க, கிரைண்டர்ல அரைத்து. அதனால உங்க திப்பிச வேலை தவறில்லை)

   நீக்கு
  4. சுவையும் நன்றாகவே இருக்கும் நெல்லைத் தமிழன். Gகரம் மசாலா - பொதுவாக இங்கே இருப்பவர்கள் வீட்டிலேயே செய்து கொள்வார்கள். MDH ப்ராண்ட் பழமையானதும் நம்பிக்கையானதும் கூட. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  5. ஹோம் ப்ராண்ட் - அதே தான் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  6. திருவரங்கத்திலும் அமுல் பனீர் கிடைக்கிறது கீதாம்மா - கொஞ்சம் தேட வேண்டும்! சுபம் காம்ப்ளெக்ஸில் உள்ள அமுல் பார்லரில் கிடைக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  7. Frozen பட்டாணி இங்கேயும் குளிர் இல்லாத நாட்களில் பயன்படுத்துவதுண்டு - Mother Dairy-ல் இப்படியான பட்டாணி வருடம் முழுவதும் கிடைக்கும் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வெந்தயக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது... இது போல் செய்து பார்க்க வேண்டும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தனபாலன். வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வெந்தயக்கீரையில் குழம்பு, உ.கி.யோடு சேர்த்துக் கறி, வெந்தயக்கீரை ரொட்டி, பராத்தா, பூரி எனப் பலவும் செய்துடுவேன். இந்த மடர் மலாய் மசாலாவில் மட்டும் போட்டதில்லை. ஆனால் பொண்ணு பண்ணுவாள். சாப்பிடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதையும் செய்து பார்த்து விடுங்கள் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. இங்கே இந்த வருஷம் இன்னமும் வெந்தயக்கீரை எட்டிப் பார்க்கவில்லை. பச்சைப்பட்டாணி, பச்சை மொச்சை போன்றவை கிடைத்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெந்தயக் கீரை இன்னும் கிடைக்கவில்லையா? சாதாரணமாக கிடைக்குமே கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஹாஹா... நம் ஊரில் நிறைய கிடைக்குமே எனப் பார்த்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 9. வெந்தயக்கீரையில் வித்தியாசமாக...ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேத்தியில் செய்யும் எந்த உணவும் மிக நல்ல ருசியை கொடுத்துவிடும்

   நீக்கு
  2. வெந்தயக் கீரையில் செய்யும் இதை உங்கள் வீட்டிலும் செய்து சுவைத்துப் பாருங்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. உண்மை தான் மதுரைத் தமிழன். மேத்திக்கென்று ஒரு தனி சுவை உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....