சனி, 23 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - இலவச மின்னூல் - குறளோவியம் - சூர்ப்பணங்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வந்துட்டான்யா வந்துட்டான் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு. இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்குத் தரும் வாய்ப்பு.


******
இந்த வாரத்தின் உணவு - ஷீர்மல்:

ஷீர்மல் என்றொரு வட இந்திய உணவு உண்டு! அதைப் பற்றி நீங்கள் அறிந்தது உண்டா? குளிர் நாட்களில் இந்த ஷீர்மல் பழைய தில்லி பகுதிகளில் நிறையவே கிடைக்கும் - குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்த உணவினை அதிகம் உண்கிறார்கள்.  தயாரிப்பதும் அவர்கள் தான்.  குளிர் சமயத்தில் உடலுக்குச் சூடு தரும் உணவு இது.  அதிகமான Dry Fruits, அதிக அளவு நெய் சேர்த்து, மைதாவில் செய்யப்படும் ரொட்டி போன்ற உணவு இது. இந்த உணவு வகை ஆஃப்கானிஸ்தான் பகுதியிலிருந்து இங்கேயும் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எப்படிச் செய்வார்கள் என்பதை கீழே உள்ள காணொளி வழி நீங்கள் காணலாம்! ஒரு நண்பரின் தாயார், அவரது வீட்டில் செய்து தந்ததை நான் சுவைத்திருக்கிறேன். அதில் சேர்க்கப்படும் முந்திரி/பாதாம்/பிஸ்தா மற்றும் நெய் பார்த்தாலே நமக்கு வயிறு நிறைந்த உணர்வு வந்து விடலாம்! பாருங்களேன்!

இந்த வாரத்தின் எண்ணம் - குடியரசு தினக் கொண்டாட்டங்கள்:


ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் வந்தால் எங்கள் அலுவலகப் பகுதிகளில் கெடுபிடி அதிகமாகி விடும்.  தினமும் காலை நேரங்களில் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை நடக்கும் என்பதால் போக்குவரத்துத் தடைகள் அதிகம்.  காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து பன்னிரெண்டு மணி வரை கொண்டாட்டங்கள் நடக்கும் ராஜபாட்டையை வாகனங்கள் கடக்க அனுமதி கிடையாது.  அதற்கு முன்னதாகவே அலுவலகம் வந்து சேர வேண்டும் - இல்லை எனில் நீண்ட தூரம் மாற்றுப் பாதையில் சுற்றி வர வேண்டும் - இந்தக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள், அதற்கு ஆகும் செலவு போன்றவை மலைக்க வைக்கக் கூடிய தகவல்கள்!  வருடா வருடம் இந்தக் கொண்டாட்டம் சமயத்தில் இது தேவை, தேவையில்லை என்ற இரண்டு வித வாதங்களும் வைக்கப்படும்.  பேசிப் பேசியே நேரத்தினை கடத்துவதில் நமக்கு நிகர் நாமே!  அந்த வருடத்தின் கொண்டாட்டத்திற்குப் பிறகு இதைப் பற்றி யாருமே பேசுவதில்லை - அடுத்த வருடம் வரை இந்த விஷயத்தில் எந்தப் பேச்சும் நோ நோ தான்!  இதோ இந்த வருடமும் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகைகள் இன்றோடு முடிந்து விடும்.  செவ்வாய் அன்று குடியரசு தினம் - அனைவருக்கும் முன் கூட்டியே குடியரசு தின வாழ்த்துகள்! 


இந்த வாரத்தின் மின்னூல் - ஏழு சகோதரிகள் பாகம் ஒன்று:

எனது பயண நூல்களில் ஒன்றான ஏழு சகோதரிகள் பாகம் ஒன்று இப்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் - ஐந்து நாட்களுக்கு மட்டும் இந்தச் சலுகை. முன்னரே ஒரு முறை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வாய்ப்பினை தந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இப்போது.  தரவிறக்கம் செய்யாதவர்கள் செய்து கொள்ளலாம்!  தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே…


ஏழு சகோதரிகள் பாகம் ஒன்று


இந்த வாரத்தின் ரசித்த WhatsApp Status:


இந்த வாரத்தின் தகவல் - வானமே எல்லை:

தினமலர் பக்கத்தில் பார்த்த தகவல் - உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம். 

ஓவியக்கலை - தொழில் வாய்ப்புகள் நிறைந்தது; களிமண்ணில் மினியேச்சர் - முறையாக கற்கும் அளவிற்கு நுணுக்கங்கள் நிறைந்தது; இவ்விரு கலைகளையும் சிறகுகளாகக் கொண்டிருக்கிறார் புதுச்சேரி சவுமியா இயல்.


ஓவியக்கடல்


'ஓவியக்கலை'ங்கிறது பொழுதுபோக்கு விஷயம் மட்டும் இல்லை; இதுல நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கு! ஓவியங்களை உலகளவுல விற்பனை செய்ய நிறைய இணையதளங்கள் இருக்கு. இதோட, 'ஆன்லைன்' வகுப்புகள் மூலமாகவும் சம்பாதிக்கலாம்.


ஒரு பக்கம் இப்படி நான் வகுப்புகள் எடுக்கிறேன்; இன்னொரு பக்கம், 'குறளோவியம்'ங்கிற தலைப்புல 1,330 திருக்குறள்களுக்கான பொருள் விளக்கும் வகையில, 1,330 ஓவியங்கள் வரையுற முயற்சியில தீவிரமா இயங்குறேன்.


களிமண்ணில் மினியேச்சர்


'மினியேச்சர்' பொம்மை தயாரிப்புல பாலிமர் களிமண், ஈ பாக்ஸி களிமண் மற்றும் ஜம்பிங் களிமண்தான் என் விருப்பம். விலை குறைவான ஈ பாக்ஸி களிமண் சுலபத்துல உலராது; 12 வகையான அடர் வண்ணங்கள் ஜம்பிங் களிமண்ணோட சிறப்பம்சம்; ரொம்பவே மென்மையானது... பாலிமர் களிமண்; இதெல்லாம், பேன்ஸி ஸ்டோர்ல கிடைக்கும். மூன்றே மாதங்கள்ல இக்கலையை கத்துக்கிட்டு பணம் அள்ளலாம்.


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு: 


2013-ஆம் வருடம் இதே நாளில் எனது வலைப்பூவில் பகிர்ந்த ஒரு பதிவு - சூர்ப்பணங்கு - நாடகம் பற்றிய பதிவு.  அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு…


தலைநகர் தில்லியின் Mandi House பகுதியில் இருக்கும் Meghdoot Open Air Theatre-க்கு ஐந்தே கால் மணிக்கே சென்று சேர்ந்தேன். ஐம்பது ரூபாய் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு, காத்திருந்தேன். ஆறு மணிக்கு, காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்கள். தில்லியின் குளிரிலும் பல காலுறைகளிலிருந்து வந்த வாடை மூக்கை அடைந்து மூர்ச்சையடையச் செய்யும்படி இருந்தது!


மணல்மகுடி குழுவினரின் இந்நாடகம் ஒரு மணி நேரம் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் நடுவே இடைவேளை இல்லை என்ற அறிவிப்புடன், ஏழு பாகங்கள் கொண்ட நாடகம் துவங்கியது.  ஒவ்வொரு பாகம் ஆரம்பிக்கும் முன்னர் அந்த பாகத்தின் கதையை இரண்டு பெரிய எல்.சி.டி. திரைகளில் ஆங்கிலத்தில் [தமிழ் தெரியாத தில்லி வாழ் மக்கள் சௌகரியத்திற்காக] விளக்கிச் சொல்லி விட்டு, நாடகத்தினை ஆரம்பித்தார்கள்.


நாடகத்தில் நடிக்கும் ஒரு நபர் வந்து “அந்த சனியனை அமுத்தி தூரப் போடுங்க! அதாங்க அந்த செல்ஃபோன் சனியனை அமுத்தி தூக்கிப் போடுங்க!” என்று வேண்டுகோள் விடுத்தார். சைலண்ட் மோடில் போட்டுவிட்டு நாடகத்தினைக் காண ஆர்வத்துடன் காத்திருந்தேன்.  அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லாது நாடகம் ஆரம்பித்தது.


மேடையின் ஒரு மூலையில் ஒரு பெரிய வெள்ளைப் பொதி போல இருக்க, அதிலிருந்து நல்லதங்காளாக வெளியே வருகிறார் சூர்ப்பணங்கு.  தாயை அணைத்துக் கொண்டு இருக்கும் குழந்தைகள் போல அவரைச் சுற்றி ஏழு குழந்தைகளும் ஒவ்வொருவராய் வெளியே வந்து தனது பசியைச் சொல்கிறார்கள். பரந்து விரிந்து இருக்கும் இப்பூமியில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவு அளிக்க இயலாது தன் பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கிறாள்.


முழுப்பதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே...


சூர்ப்பணங்கு - நாடகம்


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளலாமே!  நாளை மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


22 கருத்துகள்:

 1. ஷீர்மல்லில் எவ்வளவு பருப்புகள்...  பல்லிடுக்கில் மாட்டிக்கொள்ளுமோ!!

  தடங்க்ளை, தழும்புகளை - வேறு வரிகளில் எஸ் எம் எஸ் காலத்தில் ரசித்த தகவல்.

  சவுமியாவின் திறமைக்கு ஸலாம்.

  ரசனையான கதம்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கதம்பம்.

   ஶ்ரீராமின் சந்தேகம் கண்டு சிரித்துவிட்டேன்.

   நீக்கு
  2. //பல்லிடுக்கில் மாட்டிக் கொள்ளுமோ?// ஹாஹா... நல்ல சந்தேகம் உங்களுக்கு!

   இன்றைய பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 2. பிட்ஷா போலவே இருக்கிறது. கதம்ப செய்திகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 3. ஷீர்மல் பற்றி இன்று தான் அறிகிறேன் ஜி... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. எனக்கு மிகவும் பிடித்ததது அந்த ஸ்வீட் தான்.
  மைதா மாவு மட்டும் இல்லாமல்
  வேற மாவில் செய்தால் இந்த சுவை வருமோ தெரியாது.

  நெய்யில் முக்கி, சர்க்கரையில் குளிப்பாட்டி.....ஆஹாஆ.
  எட்டாக்கனியாகிவிட்டதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எட்டாக்கனி! - உண்மை தான் வல்லிம்மா. மைதாவுக்குப் பதில் கோதுமையில் செய்யலாமோ என்று தெரியவில்லை. ஆனாலும் இத்தனை தடிமனாக, நெய் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் உடன் சாப்பிடுவது எனக்குக் கடினம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ஷீர்மல் குறித்து இப்போதுதான் அறிகிறேன். சவுமியா இயலுக்குப் பாராட்டுகள். கதம்பம் நன்று. தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷீர்மல் - நான் சுவைத்திருக்கிறேன் என்றாலும் செய்ததில்லை. நம் பதிவுலக நண்பர்களுக்கு தெரியப்படுத்தவே இங்கே பகிர்ந்து கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. கதம்பம் தொகுப்பு அழகு.
  அன்பின் வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 8. அன்பு சௌமியாவுக்கு வாழ்த்துகள்.
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 9. குடியரசு தின வாழ்த்துக்கள்!
  கதம்பம் நன்றாக இருக்கிறது.

  ஷீர்மல் செய்முறை பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....