திங்கள், 18 ஜனவரி, 2021

வாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மார்கழி மூன்றாம் பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல்.  துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை.


******




இந்த நாளின் பதிவு வலையுலக நண்பர் திரு இரா. அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்று.  வாருங்கள் அவர் எழுத்தில் படித்து ரசிக்கலாம்.


*****


அனல் மேலே பனித்துளி : நம்முள் மறைந்துள்ள மகிழ்ச்சியை கண்டடையும் ஓர் எளிய அகப்பயணம்.





'எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும், ஏறக்குறைய ஒன்றோடு ஒன்று ஒத்திருக்கின்றன. ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதற்கே உரித்தான முறையில் சந்தோஷமின்றி இருக்கிறது' என்பது உலகப் புகழ் பேரிலக்கியமான 'அண்ணா கரினினா' வின் முதல் வரி. 


எவ்வளவுதான்  சம்பாரிக்கும் குடும்பமாக இருந்தாலும், மகிழ்ச்சி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே தோன்றுகிறது. 


மகிழ்ச்சி இன்மைக்குப் பேராசை, ஆணவம், கோபம் என பலவற்றை பொதுவாகக் கூறினாலும் அதை முற்றிலும் அகற்றி வாழ்வதும் சாத்தியமற்றதே என்பது நம் அனுபவத்தால் உணர்ந்த உண்மை. 


இந்நிலையில், வாழ்வில் மகிழ்ச்சியை மக்கள் எளிதாகத் தவற விடுவதற்கான காரணங்களைத் தத்துவச் சிக்கலின்றி எளிய கருத்துகளாக முன் வைப்பதே திருமதி சஹானா கோவிந்த் அவர்களின் 'அனல் மேலே பனித்துளி' சிறுகதைத் தொகுப்பு. 


'வேலை, ஆரோக்கியம், குடும்பம், நட்பு, உயிர் என ஐந்து பந்துகளை மேலே எறிந்து விளையாடும் விளையாட்டுதான் வாழ்க்கை. இதில் வேலை மட்டும் ரப்பர் பந்து, தரையில் விழுந்தாலும் துள்ளி வரும். மற்ற எல்லாமே கண்ணாடிப் பந்துகள். விழுந்தால் கீறல் விழலாம், உராய்வுகள் ஏற்படலாம் ஏன் உடைந்தே கூட போய்விடலாம். எப்போதுமே பழைய வசீகரத்துக்கு அவை திரும்ப முடியாது. எனவே வாழ்க்கைக்கும் வேலைக்குமிடையே சீரான ஒரு சமநிலை இருக்க வேண்டியது அவசியம்' என்கிறார் பிரைன் டைசன். 


அதுபோல, பணம் ஈட்டுவதே வாழ்வு என எண்ணுபவர்களுக்கு, அத்தகைய பகட்டான வாழ்வின் மகிழ்ச்சிகள் காலைப்பனி போல் விரைவில் கரையக் கூடியது எனவும், பொருளாதாரத்தோடு சுற்றத்தையும் நட்பையும் பேணுவதன் அவசியத்தையும் உணர்த்துவதே இந்நூலின் மையச் செய்தியாய் வரும் 'அனல் மேலே பனித்துளி' சிறுகதை. 

வீட்டிற்கு வீடு வாசப்படி என்பது போல, சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனை இருப்பதும், அது குறித்து அவர்களை நெருங்கிய சிலரே அறிந்திருப்பதும் இயல்பே. 


மற்றவர் சொற்களால் காயப்படுவதாகக் கவலையுறும் நாம், பிறர் மனம் அறியாமல் நம் சொற்களாலும் செயல்களாலும் நம்மை அறியாமல் காயப்படுத்தப்படுவோர் வலிகளை வெளிச்சம் போட்டு காட்டுவதே 'அச்சச்சோ அப்படி இல்ல' சிறுகதை. 


தான் கிரிக்கெட் ஆடிய காலங்களில், தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு வாயால் பதில் அளிக்காமல், தனது ஆட்டத்தை நாளுக்குநாள் மெருகேற்றி தன் மட்டையால் பதில் அளித்தார் திரு சச்சின் டெண்டுல்கர். 


அதுபோல, தன்னை எப்போதும் விமர்சனத்திற்கு ஆளாக்குவதாக குறைப்பட்டுக்கொள்ளும் ராதிகாவிற்கு, அவள் பலங்களைச் சுட்டி, அதை மேம்படுத்த நேரத்தை உரமாக உபயோகிக்க ஊக்குவிக்கும் கணவன் வாசுவின் பேச்சால் மிளிர்கிறது 'சுயம்' சிறுகதை. 


மாற்றமே இவ்வுலகில் மாறாத ஒன்று என்பார்கள். அப்படியிருக்க, நம் நெடுநாள் நண்பர்களின் நடத்தையில் ஏற்படும் நுண்ணிய மாறுதல்களை நாம் காணத் தவறும் சூழலில், அதைக் கண்டு உணர்த்துபவர்களின் அக்கறையான வார்த்தைகளைப் பரிசீலிக்கும் திறந்த மனதை வைத்திருப்பதன் அவசியத்தை உணர்த்துவதே 'நட்பு' சிறுகதை. 


கொண்டாட்டம் என்றால் வெறும் குடி என சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் இன்றைய தலைமுறைக்கு, அதன் விளைவுகளை எழுத்தாளருக்கே உரிய நகைச்சுவை நடையில் காட்டியிருப்பதே 'என்னைப் போல் ஒருவன்' சிறுகதை. 


வாழ்வில் இழப்புகள் வருவது இயல்பானதும் தவிர்க்க  முடியாததும் ஆகும். அதை எண்ணி அயர்ந்துவிடாமல், நம் உறவுகளின் எதிர்ப்பார்ப்பையும், ஏக்கங்களையும் மதித்தும், புரிந்தும் அதற்கேற்ப நம் வாழ்வை வடிவமைத்து மகிழ்ச்சியை உருவாக்கும் ரகசியத்தை விளங்க வைப்பதே, 'ஆசை ஆசை இப்பொழுது' சிறுகதை. 


பண்டிகைகளை வெறும் விடுமுறைகளாகவும், சடங்குகளை வெறும் மூட நம்பிக்கைகளாகவும் கருதுபவர்களுக்கு வாழ்வு வெறுமையாக மாறிவிடுவது வியப்பல்ல. 


எதையும் பணம் கொண்டு மட்டும் அளக்காமல், தம் இணையின் விருப்பங்களை அறிந்து அதை வெளிப்படுத்தும் வாய்ப்பாகப் பரிசுகளையும், பண்டிகை கொண்டாட்டங்களையும் வடிவமைப்பதன் சூட்சமத்தைக் காட்டுவதே 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' சிறுகதை. 


குடும்பத்தின் அச்சாணிகளான பெண்கள், எதற்கும் திருப்தியடையாமல் பேசியே கொல்வதாக எண்ணும் ஆண்களுக்கு, அதையே உறவை உரமாக்கும் கருவியாக மாற்றும் உத்திகளை நகைச்சுவையான நடையில் வெளிப்படுத்தியிருப்பதே 'உன்னை ஒன்று கேட்பேன்' சிறுகதை. 


தன் இணை அதிகம் பேசுவதை வெறுப்பதாக ஆண்கள் சொல்லிக்கொண்டாலும், அதை அவர்களே அறியாமல் விரும்புவதையும், தன் இணையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் சிறந்த கருவியாக அவளின் பூடகமான பேச்சுகள் அமைந்திருப்பதையும் உணர்த்துவதே 'ஒரு சொல்லாவது சொல் கண்ணே' சிறுகதை. 


பெண்களின் தரப்பில், அவர்களின் மொழியையும், எதிர்ப்பார்ப்புகளையும் வலிகளையும் உணர்த்தும் இந்நூல், ஆண்களின் தரப்பையும் பெண்களுக்கு உணர்த்தும் வகையான சிறுகதைகளையும் ஓரிரண்டேனும் கொண்டிருந்திருக்கலாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவது உண்மை. 


இருந்தபோதிலும், மக்கள் எளிதில் உணரத் தவறிய சில சுவையான அம்சங்களை உணரச் செய்து வாழ்வை வளமாக்கும் வழிகளை உணர்த்துவதில் இந்நூல் வெற்றியடைந்திருக்கிறது எனலாம். 


'உதாசீனப்படுத்தப்படுகின்ற ஒவ்வோர் ஆசீர்வாதமும் ஒரு சாபமாக மாறுகிறது' என்பது உலகின் தலை சிறந்த புத்தகங்களில் ஒன்றான 'Alchemist' இன் தமிழ் வடிவமான 'ரசவாதி' யின் வைர வரி. 


எனவே, நம் வாழ்வின் ஆசீர்வாதங்களான உண்மையான உறவுகளையும், நட்புகளையும் அடையாளம் கண்டு, அவற்றை வாழ்வின் மகிழ்ச்சியை அறுவடை செய்யும் உரமாக மாற்றி பொருளாதாரத்தோடு தனி வாழ்விலும் வெற்றியும் மகிழ்ச்சியும் அடையும் பக்குவத்தைக் கதைகளின் மூலம் சொல்லும் இந்நூலை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 


அனல் மேலே பனித்துளி


நட்புடன்,


இரா. அரவிந்த்


******


என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


12 கருத்துகள்:

  1. அப்பாவியின் கதைகளை அவர் பிளாக்கில் முன்பு படித்ததுண்டு.  சமீபத்தில் பொடிக்கவில்லை.  நல்ல விமரிசனம் அளித்திருக்கிறார் அர்விந்த்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொடிக்கவில்லை இல்லை, படிக்கவில்லை!!

      நீக்கு
    2. சரியாகவே படி(பொடி)த்தேன் - :))))

      தங்களது மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  3. I must thank Venkat Anna thru whom Mr.Aravind came to know about my book. Very rarely we get such in-depth reviews. Thanks a lot Mr. Aravind for taking time to review in detail 💐🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Welcome mam.
      Review is just a traylor. Your book is the main picture.
      Our aim is to make good books reach many.
      Thank you very much for giving us quality stories.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. அருமையான மதிப்புரை. நூலை வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....