அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - என்ன நடக்கும்? - Bபஞ்ஜாரா மார்கெட் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பாம்பின் சிகரம் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தொடரின் முந்தைய பகுதிகளை இது வரை படிக்கவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்.
சென்ற பகுதியில் சொன்னது போல, மதிய உணவை முடித்துக் கொண்ட நாங்கள், எங்கள் வழிகாட்டி கௌரவ் உடன் மலையேற்றத்தினை மதியம் 2 மணிக்கு தொடங்கினோம். முதலாம் நாளான அன்று சுமார் நான்கு கிலோமீட்டர் வரை மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்றார் கௌரவ். இந்த மலையேற்றம் குறித்து இணையதளங்களில் குறிப்பிடும்போது Easy to Moderate Trek என்று குறிப்பிடுகிறார்கள். முதன் முதலாக மலையேற்றம் செய்பவர்கள் கூட மலையேற்றத்தினைச் சுலபமாகச் செய்து விட முடியும் என்றும் சொல்கிறார்கள். எங்களது மலையேற்றம் எப்படி இருக்கப் போகிறது, சுலபமாக இருக்குமா இல்லை கடினமா என்பது போகப் போகத்தானே தெரியும் என்ற எண்ணத்துடன் நானும் நண்பர்களும் கிராமத்தினை விட்டு, எங்கள் முதுகுச்சுமை பையை மாட்டிக்கொண்டு கைகளில் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். கிராமத்திலிருந்து புறப்படும்போது சிமெண்ட் சாலையாக இருந்தாலும் போகப் போக மலைப்பாங்கான பகுதிகள் ஆரம்பித்து விடுகின்றன. பாறைகளும், தீடிரென உயரும் மலைகளுமாக மலையேற்றத்தின் கடுமையை நமக்கு உணர்த்த ஆரம்பித்து விடுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 4640 அடி உயரத்தில் இருக்கும் பந்த்வாடி கிராமத்திலிருந்து முதல் நாள் செல்ல வேண்டிய தூரம் - நான்கு கிலோமீட்டர். இந்த நான்கு கிலோமீட்டர் மலையேற்றத்தில் நாம் அடைந்திருக்கும் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரம். அதாவது சுமார் 3000 அடி உயரம் நாம் மேலே வந்திருப்போம். நான்கு கிலோ மீட்டர் தொலைவு தான் என்றாலும் உயரம் அதிகரிக்க அதிகரிக்க, கிட்டத்தட்ட இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் மலையேற்றம் செய்ய நமக்குத் தேவையாக இருக்கும் என்பது நண்பர் Bபிஷ்ட் அவர்களின் கணிப்பு. மலையேற்றத்தின் போது அவ்வப்போது நின்று நிதானித்து, இயற்கையையும் ரசிப்பதோடு, உடலுக்கும் கொஞ்சம் ஓய்வு அவ்வப்போது அளிப்பது அத்தியாவசியமாக இருக்கிறது. என்னால் முடியும் என்று வேகமாக ஏறிய பல இளைஞர்(ஞி)கள் பாதி வழியிலேயே முடியவில்லை என்று புலம்பிக்கொண்டு கீழே இறங்கி வர யத்தனித்ததையும் எங்களால் கவனிக்க முடிந்தது. எங்கள் குழுவில் நான்கில் மூன்று பேர் ஐம்பதைக் கடந்தவர்கள் என்பதால் Slow and Steady Wins the Race எனும் வாக்கியத்தை கவனத்தில் கொண்டே மலையேற்றம் செய்தோம் என்றால் அது மிகையாகாது.
மலையேற்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கிராமத்தில் இருக்கும் ஒரு சிறு ஆலயம் கண்களுக்குத் தென்படுகிறது. நாக தேவதைக்கான கோவில். பாம்பின் ஏழு தலைகள் மேலே அமைந்திருக்க ஒரு அழகான நுழைவாயில். அதனைக் கடந்தால் நாக தேவதைக்கான ஆலயம். அதன் அருகிலேயே குடிநீருக்கான வசதி. முதல் நாள் மலையேற்றத்தின் போது ஆங்காங்கே இப்படி குடிநீர் வசதிகள் இருக்கின்றன என்பதால் நமது குப்பிகளில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொண்டு இயற்கையான தண்ணீரை நாம் அருந்த முடியும். மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் அருந்தும் தண்ணீர் பெயரில் உள்ளது போல சத்துகளைக் கொண்டதல்ல என்பதை இங்கே தண்ணீர் குடித்தால் தெரிந்து கொள்ள முடியும். குளிர் காலம் என்பதால் சில்லென்று இருந்தாலும், தண்ணீரில் நல்ல சுவை. ஆங்காங்கே இப்படி தண்ணீர் கிடைக்கும் இடங்களில் குப்பிகளில் நிரப்பி முதுகுச் சுமையில் சேர்த்துக் கொண்டால் நல்லது - ஆளுக்கொரு குப்பி என தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தால் தேவைப்படும்போது அருந்திக் கொள்ளலாம். இது தவிர முதல் நாள் மலையேற்றத்தின் போது ஆங்காங்கே கிராமத்தினர் சிறு கடையும் போடுகிறார்கள். உள்ளூர் மலைகளில் கிடைக்கும் மலை எலுமிச்சை சாறு தருகிறார்கள். ஒரு கிளாஸ் ஐம்பது ரூபாய் என்றாலும் தேவாமிர்தமாக இருக்கிறது அந்த எலுமிச்சை சாறு.
நண்பர் Bபிஷ்ட் உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கே இருக்கும் தாவரங்கள், இயற்கை போன்ற பல விஷயங்களை அறிந்தவராக இருக்கிறார். கூடவே வழிகாட்டி கௌரவ் எங்களுக்கு இயற்கை குறித்த பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார். வழியில் Bபிச்சு எனும் தாவரம் இருக்கிறது. தப்பித்தவறி நம் தோல் மீது பட்டால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அரித்துப் பிடுங்கிவிடும் என்கிறார். கால் வலிக்கிறது என்று ஆங்காங்கே நிற்கும் சில பயணிகளின் தோல் மீது இந்தச் செடியின் இலையை ஒத்தி எடுத்தால் வலி போய்விடும் என்று கிண்டலாகச் சொல்கிறார் கௌரவ்! அரிப்பின் வீரியத்தில் வலி தெரியாமல் போய்விடும் என்பது அவரது வாதம்! தேவையில்லாத ஆணி என்று நான் நினைத்துக் கொண்டேன். தலைவலி போய் திருகுவலி வந்த கதை ஆகிவிடும் அல்லவா? ஆனாலும் அந்தச் செடியை நன்கு பார்த்து வைத்துக் கொண்டதால் வழியில் ஆங்காங்கே இந்தச் செடி வரும்போதெல்லாம் உடல் மீது எங்கேயும் பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக நடக்க அந்த தகவல் எங்களுக்கு உதவியாக இருந்தது.
மேலே சொன்னது இப்படியான ஒரு தகவல் என்றால் இன்னுமொரு நல்ல விஷயமும் எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. அதே மலையேற்றத்தின் போது பார்த்த இன்னுமொரு தாவரம் டிம்ரு என உள்ளூர் பாஷையில் அழைக்கப்படும் தாவரம். அதன் குச்சிகளை வேப்பங்குச்சி போல பல்துலக்க பயன்படுத்துகிறார்கள். நண்பர் இது குறித்து சொன்ன சில நிமிடங்களில் நாங்கள் சென்ற பாதையிலேயே கௌரவ் அந்தச் செடியைக் கண்டுகொள்ள, முட்கள் நிறைந்த அந்தக் குச்சியை உடைத்து, முட்களை எல்லாம் அகற்றி எங்கள் அனைவருக்கும் சிறு சிறு துண்டுகளைத் தந்தார். அவற்றை மென்று நீண்ட நேரம் வாயில் வைத்திருக்க தண்ணீர் தாகமின்றி இருந்ததோடு பற்களும் கொஞ்சம் சுத்தமானது! தொடர்ந்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்று கௌரவ் மற்றும் Bபிஷ்ட் என இருவரும் சொல்லிக் கொண்டு வந்தார்கள். மேலும் சில செடிகளிலிருந்து சிறு சிறு கனிகள், காய்கள் என பறித்து எங்களுக்குத் தந்தபடியே வந்தார் கௌரவ். இப்படியாக மலைப்பகுதி குறித்த நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டு வந்ததில் மலையேற்றத்தில் இருந்த சிரமம் மறந்து நடந்து கொண்டிருந்தோம்.
மலையேற்றப் பாதையில் ஒரு சில இடங்களிலிருந்து நாங்கள் புறப்பட்ட பந்த்வாடி கிராமத்தினை ஒரு பறவைப் பார்வையில் பார்க்க முடிந்தது - அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சுற்றிலும் பசுமையான மலை, செல்லும் பாதைகள் கரடு முரடாக இருந்தாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது பசுமையாகத் தெரிந்த காடுகள் மனதுக்கு இதம் அளித்தன. ஆங்காங்கே இருந்த மரங்களில் குளிர் நாட்களுக்கு அங்கே இருக்கும் மனிதர்கள் தங்களது வளர்ப்பு பசுக்களுக்கான புல்லை சேமித்து வைத்திருந்தார்கள். ஒரு நபர் காடுகளில் சேகரித்த அப்படியான அதீத தலைச்சுமையுடன் நடந்து வந்து தலைச்சுமையை கீழே வைத்து அமர்ந்து இருந்தார். அந்த மூட்டையை நண்பர் தூக்கிப் பார்க்கலாம் என முயல, அவரால் அசைக்கக் கூட முடியவில்லை! ஆனால் அந்த உள்ளூர் மனிதர் சிரித்தபடியே சொன்னது - “உங்களால முடியாது! கஷ்டம்!” என்பதே! பார்க்கும்போதே அந்த மனிதர் தலைச்சுமையுடன் நடந்து வருவது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மலைப்பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு இருக்கும் கஷ்டங்களை நாம் பார்த்தால் நாம் கஷ்டம் என்று சொல்லும் பல விஷயங்கள் ஒன்றுமே கஷ்டமானவை அல்ல என்பது புரியும்.
தொடர்ந்து மலையேற்றத்தினை உற்சாகத்துடன் செய்து Gகோட் எனும் சிறு கிராமத்தினைக் கடந்து நாங்கள் சென்று சேர்ந்த இடம் கைதான் எனும் இடம் - அங்கே தான் எங்கள் மலையேற்றத்திற்கான Base Camp அமைந்திருக்கிறது. சுமார் இரண்டே கால் மணி நேர மலையேற்றத்திற்குப் பிறகு நாங்கள் அந்த இடத்தினை அடைந்திருந்தோம். வழியில் அவ்வப்போது நின்று நிதானித்து செல்ல வேண்டியிருந்தது. மலையேற்றத்தில் பொதுவாக கவனிக்க வேண்டிய விஷயம், நமது உடலை அதீதமாக வருத்தக்கூடாது என்பது தான். எப்போது நம் உடல் கொஞ்சம் ஓய்வெடு என்று சொல்கிறதோ/உணர்த்துகிறதோ, அப்போது ஓய்வு எடுப்பது அவசியம். அப்படி பல இடங்களில் நமது இதயம் துடிக்கும் ஒலி நமக்கு நன்கு கேட்கும். அப்படியான சமயங்களில் ஒன்றிரண்டு நிமிடங்கள் நின்று ஓய்வெடுத்துக் கொண்டே மலையேற்றத்தினை தொடர்ந்தோம் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன, தொடர்ந்து என்ன செய்தோம் போன்ற தகவல்களை வரும் பகுதியில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
14 ஃபிப்ரவரி 2025
மலையேற்றம் கடினம். நண்பர்களோடு செல்லும்போது அவ்வளவு கஷ்டம் தெரியாது. குறிப்பா காலநிலை நன்றாக இருக்கணும்.
பதிலளிநீக்குமலையேற்றம் நண்பர்களோடு செல்லும்போது கடினமாக இருப்பதில்லை என்பது உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
அருமையான அனுபவம்.
பதிலளிநீக்குநீங்கள் கையில் பிடித்திருக்கும் அந்த குச்சியைதான் மறந்து எடுக்காமல் வந்து விட்டதாக குறிப்பிட்டதாக நினைவு. அல்லது அது வேறொன்றா?
மறந்து போனது கையுறைகள். குச்சி என்னிடம் இல்லை. நண்பரிடம் இரண்டு இருந்ததால் அவரிடமிருந்து நான் ஒன்றை பெற்றுக் கொண்டேன்.
நீக்குஅனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அந்த பிச்சு தாவரம் போல இங்கும் ஒரு தாவரம் உண்டு.
பதிலளிநீக்குஅதை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவியின் வீட்டிலும் வளர்த்தால், தினசரி இரண்டு இலைகள் கையில் கொண்டு செல்வது அவர்களுக்கு செம பாதுகாப்பு.
அண்ணா பல்கலைக்கழக மேட்டர்கள் நடக்காது!
நம் ஊரிலும் இருக்கலாம். வகைகள் வேறு வேறாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நீக்குமாணவிகளுக்கு இப்படியான இலைகள் நல்ல பாதுகாப்பு - உண்மை. பல சமயங்களில் இப்படியான விஷயங்கள் அத்தியாவசியமாக இருக்கிறது. நாட்டு நடப்பு அப்படி! வேதனை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
கௌரவ் குறும்பானவர் என்று சென்ற பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். சொல்லி இருக்கவே வேண்டாம். குறும்பு கூத்தாடும் அவர் முகத்தைக் கண்டு நாங்களே சொல்லி இருப்போம்.
பதிலளிநீக்குஉண்மை. அவரது முகத்திலேயே அத்தனை குறும்பு கூத்தாடுகிறது ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மலைக்காட்சி அழகு. மலையேற்றப்பாதைகள் சிரமத்தைச் சொல்கின்றன. அதில் பாதை என்று தெரிகிறதா? படத்தில் பார்த்தால் தெரிவது போலதான் இருக்கிறது.
பதிலளிநீக்குமலைக்காட்சி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குமலையேற்றப் பாதைகளில் சில இடங்களில் உண்டு - இரண்டு மூன்று பாதைகளும் இருக்கின்றன என்றாலும் வழிகாட்டிகளின் உதவியோடு செல்வதே நல்லது - தனியாகச் சென்று காட்டில் மாட்டிக் கொள்ளும் அபாயமும் உண்டு என்கிறார்கள் அங்கே உள்ள வழிகாட்டிகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
படங்கள் அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குஇந்த தைப்பூசத்துக்கு தோவாளை முருகனை தரிசிக்க சிறிய குன்று ஏறியதுதான் எங்க மலையேற்றம்!
அந்த பிச்சு இலை எங்க ஊர்ல அதன் பேர் செந்தட்டி. ஒரு மலையாளத் திரைப்படத்தில் போதை ஆசாமி ஒருவரை வழிக்கு கொண்டு வர இந்த செந்தட்டியை அவர் வேட்டிக்குள் வைத்து விட்டு கைகளை பின்புறம் கட்டி விடுவார், படத்தின் ஹீரோவான போலீஸ்கார். அப்புறம் என்ன, (B)பிச்சு, போதை ஆசாமியை வச்சு பிச்ச்சூ!!!
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குநம் ஊரில் இப்படியான பயணங்கள் நீங்கள் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
செந்தட்டி - ஆஹா... அந்த மலையாள படம் நானும் பார்த்து இருக்கிறேன் - நீங்கள் சொல்லி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
மலையேற்ற படங்கள், காணொளி , மற்றும் செய்திகள் அருமை.
பதிலளிநீக்குமலையேற்றப்பாதையில் புற்கள் தெரியவில்லயே கற்கள் தான் தெரிகிறது.
இந்த மஞ்சப்புற்களை தான் மலைமீது இருந்து தலைசுமையாக எடுத்து வந்தார்கள். நாங்கள் பார்த்த திடியன் மலையில்.
மலையேற்றம் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.
அருமையான பயணம்...
பதிலளிநீக்குவாசகம் அருமை....உண்மை. நமக்கு நல்ல கம்பானியன் வேண்டும் பயணம் செய்ய ஒத்த அலைவரிசை...அப்போதுதான் நாம் விரும்பும் சில விஷயங்களைச் செய்ய முடியும்.
பதிலளிநீக்குஉங்க பயணத்துக்குப் பொருத்தமான வாசகம்!
கீதா
இப்படியான கிராமங்களில் மலைப்பகுதிகளில் இந்த Step farming பார்க்கலாம் நிறைய.
பதிலளிநீக்குமேலே ஏற ஏற பந்த்வாடி கிராமம் பறவைப் பார்வையில் அழகா இருக்கு!
சுற்றிலும் மலைகள். அழகு இல்லையா? இப்படி மலைகளைப் பார்த்து வாழும் போது உடல் நலமும் நல்லாருக்கும்னு தோன்றும் எனக்கு. மேலேயிருந்து பார்க்கறப்ப கிராமம் சிறிய கிராமம் என்பது தெரிகிறது . நீங்க போன பதிவில் கிராமத் தொகை பத்தி சொல்லியிருந்தாலும் ...இப்படிப் பார்க்கறப்ப அது தெரிகிறது.
நீங்கள் நிற்கும் ஃபோட்டோவைப் பார்க்கறப்பவும், நான் என் கேமாராவில் மற்றும் மொபைலில் எடுத்த புகைப்படங்களைப் பார்க்கறப்பவும் கேமராவில் எடுப்பதற்கும் மொபைலில் எடுப்பதற்கும் வித்தியாசம் இருப்பது தெரிகிறது.
இப்படங்களும் நன்றாக இருக்கின்றன என்றாலும் கேமராவில் எடுத்தவை இன்னும் நன்றாக இருந்ததோ என்று தோன்றுகிறது. ஒரு வேளை இது என் மனமாக இருக்கலாம். நான் கேமரா காதலி!
கீதா
மலையேற்றத்தின் போது அவ்வப்போது நின்று நிதானித்து, இயற்கையையும் ரசிப்பதோடு, உடலுக்கும் கொஞ்சம் ஓய்வு அவ்வப்போது அளிப்பது அத்தியாவசியமாக இருக்கிறது. //
பதிலளிநீக்குகண்டிப்பாக ஜி. நின்று இயற்கையை ரசிக்கும் போது மனம் அமைதியாக அனுபவிக்கும் ஒரு அமைதி கிடைக்கும் பாருங்க!!! சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி அது.
இதயப் பிரச்சனைகள் இல்லாத நல்ல இதயத்துக்கும் இப்படி ஏறுவது நல்லது என்று சொல்லப்படுகிறது. பிபி இருக்கறவங்களுக்கு அது குறையுமாம்! பின்ன மலையையும் இயற்கையையும் பார்க்கறப்ப மன அழுத்தம் இருக்குமா என்ன!!!!
எங்கள் குழுவில் நான்கில் மூன்று பேர் ஐம்பதைக் கடந்தவர்கள் என்பதால் Slow and Steady Wins the Race எனும் வாக்கியத்தை கவனத்தில் கொண்டே மலையேற்றம் செய்தோம் என்றால் அது மிகையாகாது. //
நல்ல விஷயம் ஜி. நார்மலாகவே மாடிப்படி ஏறுவதற்கும் கூட வேகமாக ஏறாமல் நின்று நிதானமாக ஏறுவது நல்லது.
எங்கூர் செந்தட்டி அங்குமா!!!! இதை வைச்சு பயமுறுத்தி விளையாடிய நினைவுகள்!
//மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் அருந்தும் தண்ணீர் பெயரில் உள்ளது போல சத்துகளைக் கொண்டதல்ல என்பதை இங்கே தண்ணீர் குடித்தால் தெரிந்து கொள்ள முடியும்.//
யெஸ்!!!!
மலை எலுமிச்சை சாறு!!! ஆஹா....கொல்லிமலை நினைவு வருகிறது!
மலையேற்றப் பாதையில்னு போட்டிருக்கும் படத்தைப் பார்த்ததும் இந்த இடம் கவனமாக நடக்க வேண்டிய இடம்...டக்கென்று சறுக்கிவிடும் கற்கள் மண்...
கிரேட் ஆஞ்சு படம்!
அந்த செந்தட்டி ஹையோ வினையே வேண்டாம்...
அவற்றை மென்று நீண்ட நேரம் வாயில் வைத்திருக்க தண்ணீர் தாகமின்றி இருந்ததோடு பற்களும் கொஞ்சம் சுத்தமானது!//
டிம்ரு வாவ்!!! காய் கனி என்று நல்ல அனுபவம் ஜி!
அந்த மனிதர் புல் சுமையோடு நடப்பது எல்லாம் அங்கு வசிப்பவர்களுக்குத்தான் அது சாத்தியம்...என்ன ஒரு ஆரோக்கியம் இல்லையா? அவங்க படும் கஷ்டம் பார்க்கறப்ப நமக்கெல்லாம் ஒன்றுமே இல்லைதான் ஆனா அவங்களுக்கு அது கஷ்டமாக இருக்காது என்று தோன்றுகிறது நமக்குப் பார்க்கறப்ப அப்படித் தோன்றுகிறதோ?
ஆமாம் இடையிடையே ஓய்வு மிக முக்கியம்.
அருமையான அனுபவம் ஜி. ரசித்து வாசித்தேன். காணொளியும் பார்த்தேன் நல்லாருக்கு.
கீதா
மலையேற்றப் படங்கள் அருமையாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஉங்கள் கைட்டும் நல்ல குறும்பானவர் பயணத்தில் உங்களுக்கு இது நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.