திங்கள், 24 பிப்ரவரி, 2025

பனி படர்ந்த பாதைகள் மற்றும் சூரியோதயம் - பாம்பின் சிகரம் - பயணத் தொடர் - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


பாம்பின் சிகரம் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  தொடரின் முந்தைய பகுதிகளை இது வரை படிக்கவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்.


பாம்பின் சிகரம் பகுதி-1 


பாம்பின் சிகரம் பகுதி-2


பாம்பின் சிகரம் பகுதி-3


பாம்பின் சிகரம் பகுதி-4


பாம்பின் சிகரம் பகுதி-5


பாம்பின் சிகரம் பகுதி-6






இத்தொடரின் சென்ற பகுதியில் எங்கள் இரண்டாம் நாள் மலையேற்றத்திற்கான தொடக்கம் இரவு நேரத்தில் இருந்தது என்றும் அந்த அனுபவங்கள் எப்படி இருந்தன என்றும் எழுதி இருந்தேன்.  தொடர்ந்து பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் இந்தப் பகுதியில் தொடர்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாக பொழுது புலர ஆரம்பித்தது.  பறவைகளின் குரல்கள் ரம்மியமாக எங்கள் காதுகளில் சற்றே அதிகமாக ஒலிக்க ஆரம்பித்தது. அது வரை கும்மிருட்டில் நடந்து கொண்டிருந்த எங்களுக்கு அந்த வனப்பகுதியின் அழகு வேறு விதமாக தெரிந்திருக்க, வெளிச்சம் வரவர அதன் பூரண அழகு காட்சியளிக்க ஆரம்பித்தது.  வனத்தினைத் தாண்டி தெரியும் மலைகளும், மலை முகட்டில் இருக்கும் பனியும் சூரிய ஒளியின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கண் முன்னர் காட்சிகளாக விரிய ஆரம்பித்தது.  சில நிமிடங்கள் இப்படியான பாதைகளில் நடந்து வர வனம் தாண்டி உள்ளூர் பாஷையில் Bபுgக்யால் (Bhugyal) என அழைக்கப்படும் சமவெளிப் பகுதி கண்களுக்குத் தெரிந்தது. 






அந்த சமவெளிப் பகுதியில் சூரிய கிரணங்கள்  படர்ந்திருந்த பனி கண்களுக்கு ஒரு அற்புதக் காட்சியாகத் தெரிந்தது.  இரண்டு புறமும் பனி படர்ந்திருக்க, நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் எங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தார் நண்பர் Bபிஷ்ட் மற்றும் வழிகாட்டி கௌரவ். தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் நாட்களில் அந்த குறுகிய பாதைகளும் மறைந்து விடும் என்று சொல்லிக்கொண்டு வருகிறார் கௌரவ்.  உள்ளூர் வழிகாட்டி இல்லாமல் சென்றால் நாம் அந்தப் பனிப்பிரதேசத்தில் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியிருக்கும்.  நல்ல வேளையாக பாதை தெரிந்தவர்கள் நம்முடன் பயணிப்பதால் தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே நடந்தேன்.  ஒரு சில இடங்களில் Black Snow என அழைக்கப்படும் பனியும் பார்க்க முடிந்தது - பனிப்பொழிவு ஏற்பட்டு இருகிப் போய் கருப்பு வண்ணத்தில் மாறிவிடும் பனி மிகவும் அபாயகரமானது. தப்பித்தவறி அதன் மீது கால் வைத்தால் வழுக்கி விட்டு விடும் என்பதால் அப்படியான இடங்களில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தார் Bபிஷ்ட் மற்றும் வழிகாட்டி கௌரவ்.






பனிபடர்ந்த பாதைகள் வழி இன்னும் கொஞ்சம் மேலே செல்ல, அற்புதமான காட்சிகள் நம் கண் முன்னே.  பனி படர்ந்த மலைகளின் பின்புறமிருந்து அன்றைய தனது வேலையைச் செவ்வனே தொடங்கிய சூரியன் நம் கண்களையும் மனதையும் ஒரு சேர கவர்ந்து கொண்டிருந்தான்.  பனிச் சிகரங்கள், இயற்கைச் சூழல், குளிர்ந்த காற்று என பார்க்கும் காட்சிகளும் சூழலும் தொடர்ந்து மலையேற்றம் செய்து அடைந்த களைப்பினை மறந்து “எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா?” என்று இறைவனை நினைத்து நன்றி சொல்ல வைத்தது.  எங்களுக்கு முன்னர் அந்த மலையுச்சியை அடைந்திருந்த சிலர் அங்கே பனியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் சறுக்கி விளையாட, சிலர் பனிப்பந்துகள் செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினார்கள்.  பனிப்பொழிவு பார்த்தால் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் அனைவருமே சூழலை மறந்து குழந்தைகளாகத் தான் மாறி விடுகிறார்கள் அல்லவா?  நாங்களும் அங்கே பனியை எடுத்து கொஞ்சம் விளையாடினோம்.  






அந்தச் சிகரத்தில், இருக்கும் பாறைகளை வைத்து ஒரு சிறு மேடை அமைத்து அங்கே நாக தேவதைக்காக திரிசூலம், உடுக்கை, கொடிகள் என மூன்று விதமாக வைத்திருக்கிறார்கள். அங்கே அமைதியாக நாக தேவதையை வணங்கி நின்றோம்.  உள்ளூர் மக்களுக்கு, அதாவது உத்திராகண்ட் மக்களுக்கு நாக தேவதை மீது அதீத மரியாதையும் பக்தியும் உண்டு. அவர்களது பிரார்த்தனைகளைச் செலுத்துவதற்காக இங்கே அவர்கள் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  இமயமலையின் பகுதியான இந்த மலைச்சிகரங்களுக்கு அவர்கள் வணங்கும் நாக தேவதையின் பெயரிலேயே நாக்g tடிbப்பா என்று இந்த மலைச்சிகரத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.  Tடிbப்பா என்ற வார்த்தைக்கு உள்ளூர் மொழியில் சிகரம்/மலை உச்சி என்ற அர்த்தம் உண்டு.  மலையுச்சியில் இருக்கும் திரிசூலம் தவிர சற்றே கீழே நாக தேவதைக்கு ஒரு ஆலயமும் உண்டு.  அந்த ஆலயம் குறித்த தகவல்களை வரும் பகுதி ஒன்றில் எழுதுகின்றேன்.  இந்த மலைச்சிகரத்தில் அமைந்திருக்கும் திரிசூலம் அருகே அங்கே வந்திருந்த பல்வேறு மலையேற்றக் குழுவினரும் நிழற்படம் எடுத்துக் கொண்டார்கள்.  எங்கள் குழுவில் இருந்தவர்களும் படங்கள் எடுத்துக் கொண்டோம். 






இந்தச் சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 9915 அடி உயரம்.  குழுவினை அழைத்து வந்த நிறுவனத்தினர் அங்கே ஒரு பதாகை எடுத்து வந்து குழுவினரின் கைகளில் அதனைக் கொடுத்து படம் எடுத்துக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு விளம்பரம், வந்திருக்கும் குழுவினருக்கு ஒரு நினைவுச் சின்னம்.  நாங்கள் சென்ற அன்று இந்தியப் பேரரசின் குடியரசு தினம் என்பதால் ஒரு சில குழுவினர் தங்களுடன் நாம் தாய் திருநாட்டின் கொடியையும் கொண்டு வந்திருந்தார்கள்.  அந்த இடத்தில் நாங்களும் நமது கொடியுடன் சில படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொண்டோம்.  மிகவும் அற்புதமான மனதுக்கு மகிழ்ச்சி தந்த நிமிடங்கள் அவை.  எங்கள் வழிகாட்டி ஒரு பனிபடர்ந்த மலைச்சரிவில் கீழேயிருந்து கொடியுடன் ஓடிவந்து கொடியை நட்டு காணொளியாக எடுத்துத் தரச் சொல்ல, ஒவ்வொருவராக அப்படியே செய்து காணொளிகள் எடுத்துக் கொண்டோம்.  அந்த நாக்g tடிbப்பா மலையுச்சியில் நமது நாட்டின் கொடியை நிற்க வைத்து மரியாதை செலுத்தியது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  





சூரியோதயக் காட்சிகள் படங்களாக எடுப்பதை விட நேரடியாக பார்த்து ரசிப்பதில் கவனம் செலுத்தினேன்.  எங்களுடன் வந்திருந்த இளைஞர் ஹரிஷ் மட்டும் எங்களை விட சற்றே முன்னர் வந்துவிட்டதால் அங்கே சில படங்களை எடுத்ததோடு, ஒரு காணொளியும் எடுத்திருந்தார்.  அந்தக் காட்சிகளை இங்கே இணைத்திருக்கிறேன்.  மலையுச்சியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலே இருந்தோம்.  காலை நேரம் என்பதால் கொஞ்சமாக பசிக்க ஆரம்பித்தது.  என்னதான் நள்ளிரவில் புறப்படும் போது கொஞ்சம் அவல் உப்புமா சாப்பிட்டு இருந்தோம் என்றாலும் மலையேற்றத்திற்குப் பிறகு பசிக்க ஆரம்பித்தது.  எங்கள் வழிகாட்டியான கௌரவ் தன் பையிலிருந்து ஒரு சிறிய பாத்திரத்தில் கொண்டு வந்திருந்த அவல் உப்புமாவை எடுத்து ஆளுக்கு மூன்று நான்கு ஸ்பூன்கள் எனக் கொடுத்து பசியாற்றினார்.  எங்களிடமிருந்த சாக்கலேட் போன்றவையும் பசியைக் குறைக்க உதவியது.  பிஸ்கெட் போன்றவற்றை நாங்களும் உண்டதோடு அங்கே இருந்த சில செல்லங்களுக்கும் கொடுத்தோம்.  இந்தச் செல்லங்கள் கீழேயிருந்து மலையேற்றக் குழுவினருடன் மேலே நடந்து வந்து மீண்டும் திரும்பி விடுகின்றன.  





அந்த அற்புதமான அனுபவங்களுடன் எங்களது மனதில் மகிழ்ச்சியுடன் மலையேற்றம் முடித்து Base Camp வரை மீண்டும் செல்ல கீழே இறங்க வேண்டும்.  மலையுச்சியிலிருந்து கீழே இறங்க மனதே இல்லை.  அதுவும் அந்த இடத்தில் கிடைத்த மன அமைதியும் இயற்கையின் பேரெழிலும் மனதில் புகுந்துகொண்டு இன்னும் கொஞ்சம் இங்கேயே இருக்கலாமே என்று தர்க்கம் செய்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். பனிபடர்ந்த பாதைகளில் கீழ் நோக்கி நடப்பது மிகவும் சவாலான விஷயமாக இருந்தது.  கொஞ்சம் கவனப் பிசகு ஏற்பட்டாலும் Black Snow இருக்கும் பகுதியில் கால் வைத்து வழுக்கி விட வாய்ப்புண்டு.  பல வருடங்களாக இப்பகுதிகளில் பயணம் செய்து அனுபவம் பெற்ற நண்பர் Bபிஷ்ட் கூட அப்படி ஒரு இடத்தில் வழுக்கி விழ இருந்தார்.  அந்தப் பகுதியில் பல இளைஞர்(ஞி)கள் வேகவேகமாக நடந்து கீழே விழுந்து புதையல் எடுத்தார்கள். பலரால் அப்படி விழுந்த பிறகு தொடர்ந்து நடக்க மனதில் தயக்கம்.   ஒரு சிலர் விழுந்து விழுந்து எழுந்திருந்தார்கள்.  என்னதான் தகுந்த காலணிகள் அணிந்திருந்தாலும், கவனப்பிசகு ஏற்பட்டால் தடாலென விழுவது சாதாரணமாக நடந்தது. கவனத்துடன் மலையுச்சியிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.  அப்படி கீழே வந்த போது கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடம் என அனைத்தும் அடுத்து வரும் பகுதியில் எழுதுகிறேன். அடுத்த பகுதி வெளியிடும் வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

24 ஃபிப்ரவரி 2025


1 கருத்து:

  1. காட்சிகளும், காணொளிகளும் அருமை.  ரசித்தேன்.

    கடைசி காணொளியில் நீங்கள் எங்கே என்று மூன்று முறை ஓட்டிப்பார்த்துத் தேடிக் கண்டுபிடித்தேன்!!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....