அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Kharigar Gaathaa - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
குமார வயலூர் - 19 ஃபிப்ரவரி 2025:
எங்க ஊர் கோவைக்கு செல்லப்பிள்ளை மருதமலை முருகன் என்றால் திருச்சிக்கு குமார வயலூர் முருகன்! புகழ்பெற்ற திருத்தலம்! இன்று வயலூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது! ஓரிரு வருடங்களுக்கு முன்பு இந்தக் கோவிலுக்கு சென்ற போது பராமரிப்பில்லாமல் மிகவும் மோசமாக இருந்ததைப் பார்த்து வருந்தியது நினைவுக்கு வந்தது!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
சக்திவேல் முருகனுக்கு அரோகரா!
******
Herbal Oil - 19 ஃபிப்ரவரி 2025:
அன்றாட வகுப்புகள் முடிந்ததும் இன்று ஏதாவது உருப்படியா செய்வோமே என்று மாடியில் சாம்பார்பொடி தயாரிக்க வாங்கி வைத்திருந்த மிளகாய் மல்லியை காயப் போட்டுவிட்டு வந்தேன்!
அடுத்து சில வருடங்களாகவே மகளுக்கும் எனக்கும் வீட்டிலேயே தான் ஹெர்பல் ஆயில் தயார் செய்து வருகிறேன் என்பதால் அதற்காக தயார் செய்து கொண்டேன்! பெரும்பாலான விஷயங்களில் ஆத்ம நிர்பர் ஆதி தான்..:)
இம்முறை கறிவேப்பிலையுடன் நெல்லிகாய், வெந்தயம், கருஞ்சீரகம், வீட்டில் சுவாமிக்கு சாற்றிய காய்ந்த செம்பருத்தி மற்றும் ரோஜா இதழ்கள் இவற்றுடன் வெட்டிவேரும் கூட சேர்த்து எண்ணெய் காய்ச்சியிருக்கிறேன்! இதில் சின்ன வெங்காயம், துளசி, வேப்பிலை, குப்பைமேனி இவற்றையெல்லாம் கூட சேர்க்கலாம்!
'வீட்டுல என்னென்ன உண்டோ எல்லாத்தையும் தூக்கிப் போட்டு ஒரு எண்ணெய் காய்ச்சும்மா' என்று மகள் கூட என்னை கலாட்டா செய்தாள்...:)) யூட்டியூபை பார்த்தால் இந்த மாதிரி எண்ணெய் தயார் செய்வதையே பிஸினஸா கூடச் செய்யறாங்களாம்! இது என்ன சாதாரண விஷயம் தானே என்று தான் தோன்றியது!
*******
குருதிக்கொடை - 23 ஃபிப்ரவரி 2025:
குருதிக் கொடை என்பது எத்தனை உன்னதமான செயல்! இன்னல்களில் தவித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற உதவும் செயல்! ஆனால் அறியாமையினால் பலரும் இதற்கு முன்வருவதில்லை! குருதியைத் தருவதால் நமக்கு ஏதேனும் நிகழ்ந்து விடுவோமோ!!? மீண்டும் உற்பத்தியாகாமல் போய்விடுவோமோ!!? என்றெல்லாம் தான் தவறான புரிதல்கள் இருக்கின்றன!
சென்ற வாரத்தில் மகளின் கல்லூரியில் Blood donation camp இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தாள்! ‘அம்மா! நான் அதுல குடுக்கட்டுமா?? என்று கேட்டாள்! 18+ ஆயிடுச்சில்லையா! தாராளமா குடுக்கலாம் கண்ணா! ஒண்ணும் பயப்படாத! எந்த Compulsionம் இல்ல! உனக்கு விருப்பம் இருந்து யாருக்காவது உபயோகம் ஆகும்னு தோணினா குடு!! என்றேன்!
Parents கிட்ட லெட்டர் வாங்கிண்டு வரணுமாம்! என்றாள். சம்மதித்து கையெழுத்திட்டுக் கொடுத்தேன்! அன்றைய தினம் அவளின் துறையிலிருந்து இவளையும் சேர்த்து நான்கே பேர் தான் குருதிக்கொடை செய்ய முன் வந்திருந்தார்களாம்! அதிலும் ஒருவருக்கு ஹீமோகுளோபின் குறைவு என்பதால் குடுக்க இயலவில்லை!
மற்றொரு பெண்ணின் கைகளில் Tattoo போட்டிருந்ததால் குடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்களாம்! ஆக! இவளின் துறையில் இரண்டே பேர் தான் அன்று குடுத்திருக்கிறார்களாம்! உடன்பயிலும் தோழிகள் கூட இவளிடம் அப்பா அம்மா ஒண்ணும் சொல்லலையா??? எப்படி பர்மிஷன் குடுத்தாங்க?? என்று எல்லோரும் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்களாம்!
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்திலும் இது போன்ற முகாம் ஒன்று எங்கள் கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! அப்போது தான் என்னுடைய ப்ளட் க்ரூப் என்னவென்றே நான் தெரிந்து கொண்டேன்! அன்று என்னிடம் குருதிக்கொடை செய்யணும் என்ற எண்ணம் வலுவாகவே இருந்தது! துடிப்புடன் செயல்படும் பருவம் இல்லையா! ஆனால் தன்னுடைய செல்ல மகளுக்கு ஏதேனும் நிகழ்ந்து விடுவோமோ என்று அப்பா இதற்கு சம்மதிக்கவில்லை…:) இப்போது நினைத்தாலும் குடுக்க முடியாது!
நாம் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை நம் குழந்தைகள் சாதிக்க நினைக்கும் போது அது சமுதாயத்திற்கு நலன் தரும் செயலாக இருந்தால், நாம் அவர்களுக்கு உற்ற துணையாகவும், வழிகாட்டியாகவும் இருக்கணுமே தவிர நிச்சயம் தடையாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன்! சமுதாயத்தில் நல்லதொரு மனிதராக திகழ பெற்றோர் தான் உறுதுணையாக இருக்கணும்!
குருதிக்கொடை உயிர்க்கொடை!
*******
அன்பு சூழ் உலகு - 25 ஃபிப்ரவரி 2025:
சிறுவயதில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் போது ஊரிலிருந்து அத்தை அத்திம்பேர், மாமா மாமி, சித்தப்பா சித்தி, இன்னும் பிற ஒன்று விட்ட சொந்தங்கள் இரண்டு விட்ட சொந்தங்கள் என்று யாரேனும் வந்திருப்பார்கள்! அவர்களைப் பார்த்ததும் மனதுக்குள் ஒரு குஷி வந்துவிடும்! அவர்கள் நமக்காக வாங்கி வந்திருக்கும் வஸ்துக்களைப் பார்க்கும் போது இன்னும் குஷி கூடுதலாகி விடும்...:)
அம்மா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சட்டென்று ஒரு பஜ்ஜியோ, போண்டாவோ, பக்கோடாவோ செய்து விடுவாள்! அடுத்து அடுத்த வேளைக்கான திட்டமிடலும் கூட ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்! ராத்திரிக்கு அடைக்கு அரைச்சுக்கலாமா? இல்லன்னா பூரி கிழங்கு பண்ணிக்கலாமா? என்று அவர்களிடமே அபிப்ராயம் கேட்டு செய்து கொடுப்பாள்!
இரவு வெகுநேரம் வரை ஊர்க்கதைகளை பலவற்றை பேசி விட்டு கிடைக்கும் இடத்தில் சுருண்டு படுத்து விடுவார்கள்! அவர்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் குட்டீஸ்களுக்கு காசு வேறு தருவார்கள்!
அது ஒரு இனிமையான, சுகமான, பசுமையான நாட்கள்! இப்படியெல்லாம் கூட நிகழ்ந்தது என்று தான் இப்போது சொல்லிக் கொள்ளலாம்! யாருக்கும் நேரம் என்பது இல்லை! இயந்திரமயமான நாட்கள்! அக்கம்பக்கத்தில் இருப்பவர்களைக் கூட தினமும் பார்க்க முடிவதில்லை என்பது தான் நிதர்சனம்!
நேற்றையப் மாலைப்பொழுதில் துளசி டீச்சரும் கோபால் சாரும் எங்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்கள்! நியூசிலாந்தில் பல வருடங்களாக இருந்தாலும் இந்தியா வரும் போது எல்லோரையும் சென்று சந்தித்து விட்டு வரணும் என்ற எண்ணம் கொண்டவர்கள்! 'இந்த ட்ரிப்பில் ரங்கன் விஸிட் உண்டா டீச்சர்?' என்று கேட்டதற்கு 'ரங்கனை மட்டுமா! உங்களையும் தான்! என்று சொல்லியிருந்தார்!
நேற்றைய மாலைப்பொழுது மிகவும் இனிமையாகச் சென்றது! பதிவுலக நட்புவட்டம் என்பதெல்லாம் இப்போது நினைவே இருப்பதில்லை! பக்கத்து ஊரிலிருந்து வந்திருக்கும் எங்களுடைய சொந்தம் என்று தான் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது! குடும்பக்கதைகள் பலவற்றை பேசிக் கொண்டிருந்ததில் நேரம் மிகவும் இனிமையாகவே சென்றது!
திருவரங்கம் ராஜகோபுரத்தை படம் பிடித்து 'நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்று கண்டுபிடியுங்களேன்' என்று துளசி டீச்சர் பகிர்ந்து கொண்ட பதிவில் ' நீங்க ஆதி வெங்கட்டை போய் பார்ப்பீர்களா?' என்று அன்போடு கேட்டிருந்த Padma Mani அம்மாவின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தேன்! திருவரங்கம் என்றதும் என்னை நினைத்துக் கொண்ட அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!
அன்பு சூழ் உலகில் நமக்கென சில மனிதர்களின் அன்பை பெற்றிருப்பதை விட வேறு என்ன வேண்டும்! டீச்சர் உங்களையும் கோபால் சாரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி டீச்சர்! மீண்டும் பலமுறை சந்திப்போம்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
28 ஃபிப்ரவரி 2025
வாரியார் ஸ்வாமிகள் எப்பொழுதும் தனது உபன்யாசத்தைத் தொடங்குகையில் எம்பெருமான் வயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் அருளாலே தொடங்குகிறேன்" என்றுதான் ஆரம்பிப்பார்.
பதிலளிநீக்குஹெர்பல் ஆயில்; வீட்டிலேயே தயார் செய்து கொள்வது சிறப்பு. கண்கள் மயங்கிய ஒரு கணம் அது காய்ந்த மிளகாயோ என்று பயந்து விட்டேன்!!
பதிலளிநீக்குகுருதிக்கொடை தந்தது சிறப்பு. ரோஷ்ணிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். 2009 ல் என் மாமாவுக்கு குருதி கொடுக்க ராமச்சந்திராவில் முயன்றபோதுதான் எனக்கு ரத்தக்கொதிப்பு இருக்கிறது என்பது தெரிய வந்தது! அதுவும் சற்றே கூடுதல் அளவில். அதற்கு ஒரு மாதம் முன்பு பார்த்த போது கூட சரியாகத்தான் இருந்தது. இரத்த தானம் செய்வது நம் உடலுக்கும் நல்லது என்று சொல்வார்கள். புது ரத்தம் ஊறி புத்துணர்ச்சி பிறக்குமாம்.
பதிலளிநீக்குதுளசி டீச்சர் தம்பதியினர் உங்களை வீட்டில் வந்து சந்தித்தது சிறப்பு, மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதலைக்கான ஹெர்பல் ஆயில் பெரிய பிசினெஸ். லிட்டர் ஆயிரத்தைநூறு, இரண்டாயிரத்துக்கு மேல். அந்த பிசினெஸ் சக்சஸ் ஆகும்.
பதிலளிநீக்குதுளசி டீச்சர் கோபால் சார் எப்போ இந்தியா வந்தாங்கன்னு ஆறு மாதம் கழிந்து அவங்க பதிவுலதான் படித்துத் தெரிஞ்சுக்கணும்.
பதிலளிநீக்கு