திங்கள், 10 பிப்ரவரி, 2025

J பேபி - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பத்தொன்பது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


அனைவருக்கும் வணக்கம்!


நம்மிடம் இருக்கும் விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?? என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா!!!  நம் மனது தாங்க! அதை கீறல் ஏற்படா வண்ணம் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்று  போற்றி பாதுகாக்கணும்!! அதற்காக முயற்சி செய்வது தான் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகவும் இருக்கணும்!


ஒவ்வொருவருக்கும் குடும்பத்தால், சுற்றியுள்ள மனிதர்களால் என  பலவித பிரச்சனைகள் அன்றாடம் தோன்றிக் கொண்டே தான் இருக்கும்! இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர் என்று யாரேனும் உண்டா ?? அப்படி தோன்றும் பிரச்சனைகளை மனதிற்கு கடத்திச் சென்று அதை காயப்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது தான் இங்கு சவாலான விஷயம்! 



கடந்த இரண்டு நாட்களாக எனக்கு கிடைத்த ஓய்வுநேரத்தில் அலைபேசியில் சற்றே நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த போது பார்க்க கிடைத்த படம் தான் ‘J பேபி’!! மார்ச் 2024ல் வெளிவந்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஊர்வசி, அட்டக்கத்தி தினேஷ் என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்! 


ஐந்து பிள்ளைகளுக்கு தாயான ஊர்வசி ஒவ்வொருவரையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார்! ஒருகட்டத்தில் அவர்  தன் இணையை இழந்தது! சொத்தை இழந்தது! பிள்ளைகளால் சந்திக்கும் பிரச்சனைகள் என எல்லாம் சேர்ந்து அவருக்கு பெரும் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது! 


மனதை பாதிக்கும் அல்லது காயப்படும் விஷயங்களால் ஒரு மனிதனுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ச்சிப்பூர்வமான ஒரு திரைப்படமாக எடுக்க பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்! அண்ணன் தம்பி இடையே ஏற்படும் சண்டையால் இருவரும் பேசிக் கொள்ளாத சூழலில் போலீஸ் நிலையத்திலிருந்து ஒரு தகவல் வருகிறது! தொலைந்து போன அவர்களின் அம்மா ஊர்வசி கல்கத்தாவில் இருப்பதாக!!


நெருக்கியடித்துக் கொண்டு கல்கத்தாவிற்கு பயணித்துக் கொண்டிருக்கும் இந்த ரயில் பாதையின் வழியே ஃப்ளாஷ் பேக்கில் கதை நகர்கிறது! அம்மா ஊர்வசியின் மன அழுத்தத்தால் பிள்ளைகள் ஒவ்வொருவரும் சந்திக்கும் நிகழ்வுகளும், அம்மாவின் மனநிலையும் என மாறி மாறி சொல்லிச் செல்கிறது!


கல்கத்தாவில் இவர்களுக்கு உதவி செய்யும் ஒரு தமிழர்! அங்கு நடக்கும் சம்பவங்கள் என நம்மை கட்டி இழுத்துச் சென்று கதையுடன் ஒன்றிப் போக வைக்கிறது! காமெடி ஒருபுறம் என்றால் மனதை பிசைய வைக்கும் தருணங்கள் மறுபுறம் என கலவையான உணர்வுகளுடன் காட்சிப்படுத்த பட்டுள்ளது!


ஊர்வசி தன் நடிப்புத் திறனை கொண்டு அபாரமாக செய்திருக்கிறார்! உடன் நடிக்கும் நடிகர் அட்டக்கத்தி தினேஷ், அவரது அண்ணன்களாக நடிப்பவர்கள், இரண்டாவது பெண்ணாக நடித்திருக்கும் பெண் என ஒவ்வொருவருமே இந்தக் கதையுடன் இணைந்து போட்டிக் போட்டுக் கொண்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள்!


ஒரு திரைப்படமாக இதை பார்க்கும் போதே காட்சிகளில் மனதை பிசைய வைக்கிறது என்றால் இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று தெரிய வருகிற போது நம்மை கலங்க வைக்கிறது! சிந்திக்கவும் வைக்கிறது! எத்தனை பேர் இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனரோ??


உங்களுக்கு மட்டுமல்ல! எனக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்! மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! மனம் ஒரு பொக்கிஷம்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

10 ஃபிப்ரவரி 2025


6 கருத்துகள்:

  1. படம் OTT யில் வெளியானபோதே பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்தப்படம் பார்த்ததில்லை, ஆதி. இந்தத் திரைப்படம் நன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். முடிந்தால் பார்க்கிறேன்

    இப்படி மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்பவர்கள் நம்மிடையே இருக்காங்க ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க, ஆதி.

    உடல் நோய்களே நமக்கு வேதனை யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டாலும் மனஅழுத்தத்தினால் வரும் மனநோய் வரவே கூடாது, யாருக்குமே என்றும் நினைப்பதுண்டு.

    வாசகம் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாசகம் அருமை, எல்லோருக்கும் தேவை படுவது அமைதிதான். தவ முடிவில் நாங்கள் சொல்வோம்:-

    நம் மனதில் அமைதி நிலவட்டும்,
    நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்,
    உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
    அமைதி அமைதி அமைதி
    பட விமர்சனம் அருமை. போன வருடம் மகன் வீட்டில் இருக்கும் போது இந்த படம் புதிதாக வந்தது, அப்போதே பார்த்து விட்டேன், எனக்கும் பிடித்து விட்டது படம்.


    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
    படத்தைப்பற்றிய விமர்சனம் நன்றாக செய்துள்ளீர்கள்.

    உண்மைதான்..! மனம் அமைதியாக இருந்தால் இயற்கையாக உடலுக்கு வரும் நோய்களிலிருந்து கொஞ்சமேனும் நம்மை பாது காத்துக் கொள்ளலாம். இந்த படம் நன்றாக உள்ளதென என் மகள் பார்த்து விட்டு சொன்னார் என்னையும் பார்க்கச்சொன்னார. எனக்குத்தான் இன்னமும் நேர்மும் அமையவில்லை. தங்கள் விமர்சனமும் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. நேரம் கிடைக்கும் போது ஒருதடவை பார்த்து விடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....