அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
அருகில் ஆபத்து - 30 ஜனவரி 2025:
சற்றே இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு நடை நல்லது பகிர்வு. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஒரு நடை நல்லது பகிர்வு. இந்த இடைவெளியில் நடை தொடர்ந்தாலும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல். தவிர்க்க முடியாத சூழல் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
நேற்று காலை நடை முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார். அவர் அருகே ஒரு சிறு பொதி...... தனக்குத் தானே பேசிக்கொண்டு கைகளை ஆட்டி விதம் விதமான முகபாவங்கள் காண்பித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் மனநிலை பிழற்சி உள்ளவர் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் அப்படி அமர்ந்து இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலை அவருக்கு. சாலையின் இரு புறமும் வேகமாகச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் சற்றே தடுமாறினால் அல்லது இவரே சற்று அசைந்தால் நிச்சயம் விபத்து நேரும்.....
ஆனால் அந்த மனிதரை அங்கிருந்து அகற்ற யாரும் முயலவில்லை. சாலையைக் கடக்கும் முன்னர் அவரைப் பார்த்து இப்படி உட்காராமல் சாலையின் ஓரமாக சென்று அமர்ந்து கொள்ளலாமே என்று நான் சொல்ல ஹிந்தியில் பல வித கெட்ட வார்த்தைகளை எனை நோக்கி வீசினார் ...... வடிவேல் ஒரு படத்தில் சொல்வது போல Total family-yum damage! ஆனாலும் அவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. மன நிலை சரியில்லாத நபரிடம் கோபித்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது...... அவர் ஏதேனும் ஒரு வாகனத்தில் அடிபட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் தொடர்ந்தது. அவருக்காக மனதில் ஒரு சிறு பிரார்த்தனையும்.....
எதனால் இப்படி ஒரு நிலை அவருக்கு என்ற சிந்தனைகளுடன் எனது நடை தொடர்ந்தது....... இப்படி எத்தனை எத்தனை கதை மாந்தர்கள் நம் இடையே இருக்கிறார்கள்....... அவர் கதை என்ன என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தேன். அவரிடம் கேட்டால் இன்னும் பல கெட்ட வார்த்தை/வசவுகள் கிடைக்கலாம் என்பதால் அவர் கதை என்ன என்பதை கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்......
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
1 ஃபிப்ரவரி 2025
பாவம்... அவரும் ஒரு தாய்க்கு செல்ல மகனாய் பிறந்து நன்றாக வாழ்ந்திருப்பார் தானே?
பதிலளிநீக்கு