புதன், 12 பிப்ரவரி, 2025

பந்த்வாடி கிராமம் - பாம்பின் சிகரம் - பயணத் தொடர் - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கெம்ப்டி ஃபால்ஸ் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




பாம்பின் சிகரம் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  தொடரின் முந்தைய பகுதிகளை இது வரை படிக்கவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்.


பாம்பின் சிகரம் பகுதி-1 


பாம்பின் சிகரம் பகுதி-2


இந்த மலையேற்றப் பயணத்தில் எங்களுடைய முதலாம் இலக்காக இருந்தது  உத்திராகண்ட் மாநிலத்தின் டேடி கட்வால் (Tehri Garhwal) மாவட்டத்தில் தனௌல்டி (Dhanaulti) தாலுக்காவில் இருக்கும் ஒரு சிறு கிராமமான பந்த்வாடி (Pantwari). தில்லியிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து பாம்பின் சிகரம் மலையேற்றத்திற்கான முதல் இலக்கான இந்த பந்த்வாடி கிராமத்தினை அடைந்தோம். இந்த கிராமம் வரை நல்ல சாலைகள் உண்டு. அதுவரை நமது சொந்த வாகனத்திலோ அல்லது கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நைன்பாக் (Nainbagh) எனுமிடம் வரை பேருந்துகளிலோ வந்து சேர முடியும். நைன்பாகிலிருந்து பந்த்வாடி வரை ஷேர் ஆட்டோ போல, ஷேர் வாகனங்கள் கிடைக்கின்றன.  ரிஷிகேஷிலிருந்து 140 கிலோ மீட்டர் மற்றும் டேராடூனிலிருந்து 90 கிலோ மீட்டர் என்றெல்லாம் கணக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.  இந்த கிராமம் வரை வந்து விட்டால், அதன் பிறகு மலையேற்றத்தினை தொடங்கி விடலாம்.   நாங்கள் இந்த கிராமம் வரை Bபிஷ்ட்-இன் வாகனத்திலேயே வந்து விட்டோம்.  


கடல் மட்டத்திலிருந்து 4640 அடி உயரத்தில் அமைந்திருக்கும் அழகான சிறு கிராமம் பந்த்வாடி. ஒரு கடை வீதி, சில வீடுகள், ஸ்டெப் ஃபார்மிங் முறையில் பயிரிடும் வசதிகள் என அழகான கிராமம்.  மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் அதீத உழைப்பாளிகள்.  குளிர் காலங்களுக்குத் தேவையானவற்றை - தமக்கு மட்டுமல்லாது, தாம் வளர்க்கும் உயிரினங்களுக்கும் தேவையானவற்றை குளிரில்லாத காலங்களிலேயே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த கிராம வாசிகளுக்கு!  பெரும்பாலும் காய்ந்து மரங்களிலிருந்து விழும் விறகுகள் கொண்டே அடுப்பெரிப்பது வழக்கம்.  ஆனாலும் சில வீடுகள், கடைகள் போன்றவற்றில் எரிவாயு வசதிகள் உண்டு.  சிலிண்டர் தீர்ந்துவிட்டால் ஜீப் போன்ற வாகனங்களில் பயனாளர்கள் தான் எடுத்து வர வேண்டும். இப்படியான சிறு கிராமங்களில், அதுவும் மலைப்புற கிராமங்களில் இருக்கும் மக்களின் நடவடிக்கைகளை கவனிப்பது மிகவும் பிடித்த விஷயம் எனக்கு! மிகவும் குறைவான மக்கள் தொகை கொண்ட கிராமம் - 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இங்கே உள்ள குடும்பங்கள் 89 - மொத்த மக்கள் தொகை 545!



கிராமத்தின் கடை வீதி - காட்சி ஒன்று


எங்களுக்கு உணவளித்த உணவகம்... 
வெளியே சுற்றுலா பயணிகள்...


எரிவாயு உருளைகள் எடுத்து வந்த வாகனம்...
மேலிருந்து தூக்கி போட்டு விடுகிறார் இந்த இளைஞர்...


கட்டுமானத்திற்கான பொருட்கள் ஏற்றி வரப்படும் காட்சி...


கிராமத்தின் கடைவீதியில் நான்...


கிராமத்தின் கடை வீதி - காட்சி இரண்டு


கிராமத்தில் அமர்ந்திருக்கும் செல்லம் ஒன்று...

இந்தப் பயணம் நண்பர் வீட்டு திருமண நிகழ்விற்காக என்றாலும், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, மலையேற்ற வசதிகள் செய்து தரக்கூடிய ஒரு நிறுவனத்தினையும் நாங்கள் தொடர்பு கொண்டிருந்தோம்.  நாக்g டிப்பா(ba) வரை மலையேற்றம் செய்து தான் ஆக வேண்டும் - அதற்கு மலையேற்றத்திற்கான வசதிகள் கண்டிப்பாக தேவை. அதனால் ஹிமாலயன் ஹைக்கர்ஸ் எனும் நிறுவனத்தினை நாங்கள் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்து கொண்டோம். சாதாரணமாக உத்திராகண்ட் தலைநகர் டேராடூன் வரை வந்து விட்டால் அங்கிருந்து பந்த்வாடி வரை வாகனத்தில் அழைத்து வந்து, மலையேற்றம் முடிந்து டேராடூன் கொண்டு சேர்ப்பது வரை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  நடுவில் தேவையான உணவு, தங்குவதற்கான இடம், மலையேற்றத்தின் போது உடன் வரக்கூடிய கைடு என எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  ஆளுக்கு இவ்வளவு என கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.  நாங்கள் சொந்த வாகனத்தில் சென்றதால் பந்தவாடி கிராமம் வரை சென்று விட்டு அங்கிருந்து இவர்களது வசதிகளைப் பெறுவதாக ஏற்பாடு செய்து கொண்டோம்.  ஒரு நபருக்கான கட்டணம் 1800/-.  இது வசதிகளைப் பொறுத்து, செல்லும் இடங்களைப் பொறுத்து வேறுபடும்.


வழியில் வந்து கொண்டிருக்கும்போதே இரண்டு மூன்று முறை அலைபேசி வழி தொடர்பு கொண்டு சரியான பாதையில் வருகிறோமா, ஏதேனும் உதவி தேவையா என்பதை கேட்டுக்கொண்டு இருந்தார் அந்த நிறுவனத்தின் ஊழியர்.  நண்பர் Bபிஷ்ட் அதே மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்பதால் உதவிகள் தேவைப்படவில்லை - நேரடியாக பந்த்வாடி கிராமத்தின் கடைத்தெரு வரை சென்று சேர்ந்து விட்டோம். அன்றைக்கும், அடுத்த நாளைக்கும் எங்களுடன் பயணிக்கப் போகும் உதவியாளர், கைடு கௌரவ் எண்ணில் அழைக்க அங்கே இருந்த ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்தார். சுறுசுறுப்பான உள்ளூர் இளைஞர் - எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை. அந்த வயதிற்கே உண்டான குறும்பும் அவரிடம் உண்டு என்பதை அவர் எங்களுடன் இருந்த சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.  இந்தப் பகுதியில் இருக்கும் சம்பாதிக்கும் வழிகள் குறைவு. ஒன்று ஊரை விட்டு வெளியே சென்று உழைக்க வேண்டும். அல்லது விவசாயம் செய்ய வேண்டும்.  அல்லது சுற்றுலா நிமித்தமாக வரும் பயணிகளுக்கான வேலைகள் செய்ய வேண்டும். 


ஹிமாலயன் ஹைக்கர்ஸ் நிறுவனம் வழியாக அங்கிருந்து எங்கள் ஏற்பாடுகள் தொடங்குவதால் மதிய உணவு உண்ண அழைத்தார் கௌரவ்.  பந்த்வாடி கிராமத்தின் மிகச் சிறிய உணவகம் ஒன்றில் எங்களுக்கான மதிய உணவு ஏற்பாடு ஆகியிருந்தது.  ரொட்டி, சப்ஜி, Chசாவல் (சாதம்), சாலட் என மிகவும் சாதாரணமான உணவு தான் - ஆனால் வீட்டில் செய்வது போல சுவை.  அதுவும் பாசத்துடன் இன்னும் இரண்டு ரொட்டி போட்டுக்கொள்ளுங்கள், கொஞ்சம் சாதம் சாப்பிடுங்கள் என தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார் அந்த உணவகச் சிப்பந்தி/உரிமையாளர் இருவருமே.  ஒரு பெண்மணி தொடர்ந்து அடுப்பில் சுடச் சுட ரொட்டி போட்டுக் கொண்டிருக்க தேவையானவற்றை எங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டிருந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்/கடை உரிமையாளர்.  அந்த சாதாரண உணவில் அன்பும், பாசமும் சேர்ந்ததால் சுவையும் கூடியிருந்தது.  மதிய உணவை முடித்துக் கொண்டு பிறகு அங்கேயிருந்து நடை/மலையேற்றம் தொடங்க வேண்டும்.  நண்பர் வீட்டு திருமண விழாவிற்காகச் சென்ற எங்களைத் தவிர நிறைய சுற்றுலா பயணிகளும் வெவ்வேறு மலையேற்ற நிறுவனங்கள் வழி அங்கே வந்திருந்தார்கள். 


அன்றைக்கு வந்திருந்த பயணிகள் சுமார் 150 பேர் - பல்வேறு மலையேற்ற நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எங்கள் நிறுவனம் மூலம் சுமார் 25 பேர் அன்றைக்கு பயணிக்க இருந்தார்கள்.  ஆனால் எங்களுக்கான வழிகாட்டி - அதாவது எங்கள் நால்வருக்கான வழிகாட்டி தனியாகவே இருந்தார். எல்லோரும் உணவு உட்கொண்ட பிறகு அவரவர்களுக்கான வழிகாட்டிகளுடன் பயணத்தினை தொடங்க வேண்டியது தான்.  எங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு சிறு பையில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மீதி பொருட்களை அங்கே இருக்கும் அவர்களது அலுவலகத்தில் வைத்து விட்டுச் செல்லலாம்.  நாங்கள் கொண்டுவந்ததே மிகவும் குறைவான, அத்தியாவசியமானவை மட்டுமே என்பதால் எங்கள் முதுகுச் சுமைகளோடு நாங்கள் தயாராக வந்திருந்தோம்.  கையில் ஒரு டார்ச் லைட், தண்ணீர் குப்பி ஆகியவையும் கொண்டு வந்திருந்தோம். முதுகில் சுமையைச் சுமந்தபடி நடக்க வேண்டியது தான் பாக்கி.  உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் சுமார் இரண்டு மணிக்கு எங்கள் மலையேற்றம் தொடங்க இருந்தது.  இந்த மலையேற்றம் எப்படி இருந்தது, எங்கள் அனுபவங்கள் என்ன என்பதை எல்லாம் வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

12 ஃபிப்ரவரி 2025


13 கருத்துகள்:

  1. கிராமம் பற்றிய விவரங்களும், மலையேற்றத்திற்கு உதவும் நிறுவனம் கைட் பற்றியும் நல்ல தகவல்கள், ஜி.

    பாசத்துடன் உபசரித்து உணவு பரிமாறியது கண்டிப்பாகச் சுவையை கூட்டியிருக்கும்.

    விவரமான தகவல்கள்.

    மலையேற்ற அனுபவங்களை வாசிக்க ஆவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. யாருக்கேனும் பயன்பட்டால் நல்லது தானே.

      தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. மலைகள் back drop ல் ஊர் அழகு.

    கிராம மக்கள் உயிரினங்களுக்கும் சேர்த்து குளிரில்லாத காலங்களில் சேர்த்து வைப்பது அவர்கள் உழைப்பாளிகள் என்று தெரிகிறது. ஆமாம் கிராமங்களைப் பார்ப்பதிலும் நடவடிக்கைகளைக் கவனிப்பதிலும் சுவாரசியம் உண்டு.

    ரசித்து வாசித்தேன் ஜி. மலையேற்றம் வாசிக்க ஆவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னச் சின்ன கிராமங்கள் - மலைகள் சூழ அமைந்திருப்பது கண்களுக்கு அழகு மட்டுமல்ல, மனதுக்கும் இதம்.

      கிராம மக்கள் கடும் உழைப்பாளிகள். உழைத்தால் தான் உணவு என்கிற நிலை அல்லவா.

      பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. //குளிர் காலங்களுக்குத் தேவையானவற்றை - தமக்கு மட்டுமல்லாது, தாம் வளர்க்கும் உயிரினங்களுக்கும் தேவையானவற்றை குளிரில்லாத காலங்களிலேயே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த கிராம வாசிகளுக்கு! //

    வளர்க்கும் உயிரினங்களுக்கும் சேர்த்து சேமிப்பது அவசியம் ஆகிறது. அவர்கள் வீட்டை காத்துக் கொண்டு படுத்து கிடக்கிறதே!

    கடைவீதி படங்கள் அருமை. நல்ல வெயில் இருக்கிறது, இரவில் குளிர் அதிகமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    மலையேற்றம் எப்படி இருந்தது என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமக்கு மட்டுமல்லாது தாம் வளர்க்கும் உயிரினங்களுக்கும் சேர்த்து உணவைத் தேடிச் சேகரிப்பது சிறப்பான விஷயம் தான்.

      கடை வீதி படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. இரவில் நல்ல குளிர் தான். ஆனாலும் தேவைப்படும் உடைகளைப் போட்டுக்கொண்டால் போதும்.

      மலையேற்றத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பயணம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. நாம் எல்லா வசதிகளுடனும் இருந்துகொண்டே வாழ்க்கையை குறை சொல்கிறோம்.   அந்த கிராம மக்கள் வாழ்க்கை உழைப்பினால் ஆனது.  பழகி விட்ட சிரமங்களில் குறை இல்லாமல் வாழ்கிறார்கள்.

    அந்த ஊரின் கடைத்தெரு படங்கள் அழகாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சிரமங்களுக்கு இடையே தான் அவர்கள் வாழ்க்கை. பழகிவிட்டது என்றாலும் பெரிதாக குறைகள் சொல்வதில்லை இவர்கள். கடைத்தெரு படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. ஒரு கதை படிப்பது போல உங்களின் பயண அனுபவத்தை தொடர்கிறேன் சார் ..மிக அழகிய தொடக்கம் அதுவும் உங்களின் கைடு புன்னகை போல, நாங்களும் புன்னகையுடன் தொடர்கிறோம் ...வழக்கம் போல பளிச் படங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை படிப்பது போல - ஆஹா.... மகிழ்ச்சி அனுப்ரேம். தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. பயணம் அருமையாக செல்கிறது

    மலையக மக்களின் கஷ்டமான வாழ்க்கை பற்றி சொல்லியுள்ளீர்கள் .

    மலையகம் அழகு கொட்டிக்கிடக்கும் காலநிலையும் வாழ்க்கையும் சிரமம்தான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....