வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

முப்பது நிமிடத் தவம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



இத படிங்க!


D U H F


கீழ இருக்கறதையும் படிங்க!


X….A……அடுத்தது O வா என்னன்னு தெரியலப்பா!


கடைசி வரியெல்லாம் கறுப்பு புள்ளி மாதிரி தான் இருக்கு!!


உங்க வயசு என்ன? சிஸ்டம் அதிகமா பார்ப்பீங்களா?


பிபி சுகர் இருக்கா!? எதுக்காகவாவது மருந்து எடுத்துக்கறீங்களா!?


Hypertension இருக்கு! ஒரு வருஷமா டேப்லட் எடுத்துக்கறேன்! படிச்சிட்டு இருக்கேன்! சிஸ்டம்ல தான் கிளாஸஸ் அட்டெண்ட் பண்றேன்! என்றேன்.


ஓகே! Dilute பண்ணி பார்த்துடலாம்! அப்படி உட்காருங்க!


சமீபத்தில் கண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்! 40+ ல் ஏற்படும் பார்வைக் குறைபாடு காரணமாக இரண்டு வருடங்களாக கண்ணாடி போட்டு வருகிறேன்! தூரத்தில் இருப்பவர்களை அடையாளம் காண முடிவதில்லை! குத்துமதிப்பாக ஒரு உருவமாகத் தான் தெரிகிறது…:) 


இரண்டு வருடங்களாகி விட்டதால் பவர் ஏறியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டுமே! என்னிடம் சில  கேள்விக் கணைகளை தொடுத்த அந்த செவிலியர் இரு கண்களிலும் ட்ராப்ஸ் விட்டு உட்கார வைத்தார்! முப்பது நிமிடத் தவம்!


தவம் என்றால் மனம் ஒருநிலையில் அல்லவா இருக்கணும்! இங்கோ அப்படியில்லையே!! நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகளால் கிரகித்துக் கொண்டு பொறுமையுடன் இருக்கணும்…:) 


மனமோ ஒருபுறம் அடுத்து வீட்டிற்குச் சென்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் திட்டமிடல்களைப் பற்றியும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும்…:) இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்!!


அங்கே கண் சம்பந்தப்பட்ட வெவ்வேறு பிரச்சனைகளுக்காக வந்திருந்தவர்களைப் பார்க்க முடிந்தது! அதில் வயதானவர் ஒருவர் பரிசோதனைக்காக வந்திருந்தார்! ஒடிசலான தேகம்! எப்படியும் அவருக்கு வயது 90 இருக்கலாம்! 


இது இன்னும் க்ளியரா இருந்தா நல்லா இருக்கும்! என்று வரிசையாக வேறு வேறு லென்ஸ் போட்டு பரிசோதிக்கச் சொல்லி செவிலியரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்!


தாத்தா! உங்களால அவ்வளவு தான் பார்க்க முடியும்! இதுக்கு முன்னாடியும் அப்படித்தான இருந்தது!


கண்ணாடிய குரங்கு தூக்கிப் போட்டுடுச்சு! இதப் பாரும்மா! ஏதாவது உடைஞ்சிருக்கான்னு??


கொண்டாங்க! இதுவும் நல்லா தானே இருக்கு தாத்தா!


அப்படியா! என்று அரை சமாதானத்துடன் அந்த தாத்தா அங்கிருந்து கிளம்பினார்! அவரின் உருவமும், வயதும் சமீபத்தில் மறைந்து விட்ட என் மாமனாரை தான் எனக்கு நினைவூட்டியது!


இந்த முப்பது நிமிட தவத்துக்குப் பின் என்னுடைய முறை வந்ததும் மருத்துவர் மீண்டும் ஒருமுறை வாசிக்கச் சொல்லியும், கணினியிலும் பரிசோதித்துப் பார்த்து விட்டு, பெரிதாக மாற்றங்கள் இல்லையென்றாலும் நாள்முழுவதும் கண்ணாடி அணியச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறார்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

7 ஃபிப்ரவரி 2025

 

4 கருத்துகள்:

  1. மூன்று நான்கு மாதங்களுக்கு முன் நான் சோதிக்கச் சென்றபோது எனக்கு கண்ணில் நீர்ச்சத்து சோதனையும் செய்தார்கள்.  சுத்தமாக காய்ந்து போன கண்கள்.  அங்கிருந்த சிடுசிடு செவிலியர் மொபைலையே பார்த்துகிட்டு இருப்பீர்களா என்று கேட்டு அனுப்பினார்.  இது எனக்கு சில வருடங்களாக தொடரும் பிரச்னை.  கண்புரை அறுவை சிகிச்சையை வேறு தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  2. என்னையும் நாள் முழுவதும் கண்ணாடி அணியாகி சொல்கிறார்கள்.  நான் வீட்டிலிருக்கும் நேரம் அணிவதே இல்லை!  ரெப்ரெஷ் சொட்டு மருந்தும் வாங்கி வைத்திருக்கிறேன் தவிர, ஒழுங்காய் போட்டுக் கொள்வதில்லை!

    பதிலளிநீக்கு
  3. இன்றைய வாசகம் செம.

    உங்க அனுபவம் போலதான் எனக்கும்....சமீபத்தில்.

    நான் பல வருடங்களாக நாள் முழுவதும் கண்ணாடி. முன்பு தலைவலிக்கென்று போட்டேன் ஆனால் அதன் பின் தலைவலி சரியாகிட இது பின்னர் நம் எல்லோருக்குமெ வருமே அப்படி....ஆனால் கண்ணில் கொஞ்சம் பவர் இருப்பதால் முழுவதும் போட வேண்டும்.

    போட்டுக் கொண்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாசகம் அருமை.
    கண் பரிசோதனை போன இடத்தில் உங்கள் நினைப்பு அருமை
    அங்கு வந்த பெரியவர் கேட்டதும் செவிலியர் பதிலும் அவர் அரை மனதுடன் போவதும் பாவமாக இருந்தாலும் பெரியவர்கள் குழந்தைகள் மாதிரி ஆகி விடுகிறார்களே என்று இருக்கிறது. நாம் முன்பு இருந்தது போல இப்போது இருக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். எனக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் . நானும் முதியவள் ஆகி விட்டேனே!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....