சனி, 22 பிப்ரவரி, 2025

காஃபி வித் கிட்டு - 215 - தொடரும் பயணங்கள் - பூரிக்கட்டை - பழமைப் பொருளகம் - தேவை - குரங்குகளும் பட்டாம்பூச்சிகளும் - UNSPOKEN - இது என்ன…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காரிகர் காதா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் செய்தி/தகவல் :  தொடரும் பயணங்கள்


உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் எனக்குப் பிடித்த மாநிலங்களில் சில - அங்கே இருக்கும் தட்பவெப்பமும், மலைகளும், இயற்கை எழிலும் எத்தனை முறை சென்றாலும் அலுப்பதில்லை.  தற்போது தான் உத்திராகண்ட் சென்று வந்தது குறித்து ஒரு பயணத் தொடர் (பாம்பின் சிகரம்) இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இது முடிவதற்குள் அடுத்த பயணமும் அமைந்தது - வாய்ப்பை நழுவவிடாமல் சென்று வந்தேன்.  மூன்று நாள் பயணம் - மூன்று நாளும் விதம் விதமான அனுபவங்கள்.  அத்தனையும் சுகானுபவம்! எங்கே பயணம், பார்த்த இடங்கள் என்ன போன்ற தகவல்களை விரைவில் தொடராக எழுதுகிறேன். இப்போதைக்கு ஒரு காணொளி மட்டும் இங்கே!



******

 

பழைய நினைப்புடா பேராண்டி : மதுரைத்தமிழனும் பூரிக்கட்டையும்


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மதுரைத்தமிழனும் பூரிக்கட்டையும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


நேற்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் கணினியை முடுக்கினேன்.  ஜிமெயில் திறந்ததும் ஒரே அழுகைச் சத்தம் – என்னடா இது நம்ம மெயில் திறந்தா அழுகைச் சத்தமா இருக்கே, ஒருவேளை கூகிளுக்கே கஷ்டமா இருக்கோ என நினைத்தால் – ஒரு மின்னஞ்சல் மட்டும் விம்மி விம்மி அழுவது போல இருந்தது! யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்பதைப் பார்த்தபோது மதுரைத்தமிழன் வீட்டு பூரிக்கட்டை அனுப்பியதாகத் தகவல் சொன்னது.


சரி வந்தது வரட்டும் என அந்த மின்னஞ்சலைத் திறந்தால், மதுரைத் தமிழன் வீட்டு பூரிக்கட்டை கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தது. ”என்ன ஆச்சு?” என்று சோகத்துடன் நான் விசாரிக்க, ‘என் கஷ்டத்தினை போக்க யாருமே இல்லையா, நானும் எத்தனை நாளா இவங்க கிட்ட மாட்டிட்டு முழிக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை வைத்து இவரை அடிக்கறேன்ற பேரில் என்னை படுத்துகிறார். எனக்கு ஒரு விடிவுகாலம் கிடையாதா? அவரை அடிக்கற அடியில் அவருக்கு வலிக்குதோ இல்லையோ, எனக்கு ரொம்பவே வலிக்குது....., என்னை யாராவது காப்பாத்துங்க!” அப்படின்னு கதறி கதறி அழ, எனக்கும் ரொம்பவே கஷ்டமா ஆயிடுச்சு.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் தகவல் : பழமைப் பொருளகம்


சென்னையில் இருக்கும் ஒரு கடை பற்றி கீழே உள்ள இணைப்பில் படித்தேன்.  அதில் இருக்கும் ஒரு படம் - கடையின் பெயரைச் சொல்லும் பலகை - பலகையில் இருக்கும் பெயர் வித்தியாசமாக இருந்தது - ”பேரார்வமூட்டும் பழமைப் பொருளகம்” என்னவொரு பெயர்! நூற்றாண்டுகள் பழமையான பொருட்கள் இங்கே இருக்கின்றன என இந்தக் கட்டுரை சொல்கிறது.  முடிந்தால் சென்னையில் இருக்கும் நண்பர்கள் இங்கே சென்று வந்து தகவல் பகிரலாம்.  ஆர்வமிருப்பின் கீழேயுள்ள சுட்டி வழி ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை படித்துப் பாருங்களேன்.


‘I Started With a Stamp’: This Chennai Shop is Home to Antiques That Are Centuries Old


******


இந்த வாரத்தின் நிழற்படம் : தேவை



மேலே உள்ள படம் பார்த்தபோது தோன்றிய எண்ணம்.  


நமக்கான தேவை தீர்ந்த பின்னர் நம்மை ஒதுக்கி விடும் மனிதர்கள்…  மனிதர்களையே தேவை தீர்ந்த பின்னர் சர்வ சாதாரணமாக ஒதுக்கி விடும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை ஒதுக்கி விட அதிகம் சிந்திப்பதில்லை! 


இந்தப் படம் பார்த்த போது உங்கள் எண்ணத்தில் தோன்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!


******


இந்த வாரத்தின் பகிர்வு :  வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்


சொல்வனம் தளத்தில் படித்த ஒரு பயணக் கட்டுரை. ரகுராமன் என்பவர் எழுதிய இந்தக் கட்டுரை பயண ஆர்வலர்களுக்கு இந்தக் கட்டுரை நிச்சயம் பிடிக்கும்.  கட்டுரையிலிருந்து சில வரிகள் கீழே. 


காற்றில் பிளாஸ்டிக் கூடாரத்தின் சுவர்கள் பட பட வென்று அடிக்கும் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். சூழ்ந்திருந்த இருள் கனமாக என்னை அழுத்தி மூச்சு முட்ட வைத்தது. தடாரென்று எழுந்த போது கூடாரத்தின் குளிர்ந்திருந்த மேற் கூரை நெற்றியைத் தடவி எங்கிருக்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்பியது. நோவா தீஹிங் நதிக் கரையில் முகாமிட்டுருக்கிறோம் என்று அகம் அறிந்து கொண்டு மூச்சு சீரானது. ஒரு ஆள் நீளத்திற்கு பை போல இருந்த படுக்கையில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு கூடாரத்தின் துணிக் கதவுகளை இணைத்து மூடியிருந்த ஜிப்பரை திறந்து வெளியே வந்தேன். சில்லிடும் குளிர் கை விரல் நுனிகளை பதம் பார்க்க கனமான குளிர் மேலாடையின் சட்டைப்பைக்குள் அவற்றைப் பதுக்கினேன். வானம் முழுவதும் நட்சத்திரத் தூவல். அடுப்பங்கரை மேடையில் வழிந்து ஓடியப் பாலின் தடம் போல வான் நடுவே பால்வெளியின் மெலிதானக் கறை படிந்திருந்தது. 


சட்டென்று கூரிய டார்ச் வெளிச்சம் நதியின் கரையில் ஓங்கி இருந்த மரங்களில் ஒளி ஜன்னல் ஒன்றைத் திறந்தது. அந்த வெளிச்சச் சதுரம் காட்டிக் கொடுத்த கிளை ஒன்றில் இரு ஒளிப் புள்ளிகள் மிளிர்ந்தன. ‘பெடௌரிஸ்டா பெடௌரிஸ்டா’ என்று ரகசியமாகக் காதில் ஒரு குரல் கிசு கிசுத்தது. குளிர் முதுகெலும்பில் இறங்கியது போல அதிர்ந்து பின்னால் பார்த்தேன். அருகில் நின்று கொண்டிருந்தவர் சக பயணி. இயற்கை ஆர்வலர். 


முழுக்கட்டுரையும் படிக்க விருப்பமிருப்பின் கீழேயுள்ள சுட்டி வழி படிக்கலாம்!


வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும் – சொல்வனம் | இதழ் 336 | 09 பிப் 2025


******


இந்த வாரத்தின் ரசித்த காணொளி :  UNSPOKEN


இந்த வாரத்தின் ரசித்த காணொளியாக UNSPOKEN எனும் ஹிந்தி குறும்படம் - ஹிந்தியா என்று மொழி தெரியாதவர்கள் தவிக்க வேண்டாம் - ஆங்கில சப்டைட்டில் இருக்கிறது!  வெளி நாட்டு கொரியன் படங்களையே சப்டைட்டிலுடன் பார்க்கும்போது ஹிந்தி மொழி படம் பார்க்க முடியாதா என்ன?


******


இந்த வாரத்தின் கேள்வி :  இது என்ன…


கீழே உள்ள படம் கடந்த வியாழன் அன்று எடுத்த படம்… படத்தைப் பார்த்து, இது என்ன என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கண்டுபிடிக்க முடிந்தால் இது என்ன என்று சொல்லுங்களேன்?  


 

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

22 ஃபிப்ரவரி 2025


5 கருத்துகள்:

  1. வாசகம் சூப்பர்.

    உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் எனக்குப் பிடித்த மாநிலங்களில் சில//

    அப்படியே எனக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்களே! இமயமலையின் அற்புதங்களைக் காணலாம்.

    வீடியோ வாவ்! சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமச்சிவாய என்று கேட்கும் போதே...இப்பயணம் கொஞ்சம் கடினம் என்பதும் தெரிகிறது ஆனால் அதைக் கடந்தால் பரவசம்!

    நண்பர் பிரேம் பிஷ்ட்டின் காணொளி பார்த்திருக்கிறேன் அத்ரிமுனி, அந்த அருவி... அருமையான இடத்திற்குச் சென்றிருக்கிறீர்கள் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பூரிக்கட்டை இப்பலாம் அடி இல்லை போல! அடி வாங்கி மனம் பக்குவப்பட்டு நல்ல வாசக வீடியோஸ் போடுகிறார்!

    அந்தப் பழம் பொருள் கடை பற்றி ஏற்கனவே அறிந்ததுண்டு ஆனால் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கலை இங்கு வந்த பிறகு.

    தேவையற்ற பொருட்களை ஒதுக்குவது பற்றி, எஸ் ரா எழுதியதுதான் நினைவுக்கு வரும். இன்று நம் வீட்டில் நாளை எங்கோ...அவர் கடைவீதியில் நடந்து சென்ற போது மேலே நீங்கள் சுட்டியுடன் சொல்லியிருந்தது போன்ற ஒரு கடையை பழம் கலைப்பொருட்களுடன் பார்க்க நேரிட்ட போது தோன்றியதாக...

    எனக்கும் சில பொருட்களை விலக்கிட மனம் ஏற்காது ஆனால் நிரந்தர இடம் இல்லாததால் அப்படிச் செய்யும் நிர்பந்தம். ஆனால் எதுவும் நிரந்தமில்லை என்ற மனப்பக்குவம் கிடைத்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. சொல்வனம் கட்டுரை வாசிக்கிறேன் ஜி. பிடிச்ச சப்ஜெக்ட்டாச்சே!!

    காணொளிய்யும் பார்க்கிறேன் ஜி

    அந்தப் படம் ஒன்று அது உலர்ந்த மஷ்ரூம் இல்லைனா கடல் பஞ்சு/நுரை என்று நினைக்கிறேன். அதை வைத்து நடுவில் துணி? மயில் வடிவம் போல வைத்து அழகுபடுத்தியிருக்காங்க என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அட்டகாசமான வர்ணனைகளுடன் பயணக்கட்டுரை. வாசிக்கும் போது நாமும் அப்படியே அவற்றை மனதில் 3டி யாக விரித்துப் பயணம் செய்யும் விதம் அழகாக எழுதியிருக்கிறார். நம்தபா புக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....