அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பாம்பின் சிகரம் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தொடரின் முந்தைய பகுதிகளை இது வரை படிக்கவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்.
சென்ற பகுதியில் Base Camp இருக்கும் கைதான் வரை மலையேற்றம் செய்தது குறித்து எழுதி இருந்தேன். நான்கு கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றம் செய்ய எங்களுக்கு இரண்டே கால் மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. கைதான் எனும் இடத்தில் அமைந்திருந்த Base Camp வரை சென்று எங்களுக்கான டெண்ட் கொட்டகைகளில் உடைமைகளை வைத்து காலணிகளைக் கழற்றி கொஞ்சம் ஓய்வெடுத்தோம். இரண்டு பேருக்கு ஒரு டெண்ட் கொட்டகை என்ற விதத்தில் அமைந்திருந்தது அந்தக் கொட்டகைகள். கொட்டகையிலிருந்து வெளியே வந்து பார்த்தால் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. மலைச்சிகரங்கள், பசுமை, இயற்கையின் அழகியல் என அனைத்தும் பார்க்கப் பார்க்க பரவசம் கொள்கிறது மனது. அப்படியே அங்கே அமர்ந்து சுற்றுச்சூழலை ரசிக்க மலையேற்றம் செய்து வந்ததின் அசதி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகலுவதை நம்மால் உணர முடிகிறது. சிறிது நேரத்தில் சிற்றுண்டியாக உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட பகோடா, வெல்கம் ட்ரிங்க் ஆக எலுமிச்சை சாறு அல்லது தேநீர் என எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்கள். எங்கள் நால்வருக்குமான சிற்றுண்டியை ஒரு தட்டில் வைத்து தர அனைவரும் அதனைச் சுவைத்து தேநீர் அருந்தினோம். அந்த சூழலில், அந்த தட்பவெப்பத்தில் சூடான உருளைக் கிழங்கு பகோடா (பஜ்ஜி போல இருந்தாலும் வடக்கில் இப்படித்தான் அழைப்பார்கள்) அமிர்தமாக இருந்தது.
கொட்டகைகள் அமைந்த பகுதியில் சில அடிகள் மேலே சென்றால் ஒரு பெரிய சமவெளிப்பகுதி. அங்கிருந்து 360 டிகிரியில் உங்களைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் மலைகள். அங்கே சில நிமிடங்கள் அமர்ந்தும், படுத்தும், இளைப்பாறியபடியே காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் சூரியாஸ்தமனம் நிகழப் போகிறது என்பதால் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குளிர் அதிகரித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கே இருந்த குளிரின் அளவு 2 டிகிரி. இரவு வர வர இன்னும் குறைந்து குளிர் அதிகமாக உணரமுடியும் என்று தோன்றியது. 2 டிகிரியாக இருந்தாலும் அந்த குளிர் மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. தில்லியின் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கும் எங்களுக்கு அங்கே கிடைத்த சுத்தமான இயற்கைக் காற்று ஒரு பெருவரமாகத் தெரிந்தது. ஆஹா என்னவொரு ஆனந்தம். நண்பர் Bபிஷ்ட் எப்போதும் சொல்வார் - இடையிடையே இப்படியான மலைப்பகுதிகளுக்குச் சென்று இயற்கையை ரசித்து, சுத்தமான காற்றைச் சுவாசிப்பது ஒரு விதத்தில் Energy Booster என்று. அது உண்மை என்பதை எங்களால் உணர முடிந்தது.
எங்களைப் போலவே இன்னும் சில சுற்றுலாப் பயணிகளும் அங்கே வந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் அந்த இளைஞர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. அங்கேயும் வந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள்! இயற்கை எழிலை ரசிக்காமல் அங்கே வந்து இயற்கையை மாசுபடுத்துவதில் என்ன ஈடுபாடு இவர்களுக்கு என்று கோபமும் வந்தது. எங்கே சுற்றுலா வந்தாலும் அங்கே புகைப்பதற்கும், சரக்கு அடிப்பதற்கும் மட்டுமே வருவது போல சிலர் நடந்து கொள்வது வேதனையைத் தரும் விஷயம். இப்படியானவர்களிடம் நாம் அது தவறு என்பதைச் சொல்லவும் முடியாது! அப்படியே சொன்னாலும் அதனை புரிந்து கொள்ளும் மனநிலை அவர்களிடம் இல்லை என்பது எங்களுக்கு புரிந்தே இருந்ததால் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் இருந்த இடத்தை விட்டு சத்தமில்லாமல் அகன்று சென்றோம். சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மீதும் சாக்கடை ஆகும் என்பதை இத்தனை வருட அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோமே! அந்த இயற்கையை அனுபவத்தபடி அனந்தசயனத்தில் படுத்துக் கொண்டோம்.
கொஞ்சம் கொஞ்சமாக சூரியன், அந்தப் பகுதியில் தனது அன்றைய வேலையை முடித்துக் கொண்டு அடுத்த பக்கம் செல்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததை செவ்வானம் எங்களுக்கு உணர்த்தியது. ஆஹா… என்னவொரு அருமையான காட்சி. கடல் இருக்கும் பகுதிகளில் பார்க்கும் சூரியோதயம்/சூரியாஸ்தமனம் ஒரு வித அழகு என்றால் மலைப்பகுதிகளில் அதே காட்சிகள் வேறு வித அழகு. இரண்டு இடங்களிலும் வித்தியாசங்கள் உண்டா இல்லையா என்பதை யோசிப்பதை விட அந்த நேரத்தில் அந்தப் பிரதேசத்தில் நம் கண்ணுக்குக் காட்சி தரும் இயற்கையின் பேரழகை நாங்கள் அனைவரும் ரசித்துக் கொண்டிருந்தோம். சில நிழற்படங்கள், சில காணொளிகள் என மிகவும் ரம்மியமாக இருந்தது அந்த சில நிமிடங்கள். இப்படியான காட்சிகள் இயற்கை அன்னை நமக்குத் தரும் கொடை என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்வது நல்லது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அப்படியே அந்தக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. சூரியன் மறைய ஆரம்பித்ததும், குளிரும் அதிகம் தெரிய ஆரம்பித்தது. மனதே இல்லாமல் எங்கள் கொட்டகைகள் இருக்கும் இடத்தினை நோக்கி கீழே இறங்கி வந்தோம்.
இரவு எட்டு மணிக்கு மேல் இரவு உணவு கிடைக்கும் என்றும் அதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கி விட்டன என்றும் தெரிந்தது. வழிகாட்டிகளாக வருபவர்கள் சேர்ந்து அங்கே அனைவருக்குமான உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சப்பாத்தி, சப்ஜி, சாதம் என ஒவ்வொன்றும் சுடச் சுடத் தயாராகிக் கொண்டிருந்தது. கௌரவ் எங்களிடம் அவரது சமையல் கூடத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார். வெளியே ஒலிக்கும் இசைக்கு நடனமாடியபடியே அவர்கள் அங்கே சமையல் வேலைகளை உற்சாகத்துடன் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்குத் தேவையான உணவை அடுப்புகளில் தயாரிப்பதோடு சூடாக தண்ணீரும் போட்டு வைத்திருந்தார்கள். சாதாரண நீர் சில்லென்று உறையும் பதத்தில் இருந்ததால் இப்படி வென்னீர் வசதி! அதுவும் குடிப்பதற்கு இதமாக இருந்தது. இவர்கள் இப்படி இரவு உணவு தயாரிக்கும் சமயத்தில் சிலர் ஓய்வெடுக்க, சிலர் அங்கே Camp Fire ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இருட்டில், அந்த அமைதியைக் கெடுக்கும் விதமாக சில பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடல்களை அலறவிட்டு நடனமாடுவதும் சிலருக்கு பிடித்திருக்கிறதே - என்ன செய்ய? சில சமயங்களில் இப்படியான விஷயங்களையும் ரசிக்க ஆரம்பித்தால் தேவையில்லாத டென்ஷன் தவிர்க்கலாம்!
வட இந்திய திருமணங்களில் பத்திரிக்கைகளில் முகூர்த்த நேரம் குறிக்கும் போது ”தாரோன் கி chசாவ் மே” என்று எழுதுவார்கள் - அதாவது சூரியோதயத்திற்கு முன்னர் நக்ஷத்திரங்களின் ஒளியில் முகூர்த்தம் நடக்கும் என்று! அது போல அந்த வேளையில் மேலே அண்ணாந்து பார்த்தால் எண்ணிலடங்கா நக்ஷத்திரங்கள் எங்களை நோக்கி கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. தில்லியில் ஒரு நக்ஷத்திரம் கூட கண்ணில் தெரிவதில்லை - அவ்வளவு மாசு இங்கே! ஆனால் அங்கே கண்களைச் சுழற்றிப் பார்த்தால் ஆயிரக் கணக்கில் நக்ஷத்திரக் கூட்டம்! அன்றைய தினம் ஒரே நேர்கோட்டில் ஆறு நக்ஷத்திரங்கள் தெரியும் என்று வேறு சொல்லி இருந்ததால் எல்லோரும் வானத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அலைபேசியில் ஸ்கை என்ற ஒரு செயலி கூட இதற்காக இருக்கிறது என்று நண்பர் அவரது அலைபேசி வழி நக்ஷத்திரங்களை காணிபித்துக் கொண்டிருந்தார். ஒரு சிறப்பான செயலியாகத் தெரியவே பலரும் அவரவர் அலைபேசிகளில் தரவிறக்கம் செய்து கொண்டிருந்தார்கள். நான் அலைபேசி வழி பார்க்காமல் நேரடியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சுமார் ஒன்றரை மணி நேரம் Camp Fire அருகே அமர்ந்து சூழலை அனுபவித்த பிறகு இரவு உணவு தயாராக இருப்பதை அறிந்தோம்.
இரவு உணவு - Simple and Tasty - வீட்டு உணவு போலவே சுவை. பாசத்துடன் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என மேடைகளில் Buffet ஆரம்பிக்க அவரவருக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டு Camp Fire அருகே வெட்டவெளியில் அமர்ந்து கொண்டு மெதுவாக இரவு உணவை முடித்தோம். மிகவும் ரம்மியமான பொழுதாக அன்றைய பொழுது அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லி எங்களது கொட்டகை நோக்கிச் சென்றோம். சுமார் பத்து-பதினைந்து கொட்டகைகள் இருந்தாலும் கழிப்பறைகள் இரண்டு மட்டுமே இருந்தது என்பதால் காலை சீக்கிரம் எழுந்து வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டோம். அதுவும் காலை இல்லை இல்லை நள்ளிரவிலேயே எழுந்திருக்க வேண்டியிருக்கும் என்பதையும் சொல்லி விட்டார் எங்கள் வழிகாட்டி கௌரவ். சுமார் ஒன்பது கிலோ மீட்டர் மலையேற்றம் செய்து மலைச்சிகரத்தை அடைந்து அங்கே சூரியோதயம் காண வேண்டும் என்பதால் நள்ளிரவே எங்கள் மலையேற்றத்தினை தொடங்க வேண்டியிருக்கும் என்பதால் விரைவில் உறக்கத்தை தழுவினோம்.
அடுத்த நாள் எப்போது எழுந்தோம், என்ன விதமான அனுபவங்கள் கிடைத்தன போன்றவற்றை வரும் பகுதியில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
17 ஃபிப்ரவரி 2025
சுவாரஸ்யமான அனுபவங்கள். நாங்களும் உடன் இருந்தது போல உணர்வு. காணொளிகள் ரசிக்க வைத்தன. சூரியன் மறைவது போல நின்று போக்கு காட்டிக் கொண்டிருந்ததும், அந்த அழகிய மலைகளும், பள்ளத்தாக்குகளும் அழகு. சுகமான குளிர். இளையராஜா பாடல் எதுவும் மனதில் ஒலிக்கவில்லையா?!
பதிலளிநீக்குஓ காலையிலேயே வெளியாகி இருந்ததா? நான் இணையம் வந்ததே லேட் நெட் படுத்தல். இதை கவனிக்கவே இல்லை.
பதிலளிநீக்குரசித்து வாசித்தேன், ஜி என்ன அருமையான ஒரு பயணம். இயற்கையுடன் இருந்தாலே மனம் லகுவாகி வேறு ஒன்றும் தோன்றாது. வானில் நட்சத்திரங்கள் சுற்றிலும் மலைகள்...வாவ்!
இளைஞர்களை என்ன சொல்ல? அழைத்துவரும் ஏஜன்ஸிகள் இதெல்லாம் கூடாது என்று ஒரு ரூல் வைத்தால் என்ன? யாரும் சண்டை போட முடியாதே. அரசும் ஏஜன்ஸிகளிடம் கடுமையான விதியை விதித்திட வேண்டும்.
குளிர் ஆஹா!!...கொட்டகை சூப்பரா இருக்கு ஜி.
காணொளிகள் அனைத்தும் பார்த்தேன், ரசித்தேன்
கீதா
அருமையான சூரிய அஸ்தமனம் காட்சி! சில வருடங்கள் முன்னால் மவுண்ட் அபுவில் மலை நடுவே சூரியன் மறையும் காட்சி காணும் வாய்ப்பு கிட்டியது!
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குகாணொளிகள், படங்கள் அனைத்தும் அருமை,
சூரியாஸ்தமனம் மிக அருமை. மனசே இருக்காது அந்து இருந்து கிளம்ப.
சூரியோதயம் காண ஆவல்.