அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட J பேபி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பாம்பின் சிகரம் பயணத் தொடரின் முதல் பகுதியை படித்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தொடரின் முதல் பகுதியை இது வரை படிக்கவில்லை என்றால் இங்கே சென்று படிக்கலாம்.
தில்லியின் புறநகர் பகுதியில் இருக்கும் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் வீட்டிலிருந்து புறப்பட்ட நாங்கள் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரம், சாலைகளில் வாகன நெரிசல் இல்லை என்றாலும் தலைநகரைத் தாண்டிய பிறகு அடர்ந்த பனிமூட்டம் சாலைகளில் இருந்தது என்பதால், நண்பர் மிகவும் கவனத்துடன் தான் வண்டியை ஓட்ட வேண்டியிருந்தது. உடன் வந்திருந்த மற்ற இருவரும் வாகனங்களை நெடுஞ்சாலைகளில் இயக்கி பழக்கம் உடையவர்கள் என்பதால் அவர்களும் கவனத்துடன் சாலையைக் கவனித்து வந்தார்கள். சற்று அசந்தாலும் விபத்து நேர்ந்துவிடும் என்பதற்காக மிகவும் கவனத்துடன் வாகனத்தினைச் செலுத்திக் கொண்டிருந்தார் நண்பர். எங்கேயும் நிற்காமல் வண்டி விரைந்தது. முன்பெல்லாம் தில்லியிலிருந்து ஹரித்வார் வரை செல்வதற்கே கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கூட ஆகிவிடும். ஆனால் தற்போது சாலைகள் மிகவும் சிறப்பாக இருப்பதால் மூன்றரை நான்கு மணி நேரத்தில் கடந்து விட்டோம்.
ஹரித்வார் நகரைத்தாண்டிய பிறகு அடர்ந்த வனப் பகுதி - ரிஷிகேஷ் செல்லும் வழியில் வாகனத்தினை இயற்கை அழைப்பிற்காக நிறுத்தினோம். இந்தப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் கூட உண்டு - ராஜாஜி நேஷனல் பார்க் என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதிக்குக் கூட சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். பெரிதாக விலங்குகள் தட்டுப்படாது என்றாலும் இயற்கைச்சூழலை ரசித்து வரலாம். தொடர்ந்து வாகனத்தினை இயக்கி நாங்கள் சென்று சேர்ந்தது உத்திராகண்ட் தலைநகரம் டேராடூன். நண்பர் Bபிஷ்ட் வீட்டிலிருந்து ப்ரெட் டோஸ்ட் மற்றும் தேநீர் தயாரித்து எடுத்து வந்திருந்தார். டேராடூன் நகரின் சாலை ஒன்றில் இருந்த பேருந்து நிறுத்தம் அருகே வண்டியை நிறுத்தி நான்கு நண்பர்களும் காலை உணவை முடித்துக் கொண்டோம். அங்கிருந்து அரை மணி நேர ஓய்விற்குப் பிறகு வண்டியில் பயணம் தொடர்ந்தது. டேராடூன் நகரில் இதற்கு முன்னரும் நிறைய முறை பயணித்து இருக்கிறேன். அங்கே இருக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். டேராடூன் பயணம் என்ற தலைப்பில் 2023-ஆம் வருடம் எழுதிய பதிவுகள் நினைவில் இருக்கலாம்.
டேராடூன் நகரைத் தாண்டியதும், சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம் முசோரி. அங்கேயும் நான் முன்னர் சென்று வந்ததுண்டு. அங்கே இருக்கும் ஒரு அருவியின் பெயர் கெம்ப்டி ஃபால்ஸ். மிகச் சிறிய அருவி தான் என்றாலும் அங்கே எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இந்தப் பகுதிகளில் அருவிகள் பெரிய அளவில் இல்லை. இந்தியாவின் பல பகுதிகளில் பெரிய பெரிய அருவிகளைப் பார்த்திருக்கும் எனக்கு, இந்த அருவி அத்தனை ஈர்ப்பினைத் தராது என்றாலும் நண்பர் Bபிஷ்ட் அவர்களுக்கும் ஓய்வு தேவையாக இருக்க, வண்டியை கெம்ப்டி ஃபால்ஸ் அருகே நிறுத்தி அருவியைக் காணச் சென்று வந்தோம். முன்பெல்லாம் நடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இப்போது உடன் கட்டோலா எனப்படும் கேபிள் கார் வசதியினையும் இங்கே ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் நடந்தே கீழே சென்று சில நிமிடங்கள் அருவியின் அருகே சென்று இயற்கையை ரசித்து சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
வழமை போலவே இந்த இடங்களில் நிறைய கடைகள், வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கின்றன. உள்ளூர் பாரம்பரிய உடைகளை அணிந்து நிழற்படங்கள் எடுத்துக் கொள்ள வசதியாக நிறைய உடைகள் இங்கே வாடகைக்குக் கிடைக்கின்றன. அந்த உடைகளை அணிந்து கொண்டு நீங்கள் படம் எடுத்துக் கொள்ளலாம்! ரீல்ஸ் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஹிந்தியில் ஒரு வசனம் உண்டு - ”பைசா ஃபேக்கோ, தமாஷா dhதேக்கோ” என்று - அதாவது காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல ஒரு வசனம். எல்லாம் காசு தான்! பணம் பத்தும் செய்யும் என்று நம் ஊரில் சொல்வது போல! பணம் இருந்தால் விதம் விதமான செயல்களைச் செய்து கொள்ள முடியும் என்பதை இது போன்ற இடங்கள் நமக்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றன. போகிற போக்கில் ஒரு விஷயத்தினையும் உங்களுக்கு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். உடன் கட்டோலா வசதி இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா, அதற்கும் கட்டணம் உண்டு. போக வர மொத்தமாக ஒரு நபருக்கு 320 ரூபாய். நடந்து செல்வதும் அத்தனை கடினம் அல்ல என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.
கெம்ப்டி ஃபால்ஸ் பகுதியில் சில மணித்துளிகள் செலவிட்ட பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. பயணத்தில் பின்னர் கிடைத்த அனுபவங்கள் வரும் பகுதியில் எழுதுகிறேன். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
11 ஃபிப்ரவரி 2025
எல்லா படங்களும் வெகு அழகு என்றாலும் அருவி படம் ரொம்ப சூப்பர். காணொளி ரொம்ப சின்னதாக இருந்ததது. இரண்டு மூன்று முறை ஓட்டிப்பார்த்து அப்புறம் ஃபுல் ஸ்க்ரீன் போட்டதும்தான் தெரிந்தது!!
பதிலளிநீக்குஅழகான அருவி இயற்கை!!!! காணொளியை ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குஎதற்காக இப்படி இயற்கையான அழகான அருவி அதிலிருந்து இப்படியான இடங்களில் ஏதேதோ கட்டறாங்க. தனியார் நீச்சல்குளம் எல்லாம்.
அது என்னதான் சுத்தம் செய்தாலும் அருவியில் குளிக்கும் ஆனந்தம் கிடைக்குமா?
இப்படிக் கட்டறதுனாலதான் மலைச்சரிவு எல்லாம் நிறைய ஏற்படுகிறது.
இயற்கையை அப்படியே அனுபவிப்பதை விட்டு
கீதா
பயணிகளைக் கவரும் பொருட்கள் கண்களைக் கவர்கின்றன!
பதிலளிநீக்குகீதா
அருவி யின் இருபுறமும் கட்டிடங்கள்!!!! அது ஆபத்து இல்லையா? அதைவிட அருவிக்கு நடுவிலேயே அதைத் தடுத்து நீச்சல் குளமா!!!! என்னங்க இது? மனிதனின் புத்து போற போக்கு விந்தைதான்!
பதிலளிநீக்கு//ஹிந்தியில் ஒரு வசனம் உண்டு - ”பைசா ஃபேக்கோ, தமாஷா dhதேக்கோ” என்று - அதாவது காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் //
அதேதான்....விந்தை மனிதர்கள்.
அரசு எப்படி இங்கெல்லாம் தனியார் நுழைய அனுமதிக்கிறது! மேலே நீங்கள் சொல்லியிருக்கும் அந்த வசனம்தான் பணம் பத்தும் செய்யும்....என்னவோ போங்க. அருவியின் அழகையும் சுற்றுப்புற இயற்கையின் அழகையும் கெடுக்கிறது.
நடந்து செல்ல கடினமா இல்லாதப்ப எதுக்கு அங்க இப்படி கட்ட்டோலா...படத்துல அது கட்டப்பட்டிருக்கும் இடம் பார்க்கவே தெரிகிறது எவ்வளவு மாசுபடுத்தப்பட்டுள்ளதுனு.
உண்மையா இதைப் பார்த்ததும் மனசு சங்கடப்பட்டது.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. உண்மை.. அனுபவங்களை கற்றால்தான் புரியும்.
தங்கள் பயண விபரங்களும், அத்தனை படங்களும் பிரமாதமாக இருக்கிறது. அந்த நீர்வீழ்ச்சி படமும், அதன் துல்லியமும் மனதை ஆக்கிரமிக்கின்றன. அந்த இடத்தில் தேங்கும் நீரை நீச்சல் குளமாக்கியது சரியல்ல.. ..!
குளிரினால் அங்கு யாரும் குளிப்பதில்லையென்றாலும், கோடையில் நம் மக்கள் அதை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள்.
கடைகளில் கண்ணை கவரும் விதமாக வைத்திருந்த பொருட்களின படங்களும் நன்றாக உள்ளது. ஹிந்தியில் உள்ள வசனம் அர்த்தமுள்ளதாக உள்ளது. எல்லாமே பணம் இருந்தால், சுலபமாக பெற்றுக் கொள்ளத்தான் முடியும். இனியும் தங்கள் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.