அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காரிகர் காதா - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பாம்பின் சிகரம் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தொடரின் முந்தைய பகுதிகளை இது வரை படிக்கவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்.
சென்ற பகுதியில் பாம்பின் சிகரம் என்று அழைக்கப்படும் நாக்g tடிப்bபா சிகரத்திற்குச் சென்றபோது கிடைத்த அனுபவங்களை எழுதி இருந்தேன். அங்கே சுமார் ஒரு மணி நேரம் இருந்த பிறகு மலைச்சிகரத்திலிருந்து புறப்பட்டு கீழே இறங்க ஆரம்பித்ததையும் சொல்லி இருந்தேன். சென்ற பகுதியில் சொல்ல விடுபட்ட சில விஷயங்கள் - அதாவது இமய மலைச் சிகரங்கள் குறித்த சில ஸ்வாரசியமான விஷயங்களை இந்தப் பகுதியில் முதலில் சொல்லி விடுகிறேன். மலைச்சிகரங்களை நாம் பார்க்கும்போது எல்லாமே ஒரே மாதிரி தான் தெரியும். என்ன பனி படர்ந்த மலைகள் மேலும் கீழுமாக இருக்கின்றன - அவ்வளவு தானே என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு சிகரத்திற்கும் உள்ளூரில் பெயர்கள் வைத்து இருக்கிறார்கள். சிகரங்களைப் பார்த்தே அவற்றின் பெயர் என்ன என்பதைச் சொல்லும் சில தேர்ச்சி பெற்றவர்கள் உண்டு - நண்பர் Bபிஷ்ட் போல. உதாரணத்திற்கு நாக்g tடிப்bபா மலைச்சிகரத்திலிருந்து நாம் பார்க்கும் சில சிகரங்கள் Bandarpoonch, Swargarohini, and Kedarnath ஆகியவை. பெயர்களே வித்தியாசமாக இருக்கின்றன அல்லவா?
Bandarpoonch - இந்த வார்த்தையில் இரண்டு ஹிந்தி வார்த்தைகள் இருக்கின்றன - Bandar மற்றும் poonch - இந்த வார்த்தைகளின் அர்த்தம் - குரங்கு மற்றும் வால்! அதாவது இந்த மலைக்கு குரங்கு வால் அல்லது ஹனுமனின் வால் என்று பெயரிட்டு இருக்கிறார்கள் உள்ளூர்வாசிகள். மொத்தம் மூன்று மலைச்சிகரங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு இது. இந்த இடத்திற்குக் கூட நம்மால் மலையேற்றம் செய்து போக முடியும் என்றாலும் மிகவும் கடுமையான மலையேற்றம் இது. அதீத உடலுறுதியும், மலையேற்றத்தில் மிகுந்த அனுபவமும் மிக்க நபர்களாலேயே இந்த இடங்களுக்குச் செல்ல முடியும் என்று தெரிகிறது. சில நிறுவனங்கள் இந்த குரங்கு வால் சிகரங்களுக்கு மலையேற்றக் குழுக்களை அழைத்துச் செல்கிறார்கள் என்றாலும் அதில் பயணிப்பது சுலபமல்ல. அதனால் இப்படி நாக்g tடிப்bபா மலைச்சிகரத்திலிருந்தே பார்த்து ரசிக்க வேண்டியது தான். கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 20750 அடி உயரம் கொண்ட இந்த மலைச்சிகரத் தொகுப்பிற்கு செல்ல உங்களுக்கு ஆர்வமிருப்பின் தகவல்களை இங்கே வாசிக்கலாம். உத்தர்காசியிலிருந்து உத்தர்காசி வரை இந்த மலையேற்றம் சென்று வர மொத்தம் தேவையான நாட்கள் 17! கட்டணம் சுமார் 1.80 லட்சம் (GST தவிர்த்து!).
Swargarohini - அதாவது சொர்க்கத்திற்குச் செல்லும் பாதை என்ற பெயர் கொண்ட இந்த மலைச்சிகரத்திற்கும் மலையேற்றம் செய்ய முடியும் என்றாலும் நம்மால் அந்தச் சிகரத்தை நாங்கள் சென்று வந்த பாம்பின் சிகரம் என்ற இடத்திலிருந்தே பார்க்க முடியும். கடல் மட்டத்திலிருந்து 18000 அடி உயரம் கொண்ட சிகரம் இது. இந்தச் சிகரத்திற்கும் நாங்கள் சென்ற போது ஏற்பாடு செய்த ஹிமாலயன் ஹைக்கர்ஸ் நிறுவனம் மலையேற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள். கிட்டத்தட்ட 14 நாட்கள் இந்த மலையேற்றத்திற்குத் தேவை. அதிலிருந்தே இந்த மலையேற்றத்தில் உள்ள சிரமம் உங்களுக்குப் புரியலாம். மலையேற்றம் செய்ய நிறையவே மன உறுதியும் உடலுறுதியும் தேவை. நாங்கள் சென்று வந்த இந்த நாக் டிப்பா மலையேற்றமே சிரமமாக இருந்தது. எங்கள் குழுவில் மூன்று பேர் ஐம்பதைத் தாண்டியவர்கள் என்றாலும் மன உறுதி இருந்ததால் எங்களால் மலையேற்றத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. இந்தப் பயணத்தில் பல இளைஞர்கள் மலையேற முடியாமல் பாதியிலேயே கைவிட்டதும் நடந்தது. எங்களைப் பார்த்து சில இளைஞர்கள் “எப்படி இந்த வயதிலும் உங்களால் மலையேற்றத்தில் ஈடுபட முடிகிறது?” என்று கேள்வி வேறு கேட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் சொன்ன பதில் - எங்களுக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை - இன்னமும் நாங்கள் இளமையாகவே இருக்கிறோம் என்பதே!
மலைச்சிகரத்தில் கிடைத்த அனுபவங்களுடன் காட்டுப் பாதையில் கீழ் நோக்கிய மலை இறக்கத்தைத் தொடங்கினோம். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் கீழே இறங்கியதும் நாக தேவதைக்கான ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கே சென்று சேர்ந்தபோது, இந்தப் பயணம் எதற்காக தொடங்கினோமோ, அந்த நண்பர் வீட்டு திருமணம் முடிந்திருந்தது. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சென்றிருந்தார்கள். நண்பரும் அவரது குடும்பத்தினர் சிலரும் அங்கே காத்திருந்தார்கள். மணமக்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லச் சொல்லி கொடுக்க வேண்டியதையும் கொடுத்து விட்டு, ஆலய வளாகத்தில் சென்று நாக தேவதையிடம் “எல்லோருக்கும் நல்லதையே கொடு” என்று வேண்டுதல் செய்து கொண்டோம். வெளியிலிருந்து சில படங்களும் எடுத்துக் கொண்டோம். தொடர்ந்து நடக்க ஆரம்பித்த போது வழியில் மற்ற குழுக்களில் வந்திருந்த இளைஞர்களையும் யுவதிகளையும் காண முடிந்தது. அவர்களில் சிலர் மலையுச்சி வரை வந்தவர்கள், சிலர் மலையேற்றம் செய்ய முடியாமல் பாதி வழியிலேயே மலையேற்றத்தினை கைவிட்டவர்கள். அவர்களுடன் பேசிக் கொண்டே நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.
பல யுவதிகளும் யுவன்களும் கேட்ட ஒரே கேள்வி - இந்த வயதில் எப்படி இப்படி மலையேற்றத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது? எப்படி இப்படி எல்லாம் பயணிக்க முடிகிறது என்பது தான். அவர்களின் அடுத்த கேள்வி - எங்களால் இந்த வயதிலேயே மலையேற்றம் செய்ய முடியவில்லையே, வயதான உங்களால் எப்படி முடிகிறது என்பது! ஒரு ஹிந்தி மொழி திரைப்படத்தில் அமிதாப் Bபச்சனை ”ஹேய் Bபுdட்டே” என்று ஒருவர் அழைப்பார் - நம் ஊரில் ஏய் பெருசு என்று அழைப்பது போல! அதற்கு அமிதாப், யாரை Bபுdட்டே என அழைத்தாய், Bபுdட்டா ஹோஹா தேரே Bபாப்p என்று சொல்வார் - அதாவது உங்கப்பா தான் பெருசு, நான் இல்லை! என்று அர்த்தம்! அது போல நாங்களும் பதில் அளித்தோம். மனதில் இன்றைக்கும் இளமையாகத் தான் இருக்கிறோம் என்று அவர்களிடம் பேசிக்கொண்டே வனப்பகுதியில் நடந்து கொண்டிருந்தோம். இரவு நேரத்தில் நாங்கள் கடந்த வனப்பகுதிகளை பகல் நேரத்தில் பார்க்கும்போது எங்களுக்குள் அப்படி ஒரு வியப்பு - இந்த இடத்தினையா வனத்தில் கடந்தோம் என்று. சுற்றிலும் தேவதாரு மரங்களும் எந்த மரத்திலிருந்தோ கேட்கும் பறவைகளின் குரலும் எங்களை மயக்கிக் கொண்டிருந்தன.
தொடர்ந்து பயணித்து எங்கள் Base Camp வந்து சேர்ந்தபோது கிட்டத்தட்ட மதியம் ஆகியிருந்தது. இரவு இரண்டு மணிக்கு புறப்பட்டு மலையேற்றம், இறக்கம், சிகரத்தில் நின்று நிதானித்து கிடைத்த அனுபவங்களுக்கான நேரம் என மொத்தமாக எங்களுக்கு 10 மணி நேரம் ஆகியிருந்தது. சற்றே கடினமான மலையேற்றம் தான் என்றாலும் மிகவும் சிறப்பான அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. பொதுவாக மலையேற்றத்தினை விட மலையிலிருந்து இறங்குவது சுலபம் என சிலர் தவறாக எண்ணுகிறார்கள். கீழ் நோக்கி இறங்குவதும் இன்னும் சிரமமான விஷயம் என்பதை இப்படியான பயணங்களில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கொஞ்சம் கொஞ்சமாக கீழே நடந்து வரும்போது நம் கால்கள் கெஞ்ச ஆரம்பிக்கும். ஆங்காங்கே ஓய்வு எடுக்கச் சொல்லும். தொடர்ந்து நடப்பது சிரமமாகவே தோன்றும். ஆனாலும் மலையேற்றத்தில் கிடைத்த அனுபவங்களுடன் மனது உவகை கொள்ளும் என்பதால் அதனை நினைத்தபடியே கீழே இறங்கி விடலாம். இறங்கி வரும்போது எங்களுடன் இரண்டு யுவதிகளும் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டார்கள். அவர்கள் முதல் நாளிலிருந்தே எங்களைக் கவனித்து, “இந்த வயதில் இவர்களால் முடிகிறதே” என்று inspire ஆனார்களாம்! ஆனாலும் அதில் ஒரு யுவதி மலையுச்சி வராமல் பாதியில் மற்றவருக்காகக் காத்திருந்தாராம். அவர்களுடன் பேசிக்கொண்டே Base Camp வரை வந்து சேர்ந்தோம். எங்களிடம் அவர்களது எண்களைத் தந்து தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
Base Camp வந்து சேர்ந்ததும் மதிய உணவு தயாராக இருக்க மதிய உணவு உண்டோம். அங்கிருந்து எங்கள் வண்டி நின்ற பந்த்வாடி கிராமம் செல்ல மீண்டும் நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டும் என்று நினைக்கும்போதே கொஞ்சம் கால் வலித்தது. அதுவுமில்லாமல் அங்கேயிருந்து புறப்பட்டு இரவுக்குள் வீடு திரும்பினால் தான் அடுத்த நாளான திங்கள் அன்று எங்களால் அலுவலகத்திற்குத் திரும்ப முடியும். அதனால் எப்படியும் புறப்பட்டே ஆக வேண்டும். Base Camp-லிருந்து பந்த்வாடி கிராமம் வரை நடக்காமல், மண்பாதைகள் வழியே சில வண்டிகள் செல்லும் எனத் தெரிந்ததால் அவற்றில் செல்லலாம் என முடிவெடுத்தோம். நடந்து சென்றால் நான்கு கிலோமீட்டர் - சுமார் இரண்டரை மணி நேரம் எடுக்கலாம். ஆனால் மண் பாதையில் வண்டியில் பயணித்தால் சுமார் 15 கிலோ மீட்டர் - மலைகளில் சுற்றிச் சுற்றி இறங்க வேண்டும் - பத்து பேர் அமரக்கூடிய வாகனத்திற்கு 1500 ரூபாய் கட்டணம். ஒரு மணி நேரத்தில் பந்த்வாடி சென்று சேரலாம். இன்னும் சில இளைஞர்கள் எங்களுடன் வரச் சம்மதிக்க அப்படி ஒரு வாகனத்தில் பந்த்வாடி வரை வந்து சேர்ந்தோம். அங்கிருந்து எங்கள் வாகனத்தில் நண்பர் Bபிஷ்ட் அவர்களின் வீடு வரை தொடர் பயணம் - நடுவே இரவு உணவு உண்பதற்கு மட்டுமே வண்டியை நிறுத்தினோம்.
தொடர்ந்து பயணித்து எனது வீட்டிற்கு வந்து சேரும்போது இரவு பத்தரை மணி! கிடைத்த இரண்டு நாட்களில் - சனி மற்றும் ஞாயிறு - கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் சாலைப் பயணம் மற்றும் சுமார் 20 கிலோமீட்டர் மலையேற்றம்/இறக்கம் - சற்றே கடுமையான பயணம் தான் என்றாலும் கிடைத்த அனுபவங்கள் Once in a lifetime experience வகையைச் சேர்ந்தவை என்று சொல்லலாம். அந்த இனிமையான அனுபவங்களை நினைத்தபடியே உறக்கத்தினைத் தழுவினேன். தில்லி திரும்பிய பிறகு இரண்டு நாட்கள் கால் வலி இருந்தாலும் மலையேற்ற அனுபவங்களை நினைத்துக் கொள்ளும்போது வலி போன இடம் தெரியாமல் போனது! பயணத்தினை ஏற்பாடு செய்த நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களுக்கும் பயணத்தில் என்னுடன் இணைந்திருந்த நண்பர் இந்தர்ஜீத் சிங் மற்றும் ஹரிஷ் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை பயணத்தின் முடிவில் சொன்னாலும் இங்கேயும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். அதிலும் மலையேற்றத்துடன் வாகனத்தையும் செலுத்துவது என்பது எத்தனை கடினம் என்பதை உணர்ந்தே இருப்பதால் நண்பர் Bபிஷ்ட் அவர்களின் பங்கும் அவர் மீதான் எங்கள் அன்பும் அதிகம். அது சரி, இந்தப் பயணத்திற்கு எவ்வளவு செலவானது என்று தானே கேட்கிறீர்கள்? கிடைத்த அனுபவத்திற்கு ஈடாகாது இந்தச் செலவு - ஒருவருக்கு ஆன செலவு சற்றேறக்குறைய ரூபாய் 4500/- மட்டுமே!
ஜனவரி மாதத்தில் பாம்பின் சிகரம் நோக்கிய பயணம் என்றால் அடுத்த மாதமான ஃபிப்ரவரியில் உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் வேறு சில இடங்களுக்கு மலையேற்றம் செய்து வந்தோம். அந்த அனுபவங்கள் விரைவில் வெளியிடுகிறேன். அது வரை தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
26 ஃபிப்ரவரி 2025
அதற்குள் அடுத்த மலையும் ஏறிவிட்டீர்கள் என்று தெரிகிறது. சுவாரஸ்யம்தான். காணொளிகளில் அந்தப் பின்னணி மனதை அள்ளுகிறது.
பதிலளிநீக்குஅமிதாப் நடித்த அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்! பிரகாஷ்ராஜ்தான் வில்லன். படத்தின் பெயரே Bபுdட்டா ஹோஹா தேரே Bபாப்p தான். அமிதாப் ஸ்டைலாக இருப்பார்.
வெங்கட்ஜி படங்கள் அட்டகாசம்! கேமரா கொண்டு செல்லவில்லை இல்லையா? எல்லாமே மொபைல் வழி இல்லையா? மொபைல் கேமரா நல்லாருக்கு என்று தெரிகிறது.
பதிலளிநீக்குமலைகள் வாவ்!!!
கீதா
வழ வழ பேப்பர்ல வருமே ஃபோட்டோஸ் அபப்டி இருக்கு வண்ணங்களும் மலைகளும் அதுவும் அந்த மூன்றாவது புகைப்படம் இடையில் டார்க் டார்க்காக வருதே....அப்படியே ஏதோ கேமரால எடுத்தாப்ல வழ வழ பேப்பர்ல வருவது போல இருக்கு...
பதிலளிநீக்கு//என்ன பனி படர்ந்த மலைகள் மேலும் கீழுமாக இருக்கின்றன - அவ்வளவு தானே என்று சிலருக்குத் தோன்றலாம். //
ஆமாம் ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. நான் சொல்ல நினைத்தேன் நீங்க அடுத்தாப்ல சொல்லிவிட்டீர்கள்.
//ஆனால் ஒவ்வொரு சிகரத்திற்கும் உள்ளூரில் பெயர்கள் வைத்து இருக்கிறார்கள். சிகரங்களைப் பார்த்தே அவற்றின் பெயர் என்ன என்பதைச் சொல்லும் சில தேர்ச்சி பெற்றவர்கள் உண்டு - நண்பர் Bபிஷ்ட் போல. உதாரணத்திற்கு நாக்g tடிப்bபா மலைச்சிகரத்திலிருந்து நாம் பார்க்கும் சில சிகரங்கள் Bandarpoonch, Swargarohini, and Kedarnath ஆகியவை. பெயர்களே வித்தியாசமாக இருக்கின்றன அல்லவா? //
ஆமாம். பெயர்களே வித்தியாசம்தான்....ஒவ்வொரு சிகரத்திற்கும் ஒவ்வொரு பெயர் ...நண்பர் பிரேம் ஈசியா சொல்லிவிடுவார் எவ்வளவு அனுபவங்கள்! அவருக்கு இல்லையா?
கீதா