செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

கதம்பம் - மீட்டெடுத்த இணையம் - மாற்றங்கள் - இனிய சந்திப்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பாம்பின் சிகரம் - பயணத் தொடர் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


மீட்டெடுத்த இணையம் - 19 ஜனவரி 2025: 



அனைவருக்கும் வணக்கம்! விஞ்ஞான முன்னேற்றத்தால் எவ்வளவோ நன்மைகளும் பலன்களும் நமக்கு கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதேசமயம் தீமைகளும் உண்டு என்பதை நம்மால் மறக்க இயலாது! சரி! எதற்கு இன்று இந்த விளக்கம்??


பள்ளிப்பருவ நட்புகளை சில வருடங்களுக்கு முன்னால் இணையம் வழியே கண்டெடுத்து சந்தித்து வந்தேன்! தோழிகள் இருவரை தான் அன்று பார்க்க முடிந்தாலும் சீனியர்களையும் முக்கியமாக என் ஆசிரியர்கள் சிலரையும் பார்க்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி! அவர்களும் என்னை நினைவில் வைத்திருந்ததும் மகளிடம் என்னைப் பற்றி பெருமிதமாக பகிர்ந்து கொண்டதும் என் பாக்யம்!


கல்லூரி நட்புகளையும் இது போல் சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தது உண்டு! சில மாதங்களுக்கு முன் கல்லூரி நட்புகளுடன் வாட்ஸப் க்ரூப்பிலும் இணைந்து கொண்டேன்! அதைப் பற்றி இங்கும் பகிர்ந்து கொண்டது நினைவில் உள்ளது! 


எங்கள் துறையில் 60 மாணவர்களும் மூன்றே மாணவிகளும்! இயந்திரவியல் அல்லவா! சந்தர்ப்ப சூழலால் ஏற்றுக் கொண்ட துறை! பின்பு விருப்பத்துடன் படித்ததும் இயந்திரங்களில் ஆர்வத்துடன் பணியாற்றியதும், அரட்டை, கலாட்டா நட்புவட்டம் என பல அனுபவங்களை தந்த இடம்! 


வருடங்கள் அதிவேகமாக கடந்து சென்று விட்டன! ஆமாங்க! கல்லூரிப் படிப்பை முடித்து 25 வருடங்கள் ஆச்சாம்! எங்களில் பெரும்பாலானோர் பத்தாவது முடித்ததும் நேரடியாக பாலிடெக்னிக்கில் சேர்ந்தவர்கள் தான்! என்னையும் சேர்த்து! கல்லூரியில் சேர்ந்த போது எங்களின் வயது 15 முடித்த போது 18..!


வாழ்க்கையில் சந்தித்த  புதிர்களையும் சவால்களையும் கடந்து இன்று எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்! எல்லோரும் மீண்டும் சந்தித்துக் கொள்ளவும் எங்களின் பசுமையான  நினைவுகளையும் மீட்டெடுக்க வகுப்புத் தோழர்களின் பெரும் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது! 


நாங்கள் மூன்றே பெண்கள் தான் என்பதால் அவர்களால் எங்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது! ஆனால் எங்களுக்கோ நிச்சயம் இது ஒரு சவாலான விஷயம் தான்…:) ஒவ்வொருவர் உருவிலும் எத்தனை எத்தனை மாற்றங்கள்!! 


என் வாழ்க்கைப் பாதையில் நான் சந்தித்த அனுபவங்களால் என் தோழிகளை விட என்னால் தான் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லணும்! பார்க்கலாம்! எல்லாம் சரியாக இருந்தால் நிச்சயம் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்! நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும்!


*******


மாற்றங்கள் - 2 ஃபிப்ரவரி 2025: 



ஒவ்வொரு நாளும் இலக்குகளுடன் பரபரப்பாக கடந்து செல்கிறது! வார இறுதிக்களில் தான் சற்றே நேரம் கிடைக்க வாரம் ஒரு புத்தகம் என வாசிப்பைத் துவக்கலாமே என செயல்படுத்தி கொண்டிருக்கிறேன்! இந்த வாரம் அலமாரியிலிருந்து வாசிப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த புத்தகம் ஜெயகாந்தன் அவர்களின் 'இந்த நேரத்தில் இவள்'!


புத்தகத்தில் உள்ள கதை போல் இந்த புத்தகம் எங்கள் வீட்டு அலமாரியில் இருப்பதற்கும் ஒரு கதை இருக்கும் இல்லையா! சில வருடங்களுக்கு முன்பு வாசிப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக என்னவருக்கு  'சஹானா இதழ் சார்பாக ஆசிரியரான அன்புத்தோழி புவனா கோவிந்த் இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறார்!


வலைப்பூவில் முழு ஈடுபாட்டுடன் எழுதத் துவங்கிய நாட்களில் நண்பர்கள் ஒவ்வொருவரையும்  தொடர்பதிவு எழுத அழைப்பு விடுப்பதையும் அந்த சங்கிலி மாதக்கணக்கில் தொடர்வதுமாக இருக்கும்! பெயர்க்காரணம் பற்றிக் கூட தொடர்பதிவு எழுதிய நினைவு! அதுபோல் புத்தக வாசிப்பையும் கூட தொடரலாமே!


இனிய சந்திப்பு - 2 ஃபிப்ரவரி 2025


வலைப்பூ நண்பர்கள், முகநூல் நண்பர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள் என்று இத்தனை வருடங்களில் டெல்லியில் வசித்த போதும் சரி! திருவரங்க வாசத்திலும் சரி! அவ்வப்போது சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது! இன்று அதில் புதிய ஒரு பரிமாணமாக என்னுடன் சமஸ்கிருதம் பயிலும் தோழி ஒருவரை சந்தித்து வந்தேன்!


திருவனந்தபுரத்திலிருந்து ஒரு குடும்ப விழாவுக்காக திருவரங்கம் வந்திருந்தவரை நானும் மற்றொரு தோழியுமாக சென்று சந்தித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தோம்! இதுபோன்ற சந்திப்புகள் மனதுக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும்! 


இன்றைய நாள் இப்படியாக இனிமையுடன் கடந்து செல்கிறது!  மாலை நடைப்பயிற்சியில் வானில் கண்ட வர்ணஜாலங்களை கண்டு வியப்பில் ஆழ்ந்து நம் மனதுடன் அதை ஒப்பிட்டு பார்த்தேன்!


வானில் மட்டுமா மாற்றங்கள்!

நம் எண்ணங்களிலும் தான்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

4 ஃபிப்ரவரி 2025


5 கருத்துகள்:

  1. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் எங்கள் பாலிடெக்னிக் நண்பர்கள் சந்தித்து கொண்டாடிய நிகழ்வை நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. கதம்பம் அருமை, முகநூலில் படித்து விட்டேன்.
    நடைபயிற்சியின் போது எடுத்த படங்கள் அருமை. அதில் பிறந்த சிந்தனை துளி அருமை.

    பதிலளிநீக்கு
  3. இப்படியான சந்திப்புகள் மகிழ்வைத் தரும். உங்கள் சந்திப்புகள் இனிமையானவை.

    என் பள்ளித் தோழிகளும் குழு வைச்சிருக்காங்க. ஆனால் நான் அதில் இல்லை. ஒரு தோழி என்னுடன் கல்லூரி வரை படித்தவர் மட்டும் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது எப்போதேனும் தொடர்பில். எல்லோருமே பெரிய லெவலில்....சிறப்பான பணியிலும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் ஆதி, வானில் வர்ணங்கள் மாறிமாறி வருவது போல நம் மனது வளர வளர, பக்குவப்பட்டு வருகையில் எண்ணங்களும் அதற்கேற்ப மாறு,

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பள்ளி, கல்லூரி பழைய நட்புக்களை நீங்கள் சந்திப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. புத்தக வாசிப்பும் ஒரு சிறந்த மனமாற்றம்.

    தற்சமயம் தங்களுடன் சமஸ்கிருதம் பயிலும் தோழியையும் கண்டு பேசி மகிழ்ந்ததும் சிறப்பு.

    படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. தங்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் கண்டிப்பாக வாழ்வில் புதிய உற்சாகத்தை தரும். மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....