அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினெட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
2023-ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசியில் ஒன்பது நாட்களுக்கும் மேலாக வாரணாசியில் தங்கியிருந்த பிறகு வேறு பயணங்கள் - அதாவது சுற்றுலா நிமித்தம் எங்கேயும் செல்லவில்லை. கடந்த வருடம் முழுவதுமே தில்லி - திருச்சி பயணங்களே அதிகமாக இருந்தது - சூழலும் சரியாக இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணங்கள் செய்ய இயலவில்லை. இது ஒரு குறையாகவே எனக்கு இருந்தது. வாழ்நாளில் செய்ய வேண்டியது என்றால் பயணம் செய்ய வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு யோசனைகள் இருப்பதில்லை. இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் இங்கே பயணிக்க வேண்டும், அங்கே பயணிக்க வேண்டும் என்றே யோசிப்பது எனக்கு கைவந்த கலையாக இருக்கிறது! சிலருக்கு நான் இப்படி பயணிப்பது பொறாமையாக இருக்க, சிலர் என்னை கேலியும் செய்யக் கூடும்! ஒரு சிலர் பயணக் காதலன் என்றும் அழைக்கிறார்கள். எது எப்படியோ, நமக்குப் பிடித்த விஷயத்தினை, அடுத்தவருக்கு தொல்லை தராத விஷயத்தினை செய்வதில் தவறென்ன!
இப்படி இருக்கையில், இந்த வருடத்தின் ஜனவரி மாத கடைசியில் வார இறுதியின் இரண்டு நாட்கள் பயணம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்க அதனை இரண்டு கைகளாலும் வரவேற்று இறுகப் பிடித்துக் கொண்டேன். அலுவலக நண்பர் ஒருவரின் மகளுக்கு உத்திராகண்ட் மாநிலத்தில் திருமணம் என அழைப்பு விடுத்திருந்தார். கல்யாணம் நடக்கும் இடம் ஒரு ஆலயம்! சுலபமாக அங்கே சென்று விடலாம் என்று நினைத்தால் - இல்லை இல்லை சுலபம் என்று சொல்லி விட இயலாது - மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்ன போது - ஆஹா, நல்ல வாய்ப்பாயிற்றே என்று நினைத்தேன். ஆனாலும் அங்கே தனியாக செல்ல மனது வரவில்லை. நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களும் திருமண வீட்டினரின் நண்பர். இன்னும் சில நண்பர்களும் திட்டமிட்டு திருமணத்திற்குச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். ஐந்து பேர் போகலாம் என முடிவு செய்து பயணத்திற்கான திட்டத்தினை முன்னெடுக்க நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களைக் கேட்டுக் கொண்டோம். நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்கள் எனது இந்த வலைப்பூவினை வாசிக்கும் நண்பர்களுக்கு அறிமுகம் ஆனவர் தான். அவரது மலையேற்றம் குறித்த பதிவுகளை, அவரது அனுபவங்களை இங்கே முன்னரே பதிவு செய்திருக்கிறேன்.
ஜனவரி மாதம் 25 மற்றும் 26-ஆம் நாள் - மொத்தம் இரண்டு நாட்கள் மட்டுமே - சனி மற்றும் ஞாயிறு - விடுமுறை நாட்கள் என்பதால் பயணத்திற்கு என விடுமுறை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. திட்டங்களை Bபிஷ்ட் அவர்கள் செய்ய ஆரம்பிக்க, பயணிக்க வேண்டியவர்களில் ஒருவர் தனிப்பட்ட காரணங்களால் பயணத்தில் உடன் வர இயலாது என்று சொன்னார். சரி நால்வர் செல்வோம் என தொடர்ந்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். திருமணம் எங்கே நடக்கப்போகிறது என்றால் உத்த்ராகண்ட் மாநிலத்தின் மசூரியைத் தாண்டி மலையேற்றம் செய்து போக வேண்டிய ஒரு ஆலயம். உத்திராகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பகுதியில் இருக்கும் உயரமான மலைச்சிகரம் ஆன நாக்G டிBப்Bபா - Nag Tibba - ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Serpent’s Peak - அதாவது பாம்பின் சிகரம்! - பதிவுத் தொடரின் தலைப்பு வந்து விட்டதா? ஹாஹா…
வெள்ளி (24-01-2025) மாலை அன்றே பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் - ஒரு டார்ச் விளக்கு, குளிருக்குத் தேவையான உடைகள், மலையேற்றத்திற்குத் தேவையான சரியான காலணி, காலுறைகள், அலைபேசிக்கான சார்ஜர் என அனைத்தும் எடுத்துக் கொண்டு தயாராக இருந்தேன். இரவு உணவை முடித்துக் கொண்டு பாத்திரங்களையும் துலக்கி, காலை எழுந்து குளித்து தயாராகி வீட்டை விட்டு புறப்பட்டால் போதுமானது என்ற நிலையில் தயாராக இருந்தேன். என்ன தான் முன்னேற்பாடுகளுடன் இருந்தாலும், வீட்டினை விட்டு புறப்பட்ட பிறகே கையுறைகளை எடுக்காமல் விட்டது நினைவுக்கு வந்தது - அது எந்த அளவிற்குத் தேவையாக இருந்தது என்பதையும் சொல்கிறேன் - பனியுறைந்த பகுதிகளில் கைகளில் கையுறைகள் இல்லாமல் விரைத்துப் போனது! நல்ல வேளையாக நண்பரிடம் இருந்த கையுறைகளில் ஒன்றை அவரும் மற்றொன்றை நானும் போட்டுக் கொண்டு ஒரு கையை பாக்கெட்டுகளில் விட்டுக்கொண்டோம்!
அதிகாலை 02.45 மணிக்கே அலாரம் வைத்து எழுந்து Geyser ஆன் செய்து காலை வேலைகளைத் தொடங்கினேன். சரியாக நான்கு மணிக்கு ஊபர் செயலி மூலம் வண்டி தேவை என முன்பதிவு செய்திருந்தேன். அதற்குள் வேலைகளை முடித்துக் கொண்டு, வீட்டின் அருகே இருக்கும் மந்திர் மார்க் சாலையில் காத்திருந்த வாகனத்தில் அமர்ந்து கொண்டு நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் வசிக்கும் நோய்டா பகுதிக்கு புறப்பட்டேன். அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டிய வழியை முன்னரே அவர் அனுப்பி இருந்ததால் எந்த வித தடங்கலுமின்றி அரை மணி நேரத்தில் சென்றடைந்தேன். நண்பர் வீட்டின் வாசலில் இருந்த அவரது Maruti Brezza வாகனத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்தப் பயணத்தில் எங்களுடன் வர இருந்த மற்ற இரண்டு நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அனுப்பிய Live Location மூலம் பார்க்க அவர்களும் நண்பரின் வீட்டினருகே வந்து கொண்டிருந்தார்கள். காலை ஐந்து மணிக்குள் நண்பரது வீட்டிலிருந்து புறப்பட வேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது.
மற்ற இரண்டு நண்பர்களும் சரியான நேரத்தில் வந்து சேர, புறப்படத் திட்டமிட்டிருந்த ஐந்து மணிக்கு முன்னதாகவே - 04.50 மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. நண்பர் ப்ரேம் வாகனத்தினைச் செலுத்த மற்ற மூவரும் உள்ளே அமர்ந்து பயணத்தினை ரசிக்கத் தொடங்கினோம். இந்தப் பயணம் மலையேற்றப் பயணம் என்பதால் அதற்கான Adjustable Hiking Stick தேவையாக இருந்தது. நண்பர் ப்ரேம் அப்படியான இரண்டு Stick கொண்டு வர மற்றொரு நண்பர் இந்தர் இரண்டு Stick கொண்டு வந்தார். எல்லோருடைய உடைமைகளையும் வண்டியின் பின்பக்கம் வைத்து விட்டு, அவரவருக்குத் தேவையான தண்ணீர் குப்பிகளை மட்டும் வாகனத்தின் கதவுகளில் அதற்கான இடத்தில் வைத்துக் கொண்டோம். நண்பர் ப்ரேம் அவர்கள் பல வருடங்களாக வாகனம் ஓட்டி பழக்கம் கொண்டவர். மலையேற்றத்திலும் அவருக்கு கிட்டத்தட்ட 25 வருட அனுபவம் உண்டு. அப்படியான அனுபவசாலியுடன் இப்படி ஒரு பயணம் மேற்கொள்வது எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் உற்சாகத்தினை அளித்தது.
எங்கள் பயணம் எப்படி இருந்தது, பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை தொடர்ந்து பதிவுகளில் எழுதுகிறேன். அடுத்த பகுதியில் இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் சொல்கிறேன். இப்போதைக்கு பயணத்தில் எடுத்த சில படங்கள் ஒரு முன்மாதிரியாக இங்கே இணைத்திருக்கிறேன். முழு பயண விவரங்களும் தொடர்ந்து எழுதுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
3 ஃபிப்ரவரி 2025
படங்கள் AI தயாரித்த படங்கள் போல இருக்கிறது. கண்மயக்கம்!
பதிலளிநீக்குஎன்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று நண்பர் ப்ரேமையும் ஆலோசித்து முன்னதாக சார்ட் போட்டுக் கொண்டிருந்தால் கையுறை மிஸ் ஆகி இருக்காது!!
தொடர்கிறேன்.
வாசகம் அருமை, பயண்ங்கள் தொடருட்டும். உத்திராகண்ட் மாநிலத்தில் திருமணம் , மற்றும் மலையேற்றம் அடிக்கடி செய்யும் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் மற்றும் நண்பர்களுடன் பயணம் அருமையாக அமைந்து இருக்கும்.
பதிலளிநீக்குதொடர்கிறேன். எவ்வளவு தான் முன்னேற்பாடாக எல்லாம் எடுத்து வைத்து கொண்டாலும் மறந்து விடுவோம். என் கணவர் கொண்டு போவதை எழுதி வைத்து கொள்வார்கள், அதை சரிப்பார்த்து பெட்டியில் எடுத்து வைப்பார்கள்.