சனி, 1 மார்ச், 2025

காஃபி வித் கிட்டு - 216 - கும்பமேளா - குச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும் - Zero Discrimination Day - முதுமை - நிம்மதி - காலணி - முனுசாமி தாத்தா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் செய்தி/தகவல் :  பழமையான பைக்கில் பிரயாக்ராஜ்


பயணம் என்றாலே சிலருக்கு அலர்ஜி. ஒரு சிலருக்கு அது எனர்ஜி பூஸ்டர்.  கர்நாடகத்தினைச் சேர்ந்த தந்தை-மகனுக்கு இரண்டாம் வகை.  உடுப்பியிலிருந்து பிரயாக்ராஜ் வரை 25 வருட பழைய பைக்கில் பயணித்து கும்பமேளாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். தகவலிலிருந்து சில வரிகள் கீழே…


உடுப்பியை சேர்ந்த தந்தையும், மகனும் 25 ஆண்டுகள் பழமையான 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் மஹா கும்பமேளாவுக்கு சென்று வந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், ஜன., 26 முதல் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் புனித நீராட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதுவரை 55 கோடி பேர் இங்கு புனித நீராடி உள்ளதாக கூறப்படுகிறது.


கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், கபுவின் கட்டபடியை சேர்ந்தவர் ராஜேந்திர ஷெனாய், 52. இவரது மகன் பிரஜ்வல் ஷெனாய், 25. இருவரும் தங்களின் 25 ஆண்டு பழமையான ஹீரோ ஹோண்டா பைக்கில், பிரயாக்ராஜ் செல்ல திட்டமிட்டனர்.


கடந்த 6ம் தேதி அதிகாலை, வீட்டில் இருந்து புறப்பட்ட தந்தையும், மகனும், எல்லாபூர், ஹூப்பள்ளி, விஜயபுரா, சோலாபூர், லத்துார், நந்தன், நாக்பூர், ஜபல்பூர் வழியாக 3,000 கி.மீ., பயணித்து, பிப்., 10ல் பிரயாக்ராஜ் சென்றடைந்தனர்.


மேலும் படிக்க விருப்பமிருப்பின், கீழே உள்ள சுட்டி வழி முழு தகவலும் படிக்கலாம்…


25 ஆண்டுகள் பழமையான பைக்கில் பிரயாக்ராஜ் சென்று வந்த தந்தை - மகன்


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : குச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும்


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - குச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


இன்று சனிக்கிழமை என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை. நேற்றிரவு பெய்த திடீர் மழை காரணமாக இன்று காலையில் குளிர் சற்றே அதிகமாக இருந்ததாலும் ரஜாய்/போர்வைக்குள்ளிருந்து வெளியே வர பிடிக்கவில்லை. 09.00 மணி வரை அப்படியே படுத்துக் கிடந்தேன். பிறகு மெல்ல எழுந்து, தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கி ஆதித்யா சேனல் வைத்தேன். அது தன் பாட்டுக்கு ஒரு பக்கத்தில் அதன் வேலையை செய்து கொண்டிருக்க, நான் எனது காலை வேலைகளை முடித்தேன்.  அப்போது ”பட்டை கோவிந்தன்” என்ற பெயர் காதுகளில் நுழைய சற்றே கவனித்தேன்.


பாஸ்கி, ‘பட்டை கோவிந்தன்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்துடன் கலக்கலாக பேசிக் கொண்டிருந்தார்.  கொஞ்சம் கவனித்துக் கேட்டபோது எனக்கே ஒரு காக்டெயில் அருந்திய உணர்வு. அந்த காக்டெயில் எனது சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது பார்த்த காட்சி ஒன்றை நினைவுக்குக் கொண்டு வந்தது.


திருவரங்கம் என்றதும் நினைவுக்கு வருவது ஒன்றாம் நம்பர் பேருந்து தான். திருச்சியில் சாலைகளில் பயணிக்கும் போது நிச்சயம் பல ஒன்றாம் நம்பர் பேருந்துகளை நீங்கள் பார்த்து விட முடியும். இரவு பகல் என்றில்லாமல் எப்போதும் பேருந்து வசதி உண்டு. திருவரங்கத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையம் வரை செல்லும் இந்தப் பேருந்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் தகவல் : Zero Discrimination Day


ஒவ்வொரு வருடமும் மார்ச் ஒன்றாம் தேதியை United Nations சார்பாக Zero Discrimination Day என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.  சக மனிதர்களுக்குள் வேற்றுமை பார்க்கக்கூடாது என்று சொன்னாலும் பல விதங்களில் - முக்கியமாக பணத்தினால் பிரிந்தே இருக்கிறது இந்தச் சமூகம்.  We Stand Together என்பதே இந்த வருடத்தின் Theme. மேலதிகத் தகவல்கள் தேவையெனில் இங்கே பார்க்கலாம். இதெல்லாம் கதைக்கு உதவாத கொண்டாட்டங்கள் என்றே தோன்றுகிறது.  உங்கள் எண்ணங்கள் என்ன? சொல்லுங்களேன்!


******


இந்த வாரத்தின் நிழற்படம் : முதுமை



பொதுவாகவே படத்திலுள்ள மூதாட்டி போன்றவர்களிடம் பேரம் பேசுவதில்லை. நீங்கள் எப்படி?  படம் உங்களுக்கு என்ன விதமான எண்ணங்களைத் தோன்றுவித்தது? சொல்லுங்களேன்.


******


இந்த வாரத்தின் பகிர்வு :  நிம்மதி


படித்ததில் பிடித்த ஒரு ஜென் கதை…


நிம்மதியான வாழ்க்கை வாழ்வது எப்படி? 



முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்" என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.


மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். "ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள்.


மூத்த சீடர். "குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.


எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.


மூத்த சீடர் வந்ததும், "வந்து விட்டாயா...


எங்கே நாவல்பழம்?" என்றார்.


அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.


ஒரு சீடர் குருவிடம், “குருவே.. தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?” என்றார்.


குரு சிரித்தபடி, "என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!" என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.


இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, "ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?” என்று கேட்டார்.


குரு சிரித்தபடி, “இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார். 😊


அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!


******


இந்த வாரத்தின் ரசித்த காணொளி :  காலணி


இந்த வாரத்தின் மனதைத் தொட்ட காணொளியாக உங்களுடன் பகிர்வது - தன் மகளுக்கு ஒரு காலணி வாங்கித் தருவதற்காக அப்பா செய்யும் தியாகம்…  பாருங்களேன் - நிச்சயம் உங்கள் மனதையும் தொடும் என்பதில் சந்தேகமில்லை….


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை :  முனுசாமி தாத்தா…


நாகப்பட்டினம் கு. இராமர் என்பவர் சொல்வனம் தளத்தில் பகிர்ந்து கொண்ட கவிதை ஒன்று இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக…  இப்படியெல்லாம் நடந்தால் நல்லதே! 



பீடி கையோடு

சுற்றித் திரியும்

தாத்தா

பேரன் உடனிருந்தும்

பீடியையே

பற்ற வைப்பார்

தொற்றிக்கொள்ளும் புகை

நோயை உருவாக்கும் என தாத்தாவிடம்

பலர் போதித்தும் பலனேயில்லை

மாரியாத்தா கோயிலிலே

பால் குடம் எடுக்கையில

சாமியாடி வந்து

சேதி சொன்னா மாரியாத்தா

பேரன்யிருக்கையில

பீடி நெடி வந்துச்சுன்னா

நோய்க்கொண்டு

போகும்முன்னே

பேரன நான் கொண்டுபோவேன்னு

சக்தியுள்ள தெய்வம்

நம்ம குலத்தைக் காக்கும்

மாரியத்தா

கும்புடுக்கோன்னு

முப்பாட்டன் பேச்சைக்

கேட்டு வாழ்ற

முனுசாமி பாட்டன்

பீடிய விட்டொழிஞ்சு

வெகு நாட்களாயிடுச்சு

நினைச்சத சாதிச்சிட்டோம்ன்னும்

ராவெல்லாம் இருமல்

சத்தம் இல்லேன்னும்

நிம்மதியா தூங்குறா

பொய்சொல்லி சாமியாடிய

கங்கம்மாப் பாட்டி

 

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

1 மார்ச் 2025


4 கருத்துகள்:

  1. எங்கள் பிளாக் வியாழன், மற்றும் சனி செய்திகளுக்காக செய்திகளை தினசரி அலசுவேன். இந்த முதல் செய்தி நானும் படித்தேன்.

    பட்டை கோவிந்தன் பதிவு ஏற்கெனவே படித்திருக்கிறேன் என்பது அங்கபிஉ சென்றதும் தெரிந்தது.

    சாலையோரக் கடை வைத்திருக்கும் எவரிடமும் நான் பேரம் பேசுவதில்லை!

    ஜென் கதைகளில் நீதியை கதைவசனத்தை நாமே எழுதிக் கொள்ள வேண்டியதுதான்!

    காணொளி - நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. முதல் செய்தி வாசித்திருக்கிறேன். சுவாரசியமான அனுபவமாக இருந்திருக்கும். செம இல்லை?

    ஆஹா பட்டை கோவிந்து குச்சித்தாத்தா வாசித்து சிரித்த நினைவு வருகிறது!! இருங்க போய் ஒன்னு பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். நான் நினைத்தது சரியான்னு ஒரு செக்கிங்க்!!! நான் அப்பப்ப இப்படி நினைவுத்திறன் செக் செய்து கொள்வதுண்டு! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பகோ கு தா - இப்பவும் சிரித்தேன்!!

    Zero Discrimination Day - Noted. அங்கு சென்று பார்க்கிறேன். ஜி

    ஆமாம் இப்படியான விற்பனையாளர்களிடம் அதாவது ப்ளாட்ஃபார்ம் வியாபாரிகளிடம் பேரம் பேசுவது கிடையாது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மூதாட்டியின் படத்திற்குத் தோன்றியது - உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

    ஜென் கதை நன்று.

    காணொளி ரொம்பவே நெகிழ்ச்சி. எடுத்த விதம் அருமை.

    கவிதை மிகவும் ரசித்தேன். உளவியல் ரீதியான கவிதை!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....