புதன், 5 மார்ச், 2025

dhதாரி தேவி மந்திர் - மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காரிகர் காதா - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




அலக்நந்தா நதிக்கரையில் நான்...
பின்புலத்தில் dhதாரி தேவி ஆலயம்...


அலக்நந்தா நதிக்கரையில் dhதாரி தேவி ஆலயம்...

அன்பின் நண்பர்களுக்கு மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் என்ற தலைப்பில் இந்த திங்கள் அன்று தொடங்கிய பயணத் தொடர் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம்.  தொடரின் முதலாம் பகுதியினை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்றால் இங்கே சென்று படிக்கலாம்.  இந்தத் தொடரில் மிகவும் ஸ்வாரசியமான விஷயங்களை நாங்கள் கண்டதோடு, பலவித அனுபவங்களையும் பெற்றோம். அவற்றையெல்லாம் தொடர்ந்து இங்கே எழுத இருக்கிறேன்.  முதலாவது பதிவில் தலைநகர் தில்லியிலிருந்து புறப்பட்டு தொடர்ந்து பயணித்து காலை உணவை சாப்பிட்டது வரை பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இந்தப் பகுதியில் இந்தப் பயணத்தில் முதன் முதலாக நாங்கள் சென்ற ஒரு ஆலயம் குறித்த தகவல்களையும் அங்கே கிடைத்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  நாங்கள் சென்ற ஆலயத்தின் பெயர் dhதாரி தேவி ஆலயம். பெயரைப் படிக்கும்போதே கம்பீரமாக இருக்கிறது அல்லவா? தேவியும் கம்பீரமானவள் தான்.  இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரியமானவளும் பிடித்தமானவளும் கூட.  




அலக்நந்தா நதி...
தண்ணீர் தேக்கி வைத்திருக்கிறார்கள்...



பறவைப் பார்வையில் dhதாரி தேவி ஆலயம்...

dhதாரி தேவி குறித்த நிறைய நம்பிக்கைகள் இந்தப் பகுதியில் நிலவுகிறது.  dhதாரி தேவி காளியின் ஸ்வரூபம் என்றும் இந்த ஆலயத்தில் இருக்கும் தேவியின் சிலை ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளும் விதம் விதமாக தோற்றமளிப்பவள் என்றும் இங்கே சொல்கிறார்கள்.  இங்கே இருக்கும் dhதாரி தேவியின் சிலை முகம் மட்டுமே கொண்டது. காலை வேளையில் தேவியின் முகம் சிறுமியாகவும், மதியத்தில் ஒரு பெண்மணியைப் போலவும், மாலை வேளையில் மூதாட்டியாகவும் தோன்றுவாள் என்று இங்கே சொல்கிறார்கள்.  அலக்நந்தா நதியின் கரையில் எழுந்தருளியிருக்கும் தேவி இந்தப் பகுதியில் இருக்கும் chசார் dhதாம் என அழைக்கப்படும் நான்கு ஆலயங்கள் மட்டுமல்லாது இந்தப் பிரதேசம் முழுவதையும் காக்கும் தேவியாக இருக்கிறார்.  அலக்நந்தா நதியில் மின்சாரம் தயாரிப்பதற்கென அணை கட்டிய போது இங்கே ஆலயத்தினை தூண்கள் மீது மாற்றி எழுப்பியதால் தேவியின் கோபத்திற்கு ஆளாகி பெரிய இயற்கை விபத்து உண்டானது - 2013 கேதார்நாத் மேக வெடிப்பு - யாரால் மறக்க முடியும் அந்த இயற்கைச் சீரழிவை - என்பது இங்கே உள்ள மக்களின் நம்பிக்கை.  இயற்கையை எதிர்த்து நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. எத்தனை எத்தனை இயற்கையை சிதைக்கிறோமோ அத்தனை தூரம் இழப்பு நமக்கு தான் என்பதும் எனது நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.



ஆலயமணி - ஒரு வரிசையில்...


நதியின் நடுவே மணல்திட்டுகள்...

இந்த ஆலயத்தில் முகம் மட்டுமே காண முடியும் என்று சொல்கிறபோது, தேவியின் மற்றபாகத்தினை எப்படிக் காண்பது என்கிற கேள்வி உங்களுக்குள் எழ வாய்ப்பிருக்கிறது அல்லவா?  அதற்கான பதில் - ருத்ரப்ரயாக் பகுதியில் இருக்கும் காளிமட் எனும் இடத்தில் தேவியின் கீழ்பாகம் இருக்கிறது.  இங்கேயிருந்துதான் இந்த உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் உருவாகின்றன என்பதும் இங்கே சொல்லப்படும் தகவல்.  இங்கே காணப்படும் தேவி, காளியின் ரூபம் என்றாலும், ”மா கல்யாணி” அல்லது ”கல்யாணேஸ்வரி” என்று அழைக்கிறார்கள் என்பதோடு இந்தப் பெயர்களை வைத்தது சாக்ஷாத்  சிவபெருமானே என்பதும் இங்கே ஒரு நம்பிக்கை.  இங்கே எப்படி dhதாரி தேவிக்கு ஆலயம் அமைந்தது என்பதற்கும் சில கதைகள் இருக்கின்றன.  அப்படியான ஒரு கதையை மட்டும் இங்கே பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.  இப்படியான கதைகள் நம்பிக்கை சார்ந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.  ஒரு விதத்தில் இங்கே நிலவும் பல கதைகள் நம்பிக்கை சார்ந்தவையே…  நம்பிக்கை இருந்தால் கல்லும் கடவுளே… இல்லை என்றால் கல் மட்டுமே! அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. 



dhதாரி தேவி ஆலயம்...
எத்தனை முறை பகிர்ந்தாலும் பார்க்கலாம்...


நதிக்கரையில் நானும் நண்பர்களும்...
(இடமிருந்து வலமாக - இந்தர்ஜீத் சிங், சச்சின், ப்ரேம் Bபிஷ்ட் மற்றும் நான்)

தேவி உக்கிர ரூபம் கொண்டு ரக்த்பீஜன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை அழித்த போது அவளது உக்கிரத்தினை கண்டு அனைவருக்கும் பயம் உண்டாகிறது - அவளை சாந்தமாக்குவது என்பது யாராலும் முடியாத காரியமாக இருந்தது.  தீமைகளை ஒழித்து விட்டாலும் அவளது கோபம் அடங்காமல் இருக்க, சிவபெருமானே அதற்கு ஒரு வழி தேடவேண்டியிருந்தது.  சிவபெருமான் பூமியில் நெடுஞ்சாண்கிடையாக படுத்துக் கொள்ள கோபஸ்வரூபத்தில் நடந்து கொண்டிருந்த தேவி தெரியாமல் சிவபெருமானின் வயிற்றில் கால் வைத்துவிடுகிறார்.  தான் தனது கணவன் மீதே கால் வைத்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் நாக்கு வெளியே வர, மற்ற தேவதேவியர்களிடம் தனது உடலை தனித்தனியாக, இரு பாகங்களாகப் பிரிக்கும்படி கட்டளை இடுகிறார்.  உக்கிர ரூபத்திலிருந்து சாந்த ரூபியாக மாறுகிறார்.  அப்படி சாந்தி ரூபம் கொண்ட இடம் தான் தலைப்பகுதி வைக்கப்பட்டு இருக்கும் இந்த   dhதாரோ என்ற பெயர் கொண்ட இடம்.  அதனால் தேவியின் பெயர்  dhதாரி தேவி.  



சாலையோரத்தின் ஆலய நுழைவாயில்...
தென்னிந்திய பாணியில்...


பூஜைக்கான பொருட்கள்...

சாலையோரத்திலேயே இந்த ஆலயத்தின் நுழைவாயில் இருக்கிறது.  பக்கத்திலேயே சிறு சிறு கடைகள் மற்றும் வாகன நிறுத்தங்கள், அவை கூடவே இருக்கும் கடைகளில் பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொண்டால் வாகனம் நிறுத்துவதற்குக் கட்டணம் இல்லை! நாங்களும் அப்படியே 100 ரூபாய் கொடுத்து ஒரு பையில் போடப்பட்டிருந்த பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொண்டோம்.  நுழைவாயில் நமது ஊர் கோபுரம் போலவே இருக்கிறது - ஆனால் அதில் பூசப்பட்டிருக்கும் வண்ணம் அத்தனை பிரகாசமாக இல்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.  நுழைவாயில் வழி நுழைந்து கீழே நோக்கிச் செல்லும் பாதைகளில் நடந்தால் நம் கண்களுக்கு, அலக்நந்தா நதியின் உள்ளே தூண்களில் தூக்கி நிறுத்தப்பட்ட அழகான ஆலயம் காட்சியளிக்கிறது.  பார்க்கும்போது ஒரு வித பரவசம் நம்மை ஆட்கொள்கிறது.  நடந்தபடியே சில படங்களும் ஒன்றிரண்டு காணொளிகளும் எடுத்துக் கொண்டோம்.  பாதையோரத்தில் உள்ளூர் வழக்கப்படி, அவர்களுக்குக் காசு கொடுத்தால் மேளம் கொட்டி நம் பெயரைச் சொல்லி இறைவியிடம் நம்மை கவனித்துக் கொள்ளும்படிச் சொல்லும் நபர்கள், பூக்கள் வாங்கிக் கொள்ளச் சொல்லும் வியாபாரிகள், பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொள்ளச் சொல்லும் நபர்கள், விதம் விதமான பொருட்களை விற்கும் கடைகள் என நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கிறார்கள். 



அலக்நந்தா நதியின் குறுக்கே ஒரு நடை பாலம்... 
உள்ளூர் மொழியில் சொல்வதென்றால் ஜூலா!


ஒரு சிறு காணொளி...


dhதாரி தேவி - படம் இணையத்திலிருந்து...

ஆலயத்தின் உள்ளே நுழைந்து பெரிய பாறையில் அமைந்திருக்கும் dhதாரி தேவியின் அழகிய முக ரூபத்தினைக் காண்கிறோம்.  அலங்காரம் செய்யப்பட்ட தேவி நம்மை கருணை முகம் கொண்டு காண்பதைப் போல ஒரு உணர்வு மனதுக்குள்.  ஒரு சில நிமிடங்கள் அங்கே கீழே அமர்ந்து மனதுக்குள் ஒரு சிறு தியானம் - எல்லோரையும் நல்லபடியாக வை தாயே! - இதைத்தவிர வேறு என்ன வேண்டுதல் செய்யத் தேவை?  நமக்கு என்ன தேவை என்பதை அவள் அறியாதவளா என்ன? ஆலயத்திலிருந்து வெளியே வந்தபிறகு சுற்றுப் பிரகாரத்திலும் சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  பிறகு மனதில் தேவியை நினைத்தபடி அங்கிருந்து வெளியே வந்தோம்.  காலணிகள் வைத்த இடத்திலிருந்து காலணிகளை எடுத்து அணிந்து கொண்டு மீண்டும் வந்த வழியே நடை.  ஒரு இடத்தில் கீழே நதிக்கரைக்குச் செல்லும் பாதை இருக்க, அந்த வழி அலக்நந்தா நதியின் அழகை கிட்டத்தில் ரசிக்கவும், சில பல படங்களை எடுத்துக் கொள்ளவும் சென்று சேர்ந்தோம்.  எத்தனை தெளிவான நீர் இந்த அலக்நந்தா நதியில்.  பலப்பல தோரணைகளில் படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மத்தியில் நாங்களும் சென்று படங்களை எடுத்து மகிழ்ந்தோம்.  நதிக்கரை, நதி, மலை, கடல் என இயற்கையின் பேரெழிலைக் காணும்போதெல்லாம் மனதில் ஒரு வித உற்சாக ஊற்று பீறிட்டுக் கிளம்புவது வழக்கம் தானே! எங்களுக்குள்ளும் அப்படி ஒரு உற்சாக ஊற்று!



பைரவருக்கான சிறு ஆலயம்...


எலுமிச்சை சாறு...


மற்றுமொரு சிறு காணொளி - உங்களின் பார்வைக்கு...


அந்த இடத்திலிருந்து மனதில்லாமல் விலகி நடக்க ஆரம்பித்தால், அதே பாதையில் சிறிது தொலைவில் எல்லா தேவி ஆலயங்கள் போல இங்கேயும் பைரவருக்கும் ஒரு ஆலயம் இருக்கிறது.  சிறு ஆலயம் தான் என்றாலும் அங்கே சென்று வந்தால் தான் தேவி ஆலயத்திற்குச் சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  நாங்களும் பைரவரைக் கண்டு கொண்டு வந்தோம்.  அப்படியே நடந்து வெளியே வந்து மீண்டும் நடக்கத் தொடங்கினோம்.  நடைபாதைக் கடைகளை பார்த்தபடியே வெளியே வந்து கோபுர வாயிலைக் கடக்க சில மூதாட்டிகள் கையேந்தியபடி நம்மை கவனிக்கிறார்கள், சிலர் கேட்கவும் கேட்கிறார்கள்.  இறைவன் இவர்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கையை விதித்திருப்பதற்கும் காரணம் இருக்கும் என்று யோசித்தபடி அவர்களைக் கடக்கிறோம்.  அங்கிருந்து எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து வாகனத்தில் அமர்ந்து அங்கிருந்து புறப்பட்டு அருகிலேயே இருந்த ஒரு சிறு உணவகத்தில் வாகனத்தினை நிறுத்தி அங்கே பஹாடி நிம்பு என அழைக்கப்படும் சற்றே பெரிய எலுமிச்சையின் பழச் சாறு அருந்தி அங்கே சில நிமிடங்கள் செலவழித்தோம்.  அங்கிருந்த சில நிமிடங்களில் அடுத்து எங்கே வாகனத்தினை நிறுத்தலாம் என்ற விஷயங்களை பேசிக்கொண்டு புறப்பட்டோம்.  தொடர்ந்து பயணத்தில் சந்தித்த விஷயங்கள், நாங்கள் சென்று சேர்ந்த இடம் போன்ற தகவல்களை வரும் பகுதியில் தெரிவிக்கிறேன்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

5 மார்ச் 2025



25 கருத்துகள்:

  1. அலக்நந்தா என்கிற வித்தியாசமான பெயர் எப்படி வந்தது?  கூகுளில் தேடிப் பார்க்க வேண்டும்!  வடநாட்டு நதிகள் மட்டும் காய்வதேயில்லை.  நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவைகளுக்கு ஆதாரம் பனி சூழ்ந்த மலைகள். நமக்கும் பொதிகை மலையிலிருந்து, குடகு மலையிலிருந்து வரும் தாமிரவருணி, காவிரி உண்டே

      நீக்கு
    2. பெரும்பாலும் கோடைக்காலத்தில் பனி உருகியும், மழைக்காலங்களில் மலைகளிலிருந்து வரும் மழைநீரும் தொடர்ந்து கிடைக்கிறது என்பதால் இங்கே இருக்கும் நதிகளில் பெரும்பாலும் நீர் வரத்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.

      பெயர் காரணம் - தேடிப்பார்க்க வேண்டும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. ஆமாம் - பனிசூழ்ந்த மலைகள் ஒரு விதத்தில் இந்த நதிகளுக்கு வரப்பிரசாதம். காவிரி - அணைகள் பல கட்டிவிட்டதால் திருச்சியில் பெரும்பாலும் வறண்டே இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. நதியின் படங்கள் அழகு. தேவியின் முகம் மூன்று விதமாக காட்சியளிக்கும் என்பது வியப்பான தகவல். படம் எதுவும் கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. உங்களுக்காகவே பதிவில் தேவியின் படம் ஒன்றை இணையத்திலிருந்து எடுத்து இணைத்திருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. காணொளியில் நதி மிக அழகு.  என்ன ஒரு இயற்கைக்கு கட்சி...  படத்திலேயே இப்படி இருந்தால், நேரில் எப்படி இருந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் மட்டுமல்ல, நேரிலும் வெகு அழகு தான். நிச்சயம் கண்டு ரசிக்க வேண்டிய இடங்கள் இப்பகுதிகளில் நிறையவே உண்டு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. உஜ்ஜெயின் மாகாளி, தமிழகத்தில் உச்சினி மாகாளி கோயில்களாக உருவெடுத்தது. அதுபோல பிதாரி, பிடாரி தெய்வமாக உருவெடுத்திருக்கும். சோழப் படையெடுப்புகளில் வென்ற இடங்களிலிருந்து சிற்பங்களை, தெய்வங்களைக் கொண்டு வருவது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிக தகவல்கள் நன்று நெல்லைத்தமிழன். எத்தனையோ விஷயங்கள் இப்படி இருக்கின்றன தான். கொஞ்சம் கொஞ்சமாக பல தகவல்களை - குறிப்பாக பழமையான தகவல்களை இழந்து வருகிறோம் என்பதும் வேதனையான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. அழகிய காட்சிகள் ஜி.
    மகிழ்ச்சியான விடயங்கள்
    படங்களும், காணொளியும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள், படங்கள் மற்றும் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

  6. ​அலக்நந்தாவை அழகாக அழகுநந்தாவாக படம் பிடித்திருக்கிறீர்கள். இந்த வார படஙக்ளில் இமயத்தின் மலைகளின் பிரமாண்டமும் அங்கிருக்கும் கோயில்களின் அமைப்பு அந்த ப்ரமாண்டத்தில் எப்படி இணைந்திருக்கிறது என்பதையும் நன்றாக காட்டுகிறது. ஜூல எனப்படும் தொங்கு பாலம் படமும் அழகாக உள்ளது. காணொளிகள் நீரோட்டத்தின் சலசலப்பை சொல்லாமல் உணர்த்துகின்றன. "ஆயிரம் பாதசரங்கள் கிலுங்கி" கேரளா நண்பர்களிடம் அர்த்தம் தேடிக்கொள்ளுங்கள். அல்லது பாடலை ய டியூபில் பார்க்கவும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீங்கள் குறிப்பிட்ட மலையாளப் பாடலை யூவில் பார்த்து ரசித்தேன். இணையவழி அர்த்தமும் தெரிந்துகொண்டேன். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அலக்நந்தாவின் நீரிலேயே கோவில்...ஆஹா! கீழே யும் நடந்து செல்ல முடியுமான்னு யோசிச்சேன். மேலேதான் கோவில் தெரிகிறது.

    அலக்நந்தா அழகு!!! பின்புறம் இமயம், கீழே நதி அதன் மேல் கோவில். கடவுளே எனக்கு எப்ப இதைப் பார்க்க அனுபவிக்க வாய்ப்பு கொடுக்கப் போறேன்னு கேள்வி கேட்டு போட்டிருக்கிறேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலயம் மேலே இருந்தாலும், கீழேயும் நடந்து செல்ல பாதைகள் இருக்கின்றன.

      உங்களுக்கும் இந்தப் பகுதியில் உலா வர விரைவில் வாய்ப்பு அமையட்டும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. காலை வேளையில் தேவியின் முகம் சிறுமியாகவும், மதியத்தில் ஒரு பெண்மணியைப் போலவும், மாலை வேளையில் மூதாட்டியாகவும் தோன்றுவாள் என்று இங்கே சொல்கிறார்கள். //

    ஓஹோ! அதைப் பார்க்க வேண்டுமே என்ற ஆர்வம் எழுகிறது.

    //இயற்கையை எதிர்த்து நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.எத்தனை எத்தனை இயற்கையை சிதைக்கிறோமோ அத்தனை தூரம் இழப்பு நமக்கு தான் என்பதும் எனது நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.//

    ஹைஃபைவ் ஜி. டிட்டோ.....ஒன்றுமே செய்ய முடியாது. எதிர்த்துப் போகும் போது எதிர்வினைகள் கண்டிப்பாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட எனது எண்ணங்கள் குறித்த உங்கள் எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. நம்பிக்கை இருந்தால் கல்லும் கடவுளே… இல்லை என்றால் கல் மட்டுமே! //

    ஆமாம்.

    //dhதாரி தேவி ஆலயம்...
    எத்தனை முறை பகிர்ந்தாலும் பார்க்கலாம்...//

    நிச்சயமாக ஜி. இப்ப கூடப் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்

    நம்ம ஊர் கோபுரம் போலவே இருக்கிறதே!

    இந்த முறை நண்பர் ப்ரேம் அவர்களின் அம்மாவுக்கு கங்கை நீர் எடுத்துக் கொள்ள முடிந்ததா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அம்மாவிற்கு கங்கையிலிருந்து நீர் தேவையாக இருந்தது. தேவப்ரயாக் நகரில் தான் அலக்நந்தாவும் பாகீரதியும் சங்கமித்து கங்கையாகிறாள். அங்கே எடுக்க வேண்டும் என நினைத்தாலும், எடுக்கவில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. இதைத்தவிர வேறு என்ன வேண்டுதல் செய்யத் தேவை? //

    அதைச் சொல்லுங்க. ஒன்றுமே தோன்றாது அந்த இடத்தில் போய்விட்டால்!

    காணொளிகளையும் ரசித்தேன் ஜி. அலை போல கரையில் தண்ணீர் அலை வருவதைப் பார்க்க அழகோ அழகு. என் ஆவல் எகிறுகிறது.

    பஹாடி நிம்பு சாறு - ஆஹா...

    அனைத்தையும் ரசித்தேன் ஜி. என்ன...பார்க்கப் பார்க்க எப்படா வாய்ப்புன்னு மனம் ஏக்கம் அடைகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பார்க்கப் பார்க்க எப்படா வாய்ப்புன்னு மனம் ஏக்கம் அடைகிறது!//

      உங்களுக்கும் வாய்ப்பு விரைவில் அமையட்டும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. அலக்நந்தா நதிக்கரையில் dhதாரி தேவி ஆலயம்.. அழகு.
    நீங்கள் அலக்ந்தா நதிக்கரையில் நிற்க பின்புலத்தில் தேவியின் ஆலயம் தெரியும் படமும் அழகு. பறவை பார்வையில் ஆலயம், மற்றும் காணொளி, dhதாரி தேவி வரலாறு அனைத்தும் அருமை.
    எலுமிச்சை சாறில் மேலே மிதப்பது என்ன?
    தொங்கு பாலம் அழகு. நம் ஊர் கோயில் கோபுரம் போலவே அம்மன் கோயில் கோபுரம் அழகு.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    தங்களின் மலைச் சிகரங்களுடனான பயணம் படிக்கவே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

    அலக்நந்தா நதிக்கரையில், தேவி dhதாரி அம்மன் கோவில் மிக அழகாக இருக்கிறது. அம்மனின் ஸ்தல வரலாறு படித்து தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு இறைவனுக்கும் இப்படியான வரலாறுகள் நமக்கு இயற்கையிலேயே இருக்கும் பக்தி உணர்வை அதிகமாக உண்டு பண்ணுகிறது.

    நதிக்கரையில் கோவில் என்றால், கோவிலுக்கு அடித்தளங்கள் நல்ல வலுவாக உள்ளதா?

    படங்களும், காணொளிகளும் மிக அருமையாக உள்ளது. பல மலைகளுக்கிடையே கோவிலும், நதி தீரமும் அமைந்ததாக எடுத்த படம் மிக அழகாக உள்ளது.

    கோவிலின் பல படங்களும், ஆற்றுக்கு நடுவில் தொங்கு பாலம் உள்ள இடத்தை காட்டும் படமும் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. நதியின் நடுவே . ஆலயம் அழகாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....