திங்கள், 3 மார்ச், 2025

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அடுத்த பயணத் தொடர் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******






அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  பயணங்கள் மீதான எனது காதல் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எப்போதெல்லாம் பயணத்திற்கான வாய்ப்பு அமைகிறதோ, முடிந்தவரை அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயணிப்பது எனது வழக்கம்.  சில சமயங்களில் பயணம் செய்ய முடியவில்லை என்றாலும் பெரும்பாலும் வாய்ப்புகளை நிச்சயம் பயன்படுத்தி பயணம் செய்யவே மனது விரும்பும்.  இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் அப்படிக் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி பாம்பின் சிகரம் (நாக்g tடிப்bபா) சென்று வந்தேன் - அது குறித்து இங்கே எழுதவும் செய்தேன்.  ஃபிப்ரவரி மாதம் ஒரு புதன் கிழமை மாலை நண்பர் இந்தர்ஜீத் சிங் (ஜனவரி மாதம் சென்ற குழுவில் இருந்தவர் - எனது நீண்ட நாள் நண்பர்) சனி, ஞாயிறு வருகிறதே எங்கேயாவது சென்று வரலாமா என என்னிடமும் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட்-இடமும் கேட்க, பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.  அடுத்த நாள் அதாவது வியாழன் மதியம் வரை எந்தத் திட்டமும் இல்லை.  மாலையில் நண்பர் Bபிஷ்ட் தனது திட்டத்தைச் சொன்னார் - ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சில இடங்களுக்குச் சென்று வரலாம் என்பது அவரது திட்டமாக இருந்தது.  





சென்ற முறை போலவே நான், நண்பர் Bபிஷ்ட் மற்றும் இந்தர்ஜீத் ஆகிய மூவரும் தயாரானோம். சென்றமுறை ஹரிஷ் எனும் இளைஞர் தானும் வருவதாகச் சொல்லியிருந்தார். அவர் இந்த முறை வேறு வேலைகள் இருப்பதாகக் கூற Bபிஷ்ட் கீழ் பணிபுரியும் சச்சின் எனும் இளைஞர் தான் வருவதாகச் சொன்னார்.  ஆக நான்கு பேர் கொண்ட குழு அடுத்த பயணத்திற்குத் தயாரானது.  சென்ற முறை போலவே இம்முறையும், சனிக்கிழமை புறப்பட்டு திங்கள் அன்று இரவு தில்லி திரும்புவதாகத் திட்டம்.  சென்ற முறை பயணித்தது இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) என்றால் இந்த முறை ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு மூன்று நாட்கள் பயணம்.  வியாழக் கிழமை இரவு தான் முடிவானது இந்த பயணம்.  அதன் பிறகு திங்கள் அன்று விடுமுறை எடுக்க, அதற்கான தளத்தில் இணையவழி விண்ணப்பித்தேன்.  வீட்டிற்கு வந்து தேவையான பொருட்களை முதுகுச் சுமையில் வைத்து, முடிந்த வரை வெள்ளி அன்று காலையிலேயே எடுத்து வைத்துவிட்டேன்.  ஆனாலும் வெள்ளி மாலை வரை தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பதிலேயே போனது.  சென்ற முறையை விட இந்த முறை வண்டியில் செல்ல வேண்டிய இடம் அதிக தொலைவு என்பதால் இரவு மூன்று மணிக்கே வீட்டிலிருந்து புறப்படுவதாகத் திட்டம்! 





தலைநகர் தில்லியைப் பொறுத்தவரை ஒரு வசதி - எந்த நேரத்திலும் ஓலா, ஊபர், ப்ளூ போன்ற செயலிகள் மூலம் வண்டிகள் கிடைத்துவிடும்.  அதிலும் ப்ளூ செயலி மூலம் ஒன்றிரண்டு நாட்கள் முன்னரே நாம் வண்டியை முன்பதிவு செய்து கொண்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியும்.  ஓலா, ஊபர் போல முன்பதிவு செய்த வண்டியை, நிறுவனமோ, ஓட்டுனர்களோ ரத்து செய்வதில்லை என்பதும் கூடுதல் வசதி.  சரியாக இரண்டே முக்கால் மணிக்கு முன்பதிவு செய்த வண்டியின் ஓட்டுனர் வழி தெரியவில்லை என அலைபேசி வழி அழைத்தார் - என்னதான் வரைபடம் (Map) அவரிடம் இருந்தாலும் ஏனோ அவரால் சரியான இடத்திற்கு வந்து சேர முடியவில்லை.  நானே வீட்டிலிருந்து கீழே இறங்கி பிரதான சாலைக்கு வந்து அவரை அழைத்து அங்கிருந்து வண்டியில் ஏறிக்கொண்டு நண்பர் Bபிஷ்ட் வீட்டிற்குச் சென்று சேர்ந்தபோது மணி காலை 03.25.  திட்டமிட்டபடி நான் முதலாவதாகச் சென்று சேர்ந்தேன்.  பின்னர் நண்பர் இந்தர்ஜீத் மற்றும் சச்சின் வந்து சேர்ந்து கொள்ள நண்பர் Bபிஷ்ட் தயாரித்து வைத்திருந்த தேநீரை அருந்தி 03.35 மணிக்கு வண்டியில் புறப்பட்டோம்.  





எப்போதும் போல எப்படிச் செல்ல வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்பதை எல்லாம் அனுபவமிக்க நண்பர் Bபிஷ்ட் இடம் விட்டுவிட்டோம்.  சென்ற முறை ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து டேராடூன், முசோரி வழி பந்த்வாடி சென்று சேர்ந்தோம் என்றால், இந்த முறை ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து தடம் மாறி தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் ஆகிய இடங்களைக் கடந்து கேதார்நாத் செல்லும் பிரதான சாலை வழியே குண்ட், ஊக்கிமட் ஆகிய இடங்களைக் கடந்து சாரி எனும் கிராமத்தினைச் சென்று சேர வேண்டும். கேதார்நாத் ஆலயம் பனிக்காலத்தில் மூடியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  அப்படி மூடியிருக்கும் சமயங்களில் அங்கேயிருந்து தெய்வச்சிலைகள் அனைத்தும் ஊக்கிமட் எடுத்துவரப்பட்டு தினசரி பூஜைகள் நடக்கும் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.  ஆகையால் ஊக்கிமட் மிகவும் பிரபலமான ஒரு இடம்.  பல தங்குமிடங்கள் இங்கே உண்டு. தில்லியிலிருந்து சாரி கிராமம் வரை சுமார் 430 கிலோமீட்டர் தொலைவு.  கிட்டத்தட்ட பத்து - பத்தரை மணி நேரமாவது சாலைவழி பயணம் - தொடர்ந்து சென்றால்!  நடுவில் ஒன்றிரண்டு இடங்களில்  நிறுத்தி பயணத்தினைத் தொடர்ந்தால் இன்னும் சில மணித்துளிகள் அதிகமாகலாம். 




முதல் நாள் இப்படி பயணம், அடுத்த நாள் வேறு ஒரு பயணம், மூன்றாம் நாள் வேறு ஒரு இடம் என மூன்று நாட்களுக்கும் மூன்று இடங்கள் சென்று வரலாம் என திட்டமிட்டு இருந்தார் நண்பர் Bபிஷ்ட்.  கேட்பதற்குச் சுலபமாக இருந்தாலும் சற்றே கடினமான பயணம் இது - சாலை வழி பயணம் தவிர மூன்று நாட்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 35 கிலோமீட்டருக்கும் மேல் நடக்க/மலையேற்றம்/இறக்கம் என சற்றே கடினமான/சவாலான பயணம் தான்.  ஆனாலும் எங்கள் அனைவரிடமும் இந்தப் பயணத்திற்கான முனைப்பு இருந்தது என்பதால் உற்சாகமாக புறப்பட்டு விட்டோம்.  சென்ற முறை போலவே நண்பர் Bபிஷ்ட் அதிகாலையில் எழுந்திருந்து காலை உணவுக்குத் தேவையானவற்றை தயாரித்து வைத்திருந்தார்.  கூடவே அவரது இல்லத்தரசியும் நாங்கள் புறப்படும் முன்னர் எழுந்திருந்து, காஃபி தயாரித்து ஃப்ளாஸ்கில் கொடுத்து அனுப்பினார்.  இப்படியாக தில்லியை அடுத்த நோய்டாவிலிருந்து எங்கள் மூன்று நாள் பயணம் தொடங்கியது.  இரவு நேரமாக இருந்தாலும் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. நடுவில் ஒரு இடத்தில் இயற்கை அழைப்பிற்கு வண்டியை நிறுத்தியது தவிர நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம்.  





சுமார் ஐந்து மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சுமார் எட்டே முக்கால் மணிக்கு நண்பர் வாகனத்தினை ரிஷிகேஷ்-தேவப்ரயாக் செல்லும் சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தினார்.   என்னைத் தவிர மற்ற மூவரும் முட்டை சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு அவித்த முட்டைகளும், எனக்கு ப்ரெட் டோஸ்ட் என்றும் சேர்த்து எடுத்து வந்திருந்தார்.  அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டதால் நல்ல பசி.  மூன்று ப்ரெட் டோஸ்ட் சாப்பிட்டு நண்பரின் மனைவி தயாரித்துத் தந்த காஃபியும் குடித்து அங்கே சில பல படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன்.  நண்பர்கள் முட்டையும் ப்ரெட் டோஸ்டும் சாப்பிட்ட பிறகு மீதி இருந்தது. அவற்றை நாங்களே வைத்துக் கொள்ளாமல் அங்கே சாலைப்பணியில் ஈடுபட்டிருந்த உழைப்பாளிகளுக்குக் கொடுக்க, அவர்களும் சந்தோஷத்துடன் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.  எப்படியும் மதியம் வரை மீதியிருந்த உணவை வைத்திருந்தால் அதைச் சாப்பிட முடியாது என்பதால் இப்படி சில உழைப்பாளிகளுக்குச் சாப்பிடக் கொடுத்ததும் மனதுக்கு நிறைவை அளித்தது.  அங்கே சில படங்களை எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயணித்தோம். 




ரிஷிகேஷ் தாண்டிய பிறகு பஞ்ச் ப்ரயாக் என அழைக்கப்படும் ஐந்து ப்ரயாகைகளில் தேவ ப்ரயாக், ருத்ர ப்ரயாக் என வரிசையாக வந்தாலும் நாங்கள் எங்கேயும் நின்று அந்தந்த இடங்களில் இருந்த நதிகளின் சங்கமங்களையோ, அங்கே இருக்கும் வழிபாட்டுத் தலங்களையோ தரிசிக்கவில்லை.  இந்த வலைப்பூவினை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு தேவ ப்ரயாக் மற்றும் ருத்ர ப்ரயாக் சென்று வந்தது குறித்து முகநூலில் எழுதிய கட்டுரைகள் நினைவில் இருக்கலாம்.  நண்பர் Bபிஷ்டின் தாயார், பாகீரதி மற்றும் அலக்நந்தா நதிகள் சங்கமித்து, கங்கையென பெயர் பெறும் இடமான தேவ ப்ரயாகிலிருந்து கங்கை நீர் எடுத்துவரச் சொல்லியிருந்தார்.  தேவ ப்ரயாகை கடக்கும்போது இப்போது கீழே சென்று புனித நீர் எடுக்கலாமா, இல்லை வரும்போது எடுத்துக் கொள்ளலாமா என வண்டியோட்டியபடியே கேட்டார் நண்பர் Bபிஷ்ட்.  வரும்போது எடுத்துக் கொள்ளலாம் என முடிவானது! ஆனால் வரும்போது எடுக்க முடிந்ததா என்று கேட்டால் அதற்கு பதில் ”இல்லை” என்பது தான்.  சில சமயங்களில் நினைத்த காரியத்தினை நினைத்த போதே நடத்திவிட வேண்டும் என்பதற்கு இதுவும் உதாரணம்.  தொடர்ந்து பயணித்து நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு ஆலயம்.  அது எந்த ஆலயம், அங்கே என்ன விசேஷம் என்பது போன்ற தகவல்களையெல்லாம் இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே…


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 மார்ச் 2025


8 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான அடுத்த பயணம்.

    தொடர்கிறேன்.

    மலைகளின், அங்கே தெரியும் மேகங்களின் படங்கள் அழகாக இருக்கின்றன.

    உங்கள அருகில் அமர்ந்திருப்பவர்தான் நண்பர் பிரேமா?

    பதிலளிநீக்கு
  2. படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது ஜி.

    தகவல்கள் நன்று. தங்களது பயணம் மேலும் சிறக்கட்டும், தொடர்ந்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
  3. புகைப்படங்கள் அழகு. உஷஸ் எனப்படும் விடியலுக்கு சுப்ரபாதம் பாடி சாமரம் வீசும் வெள்ளி மேகங்கள் என்று வயலார் எழுதி ஜெயச்சந்திரன் பாடிய பாடல் நினைவில் வந்தது. பனி தீராத வீடு திரைப்படம்.

    கோவிட் காலத்து கிடைக்காத பயணங்கள் தற்போது arrears ஆக கிடைக்கிறது. ஆ. அது போல் பஞ்சப்படியும் கிடைக்கட்டும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அடுத்த பயணத் தொடர். படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  5. அடுத்த மலையேற்றப் பயணம் ஆரம்பமே ஜெக ஜோர்!

    படங்கள் என்ன சொல்ல? இமயமலையின் அடுக்கடுக்கான அந்தத் தொடர் மனதை வசீகரிக்கிறது.

    மலையும் மேகத் தீற்றல்களும் அட்டகாசம் ஜி. படங்களை ரசித்துப் பார்த்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நீங்க, முன்பு பிரயாகை தேவப்பிரயாகை ருத்ர பிரயாகை இரண்டிற்குச் சென்று வந்தது வாசித்த நினைவு இருக்கு.

    போகும் வழி அழகான இடங்கள் இல்லையா ஜி!

    ஒரு விஷயம் தோன்றிவிட்டால் உடனே முடிப்பது நல்லது அதுவும் புனித நீர் எடுத்துவரும் இப்படியான விஷயங்கள் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் உடனே செய்வது நலல்து.. கொஞ்சம் ஒற்றி வைத்தால் அதன் பின் நடக்குமா என்பது நீங்கள் சொன்ன அடுத்த வரியை டிட்டோ செய்கிறேன்.

    அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வாசகம் செம...உண்மை என்றும் எனக்குத் தோன்றும்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வாசகம் அருமை. பயணத்தொடர் அருமை.

    சில சமயங்களில் நினைத்த காரியத்தினை நினைத்த போதே நடத்திவிட வேண்டும் என்பதற்கு இதுவும் உதாரணம். //

    நீங்கள் சொல்வது உண்மைதான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....