சனி, 8 மார்ச், 2025

காஃபி வித் கிட்டு - 217 - சின்னச் சின்னதாய் - மகளிர் தினம் - மங்கையராய் பிறப்பதற்கே - அநீதி - நட்பு - கனவுகள் - பெண்களால் பாதுகாப்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


இந்த வாரத்தின் காணொளி :  சின்னச் சின்னதாய்



இன்றைக்கு மகளிர் தினம்.  எங்கே பார்த்தாலும் மகளிர் தினம் குறித்த விஷயங்கள் கண்களுக்கு படலாம் - இங்கே உட்பட! ஒரு நாள் மட்டுமே மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை இன்று வரை யாரும் உணரவில்லை என்பதே வருத்தம் தரும் உண்மை.  பரஸ்பர அன்பு எல்லா நாட்களுமே இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்தால் நல்லதே…  ஒரு சிறு காணொளி - சமீபத்தில் பார்த்து ரசித்தது - இங்கே உங்கள் பார்வைக்கு…  ஹிந்தியில் இருந்தாலும், ஆங்கில சப்டைட்டிலும் இருக்கின்றது - புரிந்து கொள்ள முடியும்!


சின்னச் சின்னதாய்


******

 

இந்த வாரத்தின் பகிர்வு-1 : மகளிர் தினம்…



மூன்று வருடங்கள் முன்னர் ஒரு மகளிர் தினத்தில் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயம் - பெண்கள் தினமா, தினமுமா?  இன்றைய நாளில் இங்கே சிறப்பு பகிர்வாக… 


பெண்கள் தினமா, தினமுமா?


உலகு, பெண் உருவைப் புகழாமல், பெண்மையைப் போற்றும் போது அது  பெண் தினம்!


பெண்களுக்கென்று இட ஒதுக்கீடல்லாமல்  தகுதிக்கு மட்டுமே வாய்ப்பு வரும் நாள் பெண் தினம்!


பெண் பார்க்கும் தினம் மாறி ஆணும் பெண்ணும் குடும்பத்தோடு சந்திக்கும் தினம் பெண் தினம்!


அடுப்பங்கரை ஆளுமை இருவருக்கும் பொதுவாகும் தினம் பெண் தினம்!


வயலில் இருந்து வான்வெளி வரை குடும்ப பாரத்தை இருவருமே சுமந்தால் அன்று பெண் தினம்!


அச்சம்,மடம், நாணம்,பயிர்ப்பு என்பவை பொது உணர்வுகள். அது சந்தர்ப்பதுக்கு தகுந்தார்ப்போல் இருவரிடமும் வெளிப்படும்! 

வீரம் கொண்ட பெண்ணும்,முகம் சிவந்து நாணும் ஆணும் அழகின் வடிவங்களே!


உடையில் அல்லாது, உள்ளத்தால் வீரம்,உழைப்பு, மாண்பு, பொறுப்போடு பெண்ணும், அன்பு,பொறுமை, தியாகம், மனவலிமையோடு ஆணும் இருந்தால் அது பெண் தினம் மட்டுமல்ல மானுட தினம்!


ஒவ்வொருவர் உடலுள்ளும் பெண்மையும் ஆண்மையும்(X,Y chromosome களாக) நிறைந்திருக்கையில், ஆண் தினம் பெண் தினம் என்பதெல்லாம்  பேதமையே!


வாழிய மானுடம்! மன்னுயிர் எல்லாம்!


  • விஜி வெங்கடேஷ்.


******


பழைய நினைப்புடா பேராண்டி : மங்கையராய் பிறப்பதற்கே....


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மங்கையராய் பிறப்பதற்கே.... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


ஏன் பிறந்தேன் பெண்ணாக?


இந்த கேள்வியை  தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான் . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு,  அது பிரசவ வேதனையை  அனுபவிக்கும் அந்த நேரம்!   


நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.  நர்ஸ் வந்து செக்  பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.  எனக்கு எப்படி இருக்கும்?!  இந்த வலியே உயிர்  போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும்,  நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.  


என் உறவினர்கள் வேறு உட்காராதே அப்படியே மெதுவாக  நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள்.  என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.     


வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள்,   வைக்கும்போது அது வேற  வித்தியாசமான ஒரு வேதனையாக  இருந்தது.  இது போதாது என்று குளுக்கோஸ் வேறு ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது.  அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான்.  ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப்,  பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36  மணி நேரம் கடந்தது.   இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன்.  எப்ப குழந்தை பிறக்கும் என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் பகிர்வு-2 : அநீதி



இந்த வாரத்தின் இரண்டாம் பகிர்வாக, எனது இல்லத்தரசி எழுதிய விஷயம் ஒன்று…


அநீதி


கடை ஒன்றில் நான் நின்று கொண்டிருந்த போது அந்தக் கடை முன்பு திடீரென்று கூச்சல்! என்னவென்று பார்த்ததில் எதிர்ப்புறம் ஒரு வயதான பெண்மணியின் கையில் இருக்கும் பையை பிடுங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான் ஒரு இளைஞன்! 


அந்த அம்மா கத்திக் கூச்சல் போடும் சத்தம் தான் அது! அந்த இளைஞன் குடிபோதையில் நடுத்தெருவில்  அந்த அம்மாவின் மீதே விழுந்து அந்தப் பையை பிடுங்க முயற்சித்துக் கொண்டும், தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருந்தான்! 


பதறிப் போய் நான் பார்த்துக் கொண்டிருக்கையில், நான் நின்று கொண்டிருந்த கடையின் உரிமையாளர் ‘இவங்க அம்மாவும் பிள்ளையும் தான்! இது வழக்கமாகவும்  நடக்கிறது தாம்மா! என்று வெகு இயல்பாக சொல்கிறார்!


நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்! ஒருபுறம் இன்றைய தினத்தை பெண்களுக்கான சிறப்பான தினமாக கொண்டாடப்படும் வேளையில், இங்கே நடுத்தெருவில் ஒரு பெண்ணுக்கு அநீதி நிகழ்ந்து கொண்டிருக்கிறது! தன் அம்மாவின் உழைப்பை தன் சுயநலத்துக்காக உறிஞ்ச நினைக்கும் பிள்ளை! 


அந்தப் பிள்ளையிடம் நாலு வார்த்தை நறுக்கென கேட்கத் தான் துடிக்கிறது! மனம் நொந்து நான் அங்கிருந்து நடக்கத் துவங்கியதும் சிறிது தொலைவில்  சாலையோரத்தில் ஒரு தள்ளுவண்டியில் பாசிமணி, வளையல் என விற்றுக் கொண்டிருக்கும் ஒரு பெண் கண்ணீர் ததும்ப ‘எங்கிட்ட காசெல்லாம் இல்ல மச்சான்! எவ்வளவு தான் உனக்கு குடுக்கிறது! வயித்து பொழப்புக்காகத் தான் நானும் சம்பாதிக்கிறேன்! என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்!


இந்தக் காட்சிகளை எல்லாம் சாலையில் வேண்டுமானால் நாம் கடந்து வந்துவிடலாம்! ஆனால் மனதளவில் எளிதாக கடந்து விட முடியவில்லை என்பது தான் மறுக்க இயலாத கசப்பான உண்மை! இந்த நிலை மாறும் நாள் என்று??? 


- ஆதி வெங்கட்


******


இந்த வாரத்தின் ஓவியம் :  நட்பு



இந்தப் படத்தினை பார்த்தபோது உங்கள் மனதில் தோன்றிய எண்ணம் என்ன? எனக்கு நட்பு என்கிற உன்னத விஷயம் மனதில் தோன்றியது…


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் :  கனவுகள்


Prega News விளம்பரம் - இந்த வருடத்தின் மகளிர் தினம் சமயத்தில் வெளியிட்ட விளம்பரம் இது. பாருங்களேன்.



******


இந்த வாரத்தின் செய்தி :  பெண்களால் பாதுகாப்பு…


இந்த செய்தியும் மகளிர் தினம் சம்பந்தப்பட்டது தான்.  தினமலர் இணையதளத்தில் வந்திருக்கும் செய்தி. படித்துப் பாருங்களேன்!


மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம்: முதல்முறையாக பிரதமர் நிகழ்ச்சியில் 'சர்ப்ரைஸ்'

 

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

8 மார்ச் 2025


7 கருத்துகள்:

  1. மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாகவே அமைந்து விட்டது பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. படத்தைப் பார்த்தவுடன் தோன்றியது - நிறம் இனம் மொழி நாடு கடந்த ஒரு விஷயம் உலகம் முழுவதும் பெண்கள் நடத்தப் படும் விதம்.இன்றைக்கும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்பது கசக்கும் நிஜம்.பெண்களும் படித்து நல்ல உத்யோகத்தில் இருப்பதால் பண சுதந்திரம் இருப்பதால் வரதட்சணை கொடுமை வேண்டுமானால் பெருமளவு குறைத்திருக்கலாம்.அதுவும் கிராமப் புறத்தில் சந்தேகம்.ஆனால் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.அவலம்.வெட்கப்பட வேண்டிய விஷயம்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  3. சிறப்புப்பதிவு வெகு சிறப்பு‌‌.. விஜி அவர்களின்.கருததரையும்..

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்லியிருப்பது போல, பெண்கள் தினம் தினமுமேதான்.!!!

    காணொளி நல்லாருக்கு ஜி

    ஆதிக்கும் விஜிக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்!

    விஜி அவர்களின் வரிகள் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இந்த கேள்வியை தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான் . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு, அது பிரசவ வேதனையை அனுபவிக்கும் அந்த நேரம்! //

    கண்டிப்பாக எனக்குள் எழும் அவ்வப்போது....ஆனால் பிரசவ வேதனையை அனுபவித்த போது அல்ல. அப்போது நான் மகிழ்ச்சியுடன் பெருமையுடன், பரவசத்துடன் வர வேற்றேன் என் குழந்தையை.

    எனக்குள் எப்ப எழும் என்றால்....பயணம்!!!!!!

    பழைய நினைப்பை பின்னர் வாசிக்கிறேன் ஜி. கொஞ்சம் வேலைப்பளு!
    ஆதி, இப்படித் தினமும் ஏதேனும் ஒரு விதத்தில் பார்க்கலாம். இன்னும் நம்மூரில் woman empowerment பெண்கள் மனதிலேயே கூட ஆழமாகப் பதியவில்லை! காரணங்கள் உண்டு. பெண்கள் வளர்க்கப்படும் விதம். அதனால்தான் எனக்கு ஏனோ இந்தப் பெண்கள் தினம் என்பதில் நம்பிக்கை வருவதில்லை.

    நட்பு - ஓவியாம் சூப்பர் சூப்பர்! நட்பிற்கு சாதி, நாடு, மதம் இனம் எதுவும் கிடையாது என்பது!

    காணொளியும், தினமல்ர் செய்தியும், பழைய நினைப்பும் - Reserved.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பதிவு. மகளிர் தின வாழ்த்துகள்.
    இன்றைய வாசகம் அருமை.
    காணொளி மிக அருமை.

    பதிலளிநீக்கு
  7. மகளிர் தினத்தில் நல்லதோர் படப் பகிர்வும் பதிவும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....