அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஆதி மஹோத்ஸவ் 2025 - நிழற்பட உலா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
கோடை - 3 மார்ச் 2025:
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
திருவரங்கத்தில் நன்கு வியர்க்கத் துவங்கி விட்டது! வருடத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே வியர்வையில்லாமல் இங்கு இருக்கலாம்! வியர்வை என்பதையே அறியாத சில்லென்ற கோவையைத் தான் நினைத்துக் கொள்வேன்! ஆனால் புவியியல் மாற்றத்தினால் இப்போது அங்கும் வெயில் என்று கேள்விப்படுகிறேன்...🙁
இன்றைய நடைப்பயிற்சியில் வாரச்சந்தைக்கு சென்று வந்தேன்! வழக்கத்திற்கு மாறாக காய்கறிகள் வரத்து சற்று அதிகம் என்று நினைக்கிறேன்! புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், கத்திரி, வெண்டை என்று எல்லாமே அரைக்கிலோ 20 என கூவி கூவி வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது!
ஒருபுறம் ஒரு வியாபாரி 3 கிலோ 50ரூ என தக்காளி வியாபாரமும், மறுகோடியில் ஒருவர் 2 1/2 கிலோ 25ரூ எனவும் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது!
பழம் எப்படிண்ணே? என்று வாழைப்பழங்கள், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழையிலை என்று வியாபாரம் செய்து கொண்டிருந்தவரிடம் கேட்ட போது, எடுத்துக்கோம்மா! இந்தாப் பிடி 10 பழம் இருக்கு 20ரூ குடு என்று தந்தார்!
அண்ணே! கறிவேப்பில 10, கொத்தமல்லி 10, புதினா 10 குடுத்துடுங்க! அப்படியே 100 இஞ்சியும் குடுத்துடுங்க என்றேன்! எனக்கு முன்பு வந்த பெண்மணி ஒருவர் அவரிடம் கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் சேர்த்து அஞ்சு ரூபாய்க்கு தரச் சொல்லி தகராறு செய்து கொண்டிருந்தார்!
அம்மா! கறிவேப்பிலை கட்டு 80ரூபாய்க்கு எடுத்திருக்கேன்! எந்த காலத்துலம்மா இருக்கீங்க என்றார்! அப்போதும் கிழிந்து நைந்து போன 10 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்து இதுல 5 ரூக்கு இஞ்சியும் குடுத்துடுங்க என்கிறார்!
ஆன்லைன் மூலமும் மால்களுக்குச் சென்றும் எத்தனையோ ஆயிரங்களை செலவு செய்யும் நாம் இவரைப் போன்ற சிறு வியாபாரிகளிடம் மட்டும் எதற்காக பேரம் பேசுகிறோம் என்று தெரியவில்லை??
சந்தையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது நீர் நிறைந்திருக்கும் தெப்பக்குளத்தை பார்க்க முடிந்தது! திருவரங்கம் கோவிலில் இப்போது மாசி திருப்பள்ளி ஓடம் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! நேற்று ஹம்ஸ வாகனத்திலும், இன்று அனுமந்த வாகனத்திலும் ரங்கன் வீதியுலா வந்து கொண்டிருக்கிறார்! இந்த வரிசையில் வரும் ஞாயிறு மாசித் தெப்பம் நடைபெற இருக்கிறது! அப்போது இந்த தெப்பக்குளத்தில் தான் ரங்கன் உபய நாச்சியார்களுடன் காட்சி தருவார்!
******
க்ஷணச் சித்தம்! க்ஷணப் பித்தம்! - 5 மார்ச் 2025:
நம்ம வீட்டில் எல்லாருமே காலச்சக்கரம் நரசிம்மா சாரின் எழுத்துக்கு ரசிகர்கள் தான்! இந்த முறை திருச்சி புத்தகத் திருவிழாவுக்குச் சென்ற போது சாரின் புத்தகங்களில் எங்கள் கலெக்ஷனில் விடுபட்டுப் போயிருந்த இந்த புத்தகத்தைப் பார்த்ததும் மகள் உடனே எடுத்து விட்டாள்! அவள் நீண்ட நெடும் சரித்திரமான அத்திமலைத் தேவனைக் கூட விரும்பி இதுவரை மூன்று முறை வாசித்து விட்டாள் என்றால் பாருங்களேன்!
சிறுகதைத் தொகுப்பான க்ஷணச் சித்தம்! க்ஷணப் பித்தம்! நூலில் எட்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன! நகைச்சுவை, க்ரைம், காதல், அமானுஷ்யம், சரித்திரம் என்ற தலைப்புகளில் இடம்பெற்றுள்ள இந்தக் கதைகள் ஒவ்வொன்றுமே தனித்தன்மையுடன் ஜொலித்து இந்த நூலை பல்சுவை கதம்பமாக நமக்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது!
எல்லாக் கதைகளுமே சற்றும் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகளுடன் முடிகிறது! இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற கதைக்கான சூழல்களும், சாரின் இயல்பான அரசியல் உள்குத்துகளும், திரில்லாங்கான நிகழ்வுகளும், சிந்திக்க வைக்கும் விதமான கதையோட்டமும் என மிகவும் ஸ்வாரஸ்யமாகவே இருக்கின்றது!
மனிதர்கள் தான் பேய் பிசாசு என பயப்படுவார்கள் இல்லையா! ஆனால் பேயின் கண்ணோட்டத்தில் இதுவரை யாரும் முயன்றிருப்பார்களா தெரியவில்லை!! அப்படியொரு முற்றிலும் வித்தியாசமான கதையாக ‘மானுடம் அமானுடம்’ என்ற தலைப்பிலான கதை ஒன்று இந்த புத்தகத்தில் உள்ளது!
ஒருவரின் ஒருபக்க கண்ணோட்டத்தை மட்டுமே வைத்து யாரையுமே எடை போட்டு விடக்கூடாது என்பதைச் சொல்லும் கதையாக க்ஷணச் சித்தம்! க்ஷணப் பித்தம்! என்ற நூலின் தலைப்பு கொண்ட கதை என்னைக் கவர்ந்தது!
‘மூவிடத்து வானரதம்’ என்ற தலைப்பில் சரித்திரக்கதை ஒன்று இந்த நூலில் இடம்பெற்றுள்ளது! சோழர் வம்சம் உருவான வரலாறாக இந்தக் கதை இங்கு விவரிக்கப்பட்டிருக்கிறது! இதை முன்பே நான் கிண்டில் சப்ஸ்கிரிஷனிலும் கூட மின்னூலாக வாசித்திருக்கிறேன் என்பது கூடுதல் தகவல்!
பெரும் சரித்திர நிகழ்வுகளை ஆய்வுகள் பல செய்து ஆதாரங்களுடன் நம்மிடம் பகிர்ந்து கொள்பவரால் சிறுகதையாக ஒன்றை சுருக்கிச் சொல்ல முடியுமா என்ற எண்ணமே நமக்கு வேண்டாம்! இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கதையையும் நிதானமாக வாசித்து ரசிக்க வேண்டிய நூலாக இதை நினைக்கிறேன். பாராட்டுகள் சார்!
*******
மாசி கருடன் - 5 மார்ச் 2025:
மாசி மாதத்து கருட சேவை மிகவும் விசேஷமானது! திருப்பள்ளி ஓடம் திருநாளின் நான்காம் நாள் புறப்பாடாக இன்று கருடசேவை காண வாய்ப்பு கிடைத்தது! நூற்றுக்கணக்கான மக்கள் கருடசேவை காண குழுமியிருந்த தாத்தாச்சாரியார் தோப்பிலிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாயிற்று!
தோப்பின் குளுமையும் எங்கும் ரங்கா! ரங்கா! என்ற கோஷங்களும், மந்திரங்களும் அந்த இடத்தை மிகவும் ரம்மியமாக்கியது! ரங்கனுடனேயே மெல்ல மெல்ல பயணிக்கத் துவங்கினோம். வழியெங்கும் புதிதாக முளைத்த கடைகளும், கருட வாகனத்திற்காக வந்திருந்த வாகனங்களும் என அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது!
வழியில் எதிரே உள்ள சாலையில் நின்றிருந்த ஒரு பெண்மணியைப் பார்த்ததும், 'எங்கேயோ பார்த்த முகமா இருக்கே'!! என்று நினைத்த மறுகணம் புரிந்து விட்டது! அவரைத் தேடிச் சென்று 'நமஸ்காரம்! நீங்க ஜெயா ஸ்ரீனிவாசன் தானே?? என்று கேட்டதும் ஆமாம் என்றார்! நீங்க??
உங்க சேனல் பார்ப்பேன்! ரொம்ப நல்லா இருக்கு எல்லா ரெசிபீஸும்! சிம்பிளா அழகா சொல்றீங்க! ஸ்ரீரங்கத்துல தான் இருக்கீங்கன்னு தெரியாது! என்றதும் மிகவும் மகிழ்ந்தார்! இப்படி தேடி வந்து பாராட்டி சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு! என்றார்!
திருமதி ஜெயா ஸ்ரீனிவாசன் 'veggies recipe' என்ற பெயரில் யூட்டியூப் சேனல் நடத்தி வருகிறார்! இவரின் சேனலில் மிகவும் எளிமையாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய வீட்டு சாப்பாட்டை செய்து காண்பிக்கிறார்! ஒரு செல்ஃபி எடுத்துப்போமா?? என்று கேட்டதும் அவரின் கணவர் நான் எடுத்து தரேன் என்று சொல்லி எங்களை நிற்க வைத்து படம் பிடித்து தந்தார்!
இன்றைய நாளில் அசை போட்டு பார்க்க சில இனிமையான தருணங்கள் அமைந்தன! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
7 மார்ச் 2025
இங்குமே கோடை துவங்கிவிட்டது. மே மூன்றாம் வாரம் வரை வெயில் தாக்கம் அதிகம்.
பதிலளிநீக்குநேற்று மார்கெட்டில் வெண்டை போன்றவற்றைத் தவிர அனேகமா எல்லா காய்களும் கிலோ 20 ரூ. தக்காளி பத்து ரூ. எப்படித்தான் கட்டுப்படியாகுதோ என நினைத்துக்கொண்டேன்.
காலச்சக்கரம் நரசிம்மா மிக நன்றாக எழுதுகிறார் சரித்திரத்தை இணைத்து. நானும் அவர் ரசிகன்தான். சமீபத்தில் அத்திமலைத் தேவனைப் புரட்டிப் பார்த்து அசந்துவிட்டேன்.
பதிலளிநீக்குநானும் தெருவோர வியாபாரிகளிடம் பேரம் பேசுவதில்லை. சொல்லப்போனால் இப்போதெல்லாம் எங்கேயுமே பேரம் பேசுவதில்லை!
பதிலளிநீக்குநரசிம்மா ஸாரின் சிறுகதைத் தொகுப்பு படிக்க ஆவல்தான். மூவிடத்து வானரதம் இலவசமாக கிண்டிலில் இறக்கிக் கொள்ள முடிகிறதா?
கருடசேவை காட்சிகள் ரசனை. வலையில் மட்டுமே படித்த நட்பை நேரில் பார்ப்பதும் சந்தோஷம் தரும் நிகழ்வு.
veggies recipe' Perfect combo.
நீக்குசிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதில்லை.
பதிலளிநீக்குகாலச்சக்கரா கதைகள் வாசிக்கத் தூண்டுகிறது. பார்க்கிறேன் எப்படி வாங்குவது என்று.
கீதா
கருடன் படங்கள் நல்லாருக்கு.
பதிலளிநீக்குஅட! யுட்யூப் நட்பு நேரில் சந்திப்பு! நல்ல விஷயம்.
கீதா
நான் பேரம் பேசுவதே இல்லை..அதனாலேயே என்னை என் துணைவியார் என்னை எந்தச் சாமானும் வாங்கிவரச் சொல்வதில்லை..
பதிலளிநீக்குவிஜயலஷ்மி சென்னை
பதிலளிநீக்குதேவகோட்டையில் வெயில் அதிகமாக உள்ளது.
பதிலளிநீக்குகருட வாகனம் சிறப்பு சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசகூடாது
பதிலளிநீக்குபதிவு அருமை.
பதிலளிநீக்குவார சந்தை விவரங்கள் அருமை. கால்வலியால் வார சந்தைக்கு போவதே இல்லை, வீட்டு அருகில் இருக்கும் காற்கறி விற்பவருக்கு போன் செய்து அவர் கொண்டு வந்து தரும் காய்கறிகளை வாங்கி கொண்டு இருக்கிறேன்.
கருட சேவை படம் அழகு, தரிசனம் செய்து கொண்டேன்.
//திருமதி ஜெயா ஸ்ரீனிவாசன் 'veggies recipe' என்ற பெயரில் யூட்டியூப் சேனல் நடத்தி வருகிறார்!//
அவரை சந்தித்து அவருடன் படம் எடுத்து கொண்டதும் மகிழ்ச்சி.