குழந்தைகள் தினமாம் நவம்பர்
14 ஆம் தேதியில் தொடங்கி, நேற்றைய முன் தினம் அதாவது 27-ஆம் தேதி அன்று தில்லியின்
வருடாந்திர திருவிழா முடிந்தது. ”என்னது தில்லியில்
திருவிழாவா? சொல்லவே இல்லை!” என்பவர்களுக்கு, இது வருடாந்திர
திருவிழாங்க. கிட்டத்தட்ட 32 வருஷமா நடந்துட்டு இருக்கு. பொழுது போக்கு அம்சங்கள்
அதிகமாக இல்லாத தில்லியில், பல மக்களுக்கு இந்த பதினான்கு நாட்களும் திருவிழா
தான்.
ஒவ்வொரு வருடமும் இந்த
நாட்களில் பிரகதி மைதானம் வரும் மக்களின் அலைவெள்ளத்தில் பிதுங்கி வழியும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நிரந்தரமான கட்டிடம், அதைத் தவிர வெளிநாட்டு
அரங்குகள், அரசு துறைக்கான அரங்குகள், உணவுப் பொருட்களுக்கான இடங்கள் என்று
எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதும். இந்த முறை கடைசி ஞாயிறான 25 ஆம் தேதி அன்று
சுமார் ஒன்றரை லட்சம் பேர் கண்காட்சியைப் பார்க்க வந்திருந்தார்களாம். இதில் இடிமன்னர்களும்,
உரசல் மன்னர்களும், மொபைல்-பிக்பாக்கெட் அடிப்பவர்களும் அடக்கம்!
கண்காட்சி முடிந்த பிறகு
சிறப்பான பங்காளர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். இந்த வருடத்தின்
மாநிலங்களுக்கான முதல் பரிசு பெற்ற மாநிலம் – அசாம், இரண்டாம் பரிசு – கேரளா,
மூன்றாம் பரிசு பஞ்சாபிற்கும் ராஜஸ்தானிற்கும்.
என்னது ”இதுவரை தமிழகம் பரிசு
பெற்றிருக்கிறதா?” என்றா
கேட்டீங்க! எனக்கு நினைவு தெரிந்து இது வரை இல்லை. காரணம் என்று ஒருமுறை வந்து
பார்த்தால் தெரிந்துவிடும்!
இந்த வருடம் வேலைகள்
அதிகமாக இருந்ததால் நான் செல்லவில்லை. அதனால், போன வருடம் அசாம் அரங்கில் எடுத்த
படங்களை இணைத்திருக்கிறேன். கேரள படமும் தான்!
எல்லா வருடங்களிலும் இதே
நாட்களில் தான் இந்த திருவிழா நடக்கும். இச்சமயத்தில் வந்தால் நீங்களும் பார்த்து
ரசிக்கலாம்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காக்கா கல் போட்டு
தண்ணீர் குடிச்சுதுன்னு சொல்லப் போறீங்க. இந்தக் காலத்து காக்கா MODERN காக்கா... குழாய் போட்டு உறிஞ்சுடும்!
இந்த
வார குறுஞ்செய்தி:
Heart is not a
basket for keeping tension and sadness.
It’s a golden box for keeping roses of happiness… Let your heart be happy always.
ரசித்த
புகைப்படம்:
எதாவது ஒரு இடத்தில் வரிசையாக வரவேண்டும் என
எழுதி இருந்தால் ‘அவன் யார் சொல்றது?’ என்ற எண்ணத்தோடு குறுக்கே செல்பவர்கள் தாங்க நிறைய
பேர். அவங்க எல்லாரும் இந்தப் பறவைகள்
கிட்ட வகுப்புப் போகணும்.
ரசித்த
பாடல்:
இந்த வாரம் ஒரு பழைய பாடல். சரி சரி ஓடாதீங்க. நிச்சயம் ரசிக்கும்படியான
பாடல் தான். நம்ம சந்திரபாபு பாட்டு. பாட்டுலயும், சந்திரபாபுவிடமும் என்ன ஒரு
துள்ளல். என்ன பாட்டுன்னு கேட்கறீங்களா?
“குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே” எனும் பாடல் தான். 1959- ஆம் வருடம் வெளிவந்த மரகதம் என்ற
படத்தில், திரு சுப்பையா நாயுடுவின் இசையில் சந்திரபாபுவும், ஜமுனா ராணியும் பாடிய
பாடல். நீங்களும் ரசியுங்களேன்.
ராஜா காது கழுதைக் காது:
சமீபத்திய திருச்சி பயணத்தின் போது பேருந்து ஒன்றில் கேட்டது. பாட்டி தனது நான்கு வயது சுமார் பேரனிடம் – “கண்ணு, பார்த்து சாப்பிடணும், பப்பிள் கம் முழுங்கிடாத, வயத்துல போய் ஓட்டை போட்டுடும்!”. அதற்கு மகள் சொன்னது – ”ஏம்மா பஸ்ல இப்படி கத்தற, எல்லாம் அவனுக்குத் தெரியும்”.
சமீபத்திய திருச்சி பயணத்தின் போது பேருந்து ஒன்றில் கேட்டது. பாட்டி தனது நான்கு வயது சுமார் பேரனிடம் – “கண்ணு, பார்த்து சாப்பிடணும், பப்பிள் கம் முழுங்கிடாத, வயத்துல போய் ஓட்டை போட்டுடும்!”. அதற்கு மகள் சொன்னது – ”ஏம்மா பஸ்ல இப்படி கத்தற, எல்லாம் அவனுக்குத் தெரியும்”.
படித்ததில் பிடித்தது:
இப்படித்தான்....
அடைக்கப்படும் கதவின்
விருப்பமான சத்தத்திற்காக
உள் அறையில்
காத்திருக்கிறேன்.
மிகுந்த கவனத்துடன்
சத்தமே கேட்காமல்
சாத்திவிட்டுப் போகிறார்கள்.
இப்படித்தான் ஒரு
காரணமுமின்றி
இழந்துவிட நேர்கிறது
சின்னும் சிலவற்றை.
-
கல்யாண்ஜி
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.