என்னுடைய
வலைப்பூவினை தொடர்ந்து படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை
முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஃப்ரூட் சாலட், மனச் சுரங்கத்திலிருந்து,
தலைநகரிலிருந்து போன்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதி வந்திருந்தாலும், பயணம் என்ற
தலைப்பில் இது வரை எழுதிய பதிவுகள் – 141 – அதில் தொடராக எழுதிய பதிவுகள் மொத்தம்
106.
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது
(27 பதிவுகள்), ரத்த பூமி (10
பதிவுகள்), மஹா கும்பமேளா
(8 பதிவுகள்), ஜபல்பூர் – பாந்தவ்கர்
(12 பதிவுகள்),
சபரிமலை (13
பதிவுகள்), காசி அலஹாபாத்
(16 பதிவுகள்) மற்றும் ஏரிகள் நகரம்
(20 பதிவுகள்) என தொடர்ந்து நான் பயணித்த இடங்கள் அங்கே கிடைத்த அனுபவங்கள் என
எழுதி வந்திருக்கிறேன். தொடர்ந்து பயணக்
கட்டுரைகள் எழுதுவதனால் படிக்கும் பலருக்கு அந்த இடங்கள் பற்றிய விவரங்களைத்
தருகிறோம் என்ற மனமகிழ்ச்சி கிடைத்தாலும், சலிப்பு வந்து விடுமோ என்ற எண்ணமும்
மனதுக்குள் வந்து போகிறது.
கடந்த
ஒன்றிரண்டு மாதங்களாக, நான் எழுதுவதும் கணிசமாக குறைந்திருக்கிறது. அதே மாதிரி மற்றவர்களின் பதிவுகளை படித்து
கருத்திடுவதும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மற்ற பதிவர்களின் பதிவுகளை
மொத்தமாக படிக்க முடிகிறது. அலுவலகத்தில்
தொடர்ந்து கணினி முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் – ஆணிகள் கிலோ கிலோவாக
கொட்டி வைத்திருக்கும் உணர்வு – பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகமாகிவிட்டது – ஒரு
பக்கமாக ஆணி பிடுங்கிய படி செல்ல, பின்னாலேயே வேறொருவர் ஆணி அடித்த படி இருக்கிறார்
– ஆக பிடுங்க வேண்டிய ஆணி குறையாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.
பணி
முடிந்து வீடு திரும்பிய பின் மற்ற வேலைகளுக்கு நடுவில் வலைப்பக்கம் வருவது
கணிசமாக குறைந்திருக்கிறது. அதனால் தான்
ஃப்ரூட் சாலட்-100 பதிவில் “ஃப்ரூட்
சாலட் தொடர்ந்து தரவா, இல்லை
வேண்டாமா? என்பதை பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன்!” என்ற கேள்வி எழுப்பினேன். கூடவே எனது பதிவுகள் சலிப்பு தருகிறதோ என்ற
எண்ணமும் தான்.
சூழல் இப்படி இருக்க, இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும்
என்ற எண்ணமும் முனைப்பும் குறையவில்லை.
எழுத வேண்டிய விஷயங்கள் என பல மனதுக்குள் இருக்கின்றது. சென்று வந்த பயணங்களும் உண்டு. முக்கியமாக சில பயணங்கள் இங்கே.
மலைப்பாதையில் நடந்து செல்லும் போது காணக்கிடைக்கும் மலைகள்.....
மலைச்சாரலோ? பாபா [dh]தன்சர் எனும் குகைக் கோவில் அருகில் உள்ள அருமையான இடம்...
மாதா வைஷ்ணவ தேவி – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் ஒரு
மலைக்கோவில். தில்லியிலிருந்து ஜம்மு வரை
ரயிலில் சென்று அங்கிருந்து ஐம்பது கிலோ மீட்டர் சாலை வழியே பயணித்தால் கட்ரா
எனும் இடம். சமீபத்தில் கட்ரா வரை ரயில்
பாதையும் அமைக்கப்பட்டு ரயில் பயணிக்கிறது. கட்ராவிலிருந்து சுமார் 14 கிலோ
மீட்டர் மலைப்பாதையில், நடந்தோ, குதிரை சவாரி மூலமோ, பேட்டரி கார் மூலமோ, இல்லை
ஹெலிகாப்டர் மூலமோ பயணிக்கலாம். மலை மேல்
சென்று ஆங்கே குடிகொண்டிருக்கும் அன்னையை தரிசிக்கலாம். இங்கே சென்று வந்த அனுபவங்களைத் தொடராக பதிவு
செய்யும் எண்ணம் இருக்கிறது.
கிருஷ்ண ஜன்ம பூமி - நுழைவாயில்...
ராதையின் குளம்! - விருந்தாவன்
மதுரா – விருந்தாவன் – [G]கோவர்த்தன்: கிருஷ்ண ஜன்மபூமி, கிருஷ்ணர் வளர்ந்த இடம், அவர் பல
லீலைகள் செய்த இடங்கள் என நிறைய விஷயங்கள் கதை கதையாக கேட்டிருக்கிறோம்,
படித்திருக்கிறோம். அந்த நிகழ்வுகள் நடந்த இடங்களாகக் கருதப்படும் மதுரா,
விருந்தாவன், [G]கோவர்த்தன் ஆகிய இடங்களுக்கு பல முறை
சென்றதுண்டு. சமீபத்தில் ஒரு நாள் பயணமாக சென்று வந்த அனுபவங்கள் இன்னமும் பதிவு
செய்யவில்லை. அவையும் மனதுக்குள் பொக்கிஷமாக!
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பசுமை....
அம்மா வழி குலதெய்வமான பச்சையம்மன்.....
அய்யூர் அகரம் - ஒறையூர்- கோலியனூர்: சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த
போது, எங்களது குலதெய்வம் கோவில்களுக்கும், அம்மா வளர்ந்த கிராமத்திற்கும்,
பக்கத்தில் இருந்த சில கோவில்களுக்கும் சென்று வந்தோம். கிராமத்திற்குச் சென்ற
போது கிடைத்த அனுபவங்கள் சுகமானவை – அங்கிருக்கும் மக்கள், பல வருடங்களுக்குப்
பிறகு அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்த அவர்கள் காட்டிய பாசம், ஓடி ஓடி கொண்டு
வந்த பொருட்கள், அம்மா மற்றும் பெரியம்மா தாங்கள் வளர்ந்த, சிறு வயதில் ஓடியாடிய
தெருக்கள் பார்த்து சந்தோஷப்பட்ட தருணங்கள் என மிகவும் அற்புதமான ஒரு பயணம். கிராமத்தில் பார்த்த கன்னியம்மாவும்
பச்சையம்மனும் இன்னும் கண்களுக்குள்.....
மலை மீது இருக்கும் மரங்கள் யார் வரவுக்காக அணிவகுத்து நிற்கின்றனவோ?
மழையில் நனைந்து குளிரில் நடுங்கும் குடும்பம்!
ஏழைகளின் ஊட்டி: தமிழகத்தில்
சேலம் அருகே இருக்கும் ஏற்காடு – இந்த மலை வாசஸ்தலத்தினை ஏழைகளின் ஊட்டி என்று
அழைக்கிறார்கள். மே மாதத்தின் கடுமையான கோடையின் தாக்கத்திலிருந்து ஒரு நாளாவது
தப்பிக்க எண்ணி குடும்பத்துடன் சென்ற இடம் இந்த ஏற்காடு. நாங்கள் சென்ற அன்று
எங்களை வரவேற்கவே வந்த மழை – அடாது மழை பெய்தாலும் விடாது பார்த்து ரசித்த
சுற்றுலா தலங்கள், இயற்கையின் அழகில் அகமகிழ்ந்த தருணங்கள் என மிகவும் ரசித்த ஒரு நாள்
அது. இந்த பயணம் பற்றிய தகவல்களும், படங்களும் உங்களுடன் இதுவரை பகிர்ந்து
கொள்ளவில்லை.
இப்படி பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருந்தாலும், மேலே
சொன்ன இடைவெளியில்லாத வேலைச் சுமையின் காரணமாக எனது பதிவுகள் வருவதில் தாமதம்!
நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களுக்கு வருவதும் முடியாத விஷயமாக இருக்கிறது.
எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது மீண்டும் தொடர்ந்து வலையுலகில் உலா வருவது
நிச்சயம். தற்போதைக்கு ஒரு இடைவேளை!
முதல் பத்தியில் சொன்னது போல, இதுவரை எனது பதிவுகளைப்
படித்து ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. என்னையும் எனது
பதிவுகளையும் மறந்து விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு! அதை பொய்யாக்க
மாட்டீர்கள் என நினைக்கிறேன்!
சின்னதாய் ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமா? இந்த பயணங்களில்
எந்த பயணம் பற்றிய கட்டுரை உங்களுக்கு முதலில் வேண்டும் என்பதை சொல்லுங்களேன். உங்கள் ஓட்டு எந்த கட்டுரைக்கு என்பதை வலது
பக்கத்தில் இருக்கும் கருத்துக் கணிப்பின் மூலம் சொல்லுங்களேன்....
மீண்டும் சந்திப்போம்.......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
முந்தைய பதிவு - நாளைய பாரதம்-6 பார்த்து விட்டீர்களா?