தொகுப்புகள்

சனி, 26 பிப்ரவரி, 2022

காஃபி வித் கிட்டு - 142 - ஓவியம் - ஜீரோ கிலோமீட்டர் - தாம்பூலம் - வலைப்பூ அறிமுகம் - மோண்டா ரே - சத்தமா சொல்லு - பயணங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நாம் செய்யும் ஒரு விஷயத்தை சிறந்ததாக்க நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும்; முடிந்த அளவு அதை கடைசி வரை கொடுக்க வேண்டும்.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் - பென்சில் ஓவியங்கள் :

 

அலுவலக நண்பர் ஒருவரின் மகள் வரையும் ஓவியங்களை அவ்வப்போது என்னுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. அப்படி அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து இரு பென்சில் ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.  




  

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: ஜீரோ கிலோமீட்டர்

 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஜீரோ கிலோமீட்டர்

 

2014-ஆம் ஆண்டில் இதே நாளில் ஒரு குறும்படம் குறித்த பதிவு வெளியிட்டு இருந்தேன். அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

திருப்பூரிலிருந்து சென்னை எத்தனை கிலோமீட்டர் இருக்கும்? உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. சரி தெரிந்து கொள்ளலாம் என்றால் இருக்கவே இருக்கிறது கூகிள். தேடிப் பார்த்தேன். இப்படிக் காண்பித்தது கூகிள்.



அதாவது 457.6 கிலோ மீட்டர் தொலைவு. ஆனால் இவ்வளவு தொலைவு கிடையாது வெறும் 0 கிலோமீட்டர் தான் நினைத்த நேரத்தில் நீங்கள் திருப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்று விட முடியும் என்கிறார் Twilight Entertainments Pvt. Ltd. தயாரித்திருக்கும் Zero Kilometers குறும்படத்தில் .

 

அது எப்படின்னு கேட்கறீங்களா? வாங்க கதைக்குள் பயணிப்போம்.

 

கதையின் நாயகன் உலகநாயகன் தனது நண்பருடன் ஒரு ஜோசியரின் முன் அமர்ந்து இருக்கிறார். உலகத்தையே ஆளும் பெயருடைய உங்களுக்கு பிரச்சனை அது உங்கள் பூர்வீக சொத்தாக இருக்கும் வீட்டினால் தான் என்று சொல்கிறார் ஜோசியர். அதை விற்று விடவா என்று கேட்கும் நாயகனிடம் விற்பது கடினம். முயற்சித்துப் பாருங்களேன் என்கிறார் ஜோசியர்.

 

ஒரு வட இந்தியரிடம் 12 லட்ச ரூபாய்க்கு தனது பூர்விகமான வீட்டினை விற்றுவிடுகிறார் உலகநாயகன். பிறகு நண்பரும் அவருமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது வண்டி வழியில் நிற்க, நண்பர் வீட்டை விற்றாலும் உன் பிரச்சனை தீரலையே என்று சொல்கிறார். நின்ற இடத்தில் ஒரு பாழடைந்த வீடு. அதை நோக்கி இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்ள உலகநாயகன் செல்ல, அந்த வீட்டின் வாசல் நோக்கிச் செல்கிறார்.

 

முழு விஷயமும் தெரிந்து கொள்ள மேலே உள்ள சுட்டி வழி பதிவினை படிக்கலாமே!

 

******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள் - தாம்பூலம் :




 

நம் ஊரில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு தாம்பூலம் தரும் வழக்கம் இருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.  தாம்பூலம் என்றால் பையில் இரண்டு வெற்றிலை, ஒரு பாக்கு பொட்டலம், தேங்காய்/பழம் என ஏதோ ஒன்று மற்றும் சில வீடுகளில் ஒரு லட்டோ அல்லது மிக்ஸர் பாக்கெட்டோ இருக்கும்.  வடக்கிலும் தாம்பூலம் என்ற பெயரில் இல்லாமல் வரும் விருந்தினர்களுக்கு மிட்டாய் கா டப்பா அல்லது Bபாஜி என்ற பெயரில் காரம், இனிப்பு கலந்த பெட்டி கொடுப்பதுண்டு.  சிலர் திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போதே கொடுத்துவிட, சிலர் திருமணம் முடிந்து விருந்தினர் புறப்படும் போது கொடுப்பார்கள்.  அதற்காகவே அழகான அட்டைப் பெட்டிகள் கடைகளில் கொடுப்பார்கள்.  மொத்தமாக இத்தனை டப்பா, இன்னென்ன பொருட்கள் என சொல்லி விட்டால் அழகாக Pack  செய்து பைகளில் போட்டுக் கொடுத்து விடுவார்கள். பெட்டியில் வைக்கைப்படும் பொருட்களைப் பொருத்து பெட்டியின் விலை 300 ரூபாய் முதல் இரண்டாயிரம் வரை இருக்கலாம்! இதற்கெனவே நிறைய கடைகள் உண்டு - அப்படி ஒரு கடை மனோஹர் பிகானேரி”.

 

******

 

இந்த வாரத்தின் வலைப்பூ அறிமுகம் - கோபாலாக்ஷி கோர்ப்புகள் :

 

என் இல்லத்தரசியின் உறவினர் ஒருவர் புதியதாக வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இருக்கிறார்.  வாட்ஸப் வழி அவ்வப்போது அவரது எழுத்துகளை பகிர்ந்து கொண்டபோது, நீங்களும் எழுதலாமே என்று ஊக்கம் தந்தார்.  எங்கள் பக்கத்திலேயே கூட எழுதலாம் என்று சொல்ல, அவரது நண்பர் வலைப்பூ அவருக்காகவே தொடங்கலாம் என்று சொல்ல அவர் சமீபத்தில் வலைப்பூ ஒன்றை தொடங்கி இருக்கிறார்.  வலைப்பூவின் பெயர் கோபாலாக்ஷி கோர்ப்புகள். அவரது வலைப்பூவில் ஒரு பயணத் தொடர் ஆரம்பித்து இருக்கிறார் என்பதும் மகிழ்ச்சியான விஷயம் - பயணத்தின் முதல் பகுதி இங்கே!

 

அவரது வலைப்பூவை தொடர்ந்து வாசித்து கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே நண்பர்களே!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த பாடல் - மோண்டா ரே :

 

இசைக்கு மொழி தேவையில்லை என்று சொல்வதுண்டு.  அவ்வப்போது பல மொழியில் இசையைக் கேட்பதுண்டு.  அப்படி சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு பாடல் இந்த மோண்டா ரே பாடல்!  நீங்களும் கேட்டு ரசிக்கலாமே! 




 

மேலே உள்ள இணைப்பில் கேட்க இயலவில்லை எனில் இங்கேயும் கேட்டு ரசிக்கலாம்!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நகைச்சுவை - சத்தமா சொல்லு :



 

இந்த வாரத்தின் ரசித்த நகைச்சுவை ஒன்று உங்கள் பார்வைக்கு!

 

*****

 

இந்த வாரத்தின் தகவல் - பயணங்கள்


 

அலுவலகத்தில் ஒரு நண்பர் உண்டு - உத்திராகண்ட் மாநிலத்தினைச் சேர்ந்தவர்.  வருடத்திற்கு ஒன்றிரண்டு பயணமாவது மேற்கொண்டு விடுவார் - பெரும்பாலும் அவரது மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு தான்.  அதுவும் Trekking செய்யத் தகுந்த இடங்கள்.  கடந்த சில வருடங்களாக சென்று வந்த இடங்களில் எடுத்த படங்கள் பல இவரிடம் உள்ளது.  அவரை எழுதச் சொன்னால், எனக்கு எழுதுவது அவ்வளவு பழக்கம் இல்லை.  அவர் எடுத்த படங்களை என்னிடம் தருவதாகச் சொல்லியதோடு அனுபவங்களைச் சொல்வதாகச் சொல்லி இருக்கிறார்.  விரைவில் அவரது Trekking படங்கள் இந்தத் தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் கேதார் தால் என்ற இடத்தின் ஒரு படம் மாதிரிக்காக மேலே!

 

*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

36 கருத்துகள்:

  1. பென்சில் ஓவியங்கள் டாப்/  ஆனால் முதல் படத்தில் அந்தத் தொப்பிப் பெண்ணின் உதடு வரையப்பட்டிருக்கும் விதத்தால் அவள் வயதானவளோ என்று என்ன வைக்கிறாள்!  அடுத்த படத்தில் உதடோடு மூக்கும் குறுகி நேபாளி சாயல்! குழந்தை வரைந்ததில் குறை காணவில்லை.  கண்ணுக்கு எப்படி தெரிகிறது என்று மட்டும் சொல்லத்தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. இன்னும் வரைய வரைய அச்சிறுமியின் ஓவியங்களில் நேர்த்தி வந்து விடும் என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. குறும்படத்தின் கதை வசீகரிக்கிறது.  மிட்டாய் கா டப்பா நாமும் முயற்சிக்கலாம் என்றால் விலை இடிக்கிறது!  புதிய வலைப்பூ ஆரம்பித்திருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் குறித்த உங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரீராம். மிட்டாய் கா டப்பா ஒருமுறை முயற்சிக்கலாம். வலைப்பூ ஆரம்பித்திருக்கும் உறவினருக்கு வாழ்த்து சொல்லியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  3. மதன் ஜோக் எப்போதுமே ரசிக்க வைக்கக் கூடியது.  நண்பரின் ட்ரெக்கிங் படம்/அனுபவம்...  காத்திருக்கிறோம்.  சமீபத்தில் நாணி நடித்த யார் அந்த மணி என்று ஒரு படம் பார்த்தேன். அதில் தூத் காசி என்று சொல்லி அங்கு செல்வது பற்றி படம்.  அந்த இடங்களை ஞாபகப்படுத்துகிறது படம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதன் ஜோக்ஸ் எப்போதும் ரசிக்கக் கூடியவை தான். தூத் கோசி என்பது நேபாளில் இருக்கும் ஒரு ஆறு. அருமையான இடம் என்று சொல்வார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. முதற்கண் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பென்சில் வரைவுகள் - black and white photos போல, என்றும் சிறப்பானவை. வரைந்த குழந்தைக்கு வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் வரைந்த குழந்தையை வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
    2. நன்றி. நேற்று என் பதில்கள் நீண்ட நேரம் பதிவாகமலே இருந்தது கண்டு தொடர வில்லை. இப்போது பதிவாகி உள்ளது உறுதி ஆயிற்று. தொடர்கிறேன்.
      நான் வலைப்பூ தொடங்க காரணமாக இருந்த தங்கள் துணைவியாருக்கும் வலைப்பூவை அறிமுகப் படுத்திய உங்களுக்கும் நன்றி!
      புதிய நண்பர்களின் அறிமுகமும், ஆலோசனைகளும் கிடைக்கும். என் தமிழ் ஆர்வமும் மேம்படும். எனக்கும் பயணம் செய்வதில் ஆர்வம் உண்டு.பயணம் குறித்தான உங்களின் பதிவுகளை பார்க்கிறேன்.
      இயன்ற வரை தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். நன்றி!

      லலிதா

      நீக்கு
    3. Comment Moderation இருப்பதால் நீங்கள் பதிவிட்ட உடன் பதிவில் கருத்துக்கள் வெளிவராது. அதனை அனுமதித்த பிறகு வெளிவரும். தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வாசியுங்கள்.

      நீக்கு
  6. வலைப்பூ அறிமுகம் உட்பட அனைத்து பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. முதலில் கண்ணில் பட்டது - பயணம் - அந்தப் படம் . உங்கள் நண்பர் பகிர்ந்த தால் கேதார் படம். மனதைக் கட்டிப் போட்டது. அழகு....இங்கு ஒரு சிவன் கோயில் உண்டு இல்லையா? லிங்கம்மிகவும் பழமை வாய்ந்த லிங்கம் என்று வாசித்த நினைவு. ட்ரெக்கிங்க் பகுதி. உடனே எனக்கு ஆசையும் வந்துவிடும்! (கீதா ஆசையை அடக்கு என்று குட்டிக் கொள்வேன்!!!) என்னால் போக முடியாவிட்டாலும் இப்படிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து தெரிஞ்சுக்கலாமே என்றுதான் நெட்டில் தேடிப் பார்ப்பது வழக்கம்.

    விரைவில் உங்கள் நண்பர் பகிரும் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேதார் தால் பகுதியில் கோவில் கிடையாது. நம்மால் போக முடியாவிட்டாலும் அடுத்தவர்கள் பயணித்தது குறித்த கட்டுரைகளையும் காணொளிகளையும் ரசிக்கலாமே என்பதே எனது எண்ணமும். நண்பர் எடுத்த படங்கள் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிறும் வெளிவரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. அந்த இரண்டாவது படத்தின் பெண்ணைப் போலத்தான் குஞ்சுலு தலையை வாரி ரப்பர் பேன்ட் போட்டுக் கொள்ளும். பின்னக் கூடாதுனு கத்தும். :)))) அந்தப் படத்தைப் பார்த்ததும் குஞ்சுலு நினைவு (எப்போ இல்லை?) வந்து விட்டது. குறும்படமெல்லாம் சாவகாசமாப் பார்க்கணும். முயற்சி செய்கிறேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதாம்மா. எப்போதும் நினைவில் இருக்கும் உறவல்லவா.....

      நீக்கு
  9. மதனின் நகைச்சுவை அதிலும் இந்தக்குறிப்பிட்டது அடிக்கடி பார்த்துச் சிரித்தாலும் இப்போவும் பார்த்து ரசிக்க முடிகிறது. உத்தராகண்ட் தொடர் விரைவில் ஆரம்பிக்கப் போவது குறித்து மகிழ்ச்சி. நாங்களும் அதிகமாய் உத்தராகண்ட் போனதில்லை. பத்ரிநாத் தவிர்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதனின் நகைச்சுவை எப்போதும் ரசிக்கக் கூடியது தான். உத்தராகண்ட் குறித்த படங்களும் தொடரும் விரைவில் வெளிவரும் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  10. பென்சில் ஓவியங்கள் சூப்பர்.குறும்படத்தின் கதை விருவிருப்பாக இருக்கின்றது. மதன் ஜோக் அற்புதம்.மோண்டா ரே பாடல் ரம்மியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  11. என்ன ஒரு குரல்! பொறாமைப் பட வைக்கிறது. வாழ்த்துகள் அந்தப் பெண்ணிற்கு. இறைவன் கொடுத்த வரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறை கேட்டவுடனே பிடித்துவிட்டது இவரது குரல். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. குழந்தையின் ஓவியங்கள் வரைய வரைய தேர்ச்சியாகும்.
    பயணப்படம் நன்றாக இருக்கிறது . மதன் ஜோக்ஸ் சிரிப்பை தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி வெளியிட்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  13. அன்பின் வெங்கட்,
    என்றும் நலமுடன் இருங்கள்.
    முதலில் புதிய வலைப்பூவுக்கு நன்றி. அவர் மேலும் வளரட்டும்.
    தில்லி மிட்டாய் டப்பா
    எங்களுக்கும் அவ்வப்போது கிடைத்தது. மருமகள் உபயத்தில். மிக மிக நேர்த்தியாக
    சேர்க்கப்பட்டிருக்கும் இனிமை.

    குழந்தை வரைந்த ஓவியம் அருமை. பழகப் பழக
    சித்திரம் மேம்படும்.ஆசிகள்.

    டிரெக்கிங்க் போக முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
    உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்.
    அவர் வழியே உத்திராகண்ட் பார்க்க முடிந்தால் அதுவும் நாம்
    செய்யும் அதிர்ஷ்டமே.
    பயணங்கள் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா. வாழ்த்துகளுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உள்ளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  14. Sudipta Das பாடல் வேறு ஒன்றும் கேட்டிருக்கிறேன் ஒடிஷா ஹெலோ எஃப் எம் பஜன் ஒன்று பாடுவது - பஜன் என்றுதான் நினைக்கிறேன் பின்னால் விஷுவல்ஸ் ஸ்வாமி வந்தததால்..இதுவும் கேட்டேன் இப்போது. நல்ல வாய்ஸ் ரசித்தேன் ஜி.

    புதிய வலை அறிமுகம் கோபாலாக்ஷி..நோட் செய்து கொண்டுவிட்டேன்.பச்சைமலை பயணம் வாசிக்கிறேன் கருத்தும் இடுகிறேன் ஜி. அழகான மலை, இடம்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளில் பகிர்ந்த பாடலும் புதிய தளமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  15. குறும்படம் பார்த்தேன் ஜி. ஹஹாஹாஅ கடைசில பரண் வழியா அமெரிக்காவுக்கே போய்டறாங்க!!!

    பென்சில் ஓவியங்கள் செம. உங்கள் நண்பரின் மகளுக்கு வாழ்த்துகள்! ரொம்ப நல்லா இருக்கு. செம டேலன்ட். பாராட்டுகளையும் சொல்லிடுங்க ஜி

    வட இந்தியர்கள் இப்படி ஸ்வீட் / காரம் டப்பா கொடுப்பதுண்டு. என் தங்கை வீட்டிலும் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்த வட இந்திய நட்புகளுக்கு இப்படித்தான் கொடுத்தாங்க.

    எல்லாமே ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் குறிப்பிட்ட பகுதிகள் குறித்த உங்களது கருத்துரைகள் கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  17. அனைத்தும் அருமை.

    ஓவியம் வரைந்த குழந்தைக்கு வாழ்த்துகள்.
    பாடல் அருமை.
    ஜோக் சிரிக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்துகொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....