தொகுப்புகள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பதினொன்று - வேஷ்டியில் சினிமா!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

என்னைத் தேடி வரும் துன்பத்திடம் சிரித்துக் கொண்டே கேட்டேன் - யாருக்கும் என்னை பிடிக்காமல் போக, உனக்கு மட்டும் என்னை எப்படி பிடித்தது? அடிக்கடி வந்து என்னை சந்தித்துக் கொண்டிருக்கிறாயே? என்று கேட்டேன் - நான் வரும் பொழுதெல்லாம் சோர்ந்து விடாமல் என்னை எதிர்த்து நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க வந்தேன் என்றது - யாரோ!

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே!

 

யாரிவள்! பகுதி பதினொன்று - வேஷ்டியில் சினிமா!


 

சுட்டிப்பெண் வளர்ந்த சூழலான  அரசுக்குடியிருப்புக்கு அருகே நடக்கிற  தொலைவில் தான் கோவையின் பிரபலமான கே.ஜி தியேட்டர் இருந்தது! அதில் ராகம், தானம், பல்லவி, அனுபல்லவி என  நான்கு திரையரங்குகள்! இன்னும்  கோவையில் சாந்தி, கங்கா, யமுனா, காவேரி, அர்ச்சனா, தர்ச்சனா என நிறைய தியேட்டர்களும் உண்டு! இவையனைத்துமே கோவையின் அடையாளங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது!

 

இவையெல்லாம் இருந்தாலும் இவளின் குடியிருப்பில் மாதமொரு முறை சுவற்றில் திரையிடப்பட்ட  சினிமாக்களுக்குத் தான்  அப்போது எத்தனை ரசிகர்கள் இருந்தனர்!  குடியிருப்பில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பெரிதாக சுவர் ஒன்று வெள்ளையடிக்கப்பட்டு இருக்கும்! அதில் தான் சினிமாக்கள் காட்சிப்படுத்தப்படும்! இரவு நேரத்தில் மணலில் அமர்ந்து விசில் சத்தத்துடன் பார்த்த சினிமாக்கள் அவை!

 

சில சினிமாக்களை வேஷ்டியிலும் பார்த்திருக்கிறாள்!! இவர்கள் இருந்த ப்ளாக்குக்கு வெளியே தார்ச்சாலை போடப்பட்டிருக்கும். எதிரே, பக்கத்தில் என மற்ற ப்ளாக்குகளும் அமையப்பட்டிருக்கும் அந்த இடத்தில் தான் வேஷ்டியில் படம் பார்த்திருக்கிறாள்! 

 

அப்போது வாகனங்களின் பயன்பாடு  குறைந்திருந்ததால் ஜனங்களின்  நடமாட்டம் பெரிதாக இருக்காது. இரவு 9 மணியோடு ஊரே அடங்கி விடும்! அதனால் ரோட்டில் அமர்ந்து கொண்டு சினிமா பார்த்திருக்கிறாள்! பாதி சினிமாவில் அம்மாவின் மடியில் தூங்கிக் கொண்டு சினிமா பார்த்த நாட்கள் மனதில் பசுமையானவை! ரோட்டில் அமர்ந்து கொண்டிருந்ததெல்லாம் கனவாக போய்விட்ட விஷயங்களில் ஒன்றாகும்! 

 

அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் இரவு உணவை முடித்துக் கொண்டு அங்கே ஒன்று கூடி விடுவர்! ப்ரொஜெக்டர் மூலம் அங்கே திரையிடப்பட்ட சினிமாக்களில் வேஷ்டிக்கு பின்னேயோ, சுவற்றுக்கு பின்னேயோ தான் யாரோ ஒருவர் நின்று அதை காட்சிப்படுத்துகிறார் என்று தான் இவள் நினைத்துக் கொண்டிருந்தாள்..🙂 தனக்கு பின்னாலிருந்து தான் இந்தப் படம்  வெளியாகிறது என்பதெல்லாம் புரியாத பருவம்..🙂 பின்பு விவரம் தெரிந்த போது வியப்பாக இருந்தது..🙂

 

அப்போது பார்த்ததெல்லாமே கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் தான்!  பெரியவர்களின் விருப்பமாக தான் அங்கே ஒளிபரப்பப்பட்டது! இந்த மாதிரி சுவற்றில் பார்த்த சினிமாக்களில் ஒன்றாக  வேர்க்கடலையை சுவைத்துக் கொண்டே  'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு' என்று சிவாஜி பாடியவாறு வரும் காட்சி ஏனோ இவள் மனதோடு ஒட்டிக் கொண்ட காட்சியாக மாறிப் போனது..🙂

 

அம்மா, தம்பி, எதிர் வீட்டு அத்தை இவர்களுடன் சின்ன வயர்க்கூடையில் நொறுக்குத் தீனியும், தண்ணீரும் எடுத்துச் சென்று பார்த்த சினிமாக்கள்! கோடை விடுமுறையில் பிறந்த மண்ணான சிவகங்கையில் பார்த்த சினிமாக்கள்! அம்மா, மாமா, மாமி என மூவரும் 'மை டியர் லிசா'வுக்குச் செல்ல பாட்டியோடு 'சம்பூர்ண ராமாயணம்' ரிக்ஷாவில் சென்று பார்த்த நினைவுகள்! என்று பசுமையாய் மனதிற்குள் பூட்டி வைத்த பொக்கிஷ நினைவுகள் ஏராளம்!

 

இவளின் பார்வையில் இன்னும் பல காட்சிகள் பகிர்ந்து கொள்ள இருக்கிறாள்.. அடுத்தடுத்த பகுதிகளில் அவற்றைக் காணலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. நானும் நிறைய படங்கள் இப்படி திறந்தவெளித்த திரையரங்கில் தஞ்சையிலும், மதுரையிலும் பார்த்திருக்கிறேன்.  நினைவிலிருந்து நீங்காத நாட்கள் அவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திறந்த வெளி திரை அரங்குகளில் படம் பார்த்த அனுபவங்கள் எனக்கு இல்லை! உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. இன்றைய வாசகம் அருமை.
    நானும் வீதியில் அமர்ந்து திரைப்படம் பார்த்த நினைவுகள் மனதில் விரிகிறது.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      உங்கள் நினைவுகளை இப்பதிவு தூண்டி விட்டது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. அருமையான புகைப்படம்! இனிமையான மலரும் நினைவுகள்! 👌👏👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. அருமயான நினைவுகள்.

    நானும், திருச்சி, தஞ்சையில் திறந்தவெளியில் சினிமா பார்த்து இருக்கிறேன்.

    பழைய படங்கள் தான் நீங்கள் சொல்வது போல பெரியவர்கள் விரும்பும் படமே போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களது அனுபவங்களை நினைக்க ஒரு வாய்ப்பு அளித்தது என்று அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  6. நானும் இப்படி ராசிங்கபுரத்தில் இருந்த போது பார்த்திருக்கிறேன். அருமையான நல்ல நினைவுகள்
    சிறு வயது நினைவுகள் அனைத்தும் பொக்கிஷம் தான். புகைப்படம் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. அருமையான நினைவுகள்...

    ஆஹா ஆதி இப்படித்தான் நானும் ஊரில் இருந்த போது படங்கள் கோயில் தேரடியில் போட்டுப் பார்த்திருக்கிறேன். கீச்சு கீச்சுத்தாம்பாளம் விளையாடிக் கொண்டே...கொறித்துக் கொண்டே..ம

    திரைக்குப் பின்னாடிருந்து யாரோ நடிக்கிறார்கள் என்றும் நினைத்திருந்த காலம். பழையப்டங்கள் மட்டுமே போடுவார்கள் பெரும்பாலும் சிவாஜி. எப்போதாவது எம் ஜி ஆர் படங்கள்

    தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் தேரடியில் பார்த்த படங்கள் - நினைவுகள் இனிமை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. அருமையான நினைவுகள். அந்த காலங்களில் திரைபடங்கள் பார்ப்பது ஒரு வேடிக்கையான நிகழ்வுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  9. நல்ல அனுபவங்கள். எமது ஊரில் தியேட்டர் மட்டும்தான் இந்த அனுபவங்கள் இல்லை.
    வளர்ந்த பின் இந்திய பயணத்தில் ஒருதடவை டென்ட் சினிமா பார்த்தேன் அதுதான் புதிய அனுபவம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....