தொகுப்புகள்

சனி, 10 ஜூன், 2023

காஃபி வித் கிட்டு - 173 - முயற்சி - Backpacker - கஸ்தூரி பாட்டி - Reels மோகம் - பொம்மைகள் தினம் - நாலுமணி பூவு - வெத்தலப்பட்டி

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணத்தின் முடிவு - வீடு திரும்பல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : முயற்சி திருவினையாக்கும்…



தலைநகர் தில்லி - தில்லி போலீஸ்-இல் Head Constable ராம் பஜன் குமார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.  சமீபத்தில் வெளியான UPSC தேர்வு முடிவுகள் வழி முயற்சி திருவினையாக்கும் என்கிற வாக்கினை மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்திருக்கிறார்.  கடந்த ஏழு முறை அவர் இந்தத் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் எட்டாம் முறையும் மனம் தளராது தேர்வில் பங்குபெற்று, அத்தேர்வில் வெற்றி பெற்ற 933 பேரில் 667-ஆவது இடத்தினைப் பெற்றிருக்கிறார்.  முழு தகவலும் படிக்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி ஆங்கிலத்தில் இந்தத் தகவலை நீங்களும் படிக்கலாம்! இது போன்ற முயற்சியாளர்கள், பலருக்கும் உதாரணமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கும் உதாரணமாக இருந்தது தற்போது தில்லி போலீசில் பணிபுரியும் ஒரு ACP என்றும் சொல்லி இருக்கிறார் ராம் பஜன் குமார்! அவர் தனது அரசுப் பணியில் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள். 


Meet Ram Bhajan Kumar, Delhi Police Head Constable Who Cracked UPSC Exam In 8th Attempt- Read His Success Story | India News | Zee News


******


இந்த வாரத்தின் பயணம் : Backpacker Kumar…



சமீபத்தில் நண்பர் திருப்பதி மகேஷ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது Backpacker Kumar என்கிற YouTuber குறித்து தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது எப்படி என்று YouTube-இல் நிறைய காணொளிகள் வெளியிட்டு இருப்பதாகவும், நிறையவே தகவல்கள் இருப்பதாகவும் சொன்னார்.  சரி என்று நானும் சென்ற வார இறுதியில் இந்த நபரின் சில காணொளிகளை பார்த்தேன். பல நாடுகளுக்குச் சென்று தொடர்ந்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார் இந்த குமார்.  அப்படி நான் பார்த்து ரசித்த ஒரு காணொளி கீழே! இவரது YouTube தளத்திற்கு 148000 பின்தொடர்பவர்கள் இருக்கிறார்களாம்.  தமிழில் பேசியபடி பல நாடுகளின் தகவல்களை இவர் பகிர்ந்து கொள்வது நன்றாகவே இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று இவற்றையெல்லாம் பார்ப்பது முடியாத என் போன்றவர்களுக்கு இது ஒரு நல்ல வசதி. உங்களுக்கும், ஐரோப்பாவின் Stolac என்ற சிற்றூரில் இருக்கும் ஒரு அருவி குறித்த தகவல் சொல்லும்  இந்தக் காணொளி உங்களுக்கும் பிடிக்கலாம். பாருங்களேன். 


 

மேலே உள்ள காணொளியை பார்க்க முடியவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்! 


🦋ஐரோப்பிய கிராமத்தில் ஒரு நாள் ❤️ | Bosnia Ep 14| Europe Budget Backpacking Vlog in Tamil - YouTube


******


பழைய நினைப்புடா பேராண்டி : கஸ்தூரி பாட்டி


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கஸ்தூரி பாட்டி - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


ஒரு சில பேரை பார்த்தாலே பிடிச்சு போகிற மாதிரி இருக்கும். சிலரைப் பார்க்கும்போதே ஒரு வெறுப்பு மனசுல தோணும். இது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவான விஷயம் தானே. அப்படி முதல் தடவை பார்க்கும்போதே பிடிக்காத ஒரு மனுஷி தான் இந்த கஸ்தூரி பாட்டி. இதுக்கும் அவங்க யாரு, என்ன, சொந்தமா, பந்தமா ஒண்ணுமே தெரியாது. இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை. ஆனா ஏனோ பார்த்த உடனே பிடிக்காது போனது.


எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்திலே இருக்காங்க இந்த கஸ்தூரி பாட்டி. கணவன் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட, குழந்தைகள் இல்லாத பாட்டி ஒரு தனிக்கட்டை! சொத்துபத்துன்னு பெரிசா ஒண்ணும் இல்லை. கஸ்தூரி பாட்டியோட புருஷன் ஒரு ஆசாரி. மர வேலை பார்த்து தான் அவங்களோட பொழப்பை ஓட்டிட்டு இருந்தாங்க. கிடைக்கிற காசுல ஒண்ணும் பெரிசா சேர்த்து வைக்க முடியல. அன்னாடங்காய்ச்சி பொழப்பு தான்.


தனக்குன்னு புள்ளை குட்டி இல்லைன்னாலும், தம்பி, மைத்துனன், அக்கா, தங்கச்சின்னு உறவு முறை எல்லாம் உண்டு. அவங்களும் புள்ள குட்டிகளோட நல்லா இருக்காங்க. அவங்களோட வந்துடச் சொன்னாலும் ஏனோ கஸ்தூரி பாட்டிக்கு அது சரியா படல. அதனால “என் உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் நான் உழைச்சு தான் சாப்பிடுவேன்னு” ரொம்ப பிடிவாதமா இருக்கா.


முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே! இந்த கஸ்தூரி பாட்டி இந்த வருட தொடக்கத்தில் இறந்து போனார்.  அவரது சொந்தத்தில் இருந்த ஒருவர் தான் இறுதிக் காரியங்கள் செய்தார் - பாட்டி விட்டுச் சென்ற காசு வைத்து! மறக்க முடியாத கதை மாந்தர்களில் ஒருவராக கஸ்தூரி பாட்டி இன்றும் நினைவில்! 


******


இந்த வாரத்தின் எண்ணங்கள்  : Reels மோகம் 



சென்ற ஞாயிறு அன்று தலைநகர் தில்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் இருக்கும் மலை மந்திர் சென்று வந்தேன்.  தலைநகரில் இருக்கும் தமிழ் கோவில்களில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று இந்த மலை மந்திர்.  மலை என்ற சொல்லை ஆங்கிலத்தில் MALAI என்று எழுதுவதால் உள்ளூர் வாசிகள் அனைவரும் இவ்விடத்தினை மலாய் மந்திர் என்று ஆக்கிவிட்டார்கள்! தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் என பலரும் வந்து செல்லும் இடம் இது.  தரைத்தளத்தில் அழகான சன்னதிகள் இருப்பதோடு, சற்றே மேட்டுப்பாங்கான பகுதியில் (சிறு மலை என்றும் சொல்லலாம்) முருகன் சன்னதியும் உண்டு. இறைவனை தரிசித்து அந்த மலைப்பகுதியில் அமர்ந்து கொண்டிருந்தபோது ஒரு குழுவாக இரண்டு பெண்கள், குழந்தைகள், ஒரு ஆண் என வந்தார்கள். அந்த இரண்டு பெண்களும் சேர்ந்து அங்கே ஒரு ஹிந்தி பாடலை ஒலிக்க விட்டு  நடனம் ஆட ஆரம்பித்து விட்டார்கள்.  அந்த ஆண் அதனை காணொளியாக (Reels) எடுத்துக் கொண்டிருந்தார்.  ஒரு வழிபாட்டுத் தலத்தில் இது போன்ற விஷயங்கள் செய்வது சரியல்ல என்று அவர்களுக்கு கொஞ்சம் கூடத் தெரியவில்லை.  தலைநகர் தில்லியில் இது போன்ற விஷயங்களுக்கு நிறைய இடங்களிருக்க, ஓர் வழிபாட்டுத் தலத்தில் இது தேவையா என்று தோன்றியது.  அவர்களிடம் சொல்லியும் விட்டேன்! முணுமுணுத்தபடியே அங்கிருந்து அகன்றார்கள். கோவில்களில் எதையும் செய்யலாம் என்று இவர்கள் போன்றவர்களுக்குத் தோன்றிவிட்டது! காலம் செய்த கோலம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல? ஒன்றும் சொல்வதற்கில்லை! 


******


இந்த நாளின் தகவல் - பொம்மைகள் தினம் :  



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை (இந்த வருடம் இன்றைய தினமான 10 ஜூன் 23), உலக பொம்மைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறதாம்! பொம்மைகள் குழந்தைகளுக்குத் தரும் அன்பு மற்றும் மகிழ்ச்சியினைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் பொம்மைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.  இந்த நாளை எப்படிக் கொண்டாடலாம் என்று கேட்டால், ஒரு பொம்மை கூட இல்லாத குழந்தைக்கு ஒரு பொம்மையைக் கொடுக்கச் சொல்லி இந்த நாளின் கொண்டாட்டம் உங்களை ஊக்குவிக்கிறதாம்! இதைக்குறித்து படித்தபோது, நான் எனது குழந்தைப் பருவத்தினை யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்து பெரிதாக பொம்மைகள் வைத்து நான் விளையாடியது கிடையாது. வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு சாமான்கள் தான் எனக்கு பெரும்பாலும் விளையாட்டுப் பொருளாக இருந்திருக்கிறது. இப்போது இருப்பது போல Soft Toys-ஓ, சிறு வண்டிகளோ எதுவும் எனக்கு என் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்தது இல்லை.  உறவினர்களும் அப்படி வாங்கிக் கொடுத்ததாக நினைவில்லை. உங்களுக்கு அப்படி பொம்மைகள் கிடைத்திருக்கிறதா? பொம்மைகள் குறித்த உங்கள்  நினைவுகள் என்ன? பகிர்ந்து கொள்ளுங்களேன்! 


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல்  - நாலுமணி பூவு : 


இந்த வாரத்தின் ரசித்த பாடலாக மஹேஷும் மாருதியும் என்ற மலையாளப் படத்திலிருந்து நாலுமணி பூவு என்று தொடங்கும் ஒரு இனிமையான பாடல் உங்கள் பார்வைக்கு. சிறு வயதில் நாம் ருசித்துச் சாப்பிட்ட தேன்மிட்டாய், முழு நெல்லிக்காய் என பல விஷயங்களை நினைவு படுத்திய பாடல்… பாருங்களேன். 


 

மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


Naalumani Poovu Song | Maheshum Marutiyum | Asif Ali | Mamta Mohandas | Sethu | Kedar | Hari Sankar - YouTube


*****


இந்த வாரத்தின் ரசித்த கதை - வெத்தலப்பட்டி : 


சமீபத்தில் சொல்வனம் தளத்தில் படித்த ஒரு சிறுகதை - வெத்தலப்பட்டி.  தெரிசை சிவா அவர்கள் எழுதிய கதை எனக்கு பிடித்திருந்தது.  உங்களுக்கும் பிடிக்கலாம்.  கதையிலிருந்து சில வரிகள் உங்கள் கவனத்திற்கு…


துரை பாட்டா அடிமைப் பெண் படத்தை ஐம்பத்து ஏழு தடவை பார்த்த எம்ஜிஆர் ரசிகர். சரியாகச் சொன்னால் எம்ஜிஆர் பக்தர். ஒல்லியான தேகம். ஒருகால் ஊனம். ஒருபுறமாய்ச் சாய்த்து கிண்டி,கிண்டி நடந்தாலும், நல்ல கால்கள் வைத்திருப்பவர்களை விட வேகமாக நடப்பவர். மழைக் காலத்தில் மட்டும் சட்டையணிபவர். மற்ற நேரங்களில் குற்றாலம் துண்டும், வடசேரி நெய்வு வேட்டியும் தான் முழு நேர உடை. எண்ணை தேய்த்து வழித்துவாரிய தலையும்,நெற்றி நடுவே பெருவிரல் அகலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் அம்மன் கோவில் குங்குமமும் அவர் குளித்ததைப் பறை சாற்றும் அடையாளக் குறிகள். உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் ரேசன் கடையில் கிடைத்த அரசு சலுகை வேலையை, வேண்டாமென்று ஊதித் தள்ளிய ரோசக்காரர். “என் கழிவ பாக்காம, கால்ல….. இருந்த ஊனத்தைப் பார்த்து கிடைச்ச வேலை… மயிருக்குச் சமானம் டே.,,- என்று இப்போதும், சில பேரிடம் உதார் விடுவதுண்டு. ஊர் பஸ்டாண்டில் இருக்கும் அரச மரமும் அதன் நிழலில் இருக்கும் கூரைவேய்ந்த பெட்டிக்கடையும்தான் அவர் உலகம்.


முழுக்கதையும் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம். 


வெத்தலப்பட்டி – சொல்வனம் | இதழ் 295 |28 மே 2023 (solvanam.com)

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

22 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் ரசித்தேன். சில சுட்டிகள் வழி சென்று படிக்கவேண்டும்.

    சிறு வயதில் பொம்மையா? பழைய மரப்பாச்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

    பெண்ணுக்கு சாஃப்ட் பொம்மை, ஆளுயரம், வாங்கிக்கொடுத்தாள் மனைவி (பெண்ணின் 18+ல்). அது தூசி படர்ந்து உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரப்பாச்சி பொம்மை - எங்கள் வீட்டிலும் கொடுத்திருப்பார்கள். நினைவில் இல்லை.

      சாஃப்ட் பொம்மை - அழுக்கு சேர்ந்து விடும் என்பது நானும் சொல்வது. எங்கள் மகளுக்கும் ஆசை - ஆனால் அவளுக்குச் சொல்லி புரிய வைத்தோம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. தோல்வியடைந்த படிக்கட்டுகளில் ஏறி, அவற்றை அனுபவங்களாகக் கொண்டு வெற்றியடைந்த ராம் பஜன் குமார் பாராட்டுக்குரியவர்.  கஸ்தூரிப் பாட்டி ஏற்கெனவே படித்திருக்கிறேன்.  ரீல் எடுக்க வந்தவர்களிடம் உங்கள் கண்டனத்தைச் சொன்னது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. அனைத்துப் பதிவுகளும் அருமை..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நண்பரே.

      நீக்கு
  4. அனைத்தும் அருமை காணொளி அருவி மிகவும் அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. ராம் பஜன் குமார் - ராபர்ட் புரூஸ்! இப்படியானவர்கள் பிறருக்கு நல்ல உதாரணம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ஆஹா!! backpack குமார் மனதைக்கவர்ந்துவிட்டாரே. யுட்யூபைக் குறித்துக் கொண்டுவிட்டேன். பார்த்துவிடுகிறேன் ஜி, கண்டிப்பாக. ஆமாம் இப்படிப் போகும் வாய்ப்பு எல்லாம் கிடைக்குமா தெரியவில்லை. நம்மூரிலேயே இதோ அடுத்திருப்பதற்கே போக முடியலை...ஹாஹாஹா!!! இப்படியான காணொளிகளைக்கண்டு நம் ஆசையைத் தீர்த்துக் கொண்டுவிடலாம்..!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்ட ஐரோப்பிய கிராமம் செமையா இருக்கு...அருவி, பெரிய ஓடை அதன் ஓரங்களின் வீடுகள்...அழகு...

      ரீல்!!! ஹாஹாஹா நீங்கள் சொன்னது ரொம்பச் சரி, ஜி. அவங்க என்ன வேணா நினைச்சிக்கட்டும்...
      மலை மந்திர் அழகான கோயில்

      எனக்கும் சிறு வயதில் எந்த பொம்மைகளும் கிடைத்ததில்லை. ஒரே ஒரு பொம்மை பெண் குழந்தை போன்ற பொம்மை (கை கால்கள் கழுத்து எல்லாம் தனியாகப் பிரிக்கலாம் அதற்கு உடை போட்டிருக்கும். இலங்கையில் இருந்தப்ப வீட்டிற்கு வந்த விருந்தினர் ஒருவர் கொடுத்தது. அதை ரொம்ப வருடங்களாக வைத்திருந்தேன். மற்றபடி எல்லாமே வீட்டுப் பொருட்கள்தான்...

      கீதா



      நீக்கு
    2. ராம் பஜன் குமார் குறித்த தகவலும், Backpacker குமார் குறித்த தகவலும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. காணொளி வழி பார்த்த ஐரோப்பிய கிராமம் எனக்கும் பிடித்தது கீதா ஜி.

      ரீல்ஸ் - சொல்ல வேண்டாம் என்று தான் பார்த்தேன் - ஆனால் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

      பொம்மைகள் குறித்த உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அட! நாலுமணிப்பூவு....இங்கும் . இந்தப் பாட்டு இங்கு மீண்டும் கேட்டேன். அழகான காட்சிகள் ஆமாம் நம் சிறு வயது நினைவுகள்...ஊர் காட்சிகள் அழகு..கேரளாவின் இயற்கை..பாட்டும் ரசனையான பாட்டு,

    கஸ்தூரிப் பாட்டியின் பெயர்க்காரணம், அவங்களின் உழைத்துச் சாப்பிடும் மனம், "கட்டைல போறவனே என்று டிவி பார்க்கும் போது மின்சாரம் தடைபட்டால் சொல்லும் வரி என் பாட்டியின் நினைவையும் எழுப்பிய, ரோஷினி எடுத்த புகைப்படத்தோடான அந்த...அருமையான பாட்டி பற்றி வாசித்தேன், ஜி.

    சொல்வனம் கதை வாசிக்கிறேன்...எங்க ஊர்ப்பக்கக் கதை போல இருக்கிறதே!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு மணிப்பூவு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      கஸ்தூரி பாட்டி - மனதைக் கவர்ந்தவர்.

      சொல்வனம் கதை - முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வெத்தலப்பட்டி கி ரா வின் ""தொண்டு'" என்ற சிறுகதையில் வரும் காமம்மா வை ஒத்து இருக்கிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை - மகிழ்ச்சி ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா.

      நீங்கள் சொல்லும் கி.ரா.வின் கதை படித்த நினைவில்லை. இணையத்தில் தேடி படிக்கத் தோன்றுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. தெரிசை சிவா என்று வாசித்ததுமே தெரிசனங்கோப்பு அட நம்ம ஊர்ப்பக்கம் என்றும் தோன்றியது...அந்த ஊரும்கதையில் வருகிறதே அதைச் சுற்றியுள்ள ஊர்களும்...எங்க ஊர் வட்டார மொழியும்....சாதாரண மக்கள் கதையின்ந கதாபாத்திரங்களாய்...யதார்த்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிசை சிவா அவர்களின் கதையை வாசித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பாராட்டுக்குரியவர் ராம்பஜன் குமார். பொன்மொழி சிறப்பு. ரீல்ஸ் ‘மோகம்’ என சரியாகச் சொல்லிவிட்டுள்ளீர்கள்! நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....