எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 10, 2013

கஸ்தூரி பாட்டி


ஒரு சில பேரை பார்த்தாலே பிடிச்சு போகிற மாதிரி இருக்கும். சிலரைப் பார்க்கும்போதே ஒரு வெறுப்பு மனசுல தோணும். இது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவான விஷயம் தானே. அப்படி முதல் தடவை பார்க்கும்போதே பிடிக்காத ஒரு மனுஷி தான் இந்த கஸ்தூரி பாட்டி. இதுக்கும் அவங்க யாரு, என்ன, சொந்தமா, பந்தமா ஒண்ணுமே தெரியாது. இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை. ஆனா ஏனோ பார்த்த உடனே பிடிக்காது போனது.

எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்திலே இருக்காங்க இந்த கஸ்தூரி பாட்டி. கணவன் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட, குழந்தைகள் இல்லாத பாட்டி ஒரு தனிக்கட்டை! சொத்துபத்துன்னு பெரிசா ஒண்ணும் இல்லை. கஸ்தூரி பாட்டியோட புருஷன் ஒரு ஆசாரி. மர வேலை பார்த்து தான் அவங்களோட பொழப்பை ஓட்டிட்டு இருந்தாங்க. கிடைக்கிற காசுல ஒண்ணும் பெரிசா சேர்த்து வைக்க முடியல. அன்னாடங்காய்ச்சி பொழப்பு தான்.

தனக்குன்னு புள்ளை குட்டி இல்லைன்னாலும், தம்பி, மைத்துனன், அக்கா, தங்கச்சின்னு உறவு முறை எல்லாம் உண்டு. அவங்களும் புள்ள குட்டிகளோட நல்லா இருக்காங்க. அவங்களோட வந்துடச் சொன்னாலும் ஏனோ கஸ்தூரி பாட்டிக்கு அது சரியா படல. அதனால “என் உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் நான் உழைச்சு தான் சாப்பிடுவேன்னுரொம்ப பிடிவாதமா இருக்கா.

அரசாங்கம் மாசா மாசம் ஆயிரம் ரூபாய் முதியோர் ஓய்வூதியம் தருது. அதுதான் முக்கிய வருமானம். அக்கம் பக்கத்து வீடுகள்ல வாச தெளிச்சு கோலம் போடுறது, துணி தோய்க்கிறது, வயல்ல களை புடுங்க போறது, மாங்கா தோப்பு, வாழைத்தோப்புகள்ல வேலை செய்யறதுன்னு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கா கஸ்தூரி பாட்டி! செய்யற வேலைகள்ல அப்படி ஒரு சுத்தம். யாரும் ஒரு குறை சொல்லிடக் கூடாதுன்னு வேலைல ஒரு முனைப்பு உண்டு.

அரிசி மில் ஒன்றில் கூட்டி பெருக்கற வேலையும் செய்யறதுல ஏதோ மாசத்துக்கு 100-200ன்னு கிடைக்குது. அங்கேயே இருக்கற சின்ன மூலைல தன்னோட பாத்திரம் பண்டம், துணிமணி எல்லாம் வச்சுக்கிட்டு இருக்கும். பெரிசா ஒண்ணும் இல்ல மொத்தமா ஒரு சாக்கு மூட்டைல கட்டற அளவு தான் சாமான்செட்டல்லாம். அந்த மூலைலயே கொஞ்சமா மண் எடுத்து வந்து தானே மொழுகி செஞ்சு வச்சிருக்கிற விறகடுப்பு. யாரு கிட்டயும் சோத்துக்குப் போய் நிக்கக்கூடாதுன்னு தனி ஆளுக்கு சமைச்சு சாப்பிடுற ஆளு கஸ்தூரி பாட்டி.

வயசுன்னு பார்த்தா எப்படியும் 65-70 இருக்கும். ஆனா இப்பவும், காலைல நாலு-நாலரைக்கா எழுந்து வீட்டு வாசல்ல [அந்த மூலைதான் பாட்டியைப் பொறுத்தவரைக்கும் வீடு] தண்ணி தெளிச்சு, கோலம் போட்டுட்டு, எங்க பெரியம்மா வீட்டுலயும் வாசல் தெளிச்சு கோலம் போட்டுடுவாங்க பாட்டி. ஏதோ கொடுக்கற வேலையெல்லாம் செஞ்சுட்டு போவாங்க. யாருகிட்டயும் எதுவும் சாப்பிட வாங்கிக்காத பாட்டி குழம்பு, ரசம் வாங்கிக்கறது எங்க பெரியம்மா கிட்ட மட்டும்தான்.

பாட்டிக்கு சாயங்கால வேளைல பொழுது போகணுமே. அதனால பெரியம்மா வீட்டுக்கு வந்து ஒரு ஓரமா உட்கார்ந்து டி.வி.ல போடற ஒரு சீரியல் விடாம பார்ப்பாங்க. கரண்ட் இல்லைன்னா கரண்ட் காரன் கட்டைல போக, இப்படி நல்ல நேரத்துல புடுங்கிட்டானேன்னு ஒரு திட்டு வேற! சீரியல் பார்ப்பாங்கன்னு தானே சொன்னேன். ஏன்னா அவங்களுக்கு சுத்தமா காது கேக்காது. ‘காது காதுன்னா ‘லேது லேதுன்னு சொல்றவங்க!

நாங்க பேசறதெல்லாம் கேட்கலையே, சீரியல இப்படி விழுந்து விழுந்து பார்க்கறயே பாட்டின்னு கேட்டா பொக்கை வாயில் ஒரு சிரிப்பு. கொஞ்ச நேரம் கழிச்சு சொல்வாங்க “நான் பேசறது எனக்கு நல்லாத்தானே கேட்குது, அப்புறம் நீங்க எல்லாரும் எனக்கு காது கேட்கலைன்னு பொய் சொல்றீங்க! கஸ்தூரி பாட்டி போட்டாங்களே ஒரு போடு.

அட ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். கஸ்தூரி பாட்டிங்கறது அவங்களோட உண்மையான பேர் இல்ல. நாங்க வைச்ச பேருதான். தொடர்ந்து “கஸ்தூரிசீரியல் நேரத்துக்கு கரெக்டா பெரியம்மா வீட்டுக்கு வந்து பார்த்ததனால என்னோட துணைவி அவங்களுக்கு வெச்ச பேரு தான் கஸ்தூரி பாட்டி. அவங்களோட உண்மையான பேரு என்னன்னு நானும் இது வரைக்கும் கேட்கல, அவங்களும் சொல்லல!

பெரிய சம்பாத்தியம்னு ஒண்ணும் இல்லைன்னாலும், கிடைக்கிற காசுல, செலவு போக கொஞ்சம் பணம் சேர்த்து வச்சுருக்காங்க கஸ்தூரி பாட்டி. எதுக்குன்னு கேட்டா சொல்றாங்க, செத்தா செலவுக்கு வேணுமே, இருக்கும்போதே யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிற நான், செத்து யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது இல்லையா?”.  உண்மை தான்.

உருவம் பார்த்து யாரும் நல்லவங்களா, கெட்டவங்களான்னு முடிவு பண்ணக்கூடாது. எல்லார் கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்னு புரிய வைச்ச பாட்டி கஸ்தூரி பாட்டி.... அதான் திருவள்ளுவர் அன்னிக்கே சொல்லி இருக்காரே....

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

படித்துப் புரியாதது அனுபவத்தில் தானே புரிகிறது!இவங்க தான் கஸ்தூரி பாட்டி. என் மகள் ரோஷ்ணி அவங்கள புகைப்படம் எடுக்கணும்னு தானே எடுத்த படம்!

என்ன நண்பர்களே, பதிவினைப் படித்து ரசித்தீர்களா....  மீண்டும் வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:


 1. //செத்தா செலவுக்கு வேணுமே, இருக்கும்போதே யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிற நான், செத்து யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது இல்லையா?”. உண்மை தான்.//


  நானும் அதே கேஸ்தான்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா......

   Delete
 2. இருக்கும்போதே யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிற நான், செத்து யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது இல்லையா?”.
  கஸ்தூரி பாட்டியின் வாழ்க்கை இலக்கணம் ,யதார்த்த உண்மை.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். இப்படி சிலர் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வாழ்க்கைப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 3. ரோஷ்ணி ஷேக் எதுவும் இல்லாம தெளிவா இந்த வயசுலயே படம் எடுத்திருக்காளே... புலிக்குட்டி! சில பேரை பாத்தா பிடிக்காது... பாக்க பாக்கதான் பிடிக்கும். கஸ்தூரி பாட்டி அந்த ரகம் போலருக்கு! தன் இறுதிச் செலவுக்குக் கூட இப்பவே ப்ளான் பண்ற அவங்க தன்மானம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ஸாரே!

  ReplyDelete
  Replies
  1. //சில பேரை பாத்தா பிடிக்காது... பாக்க பாக்கதான் பிடிக்கும்.//

   உண்மை தான் கணேஷ்.

   ரோஷ்ணி புகைப்ப்டம் எடுப்பதில் எனக்கும் மகிழ்ச்சி தான்.... எப்பவும் நானே ஃபோட்டா எடுப்பதால், நான் எந்த ஃபோட்டாவிலும் இருப்பதில்லை. இப்பல்லாம், எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஃபோட்டோ எடுப்பது அவள் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 4. நல்ல மனம். இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடும், மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் அந்த நல்ல மனத்துக்கு ஒரு சல்யூட்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஸ்ரீராம்.... அவருக்கு நல்ல மனம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  2. நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க....

   Delete
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. படமும் பின்புலமும் பிரமாதம். தானே தனக்குத் துணை என்று இந்த வயதிலும் வாழ்ந்து காட்டுவது பாராட்ட வேண்டிய விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. படத்தின் பின்புலம் பராய்த்துறை நாதர் கோவிலின் பின் புறச் சுவர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 6. // “என் உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் நான் உழைச்சு தான் சாப்பிடுவேன்னு” ரொம்ப பிடிவாதமா இருக்கா.// அற்புதம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 7. படித்துப் புரியாதது அனுபவத்தில் தானே புரிகிறது!

  பாராட்டுக்கள்.....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. உருவம் பார்த்து யாரும் நல்லவங்களா, கெட்டவங்களான்னு முடிவு பண்ணக்கூடாது. எல்லார் கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்னு புரிய வைச்ச பாட்டி கஸ்தூரி பாட்டி.... அதான் திருவள்ளுவர் அன்னிக்கே சொல்லி இருக்காரே....

  உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
  அச்சாணி அன்னார் உடைத்து//


  .அருமையான கருத்துடன் கூடிய பதிவு
  பாட்டியின் சந்தோஷம் அவர்கள் சிரிப்பிலேயே
  உணர முடிகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பாட்டியின் சந்தோஷம் - படம் பிடிக்கும்போது வெட்கத்தில் வந்த சிரிப்பு அது.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. Replies
  1. தமிழ்மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. கஸ்தூரி பாட்டி மனம் கவர்ந்து விட்டார்கள்... வாழ்த்துக்கள் அவர்களுக்கு...

  ரோஷ்ணி அவர்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. //“கஸ்தூரி” சீரியல் நேரத்துக்கு கரெக்டா பெரியம்மா வீட்டுக்கு வந்து பார்த்ததனால என்னோட துணைவி அவங்களுக்கு வெச்ச பேரு தான் கஸ்தூரி பாட்டி.//

  ;))))) நல்லா இருக்கு. பாராட்டுக்கள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. //நான் பேசறது எனக்கு நல்லாத்தானே கேட்குது, அப்புறம் நீங்க எல்லாரும் எனக்கு காது கேட்கலை”ன்னு பொய் சொல்றீங்க!// ச்ச என்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்... பிரமிக்கிறேன் ... நிஜமாக

  ஆனால் ஏன் பிடிக்காது போனது என்ற காரணம் எங்கும் காணோமே ?

  ஓ உருவுகண்டு என்பது தான் காரணமா, இருந்தாலும் பெயர் தெரியா அந்த கஸ்தூரி பாட்டியை பிடித்துப் போனதே மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. அதே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 13. கஸ்தூரிப் பாட்டியின் தன்மானம் நெகிழ வைக்கிறது.
  நல்ல ஒரு ஜீவனை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்!
  நல்ல பெயர் கொடுத்திருக்கிறார் ஆதி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 14. அந்தக் காலத்து மனுசங்க ரொம்பப் பேர் இப்படியான வீராப்பில் இருக்காங்க...மனதை ஜெயித்த கஸ்தூரி பாட்டி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 15. நல்ல வாழ்க்கைச் சித்திரம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா....

   Delete
 16. எனக்கென்னவோ கஸ்தூரிப் பாட்டியைப் பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. முதல் பார்வையில் பிடிக்காமல் போன உங்களையும் அவர்களைப் பற்றிப் பதிவெழுத வைத்துவிட்டாரே...பலே பாட்டிதான். ரோஷ்ணி எடுத்த புகைப்படம் நல்ல நேர்த்தி. பாராட்டுகள் அவளுக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். முதலில் பிடிக்காது போனாலும் பதிவெழுதும் அளவுக்குப் பிடித்து விட்டது இப்போது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 17. கஸ்தூரி பாட்டி பற்றி தெரிந்துகொண்டேன். அவங்க உழைப்பும், பொறுப்பும் நமக்குலாம் வருமா?

  ReplyDelete
  Replies
  1. நமக்குல்லாம் வருமா?

   டவுட்டு தான்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 18. மனசை நெகிழ்த்தும் மனிதர்கள்...

  ரோஷ்ணி படம் வரைவதில் மட்டுமின்றி எடுப்பதிலும் திறமையாளி தான்!

  காது கேட்கும் கான்செப்ட் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. காது கேட்கும் கான்செப்ட் ரசித்தேன்.... :) நானும் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 19. கஸ்தூரிப் பாட்டிக்கு வாழ்த்துகள்.இந்த வயசிலும் உழைத்துச் சாப்பிடும் நல்ல மனதைப் பாராட்ட வேண்டும். யாருக்கும் பாரமாகிவிடக் கூடாது என்ற எண்ணத்துக்கு ஒரு சல்யூட்!

  ReplyDelete
  Replies
  1. நல்ல எண்ணம் அவருக்கு......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 20. “தன்மானத் தமிழச்சி“ கஸ்தூரி பாட்டி வாழ்க!

  (கஸ்தூரி என்ற பெயர் பிடிக்காதோ....
  கவலையாக இருக்கிறது... ம்ம்ம்...)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 21. மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்ற அவரின் உயர்ந்த உள்ளம் தன்னம்பிக்கை பாராட்டப்படவேண்டும்.

  ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....