எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 12, 2013

பிரம்ம சரோவர் [ரத்த பூமி பகுதி 2]


சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று சில படங்களை ரத்த பூமி – ஒரு புகைப்பட முன்னோட்டம் என்ற தலைப்பில் வெளியிட்டு அடுத்த பயணத் தொடர் புதன் கிழமை ஆரம்பிக்கப் போவதாக எழுதியிருந்தேன். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமல்லவா....  இதோ பயணத் தொடரின் இரண்டாம் பகுதி.பிரம்ம சரோவர் – ஒரு காட்சி

ஒரு நாள் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஏப்ரல் 6-7 தேதிகளில் குருக்ஷேத்திரம் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு உன் பெயரையும் கொடுத்துவிட்டேன் என தகவல் சொன்னார். சரி இன்னொரு முறை போயிட்டு தான் வருவோமே, அதுவும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி இருக்கப் போவதால், சற்றே நிதானமாக பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கலாம் எனத் தோன்றியது.

வெள்ளிக்கிழமை இரவே தில்லியிலிருந்து நான்கு பேருந்துகளில் குருக்ஷேத்திரப் பயணம் தொடங்கியது. நான்கு பேருந்துகள் எனில் எங்கள் குழுவில் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள், ஏன்னா கணக்குடன் எனக்குப் பிணக்கு! இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி இரண்டு மூன்று இடங்களிலிருந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு தில்லி எல்லையை அடைவதற்குள் 11.45 மணி. இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் எல்லையைக் கடப்பது இந்த பேருந்து ஓட்டுனர்களுக்குப் பழக்கம் – ஏனெனில் இரவு பன்னிரெண்டு மணியிலிருந்து தான் நாள் கணக்கு தொடங்கும். 11.45 எனில் இரண்டு நாட்களுக்கு வரி வாங்கி விடுவார்கள். அப்படி இப்படி என தில்லி எல்லையைக் கடக்கும் போது இரவு 12.30 மணி. அந்த நடு இரவிலும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு “உறங்கா நகரம்எனத் தோன்றியது.

தில்லியிலிருந்து குருக்ஷேத்திரம் கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர். தில்லியிலிருந்து பாக்பத், சோனிபத், பானிபத், கர்னால் போன்ற இடங்களைக் கடந்து சென்றால் இரண்டரை முதல் மூன்றரை மணி நேரத்தில் நீங்கள் குருக்ஷேத்திரத்தினை அடைய முடியும்.  தொந்தரவில்லாது சுகமான பயணம் முடிந்து காலை 4 மணிக்கு குருக்ஷேத்திரம் சென்றடைந்தோம்.


 ஜாட் மஹா சபா – விடுதியின் ஒரு பகுதி


குருக்ஷேத்திர நகரம் முழுவதும் பல தங்கும் விடுதிகள், சத்திரங்கள் என பரவியிருக்கிறது. அதுவும் சிறிய விடுதிகள் அல்ல, பெரிய பெரிய விடுதிகள். ஒரே இடத்தில் 200-300 அறைகள் கொண்ட விடுதிகள் கூட உண்டு. கொடுக்கும் காசுக்கேற்ப அறைகள் கிடைக்கும் – 300 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை அறைகள் இருக்கின்றன.  ஜாட் மஹா சபா என்ற ஒரு அமைப்பு இப்படி ஒரு மிகப் பெரிய தங்கும் விடுதியைக் கட்டி வைத்திருக்கிறது. பிரம்ம சரோவருக்கு மிக அருகிலேயே இருப்பதால் இங்கே தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள் பயணத்தினை ஏற்பாடு செய்திருந்தவர்கள். சற்றே இளைப்பாறிவிட்டு பிரம்ம சரோவரில் குளிக்க, காலார நடந்து சென்றோம்.

குருக்ஷேத்திரம் – கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த மஹாபாரதப் போர் நடந்த இடம், கிருஷ்ணர் கீதோபதேசம் உரைத்த இடம், அர்ஜுனனுக்கும், பீஷ்மருக்கும் விஸ்வரூபம் காண்பித்த இடம் எனப் பல இடங்களை தன்னுள் கொண்ட ஊர். புராணங்களில் இடம் பெற்ற இந்த ஊர் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. பிரம்ம தேவர் குருக்ஷேத்திரத்திலிருந்து தான் ஒரு பெரிய யாகத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலையே தொடங்கினார் என சில புராணக் கதைகளும் இருக்கின்றன.

வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து போனபடியே இருக்கும் இடம் இது. அதுவும் மௌனி அமாவாசை [ஜனவரி – ஃபிப்ரவரி மாதங்களில், அதாவது தை மாதத்தில் வரும் அமாவாசை நாள்] மற்றும் சூரிய கிரகண நாட்களில் இங்கே லட்சக்கணக்கில் வந்து தங்கி, பிரம்ம சரோவரில் குளித்து தங்களது பாபங்களைப் போக்கிக் கொள்வதற்காக வருகிறார்கள். தெரியாது செய்த பாபங்களைத் தான் போக்கிக் கொள்ள முடியுமே தவிர, தெரிந்தே பல பாபங்கள் கணக்கில் வராது! இந்த பிரம்ம சரோவரில் குளிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலன் தரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பிரம்ம சரோவர் – கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் முன்னோர்களான குருஎனும் அரசனால் உருவாக்கப்பட்டது. படைப்புக் கடவுளான பிரம்மா தனது முதல் யாகத்தினை இங்கே தான் செய்தார் எனச் சொல்லப்படுகிறது.  இது ஒரு மிகப் பெரிய குளம். 1800 அடி நீளமும் 1400 அடி அகலமும் கொண்டது இந்த பிரம்ம சரோவர்.  குருக்ஷேத்திரக் குளம், சமந்த பஞ்சகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இக்குளத்தில் இருக்கும் தண்ணீர் சரஸ்வதி நதியிலிருந்து உருவாக்கப்பட்டது என்ற கதையும் உண்டு.வாழ்க்கையில் மட்டுமல்ல,,,,
குளத்திலும் வழுக்கி விழுந்து விடக்கூடாது

எந்த நேரத்திலும் இங்கே குளித்தபடி இருக்கிறார்கள். நாங்கள் சென்ற காலையிலும் நிறைய மக்கள் – குளத்தினைச் சுற்றிலும் படித்துறைகள் இருப்பதால் நிதானமாக குளிக்கலாம். என்ன கொஞ்சம் கவனமாக இறங்க வேண்டும் – படிகள் முழுவதும் பாசி. ஆங்காங்கே வழுக்கி விழும் ஆபத்து இருக்கிறது என எழுதி வைத்திருக்கிறார்கள். தண்ணீரில் இறங்கும்போது ஏப்ரல் மாத கோடையிலும் தண்ணீர் ஜில்லென்று சுகமாக இருக்கிறது. சுகமான ஒரு குளியல்.....  காவேரி நதியில் குளித்த அனுபவம் நினைவுக்கு வந்தது. அகண்ட காவேரி தற்போது வறண்ட காவேரியாக மாறி இருப்பதை நினைத்து வருத்தம் தான் மிஞ்சியது.

பிரம்ம சரோவர் பற்றிய மேலும் சில விவரங்கள், அங்கே கண்ட காட்சிகளோடு ரத்த பூமி தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. அழகான விடுதி, பிரம்ம சரோவர் பற்றிய தகவல்களுடன் இனிய பயணம் அருமை... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. வாழ்க்கையில் மட்டுமல்ல,,,,
  குளத்திலும் வழுக்கி விழுந்து விடக்கூடாது

  பாசம் இருந்தால் வழுக்கும் இரண்டிலுமே..!

  ReplyDelete
  Replies
  1. //பாசம் இருந்தால் வழுக்கும் இரண்டிலுமே!//

   உண்மை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 4. படங்களும், பயணக்கட்டுரையும் இனிமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. வாழ்க்கையில் மட்டுமல்ல,,,,
  குளத்திலும் வழுக்கி விழுந்து விடக்கூடாது

  பாசம் இருந்தால் வழுக்கும் இரண்டிலுமே..!//

  அட ஆமால்ல.....

  எங்களையும் சுற்றி காட்டியமைக்கு நன்றி நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 6. அழகான படங்களுடன் அருமையான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 7. சுவாரஸ்யமான தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
  //பாசம் இருந்தால் வழுக்கும் இரண்டிலுமே..!//
  ஆஹா... R R மேடம்!:))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. ...ஆனால் உங்கள் படங்களில் எங்கள் பார்வைகள் வழுக்காமலே விழுந்து கிடக்கின்றனவே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. கண் கொள்ளாக் காட்சி
  அருமையான புகைப்படம் நேரில் பார்க்கிற
  உணர்வைத் தந்தது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. பிரம்ம சரோவர் பற்றிய தகவல்களுடன் அருமையான பயண விவரம். தொடருங்கள் தங்களின் பயணத்தை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 13. நான்கு வருடங்களுக்கு முன் வேளுக்குடி ஸ்வாமியுடன் இங்கு போய்விட்டு வந்தோம். மொத்தம் 3௦௦௦ பேர்!அத்தனை பேரும் நீங்கள் சொல்லியிருக்கும் ஜாட் மகா சபா விடுதிகளில் தான் தங்கினோம்.
  எத்தனை பெரிய சரோவர்! எங்கள் குழுவிலும் பலர் வழுக்கி விழுந்தனர்!
  எங்களைப்போல சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அத்தனை பெரிய நீர் நிலை மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது! ஆசை தீர நீராடினோம்.

  உங்களுடன் மீண்டும் இங்கெல்லாம் வருவது ஆனந்தமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   ஆஹா நீங்களும் சென்று வந்தீர்களா.... மிக்க மகிழ்ச்சி. சரோவர் பார்க்கவே ஆனந்தமாகத் தான் இருந்தது. அதுவும் விடிகாலையில் சென்று அமைதியான சூழலில் இருந்தது மனதிற்கும் பிடித்திருந்தது.....

   Delete
 14. பிரம்மஸரோவர் பிரமிக்க வைக்கிறது.
  குருட்சேத்திரப் போர் நடந்த இடத்தின் பெயருக்காவத் நினைவுச் சின்னம் போல் ஏதானுமிருக்கிறதா?

  சாலை வரி சேமிக்கும் (ஏய்க்கும்?) சாமர்த்தியம் சுவை.

  ReplyDelete
  Replies
  1. ஊர் முழுவதும் சின்னங்கள் தான்...

   சாலை வரி ஏய்ப்பதில் இந்தியர்கள் எத்தர்கள்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 15. பிரம்மசரோவர் கண்டு குளித்து மகிழ்ந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 16. //வாழ்க்கையில் மட்டுமல்ல,,,,
  குளத்திலும் வழுக்கி விழுந்து விடக்கூடாது

  பாசம் இருந்தால் வழுக்கும் இரண்டிலுமே..!//

  இராஜராஜேஸ்வரி அம்மாவின் கருத்துரை கவர்ந்தது..

  குளத்தில் தண்ணீரைப் பார்த்ததில் ஆனந்தம். அருமையான பதிவு..வாழ்த்துகள் வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....