எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 19, 2013

சர்வேஷ்வர் மகாதேவ் [ரத்த பூமி பகுதி 3]


சென்ற பகுதியில் பார்த்த பிரம்ம சரோவரின் நடுவே அமைந்திருப்பது தான் இந்த சர்வேஷ்வர் மகாதேவ் கோவில். பிரம்ம சரோவரின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்ல ஒரு சிறிய பாலம் அமைத்திருக்கிறார்கள். பிரம்ம தேவரே இந்தக் கோவிலில் இருக்கும் சர்வேஷ்வர் சிவலிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்ததாக நம்பிக்கை உள்ளது. பாண்டவர்களின் தாயான குந்தி தேவியும் இந்த சிவலிங்கத்தினை தான் பூஜித்ததாகவும், அந்த இடத்தில் இப்போது இருக்கும் கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் பாபா க்ஷ்ரவன் நாத் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்றும் கோவிலில் உள்ள பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

கோவில் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. வேறு விஷயங்கள் சொல்வதற்கும் எவரும் இல்லை! அதனால் உள்ளே சென்று என் வழியில் [வேறென்ன ஒரு கும்பிடு! அவ்வளவு தான்] வழிபட்டு வெளியே வந்தேன்.

இந்தக் கோவிலையும், கோவில் அமைந்திருக்கும் பிரம்ம சரோவரையும் ஒரு முறை சுற்றி வந்தால் குருக்ஷேத்திரத்தில் இருக்கும் அத்தனை தீர்த்த ஸ்தலங்களையும் சுற்றி வந்த பலன் கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். ஹிந்தியில் கோஸ் [Kos] எனச் சொல்லும் அளவில் 48 கோஸ் [முட்டைக்கோஸ் இல்லீங்க இந்த கோஸ்!] உடையது இந்த குருக்ஷேத்திரத்தின் சுற்றளவு. ஒரு கோஸ் என்பது 1 முதல் 4 கிலோ மீட்டர் அளவு உடையது.பட உதவி: கூகிள்.
 

பழைய காலங்களில், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு இப்படி கோஸ் மினார்என்ற ஒரு கோபுரத்தினைக் கட்டி வைப்பது வழக்கம். தில்லியில் கூட இப்படி ஒரு கோஸ் மினார் இருக்கிறது. தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் கூட இது போல ஒரு கோஸ் மினார் பார்த்திருக்கிறேன். 

இந்த பிரம்ம சரோவர் – சர்வேஷ்வர் மஹாதேவ் கோவில் அருகில் உள்ள மேடையில் ஒரு இளைஞர் கீழே அமர்ந்து வரைந்து கொண்டிருந்தார். என்ன வரைகிறார் எனப் பார்த்தபோது ஆங்காங்கே அமர்ந்திருக்கும் பலரை அவர் கோடுகளால் வரையப் பழகிக் கொண்டிருந்தார். பக்கத்திலேயே இருக்கும் குருக்ஷேத்திரப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் அவர் தனது வரையும் திறமையை, கை ஓட்டத்தினைப் பக்குவப்படுத்த இப்படி வரைந்து பார்ப்பதாகச் சொன்னார். நிமிடங்களில் அங்கிருக்கும் பலரை கோடுகளாக வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார். அவரையும், அவர் கோடுகளாக வரைந்த ஒரு உருவத்தினையும் நான் புகைப்படம் எடுத்தேன்.

கோவில் வெளியிலும், பிரம்ம சரோவர் சுற்றி அமைத்திருக்கும் பாதையிலும் நிறைய காவி வேட்டி கட்டிய சாமியார்களையும், யாசகம் கேட்பவர்களையும் பார்க்க முடிகிறது. குளிக்கும்போது கரையில் வைத்திருக்கும் பொருட்களையும் ஒரு கண் பார்த்துக் கொண்டே குளிப்பது அவசியம். இல்லையெனில் நொடியில் காணாமல் போய் விடுகிறது. எங்களுடன் வந்த ஒருவரின் பேண்ட் இப்படித்தான் காணாமல் போனது! நல்ல வேளை வேறு வேட்டி இருந்தது!

கூடவே யாசகம் கேட்பவர்கள் கொஞ்சம் அசிங்கமாகவும் நடந்து கொள்கிறார்கள். ஒரு ஆள் இப்படித்தான் வந்து ஒரு பெரியவரிடம் காசு கேட்க, அவர் முதல்ல குளிக்கவிடுப்பாஎன்று சொல்ல, அவரை கன்னா பின்னாவென திட்டியபடிச் சென்றார். திட்டிச் சென்ற மொழி ஹிந்தி என நீங்கள் நினைத்து விடாதீர்கள்! சுத்தமாய் தமிழில் திட்டிச் சென்றார்!  காலம் காலமாக குருக்ஷேத்திராவிலேயே தங்கி விட்ட தமிழ் காரர்! இத்தனைக்கும் அந்த பெரியவர் குளித்தபின் தருகிறேன் எனச் சொன்னபிறகும் இப்படி திட்டு கிடைத்தது!

இப்படியாக பிரம்ம சரோவரில் சுகமான குளியலும், சிவனின் தரிசனமும் ஆனபிறகு வயிறு கொஞ்சமாய் சத்தம் கொடுப்பது கேட்டது. நாங்கள் தங்கியிருந்த ஜாட் மஹா சபாவிற்குச் சென்றால் வாசலிலேயே இட்லி சாம்பார் வாசனை மூக்கைத் துளைக்க, நேரே சென்றது சாப்பிடத்தாங்க!

இன்னும் சில விவரங்களோடு உங்களை அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

குறிப்பு: கடந்த திங்கள் கிழமை வெளியிட்டு என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் அப்டேட் ஆகாத என்னுடைய பதிவு - ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி திருக்கோவில். நேரமிருந்தால் படிக்கலாமே!    

24 comments:

 1. கண்டு ரசித்தோம்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுக்கள் ஜி.

  //நாங்கள் தங்கியிருந்த ஜாட் மஹா சபாவிற்குச் சென்றால் வாசலிலேயே இட்லி சாம்பார் வாசனை மூக்கைத்துளைக்க, நேரே சென்றது சாப்பிடத்தாங்க!//

  ஆஹா! மூக்கைத்துளைக்க வைத்த அந்த இட்லி சாம்பார் வாசனை பற்றியும் ஓர் தனிப்பதிவு கொடுங்கோ. ;)))))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா இட்லி - சாம்பார் பற்றியும் ஒரு பதிவு எழுதிட்டாப் போச்சு..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. அதிகாரத்துடன் யாசகம் கேட்கும் பழக்கம் அதிகரித்து விட்டது போல.... பகிர்வு அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 4. கூடவே பயணித்தோம்... நன்றி...

  ஆவலுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. சிறப்பானதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் சகோ பயணம் மேலும்
  தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

   Delete
 6. வாசலிலேயே இட்லி சாம்பார் வாசனை மூக்கைத் துளைக்க, நேரே சென்றது சாப்பிடத்தாங்க!//
  விழுப்புரத்தை சேர்ந்த முருகன் இட்லிகடையா நீங்கள் சாப்பிட்டது?

  குருக்ஷேத்திராவிலேயே தங்கி விட்ட தமிழ் காரர்கடையில் இட்லி, சாம்பார் வாங்கி சாப்பிட்டார்கள், மகன், மகள் எல்லாம் .நாங்கள் இருவரும் ஞாயிறு விரதம் என்பதால் சாப்பிடவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இல்லை. எங்களுடன் வந்திருந்த சமையல்காரர்கள் செய்த இட்லி சாம்பார். வெளியே சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 7. அந்த இளைஞர் வரைந்த படம் அருமை சகோ! இட்லி, சாம்பார் வாசனை ஓக்கே.., எவ்வளவு பைசா ஒரு இட்டிலி?

  ReplyDelete
  Replies
  1. பைசாவுக்கு இட்லியெல்லாம் இன்னும் கிடைக்குதா என்ன!

   தில்லியில் இரண்டு இட்லி, சட்னி சாம்பார் உடன் கிட்டத்தட்ட 20 ரூபாயிலிருந்து கிடைக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 8. சரோவரின் நடுவில் கோயில் அமைந்திருப்பது கொஞ்சம் பொற்கோயிலை நினைவுபடுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். பொற்கோவில் பெரியது. இந்தக் கோவில் அவ்வளவு பெரியதல்ல...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 9. பிரம்ம சரோவர் – சர்வேஷ்வர் மஹாதேவ் கோவில் பற்றி சிறப்பான பகிர்வுகளுக்க்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. சுவாரஸ்யம்.

  படம் வரைந்ததைப் படமெடுத்திருக்கிறீர்கள், வரைந்து கொண்டிருந்தவரைப் படம் எடுத்தீர்கள், யாரை வரைந்தாரோ அவரையும் எடுத்திருந்தால் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே! :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   அவரைப் படம் எடுத்தாலும் இங்கே வெளியிடத் தடை! :)

   Delete
 11. எங்களுக்கெல்லாம் அந்த சரோவர் கரையிலேயே உட்கார வைத்து சாப்பாடு போட்டனர். அதனால் வெளியே சாப்பிடவில்லை. நிறைய பேர் எங்கெங்கோ போய் சாப்பிட்டோம் என்று சொன்னார்கள். எனக்குக் கூட அந்த சரோவரை ஒரு சுற்று சுற்ற வேண்டும் என்றிருந்தது. ஆனால் சுற்றளவு பார்த்து சும்மா இருந்துவிட்டேன்.
  மறக்க முடியாத பயணம் இது.
  உங்கள் மூலம் மறுபடி எல்லா இடங்களையும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் வெளியே சாப்பிடவில்லை. எங்கள் உடனேயே சமையல் கலைஞர்களையும் அழைத்துச் சென்றிருந்தோம். அதனால் சாப்பாடு முழுவதும் அவர்கள் கொடுத்ததே.... சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். சுவையான உணவு இரண்டு நாட்களுக்கும்..... விவரங்கள் பிறகு எழுதுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 12. சர்வேஷ்வர் மகாதேவ் கோவில் கண்டுகொண்டேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....