தொகுப்புகள்

வெள்ளி, 13 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - பகுதி ஐந்து - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வருடத்தின் சதுரகிரி பயணம் குறித்த அனுபவங்களை சில பகுதிகளாக இது வரை வெளியிட்டு இருக்கிறேன் - அதற்கான சுட்டி கீழே…   


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஒன்று


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி இரண்டு


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி மூன்று


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி நான்கு


தொடரின் அடுத்த பகுதியும், நண்பர் பத்மநாபன் அவர்களின் வார்த்தைகளில் - ஓவர் டு பத்மநாபன் - வெங்கட் நாகராஜ்.


*******


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பத்மநாபன்:



சுந்தர மகாலிங்க சன்னதியில்  தரிசனத்திற்குப் பிறகு  சந்தன மகாலிங்கம் சன்னதிக்கு உண்ட மயக்கத்திலேயே ஏறத் தொடங்கினோம். நல்ல அருமையா படிக்கட்டு போட்டிருந்தது. நிதானமா ஏறி சன்னதியை அடைந்தோம். வெங்கட் அந்த அர்ச்சகரை அறிமுகப் படுத்திக் கொண்டதில் சந்தன மகாலிங்கத்தின் சன்னதி முன் அமர்ந்து சிறப்பான தரிசனம் கிடைத்தது. அப்படியே சந்தன மகாதேவியையும் வணங்கி, “கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்” ன்னு அந்த பரம்பொருளை வேண்டி வெளியே வந்தோம்.



சந்தன மகாலிங்கம் சன்னதியை தொட்டே ஒரு நல்ல நிழல் கூடம். பார்த்ததுமே “எக்ஸ்க்யூஸ் மீ” ன்னு ஒரு குரல். வேற யாருமில்ல, நம்ம கால்தான். அவர் குரலுக்கு மரியாத குடுத்து கொஞ்சம் சுவர்ல சாஞ்சு உக்காந்தோம். ஒரு அஞ்சு நிமிஷம் ஆயிருக்கும்,  “எக்ஸ்க்யூஸ் மீ” ன்னு இன்னொரு குரல். யாருன்னு பார்த்தா நம்ம இடுப்பு. சரி சரின்னு சமாதானப் படுத்தி அப்படியே பையை தலைக்கு வச்சு கொஞ்ச நேரம் கட்டய நீட்டினோம். இந்த கண்ணு இருக்கே ஒரு பர்மிஷனும் கேட்கலை. அது பாட்டுக்கு ஒரு தூக்கத்தைப் போட்டுது. ஒரு பனிரெண்டு பன்னிரெண்டரை இருக்கும், அண்ணாச்சி, அண்ணாச்சின்னு கூப்பிடற மாதிரி இருந்தது. நம்ம வெங்கட்தான். மலையிலேர்ந்து இப்ப இறங்க ஆரம்பிச்சா சரியாயிருக்கும்னு சொல்ல எந்திரிச்சு ரெடியானா, பக்கத்துல தம்பி மதியழகன் ஆனந்த துயில்ல இருந்தாரு. அவரையும் கையோட எழுப்பி இறங்கத் தொடங்கினோம். 



ஏறும்போத விட இறங்கும் போது கொஞ்சம் எளிதா இருக்கும்ன்னு தோணுச்சு. ஆனா இறங்கும் போது கல்லும் மண்ணும் கொஞ்சம் அதிகமாவே கால்ல குத்துக மாதிரி இருந்தது. ஏறும்போது தண்ணி கூட குடிக்காம வந்த தம்பி மதி ஜூசு ஜூசுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாரு. அப்படியே ரெண்டு மூணு இடத்துல மோரும் ஜூசும் குடிச்சு குடிச்சு இறங்கத் தொடங்கினோம். கொஞ்சம் கவனக் குறைவா கால வச்சாலும் லொடுக்குப் பாண்டியாக மாற வேண்டியதுதான். அதனால நிதானமாவே இறங்கினோம். மேல ஏறும்போது எங்கள ஓவர்டேக் பண்ணிப் போன அதே ரெட்டைக் கிழவிங்களும் இப்போ இறங்கும்போதும் எங்களை ஓவர்டேக் பண்ணி அனாயாசமா போய்க்கிட்டே இருக்காங்க. கடைசி வர அவங்கள எங்களால ஓவர்டேக் பண்ண முடியலியே!





இறங்க இறங்க தூரம் கூடிக் கிட்டே இருக்க மாதிரி இருக்கு. போகும் போது பேசிக்கிட்டும் அரட்டை அடிச்சுக்கிட்டும் போட்டோ எடுத்துக்கிட்டும் போனோம். ஆனா இறங்கும் போது சத்த மூச்சக் காணோம். காலும் உடம்பும் கெஞ்சுது. ஒரு வழியா வழுக்குப் பாறை வந்துட்டுது. வழக்குப் பாறை இப்போ கொதி நிலைக்கு வந்து ஆம்லெட் போட ரெடியான மாதிரி கொதிக்குது. கையிலே கொம்பு வச்சிருந்தவங்க எல்லாம் குச்சுப்புடி ஆடிகிட்டே இறங்குறாங்க. எங்க கிட்டே கொம்பு இல்லாததால நாங்க ஆடிய பாதங்கள் அம்பலத்தேன்னு பரதநாட்டியம் ஆடிக்கிட்டே வழுக்குப் பாறைய தாண்டினோம். 




உடனே ஒரு சின்ன நீர் நிலை. குதிரையூத்துன்னு நினைக்கேன். எல்லோரும் அங்க செட்டில் ஆயிட்டாங்க. தண்ணிக்குள்ள கால தொங்கப் போட்டுக்கிட்டு இருக்க சொர்கமே அங்க வந்த மாதிரி இருந்தது. தண்ணிக்குள்ள நீந்திக்கிட்டு இருந்த குஞ்சு குஞ்சு மீன்கள் காலை கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தது. நடக்கும் போது அக்கு பஞ்சர்னா இப்போ அக்வா பிளெஷர். எந்திச்சு வர மனசில்லதான். ஆனாலும் வீட்டில் மனைவியின் முகம் நினைவுக்கு வர நடைய தொடர்ந்தாச்சு. ஒரு வழியா அடிவாரத்தை எத்தினோம். அங்கே ஒரு சாமியார் ஆனந்த நிலையிலிருந்தார். வெறும் கையை சங்குபோல் வாயில் வைத்து சங்க நாதம் எழுப்பிக்கிட்டு இருந்தாரு. பார்த்ததுமே தெரிஞ்சுது அரசாங்கத்துக்கு கலால் வரி கட்டி முக்தி நிலைக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார்னு. அவரை குறை சொல்ல முடியாது. காலையில் மலையேறுவோரிடம் பெற்ற பணத்தை சேத்து வச்சு வீடு வாங்கணுமா, பிள்ளைகளை படிக்க வைக்கணுமா, இல்லை, பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணுமா. எந்த கவலையும் இல்லாமல் செலவழிக்கட்டுமே. 





இப்படியாக சதுரகிரி மலைப்பயணத்தை இனிமையாக நிறைவு செய்து தாணிப்பாறையிலிருந்து ஆட்டோ பிடித்து கிருஷ்ணன்கோவில் வந்தோம். அங்கேயிருந்து வெங்கட்டும் மதியழகனும் மதுரைக்கு பஸ் பிடிக்க நான் ராஜபாளையம் நோக்கி பஸ் ஏறினேன். அப்படியே திருவில்லிப்புத்தூர் பெருமாளை, மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனை, பஸ்ஸிலிருந்தபடியே மனதில் சேவித்து ராஜபாளையம் வந்து சேர்ந்தேன். சாயங்காலம் ஆறு மணி ஆச்சு. உடனே திருநெல்வேலிக்கு பஸ் கிடைச்சா பத்து மணிக்கெல்லாம் நாகர்கோயில் வீடு போய் அடி வாங்காம தப்பிச்சிரலாம். எதுக்கும் ராஜபாளையத்துல திருவில்லிபுத்தூர் பால்கோவா கொஞ்சம் வாங்கி வச்சுப்போம்ன்னு வாங்கியாச்சு. ராஜபாளையத்துல இன்னொரு விஷயம் கவனிச்சேன். பஸ் ஸ்டாண்டுல ஒரு தெரு நாயக் கூட காணல. நாய்களை தெருவில் விடாமல் அங்குள்ள மக்கள் கவனிச்சுகிறாங்களோ. அப்படி இருந்தா ரெட்டை மகிழ்ச்சி. இல்ல தற்செயலாக தெருநாய் கண்ணுல படலையா தெரியல. உடனே பஸ் பிடிச்சு திருநெல்வேலி வந்து அப்படியே நாகர்கோவில் வரும் போது மணி பத்தே கால். அப்போது வந்தது வெங்கட்டின் கால். திருச்சி சென்றடைந்து விட்டதாக. அப்படியே நானும் வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடிக்கும் போது பத்தே முக்கால். பால்கோவா வாங்குனது எவ்வளவு நல்லதாப் போச்சு. இப்படியாக சதுரகிரி பயணம் சிவனருளாலே இனிமையாக நிறைவடைந்தது. சிவ சிவ!


இது வரை பயணம் என் பார்வையில். அடுத்த பகுதியிலிருந்து வெங்கட் சில தகவல்கள் தருவார்.  பயணத்தில் தொடர்ந்து வந்தமைக்கு நன்றி. மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திப்போம்.


நட்புடன்


பத்மநாபன்


*******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

13 மார்ச் 2026


12 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.
    பயண அனுபவங்கள், படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.

    சந்தன மகாலிங்கம். சந்தன மகாதேவியை நீங்கள் பாடிய பட்டினத்தார் பாடலை பாடி நானும் மனதால் வணங்கி கொண்டேன்.
    கால்கள், இடுப்புக்கு ஓய்வு கொடுத்து இறங்கிய விவரம் அருமையாக சொன்னீர்கள்.

    வழக்குப் பாறை கொதி நிலையை படிக்கும் போது எப்படி இறங்கினீர்கள் ! எல்லாம் அவன் அருள்தான்.

    சின்ன நீர் நிலை குதிரையூத்தில் கால நனைத்து சிறு மீன்கள் கால் கடித்தல் கால்களுக்கு இதமாக இருந்து இருக்கும். மாலகளில் இப்படி தண்ணீர் தொட்டியில் கால்களை வைத்து மீன்கள் கடிக்க விட காசு கொடுக்க வேண்டும்.
    இப்படி இறங்கி வந்த கால்களுக்கு இதமாக நீர்நிலை இருந்தது இறைவனின் அருள்தான்.
    காணொளிகள் அருமை.
    பதிவு பால்கோவா போல இனிமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. இனிமையான பயணம். இனிமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. பிறகு வருகிறேன். பயணம் இனிமையாக முடிந்தது.

    மலையில் இறங்குவதுதான் சிரம்ம், படிக்கட்டுகள் இல்லைனா. கொதிக்கும் பாறை. பாவம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ராஜபாளையத்துக்கு முன்னால் ஶ்ரீவில்லிபுத்தூரில் இறங்கி தரிசனம் முடித்திருக்கலாமே. இதுக்காக ஒரு தடவை வரவா போறீங்க?

    பதிலளிநீக்கு
  5. பயண அலுப்பில் வீட்டில் வேலை பார்க்காமல் கட்டய நீட்டி ஓய்வெடுக்கத்தான் முன்னேற்பாடாக பால்கோவாவா?

    கோவில்பட்டி கடலைமிட்டாய், திருநெவேலி அல்வாலாம் மறந்துடுச்சா?

    பதிலளிநீக்கு
  6. சதுரகிரி மலை பயணத்தொடர் எல்லா பகுதிகளையும் படித்தேன் திரு பத்மநாபன் அவர்கள் நெல்லை வட்டார வழக்கில் எழுதுயது படிக்க மிக அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.வெறுமனே பயணத்தை பற்றி எழுதாமல் அதை நகைச்சுவையாக விவரித்ததை படித்த அனைவரும் மிகவும் ரசித்திருப்பார்கள். அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  7. சதுரகிரி மலை பயணத்தொடர் எல்லா பகுதிகளையும் படித்தேன் திரு பத்மநாபன் அவர்கள் நெல்லை வட்டார வழக்கில் எழுதுயது படிக்க மிக அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.வெறுமனே பயணத்தை பற்றி எழுதாமல் அதை நகைச்சுவையாக விவரித்ததை படித்த அனைவரும் மிகவும் ரசித்திருப்பார்கள். அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்”

    பெரும்பாலும் தினமும் மனதில் ஓடிடும் வரிகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. எக்ஸ்க்யூஸ்மி - சிரித்துவிட்டேன்!

    இந்த மாதிரியான இடத்தில் நீட்டிப் படுத்துவிட்டால் அந்த சொகமே சொகம்தான் இல்லையா!!

    பார்த்தீங்கனா ஏறும் போது விட இறங்கும் போதுதான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நாம் நினைப்போம் எளிதுன்னு ஆனால் இறங்குவதுதான் இன்னும் சற்றுக் கடினம் நாம டப்பு டப்புனு இறங்கிடுவோம் ஆனா சில சமயம் முட்டி டபக்குனு மடங்கிடுச்சுனா (ஏறினப்ப உள்ள அயற்சியினால்) அம்புட்டுத்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எங்கள ஓவர்டேக் பண்ணிப் போன அதே ரெட்டைக் கிழவிங்களும் இப்போ இறங்கும்போதும் எங்களை ஓவர்டேக் பண்ணி அனாயாசமா போய்க்கிட்டே இருக்காங்க. கடைசி வர அவங்கள எங்களால ஓவர்டேக் பண்ண முடியலியே!//

    ஹாஹாஹா அவ்னகளுக்குப் பழக்கமாக இருக்கும்!

    முதல் காணொளி, நீங்க இறங்கும் இடமா இல்லையா இடையில் எங்காச்சும் போய்ப் பார்த்தீங்களஆ?!!

    முதல் ஃபோட்டோவில் வெங்கட்ஜியா அது? வித்தியாசமாக இருக்கிறார் சைட் போஸில்....தண்ணில நிற்பது பார்த்து அந்தக் காணொளியில் பார்த்தப்பதான் வெங்கட்ஜி என்று தெரிந்தது. அது யாரு அண்ணாச்சியா பேச்சுக்குரல்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தண்ணீருக்குள் கால் வைத்து இறந்தியதும் சுகமாக இருந்திருக்குமே! இதமாகவும்

    இதுக்கு அப்புறமான பாராவை வாசித்தேன் சிரிப்புடன்!

    ரசித்து வாசித்தேன் பால்கோவா பகுதியையும், பால்கோவா போன்று இனிமையான மொத்த பதிவையும் ரசித்தேன்.

    //மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திப்போம்.//

    அட! அண்ணாச்சி ஃபார்முக்கு வந்துவிட்டார் போல!! சதுரகிரி வாழ்க! அங்க மலைஅடிவாரத்தை எத்தினப்புறம் பார்த்த அந்த முக்தி நிலை சாமியார் அண்ணாச்சிக்கு அருள்பாலிச்சிட்டார் போல! எழுதுங்க அண்ணாச்சி!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. விஜயலஷ்மி சென்னை13 மார்ச், 2026 அன்று 1:25 PM

    ஏறுவதை விட இறங்குவது கடினமாக இருக்கும் என் மகள் மயங்கி விழுந்து விட்டால் பத்மநாபன் சாரின் எழுத்து சுவாரஸ்யமாக இருந்தது நேரத்துடன் வீடு போய் அடிவாங்காம தப்பிச்சிரலாம் 😁 அவருக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....