அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது; தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது - சுவாமி விவேகானந்தர்.
******
தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்! படிக்காதவர்கள் வசதிக்காக அந்த முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!
கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று பகுதி இரண்டு பகுதி மூன்று
பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு
வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.
******
கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்
அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம். வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம். MASK FIRST SHOE NEXT!
சென்ற பகுதியில் காவல்துறையைச் சேர்ந்தவர் என்னை ஒரு டாபாவிற்கு அழைத்துச் சென்றார் என்று சொல்லி முடித்திருந்தேன். எதற்காக என்னை அழைத்துச் சென்றார்… தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!
அந்த டாபாவில் பணிபுரிந்தவர்களில் ஒருவர் நம் தமிழர்! அங்கே அவர் பேசிய தமிழைக் கேட்டதும், ”செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” உணர்வு தான். அவரிடம் நான் செல்ல வேண்டிய இடம் பற்றி தமிழில் சொல்ல, காவலரிடம் அது மொழிபெயர்க்கப்பட, அவர் ஒரு பேருந்தில் என்னை ஏற்றி விட்டதோடு, நான் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடு என நடத்துனரிடம் சொல்ல, அந்தக் காவலருக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறி UPSC வந்து சேர்ந்தேன்.
இங்கேயுள்ள மனிதர்களின் ஒரு பழக்கம் என்னை மிகவும் வருத்திய ஒன்று - அதுவும் தில்லி வந்த துவக்க காலத்தில்! யாரையாவது இடம்/பொருள் தெரிய கேட்டால், தயவு தாட்சண்யம் இன்றி, ”பதா நஹி” (தெரியாது!) என்று உடனே கூறி விடுவார்கள். மேலும் சில அதிபுத்திசாலிகள், நாம் கேட்கும் இடத்தின் அருகாமையிலுள்ள சில இடங்களின் பெயர்களைக் கூறிய பிறகு இறுதியில் மீண்டும் சொல்வது “பதா நஹி!” தான். என்ன மனிதர்களோ! எல்லோரும் அந்த காவலர் போல இருப்பதில்லையே!
UPSC வாயிலில் இருந்த வாயிற் காவலரிடம் ஹிந்தியில் ஏதும் கூற முடியாததால், ஆங்கிலத்தை அடித்துத் துவைத்து, ”I JOIN TOMORROW, LDC” எனவும், ஆபத்பாந்தவனாய், அங்கிருந்த ஒரு தோழர், ”தமிழா?” என்று வினவ, அட்ரா சக்கை! “ஆமாம் சார்!” என்றேன். அவர் வாயிலின் வெளிப்புறம் வந்து, 10 நிமிட பரஸ்பர அறிமுகத்துடன், பக்கத்துக் கடையில் ஒரு தேனீர் வாங்கிக் கொடுக்க, வாய்க்கும், மனதுக்கும் இதமாக இருந்தது! அவரின் உதவியுடன், மீண்டும் ஒரு பேருந்து நடத்துனரிடம் சொல்லி, தட்டுத் தடுமாறி தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தேன். அது நாள் முதல், கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் வரை - நன்கு பழகும் வரை - வண்ணப்பூச்சினால் (Paint) எழுதப்பட்ட பலகையுள்ள பேருந்திலோ, அல்லது ஒரு ரூபாய் டீலக்ஸ் பேருந்திலோ மட்டுமே பயணிப்பேன். ஒரு ரூபாய் பேருந்து இரு முனைகளையும் முழுமையாக கடக்கும்/இணைக்கும் பெருந்துகள்.
எங்கள் அறைக்கு எதிரே ஒரு தமிழரின் மெஸ் வகை உணவகம் உண்டு. அங்கு 30 டோக்கன் 120 ரூபாய். டோக்கன் கொடுத்தால் உணவு! உணவகம் முழுக்க தமிழர்கள் - காலையில் சிற்றுண்டி! மதியத்திற்கும் தந்து விடுவார்கள் அல்லது அலுவலக உணவகத்தில் சாப்பிட வேண்டும்! இப்படியாக தலைநகர் தில்லி வாழ்க்கை துவங்கியது!
18 ஏப்ரல் 1985 மாலை 6 மணியளவில் நண்பர்கள் அனைவரும் கீழே நடைப்பயிற்சி மேற்கொண்டோம். இது மாலை வழக்கமாக இருந்தது. ஒரு நண்பர் பாரத மிகுமின் நிறுவனத்தில் (BHEL) பணி புரிந்து வருபவர். மூன்று ஆண்டுகளாக, பல்லைக் கடித்துக் கொண்டு தில்லியில் பணியாற்றினார். ஹிந்தி கற்பதில்லை என ஒரே குறிக்கோளுடன் இருந்து வந்தார். நான் தில்லி சென்ற சில மாதங்களில் சென்னை சென்று விட்டார். என்னைப் பொருத்த வரையில் மொழிகள் யாவையும் கற்றறிதல் நலமே. நிர்ப்பந்தத்தால் அல்ல - மனமுவந்து தான்! அப்படியான நபருடன் சுவையான ஒரு அனுபவம்!
எங்கள் வீட்டின் கீழே, வருகடலை, பட்டாணி, பொரி போன்ற பண்டங்களை விற்கும் சற்று வயதானவர் ஒருவர் இருந்தார். அவரிடம் BHEL நண்பர் சென்றதும் ஒரு நாடகம் நடந்தது. அவருக்கு, உப்புக்கடலையும், நிலக்கடலையையும் கலந்து சாப்பிடுவது தான் பிடித்தமான கொறியல்! அதை எப்படிக் கேட்பது என தெரியவில்லை அவருக்கு! வலது கை ஆள்காட்டி விரலை ஒன்றின் மீதும் இடது கை ஆள்காட்டி விரலை மற்றொன்றின் மீதும் காட்டி இரு விரல்களையும் வலம் இடமாக ஆட்டி, அசைத்து இரண்டு ரூபாய்க்கு என்பாராம்! எங்கள் குழுவைக் கண்டாலே, “ஏ ஏக் ருப்யா, ஏ ஏக் ருப்யா யூன் யூன் தோ ருப்யா” என்பாராம்! அதற்கு, ”இது 1 ரூபாய், இது 1 ரூபாய், இரண்டையும் கலந்து 2 ரூபாய் என அர்த்தமாம்!” விரல்களை இரு புறமும் ஆட்டுவதை ஹிந்தியில் யூன் யூன் என்பார்களாம்! அட ”ஒரு இரண்டு ரூபாய்க்கு மிக்ஸர் கொடுங்க அண்ணாச்சி”ன்னு கேக்கறதுக்கு இவ்வளவு அக்கப்போரா என வியந்தேன்! மலைத்தேன்! இந்த மொழியை நாம் கற்போமா என உள்ளூர பயந்தேன்!
19 ஏப்ரல் 1985 வெள்ளிக்கிழமை - என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். காலை எழுந்து பய பக்தியுடன் திருநீறு அணிந்து, காலை சிற்றுண்டியை முடித்து, பேருந்து நிறுத்தம் வரை நடந்து பெயிண்ட் பலகை கொண்ட வழித்தடம் 45 பேருந்தினைப் பிடித்து அலுவலக வாயில் வரை சென்றடைந்தேன். நுழைவு அத்தாட்சி (Entry Pass) பெற்று, சொன்ன அறையில் சென்றால், ஏதேதோ காகிதங்கள் கேட்டனர். பள்ளி முதல் கல்லூரி வரையிலான தேர்வு நகல்களின் மூலப் பிரதியை (Original) கேட்டனர். ஒரு வழியாக, அனைத்து சோதனைகளும் சரிபார்ப்புகளும் ஆனபின்னர், ஒரு துணைச் செயலர் (Deputy Secretary) - திரு ஜெயின் - அவர்களின் அறையில் விட்டனர். பணியில் சேரும் முன்னரே வெளியேறும் அனுபவம் நிகழப் போவது தெரியாமல் அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
அவர் என்னைப் பற்றி முதலில் ஹிந்தியில் வினவ, எனக்கு ஹிந்தி மொழி தெரியாது என்றேன். ஹிந்தி தெரியாமல், தில்லியில் நீ பணி புரிய முடியாது என்றார். ”கற்கவே இல்லை, எனக்கு எப்படித் தெரியும்?” என்றேன். ஒரு உறுதி மொழி எடுத்த பின் தான் பணியில் சேரலாம்! ஆனால் ஹிந்தி வகுப்பு சென்று கட்டாயம் கற்கவேண்டும் என கர்ஜித்தார். ஆஹா, நமக்கு வில்லங்கம் துவங்கி விட்டதோ என எண்ணிய மணித்துளியில் துவங்கியே விட்டது! உறுதி மொழியின் நகலைக் கொடுத்தார். ஹிந்தியில் எழுதப் பட்டிருந்தது! எனக்கு இம்மொழி தெரியாது! எனவே ஆங்கிலத்தில் தான் என்னால் உறுதி மொழி எடுக்க முடியும். அதற்கு அவர் ஆங்கிலத்தில் தர முடியாது! என்றார். வேறு வழி தெரியவில்லை - ”ஐயா, நான் பணியில் சேரவில்லை!” என்று சொல்லி உடனே அறையிலிருந்து வெளியேறினேன். அழுகை, ஆத்திரம், அவமானம் சேர்ந்த மாமிசக் கலவையாக நின்றேன்.
பிறகு என்ன நடந்தது? அடுத்த பகுதியில் சொல்கிறேனே! தொடர்ந்து, கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…
நட்புடன்
சுப்ரமணியன்
புது தில்லி
******
நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
அதிர்ச்சியான அனுபவமாக இருக்கிறதே... தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅந்தச் சமயங்களில் இப்படியான ஹிந்தி வெறியர்கள் உண்டு. இப்போது குறைந்து வருகிறது ஸ்ரீராம்.
நீக்குதொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அட... ஹிந்தியில் உறுதிமொழியா? ரொம்பவே உணர்ச்சிவசப் படுகிறீர்கள் போலிருக்கே (ஆரம்பகாலத்தில்)
பதிலளிநீக்கு85ல் 4 ரூபாய்க்கு மூணு வேளையா ல்லை ஒரு டோக்கனுக்கு ஒரு வேளையா?
ஹிந்தியில் உறுதி மொழி - ஆமாம் நெல்லைத் தமிழன்.
நீக்குஒரு டோக்கன்/ஒரு வேளைக்கு நான்கு ரூபாய். ஒரு புத்தகத்தில் 30 டோக்கன். எத்தனை டோக்கன் புத்தகம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். மதியம் மாதம் முழுவதும் தருவதற்கு தனியாக 100/- மேலதிகத் தகவல்களை உங்கள் கேள்வி பார்த்து தந்த நண்பர் சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//என்னைப் பொருத்த வரையில் மொழிகள் யாவையும் கற்றறிதல் நலமே. நிர்ப்பந்தத்தால் அல்ல - மனமுவந்து தான்//
பதிலளிநீக்குஸூப்பர் உண்மை நண்பரே
தொடர்கிறேன்...
மொழிகள் கற்றுக் கொள்வது நல்லதே - பல மொழிகளைக் கற்றுக் கொண்ட உங்களுக்கும் புரிந்திருக்கிறது கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆவலுடன் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதொடர்ந்து வாசிப்பதில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் அருமை. பதிவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் உங்கள் நண்பர் ஆரம்ப காலத்தில் மொழி தெரியாமல் மிகவும் கஸ்டபட்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவர் மனம் எப்படி வருந்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தமாதிரி வட மாநிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், ஆங்கிலத்தை முழுமையாக நம்பிக் கொண்டு போக முடியாதென்பது புரிகிறது. இறுதியில் அந்த வேலை என்னவாயிற்று என்பதை அறிய தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
ஆங்கிலத்தை மட்டுமே முழுமையாக நம்பிக்கொண்டு வட மாநிலத்தில் இருப்பது சாத்தியமில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சோதனை மேல் சோதனை.
பதிலளிநீக்குமிகப் பெரிய அனுபவம். அதற்குப் பின்
இந்தி கற்றிருப்பார். இருந்தாலும் அந்த வயதில் அது
சோகம் தான். சுவையாகச் சொன்னாலும்.
சோதனை மேல் சோதனை - எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டார் என்பதே நல்ல விஷயம் வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரசிக்க தக்க அனுபவங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.
நீக்குபல வித அனுபவங்கள், சோதனைகள் அனைத்தையும் வென்று சாதனை படைத்து இருக்கிறார் .
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
சோதனைகளைக் கடந்து வாழ்க்கைப் பாதையில் பயணித்திருப்பது நல்லதே. தொடர்ந்து வாசிக்க இருப்பதில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குதொடர்ந்து வாசிக்க இருப்பது அறிந்து மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு