தொகுப்புகள்

வெள்ளி, 12 நவம்பர், 2021

மதுரைக்கு ஒரு பயணம் - ஆதி வெங்கட் - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட திருடனுக்கும் உபசாரம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


யாரையும் கஷ்டப்படுத்தி கிடைக்கிற சந்தோஷமும் வேண்டாம். நாம் சந்தோஷமா இருக்க யாரையும், கஷ்டப்படுத்தவும் வேண்டாம்.


******


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி மூன்று


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி நான்கு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஐந்து


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஆறு


சென்ற பகுதியில் அம்பாசமுத்திரத்தில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளை கண்டுகளித்தது பற்றி எழுதியிருந்தேன். இந்தப் பகுதியிலும் அங்கே நடந்த மீதிக்கதைகளை பற்றி தான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.


நாங்கள் கோவிலுக்குச் சென்ற சமயத்தில் தான் அருகே உள்ள ஏதோ ஒரு ஊரிலிருந்து புது மாப்பிள்ளையும், பெண்ணுமாக தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அங்கே பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.





எங்கள் பூஜையெல்லாம் முடிய மதியம் மூன்று மணியாகி விட்டது. மதிய உணவுக்காக மதுரையிலிருந்து தனித்தனியாக ஃபாயில் டப்பாக்களில் பேக் செய்து தரப்பட்ட புளியோதரையும், தயிர்சாதமும், தொட்டுக்கையாக மோர்மிளகாயும் கொண்டு வந்திருந்தோம். கோவில் வளாகத்திலேயே இருந்த தேக்கு மரத்தின் இலைகளை என் மாமா பறித்து வந்தார். அதில் தான் எல்லோரும் சாப்பிட்டோம்.   அதில் முதலில் பிரசாதங்கள் பரிமாறப்பட்டது. பெரிய மாமா தயார் செய்த பஞ்சாமிர்தம், பின்பு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட பின் புளியோதரையும், தயிர்சாதமும் போட்டுக் கொண்டோம். நானும் என் மாமா பெண்ணும் ஒரு டப்பா சாதத்தை  இருவருமாக ஷேர் செய்து கொண்டு சாப்பிட்டோம். மோர்மிளகாய் நல்ல மொறுமொறுவென ஜோராக இருந்தது..:) அவள் நடுவே எனக்கு ஊட்டியும் விட்டாள்!  உண்மையிலேயே அப்போது  குழந்தையாக மாறிப் போனேன்..:)


பக்கத்து ஊரிலிருந்து வந்தவர்கள் அவர்கள் செய்த பொங்கலை எங்களுக்குத் தர, நாங்களும் எங்கள் பிரசாதங்களை அவர்களிடமும் பகிர்ந்து கொண்டோம். அவர்கள் செய்த பொங்கல் அளவான இனிப்புடன் சுடச்சுட அருமையாக இருந்தது. 


இப்படியாக எல்லோரும் சாப்பிட்ட பின்  குப்பைகளை  ஆங்காங்கே வீசியெறியாமல் , காலை உணவைப் போலவே  இங்கும் காலியான அட்டை பெட்டி ஒன்றை வைத்து அதில் சாப்பிட்ட இலைகள் மற்றும் ஃபாயில் டப்பாக்களை போட்ட பின் கோவிலுக்குள்ளேயே இருந்த குழாயில் கைகளை சுத்தம் செய்து கொண்டோம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு.


எல்லோரும் நான்கு மணிவாக்கில் அங்கிருந்து கிளம்பத் தயாரானோம். அருகேயே நடக்கும் தொலைவில் தாமிரபரணி ஆறு  ஓடுவதாகச் சொல்ல சென்று பார்த்து வந்தேன். பரந்து விரிந்த காவிரியை பார்த்த என் கண்களுக்கு இது சிறியதாகத் தான் தெரிந்தது. ஒருவேளை குறிப்பிட்ட அந்த இடத்தில் குறுக்கிக் கொண்டு ஓடுகிறாளோ!!


காரில் வந்த நான்கு பேர் அங்கிருந்தே கோவைக்கு கிளம்ப எத்தனிக்க, ஒருவருக்கொருவர் பை சொல்லிக் கொண்டு கிளம்பினோம். அதற்கு முன் வேன் ட்ரைவரிடம் சொல்லி எல்லோரும் க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். காரில் வந்தவர்கள் பாதி தூரம் வரை எங்களுக்கு பின் தான் வந்தார்கள். அதன் பின் வேகமெடுத்து முந்திக் கொண்டார்கள்.


நாங்களும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நடுவே ஒரு இடத்தில் காஃபி, டீ போன்றவற்றுக்காக நிறுத்தப்பட்டது. எப்போது மதுரையை சென்றடைந்தோம்? இரவு உணவு எங்கே சாப்பிட்டோம்? போன்ற மீதிக்கதைகள் அடுத்த பகுதியில்..



******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. குப்பைகளை அப்படியே போடாமல் பொறுப்புடன் செயல்பட்டது நல்ல நிகழ்வு.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் அனைவருமே குப்பைகளை சரியானபடியே அதற்கான இடங்களில் போடுவது வழக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    மதுரை பயணத்துடன் அம்பை குலதெய்வம் கோவிலுக்கு சென்ற நிகழ்வுகளையும் சுவாரஸ்யமாக சொல்லி வருகிறீர்கள். சென்ற பதிவை நான் படிக்கவில்லை. மன்னிக்கவும்.பிறகு படித்துப் பார்க்கிறேன். நம் நெருங்கிய சுற்றங்களுடன் செல்லும் போது பயணம் இனிமையாக இருக்கும். என்றும் மறக்க முடியாதபடிக்கும் அமையும். குரூப் போட்டோ நன்றாக உள்ளது. உங்களின் இனிமையான பயணத்திற்கு வாழ்த்துகள். இனியும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பயணம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நீங்கள் செய்ததைப் போலவே கோவிலில் உணவருந்தும் எல்லோரும் நடந்து கொண்டால் எல்லா கோவில்களும் தூய்மையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில்கள், பொது இடங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமையும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  4. //யாரையும் கஷ்டப்படுத்தி கிடைக்கிற சந்தோஷமும் வேண்டாம். நாம் சந்தோஷமா இருக்க யாரையும், கஷ்டப்படுத்தவும் வேண்டாம்.// ஒரே விஷயத்தை இரண்டு விதமாக சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே விஷயம் - இரண்டு விதமாக!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  5. //சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு//

    அருமை இதை ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் இதை உணர்ந்து கொள்வது நல்லது கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. வாசகம் அருமை. ஒரே பாயின்ட் வார்த்தைகள் கொஞ்சம் மாறி!!

    நாம் நமது சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டாலே அப்படி கோயிலுக்கு வரும் எல்லாருமே செய்துவிட்டால் எவ்வளவு நல்லது.

    ஆதி, தாமிரபரணியானவள் காவிரியைப் போன்று அத்தனை அகலமாக விரிந்தவள் இல்லை. ஆனாலும் வெகு குறைவான அகலம் என்றும் சொல்ல முடியாத அகலம் உண்டு. அம்பா சமுத்ரத்தில் அகலமாகத்தான் இருப்பாள். என்றாலும் பல இடங்களில் குறைவாகவே இருப்பாள். நீங்கள் பார்த்த இடமும் அப்படியான ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமையான பயணம். குலதெய்வ வழிபாடு சிறப்பாக இருந்தது போலிருக்கு.

    தாமிரவருணி எப்போதுமே அகலம் குறைவானதுதான் (ஒரு சில இடங்களைத் தவிர... ஆழ்வார்திருநகரியில் அகலமாக இருந்தது, கீழநத்தத்திலும்). ஆனால் அதன் சிறப்பு தமிழகத்தில் வற்றாது (இன்றுவரை) ஓடும் ஒரே நதி அதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலதெய்வ வழிபாடு சிறப்பாகவே நடந்தேறியது நெல்லைத்தமிழன்.

      தாமிரபரணி - எனக்கும் பிடித்ததே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. புகைப்படத்தில் அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம் - தெளிவாகவும் இல்லை நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....