தொகுப்புகள்

வியாழன், 13 ஜூலை, 2023

தினம் தினம் தில்லி - ரோலர் கோஸ்டர் ஐஸ்க்ரீம் - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தினம் தினம் தில்லி பதிவுகள் வரிசையில் இது வரை மூன்று பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.  முதல் பகுதியில் ஷக்கர் கந்தி மற்றும் CHசோலியா குறித்து பார்த்தோம் என்றால், இரண்டாம் பகுதியில் தலைநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் Pபெஹல்வான்கள் பயிற்சி பெறுவது பற்றியும் அவர்கள் செய்யும் சிகிச்சைகள் குறித்தும் பார்த்தோம்.  மூன்றாம் பகுதியில் பார்த்தது Pப்யார் வாலி தாலி என்ற தலைப்பில் தலைநகர் தில்லியில் கிடைக்கும் உணவு குறித்து பார்த்தோம். இதோ இன்றைக்கு நான்காம் பகுதியில், “தினம் தினம் தில்லி” பதிவாக வேறு ஒரு விஷயம் குறித்து பார்க்கலாம். 


ரோலர் கோஸ்டர் ஐஸ்க்ரீம்



ரோலர் கோஸ்டர் ரைட் (Roller Coaster Ride) குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம்.  ஆனால் அதே பெயரில் ஐஸ்க்ரீம் உண்டு என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?  தலைநகர் தில்லியின் சில பகுதிகளில் ரோலர் கோஸ்டர் ஐஸ்க்ரீம் என்ற பெயரில் ஐஸ்க்ரீம் கிடைக்கிறது.  ஒரு ப்ளேட் 60 ரூபாய் முதல் கிடைக்கும் இந்த ஐஸ்க்ரீம் ஏன் இப்படி அழைக்கப்படுகிறது?  எப்படித் தயாரிக்கப்படுகிறது?  உங்களுக்கு சொல்லத்தான் இந்தப் பதிவு…


ஒரு பெரிய உருளையின் உள்ளே முழுவதும் ஐஸ்கட்டிகள் நிரப்பி இடித்து அதன் மீது மூடி போட்டு அழுத்தமாக மூடியபிறகு இந்த உருளையை அதற்கான ஒரு இயந்திரத்தில் நீளவாக்கில் சேர்த்து விடுவார்கள்.  அதன் பிறகு அதனை உருட்டும் விதத்தில் கைப்பிடிகள் அந்த இயந்திரத்தில் உண்டு.  அந்த உருளையை வேகமாக உருட்டிக் கொண்டே மேல் பக்கத்தில் பால், விதம் விதமான பழரசங்கள் போன்றவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக ஊற்றி கைகளால் உருளை மேலே முழுவதும் தடவிக் கொண்டே இருப்பார்கள்.  உள்ளே இருக்கும் ஐஸ்கட்டிகள் காரணமாக ஊற்றிய பால், பழரசங்கள் ஆகியவை உடனடியாக கட்டியாகி(கெட்டியாகி)விடும்.  மேலே மேலே பால், பழரசங்கள் என ஊற்றிக் கொண்டே இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகிக் கொண்டே இருக்கும் - ஆங்கிலத்தில் சொல்வதென்றால் உருளையின் மீது Layer Layer-ஆக ஐஸ்க்ரீம் உருவாகி விடும்.  



அப்படி உருவான ஐஸ்க்ரீம்-ஐ கத்தியால் சுரண்டி தட்டு அல்லது தொன்னையில் சேர்த்து தருவார்கள்.  அப்படித் தரும் ஒரு தட்டு/தொன்னை ஐஸ்க்ரீம்-இன் விலை ரூபாய் 60 மட்டும்!  ஒரு சில இடங்களில் பழரசத்திற்கு பதிலாக செயற்கையான Syrup-ஆகவும் சேர்ப்பதுண்டு.  இயற்கையான பழரசங்கள் சேர்த்த ஐஸ்க்ரீம்-இல் இருக்கும் சுவை செயற்கையான பழங்களின் Syrup சேர்த்த ஐஸ்க்ரீம்-களில் இருப்பதில்லை.  இந்த செய்முறையில் இரண்டு பேருடைய உழைப்பு இருக்கிறது.  உருளையைச் சுற்றிக் கொண்டே இருப்பவர் ஒருவர் என்றால், இரண்டாமவர் பால், பழரசங்கள் சேர்த்துக் கொண்டே இருப்பவர்.  முதலாமவருக்கு வேலை/உழைப்பு அதிகம் என்பதையும் சொல்ல வேண்டும்.  


இம்மாதிரி உருளைகள் கிடைப்பது கடினம் - ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது - விலை சுமார் 15000/- ரூபாய்.  நம் ஊரில் இந்த மாதிரி யாரும் வைத்திருப்பதாகத் தெரியவில்லை.  யாரேனும் முயற்சிக்கலாம்! 


மீண்டும் வேறு ஒரு தில்லி குறித்த தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன். 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


6 கருத்துகள்:

  1. இரண்டு வருடங்களுக்கு முன் எனது அலுவலக நண்பர் பெண் திருமணத்தில், சென்னையில் இதைப் பார்த்தேன். படம் எடுத்து, காணொளி எல்லாம் கூட எடுத்தேன். ஆனால் பகிரவில்லை.சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. தகவல் புதியதாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  3. ரோலர் கோஸ்டர் ஐஸ்க்ரீம் சுவையாக இருக்கும் என தோன்றுகிறது.
    டில்லி வரும்போது முயர்ச்சிக்கலாம்.
    ஃபலூடாவிலும் லேயர் லேயராக சுவைகள் சேர்க்கப்பட்டிருக்கும்.
    டில்லியில் இப்போது பெருவெள்ளம் என செய்திகள் நொடிக்கு நொடி வருகின்றன.
    சற்று ஜாக்கிரதையாக இருங்கள் ஐய்யா.

    பதிலளிநீக்கு
  4. ஜி! இதை நான் சென்னையில் இருந்தப்ப, கிட்டத்தட்ட 15,/16 வருடங்கள் முன்பு பார்த்திருக்கிறேன். ஒரு கல்யாணத்தில் அப்போதே முதல் நாள் மாலை வித விதமான வட இந்திய உணவுகள், தென் இந்திய உணவுகள், சாட் என்று எல்லாமே Stall கள் போன்று வைத்திருந்தார்கள். தந்தூரி அடுப்பில் சுட சுட Naan, Kulcha...கடைசியாக இந்த Roller ice cream அது கொஞ்சம் உயரத்தில் கீழே தொட்டி போன்று வைச்சிருந்தாங்க. உருளை கொஞ்சம் சரிவாக தானாகவே சுற்றும் வகையில் இருக்க ஒருவர் பால் அடுத்து அடுத்து ஊற்றிக் கொண்டே இருக்க, அதில் வெனிலா எசன்ஸ் ஊற்றி, சாக்கலேட் வேண்டும் என்றால் மேலே உருகிய Hot Chocolate ஊற்றிட , சாக்லேட் அது உடனே உறைந்து....வெனிலா மட்டும் என்றால் அதை Scoop செய்து அதில் மேலே உலர் பருப்புகள் போட்டும், சாக்கலேட் ருசி வேண்டும் என்றால் அதை ஒருவர் Scoop பண்ணி எடுத்து ஒரு கப்பில் அல்லது சிறிய தட்டில் வைத்துத் தந்தார். உயரத்தில் சரிவாக ஏதோ அருவி கொட்டி உறைவது போன்று இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அப்போது புகைப்படம் எடுக்க சாதனங்கள் இல்லையே

    இங்கு நீங்கள் சொல்லியிருப்பது செய்ற்கை இல்லாமல் இயற்கை பழரசங்கள் , பால் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ரோலர் கோஸ்டர் ஐஸ்க்ரீம்...! செய்முறை வியக்க வைக்கிறது.
    வெவ்வேறு பழங்களின் ருசி இருக்கும் இல்லையா?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....