இந்த வார செய்தி:
உத்திரப் பிரதேசத்தில்
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டுமே மூன்று
மாவட்டங்களில் பெண்களை மானபங்கப்படுத்தியதும், தட்டிக் கேட்ட ஒரு பெண்ணின் தாயை கொடுமையாகக்
காயப்படுத்தியதும், ஓர் இடத்தில் காக்க வேண்டிய காவல் துறையே இது போன்ற இழிவான செயல்களில்
ஈடுபட்டதும் நடந்திருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தின்
பதௌன் [Badaun] மாவட்டத்தில் இரண்டு பெண்களை கற்பழித்து அவர்களை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள்.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார் என்பதைப்
பார்க்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் எங்கே சென்று முறையிடுவார்கள் எனத் தோன்றுகிறது.
எடாவா மாவட்டத்தில்
நேற்று நடந்த ஒரு சம்பவம் இன்னும் மோசமான விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பெண்ணிடம்
தகாத முறையில் நடந்தவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
அந்த வழக்கினை திரும்பப் பெறச் சொல்லி, குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை பாதிக்கப்பட்ட
பெண்ணின் தாயைக் கொடுமையாகத் தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பெண்களைப் போகப்
பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை மாறும் வரை, இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு
விரைவான தண்டனை, அதுவும் முன்னுதாரணமான தண்டனை தரப்படும் வரை இது போன்ற இழிவான செயல்கள்
தொடரும் என்றே தோன்றுகிறது.
உத்திரப் பிரதேசம்,
பீஹார் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகம் – அதுவும் வெளி
வராத குற்றங்கள் மிக மிக அதிகம். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெட்கப்பட்டும்,
பயம் கொண்டும் வெளியே சொல்லாத பெண்கள் தான் அதிகம்.
பெண் விடுதலை,
முன்னேற்றம் என்று பலமாக குரல் கொடுத்தபடியே இருந்தாலும், இன்னமும் இது போன்ற குற்றங்கள்
இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வருத்தம் தரும் விஷயம்…..
இந்த
வார முகப்புத்தக இற்றை:
உங்களுக்குப்
பிடித்தவரின்
தீய குணங்கள்
உங்கள் கண்களுக்குத்
தெரியாது!
உங்களுக்குப்
பிடிக்காதவரின்
நல்ல குணங்கள்
உங்கள் கண்களுக்குத்
தெரியாது!
இந்த
வார குறுஞ்செய்தி:
BEST THING TO LEARN FROM WATER:
ADJUST YOURSELF IN EVERY SITUATION AND IN ANY SHAPE BUT
MOST IMPORTANTLY ALWAYS FIND OUT YOUR OWN WAY TO FLOW….
சுஜாதாட்ஸ்:
உரைநடையை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மிகச் சிக்கலாக எழுதுகிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்து படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது. என்னைச் சராசரிக்குச் சற்று மேற்பட்ட வாசகனாகக் கொள்ளலாம். எனக்குப் புரியவில்லை என்றால், புரிவது கஷ்டமாக இருக்கிறது என்றால் இது யார் தவறு?
உதாரணம் சொல்கிறேன்.
“இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்தது இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி உள்ள ஒரு பரிமாண விஸ்தாரம் புகைப்படக்கலை அல்லது தியேட்டரைச் சார்ந்துள்ள எல்லைகளிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமாகிவிட்ட இக்கணமீதிலிருந்து அது இலக்கியத்தைச் சார்ந்த எல்லையாகிவிடுகிறது.”
- கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா.
ரசித்த பாடல்:
மண் வாசனை படத்திலிருந்து “ஆனந்தத்
தேன் சிந்தும் பூஞ்சோலையில்” பாடல் – இந்த வார ரசித்த பாடலாக உங்களுக்கு இசை விருந்தாக…..
ரசித்த ஓவியம்:
திருவரங்கம்
கோவிலின் யானையாகிய ஆண்டாள் 48 நாள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் கோவில் பணியில் சேர்ந்தது
– செய்தி.
Eric Marette என்பவர் வரைந்த யானை ஓவியம் இந்த வார ரசித்த ஓவியமாக…..
படித்ததில் பிடித்தது:
இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய்
தமிழ் பேப்பர் நாலு ரூபாய்’
என்பதைப்
பார்த்ததும் தனது எண்ணத்தை செயலாற்றத் துவங்கினாள் அவள்.
இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை வைத்துக் கட்டி
பேப்பர்காரனுக்குப் போட்டாள்.
"எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை போட்டு
எடுத்திட்டுப் போப்பா…!"
"சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது, இந்தாங்கம்மா
தொண்ணூறு ரூபாய்" என அவன் கொடுத்து சென்றான்.
தொண்ணூறு ரூபாய்" என அவன் கொடுத்து சென்றான்.
ஏதோ சாமர்த்தியமாய் சாதித்ததாய்
பூரித்துப் போனாள் அவள்!
மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும்
கொஞ்சம் வெல வெலத்துப் போனாள்…
"என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…? பேப்பருக்கு இடையில"
அவன் பேசப் பேச அவளுக்கு வியர்த்தது!
"இந்த பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிற விலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது.
இந்தாங்கம்மா! என எடுத்து நீட்ட"
அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய
பேப்பருமாக மாறி இருந்ததை அவளால் உணர முடிந்தது!!
என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..