பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 27
அஹமதாபாத் நகரில் இருக்கும் பாலாஜி கோவிலில் தரிசனம் செய்த பிறகு இரவு
உணவு எங்காவது வெளியே சாப்பிடலாம் என அஹமதாபாத் நண்பர் சொல்ல, ஏதாவது குஜராத்தி
உணவகத்திற்குச் செல்லலாம் என நினைத்தோம். அதற்கு நண்பர், எங்களை அஹமதாபாத் நகரில்
இருக்கும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்று அற்புதமானதோர் அனுபவத்தினை
வழங்குவதாகச் சொல்லி, வாகனத்தினை அங்கே செலுத்தினார். அங்கு சென்று எங்களுக்கு உண்மையாகவே அற்புதமான
அனுபவம் தான் கிடைத்தது.
வாஸ்னா சாலை, வாஸ்னா, அஹமதாபாத் எனும் விலாசத்தில் அமைந்திருக்கும் ”விஷாலா” எனும் உணவகத்திற்குத் தான் எங்களை அழைத்துச் சென்றார். பெயருக்கு ஏற்றவாறு
விசாலமான இடத்தில் தான் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. பொதுவான உணவகங்கள் போன்று
கதவுகளோ, நான்கு சுவர்களுக்கு நடுவேயோ அமைந்திருக்காமல், திறந்த வெளியில் சிறிய
சிறிய குடிசைகள் அமைந்திருக்க, அங்கே நன்கு மெழுகப்பட்ட மண் தரையில் பாய்
விரித்து, எதிரே நீண்ட மரக்கட்டைகள் இருக்க, அதிலே பெரிய தையல் இலைகள் போட்டு உணவு
பரிமாறுகிறார்கள்.
இயற்கையான சூழலில், மின்சார விளக்குகளுக்குப்
பதிலாக லாந்தர்களின் ஒளியில், மிதமான இயற்கைக் காற்று வீச, அங்கே அமர்ந்து உணவு
உண்பது, நாம் ஏதோ கிராமத்தில் இருப்பது போல உணர்வினை நமக்கு தருகிறது. நாம்
அமர்ந்து சாப்பிட இருக்கைகள் இல்லாத சமயத்தில், நம்மை மகிழ்விக்க கிராமிய இசைக்
கலைஞர்கள் இசைக்கிறார்கள். சில இடங்களில் பொம்மலாட்டம் போன்ற பல்வேறு கிராமிய கலை
நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அவற்றை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம். இடையே
இடம் காலியான உடன், நம்மை விஷாலா சிப்பந்திகள் அழைத்து நமக்கான இடத்திற்குச்
சென்று அமர்த்துகிறார்கள்.
பொதுவாக உணவகங்கள் எனில் கை கழுவும் இடம் என
இருக்கும். இங்கேயும் உண்டு. ஆனால் சற்றே வித்தியாசமாக, ஒரு மண் பானை வைத்திருக்க,
ஒருவர் பித்தளை குடுவைகளிலிருந்து நீரை சாய்க்க, நாம் பொறுமையாக கையைச் சுத்தம்
செய்து கொள்ளலாம். பிறகு நாம் அமர்ந்து கொள்ள, ஒவ்வொரு சிப்பந்தியாக வரிசையாக
வந்து அவர்கள் பரிமாறப் போகும் உணவின் பெயரைச் சொல்லி வைத்துக் கொண்டே
போகிறார்கள். வரிசை வரிசையாக பலவித உணவுகள் வந்தபடியே இருக்கின்றன.
ஒவ்வொன்றின் பெயரைக் கேட்கும்போதே அது என்ன,
எப்படி இருக்கும் என்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் வரும்! சில உணவுகளின் பெயர்களை
உங்களுக்குச் சொல்லட்டா – ஹஜ்மாஹஜம், பாஜ்ரி ந ரோட்லா, மகாய் ந ரோட்லா, பாக்டி[ரி], மேத்தி ந தேப்லா, கிச்சடி, கடி, மக்கன், படாடா நு ஷாக், லீலு ஷாக், கதோல்,
ஃபார்சன், லீலீ சட்னி, லசன் சட்னி, தலியா நி சட்னி, பாப்பட், கூட், காக்டி, பீட்,
சுக்டி..... இதைத் தவிர சலாட், ஊறுகாய்
போன்றவையும் உண்டு. கூடவே நீர் மோர் வந்து கொண்டே இருக்கிறது. எல்லா
உணவுமே அளவுச் சாப்பாடு போல அல்ல – எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒவ்வொரு நாளும் கொடுக்கும் காய்கறிகளும் மாறிக்
கொண்டே இருக்கும். இத்தனை வகை உணவினையும்
ருசித்த பிறகு முடிவில் ஐஸ்க்ரீம் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பும் உண்டு!
நாங்கள் தரையில் அமர்ந்து எதிரே இருக்கும்
இலையில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவினையும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்து அடுத்த உணவின்
ருசியை உணரக் காத்திருக்க, ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக எல்லா
உணவின் ருசியும் பார்த்தோம். முதல் முறை
வைத்த அனைத்தையும் உண்டாலே வயிறு நிரம்பிவிடும் எனத் தோன்றியது. ஒவ்வொன்றாய்
ரசித்து ருசித்து சாப்பிட்டு, நடுநடுவே நீர் மோரையும் தண்ணீருக்கு பதிலாக
குடித்துக் கொண்டிருந்தோம். நீர் மோர் டம்ளரை கீழே வைத்தவுடன் ஒரு சிப்பந்தி வந்து
அதை நிரப்பி விடுகிறார்! சுக்டி எனும் இனிப்பை சுடச் சுட சாப்பிட்டு நாக்கு
பொசுங்க வைத்துக் கொண்ட கதையை முன்னரே “சாப்பிட வாங்க” பகுதியில் எழுதி
இருக்கிறேன்.
ஒவ்வொரு உணவு வகையாக ருசித்துச் சாப்பிட்டு மிகவும் பிடித்த சிலவற்றை
மட்டும் இரண்டாம் முறை கேட்டு உண்டு எழுந்திருக்க நினைத்தபோது தரையில் கையை ஊன்றி
தான் எழுந்திருக்க முடிந்தது – அவ்வளவு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறோம்! கைகளில்
வெண்ணையும், நெய்யும் இருக்க, சுத்தம் செய்து கொள்ள வெதுவெதுப்பான நீரை ஒரு
சிப்பந்தி ஊற்ற, கைகளைச் சுத்தம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஐஸ்கீர்ம் அல்லது சூடான
குலாப்ஜாமூன் – இரண்டில் எது வேண்டும் எனக் கேட்க, குலாப்ஜாமூனுக்கே எங்கள்
ஓட்டு! அதையும் சாப்பிட்டு அப்படியே
கொஞ்சம் நடந்தோம். சில பொருட்கள் விற்பனைக்கும் அங்கே இருந்தன. அக்கடைகளை
பார்வையிட்டபடியே கொஞ்சம் நடந்தோம்.
கயிற்றுக் கட்டில்கள் ஆங்காங்கே இருக்க, அவற்றில் கொஞ்சம் உட்கார்ந்து கதை
பேசினோம்.
இங்கே இன்னுமொரு விஷயமும் உண்டு – அது ஒரு அருங்காட்சியகம் – பலவிதமான
பாத்திரங்கள், குடுவைகள் போன்றவற்றைச் சேகரித்து இங்கே
காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மிக அருமையாக வைத்திருக்கும் அவற்றைப் பார்க்க நுழைவுக்
கட்டணம் உண்டு. கட்டணம் இல்லாமலே
உங்களுக்குக் காண்பிக்க, இணையத்திலிருந்து ஒரு காணொளியை உங்கள் வசதிக்காக
இணைத்திருக்கிறேன்! எஞ்சாய் மாடி!
என்ன நண்பர்களே, காணொளியைக் கண்டு ரசித்தீர்களா? அதெல்லாம் சரி, உணவுக்கான கட்டணம் எவ்வளவு
என்பதைச் சொல்லவே இல்லையே என நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்! இன்றைய
நிலவரப்படி கட்டண விவரம் கீழே!
Adult - 683/- (All
Tax included) per person
Child – 395/- (3-11years) (All Tax included) per child
கொஞ்சம் அதிகம் தான் என நினைத்தாலும், நல்ல ஒரு
அனுபவம் கிடைத்தது! இரவு 07.30 மணியிலிருந்து 11.00 மணி வரை இரவு உணவு கிடைக்கும். மதிய உணவு காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி
வரை கிடைக்கும். மதிய உணவு சற்றே குறைவு – பெரியவர்களுக்கு 521/- குழந்தைகளுக்கு
305/-.
அஹமதாபாத் நகருக்குச் செல்லும்
வாய்ப்பிருந்தால் இங்கே சென்று வாருங்கள். சற்றே அதிக விலை என்றாலும் நிச்சயம்
ரசிக்க முடியும்!
வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
டிஸ்கி: கிட்டத்தட்ட பதினைந்து
நாட்களுக்குப் பிறகு எனது பக்கத்தில் ஒரு பதிவு! இடைவிடாத பணிச் சுமை காரணமாக
பதிவுகள் எழுதுவதும், நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதும் தடைபட்டிருக்கிறது! இனிமேல்
தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடியும் என நினைக்கிறேன். பார்க்கலாம்! காலம் என்ன
பதில் சொல்கிறது என!