தொகுப்புகள்

திங்கள், 3 ஜூலை, 2023

சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குவாரி பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சதுரகிரி குறுந்தொடரின் முந்தைய பகுதிகள்…


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி இரண்டு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி மூன்று


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி நான்கு


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஐந்து


சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஆறு


தொடரின் முந்தைய பகுதிகளைப் படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


******


தொடரின் சென்ற பகுதியில் சொன்னது போல, மலையேற்றம் முடிந்து சந்தன மகாலிங்கம் கோயில் பகுதிக்குச் சென்று பிரதோஷ கால அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளில் பங்குகொண்ட பின்னர் அபிஷேகம் ஆரம்பிப்பதற்கு காத்திருந்தோம். காத்திருந்த சமயம் சிறிது நேரம் தியானம்.  எல்லாம் வல்ல ஈசன் அனைவருக்கும் நல்லதையே  அருளட்டும் என்பதே எப்போதும் எனது பொதுவான வேண்டுகோளாக இருக்கும். இங்கேயும் அதே வேண்டுகோள் மட்டுமே.  நமக்கு நல்லதை மட்டுமே தரவேண்டும் என்பதை அவனும் அறிவான் என்றாலும் இந்த வேண்டுதலைச் சொல்லாமலிருக்க முடிவதில்லை.  கோயில் வளாகம் சிறியது தான் என்றாலும், இத்தனை உச்சியில் கோயில் வளாகம் கட்டுவது சுலபமான காரியம் அல்லவே.  கட்டுமானத்திற்குத் தேவையான அத்தனை பொருட்களுமே மலையடிவாரத்திலிருந்து தலைச்சுமையாகவே தூக்கி வர வேண்டும் - வாகனங்கள் ஒன்றும் இங்கே வராது என்பதால்! கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களும் தூக்கி வருவது சுலபமான விஷயமா என்ன? அதுவும் கடினமான மலைப்பாதையில் பொருட்களைச் சுமந்து வருவது அசாதரணமான விஷயம் தானே.  


சந்தன மகாலிங்கம் கோயில் உருவான கதை:











படங்கள் இணையத்திலிருந்து...

சந்தன மகாலிங்கம் கோயில் வளாகத்தில் இருக்கும் அனைத்து சன்னதிகளும் மிகவும் அழகு. இங்கே சந்தன மகாலிங்கம் சன்னதி தவிர சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரியம்மன் என எல்லா சன்னதிகளும் சந்தன மயம் தான். தவிர பதினெட்டு சித்தர்களுக்கும் சிலை உள்ளது.  இங்கே ஒரு குகையும் உண்டு (தற்போது குகை அடைக்கப்பட்டு இருந்தாலும் முன்னர் இந்த குகைக்குள் சித்தர்கள் சென்று வந்ததாகவும் சொல்கிறார்கள்).  சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்ததன் காரணமாக ஒரு கதையைச் சொல்கிறார்கள்.  அந்தக் கதை:  மகரிஷி ப்ருங்கி அவர்கள் ஒரு பூரண சிவ பக்தர்.  சிவனுடன் சக்தி இருந்தாலும், சிவனை மட்டுமே வழிபடும் அளவிற்கு சிவ பக்தர்.  இப்படி இந்த ரிஷிமுனி சிவனுடன் இருக்கும் சக்தியாகிய தன்னை வழிபடாமல் சிவபெருமானை மட்டும் வணங்குகிறாரே, தன்னையும் அவர் வணங்கும்படி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் ஒரு லிங்கம் அமைத்து லிங்க பூஜை செய்தாராம்.  


பார்வதி தேவி தான் அமைத்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு இப்போதும் அபிஷேகம் நடைபெறுகிறது.  நாங்கள் சென்ற சமயத்தில் அந்த தீர்த்தத்தில் நீர் வரத்து இல்லை. மழைக் காலங்களில் நிறைய நீர் வரத்து இருக்கும் என்று தெரிகிறது.  ஒவ்வொரு தினமும் பார்வதி தேவி தான் அமைத்த சிவலிங்கத்திற்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட, அவரது பூஜையில் மகிழ்ந்த சிவ பெருமான், தனது தேவி பார்வதிக்கு, தன்னுடலில் பாதியைத் தந்து, தன்னுடன் அவரை இணைத்துக்கொண்டு "அர்த்தநாரீஸ்வரர்' ஆனாராம்.  இப்படிச் சொல்கிறது சந்தன லிங்கம் கோயில் உருவான வரலாறை இக்கோயில் குறித்த தகவல்கள். பார்வதி தேவி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் எனும் சித்தர் பூஜித்து வந்தார் என்றும் தகவல்கள் சொல்கிறார்கள். இக்கோவிலில் அபிஷேகம் செய்யப் பயன்படுத்து விபூதியில் செண்பகப் பூவை காயவைத்து அரைத்து கலந்து விடுவதால் இங்கே கிடைக்கும் விபூதி நல்ல நறுமணத்துடன் இருக்கிறது.


கோயிலில் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம்:


பிரதோஷ கால அபிஷேகத்திற்கு காத்திருந்த நேரம் முடிவடைந்து, பூசாரி வந்து சேர்ந்தார்.  மிகவும் பொறுமையாகவும் சிரத்தையுடனும் பூஜைகளும் அபிஷேகமும் ஆரம்பித்தது.  மொத்தம் 16 வகை அபிஷேகப் பொருட்கள் - சந்தனம், விபூதி, பால், தயிர், வாசனை திரவியப்பொடி, விளாமிச்சு வேர், வெட்டி வேர், பழக்கலவைகள், பழச்சாறு, எலுமிச்சை சாறு, இளநீர், தேன், பன்னீர் என வரிசை வரிசையாக அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க இறைவனுக்கு நேர் எதிரே அருகாமையில் அமர்ந்து இந்த அபிஷேகக் காட்சிகளைப் பார்க்கும் பாக்கியம் அமைந்தது பேரின்பம் தரக்கூடியதாக இருந்தது.  கண்ணார இந்தக் காட்சிகளைக் கண்டபடியே இருக்க, மனம் முழுவதும் சிவ நாமம் நிறைந்திருந்தது.  வாயும் சிவ நாமத்தினை தொடர்ந்து உச்சரித்தபடியே இருக்க மனதில் அப்படி ஒரு நிம்மதி.  மலையேற்றம் செய்து வருவதில் சில சிரமங்கள் இருந்தாலும், இப்படி ஒரு காட்சியைக் காண என்ன தவம் செய்தேன் இறைவா என்று மனம் அரற்றியபடியே இருந்தது.  ஒவ்வொரு அபிஷேகத்திற்குப் பிறகும் கற்பூர ஹாரத்தியும் காண்பிக்க கோயில் வளாகம் எங்கும் சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  நாங்கள் சென்றிருந்த சமயம் ஒரு தமிழிசைக் குழுவினர் தேவாரப் பாடல்களை அபிஷேகக் காலம் முழுவதும் பாடிக் கொண்டிருந்தார்கள். 


சிவ பூதகண இசை:


அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் மனதை மயக்கி ஒரு வித மோன நிலையைக் கொடுத்திருந்தது என்றால், அதற்குப் பின்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி அப்படியே மயிர் கூச்செரியச் செய்தது. உடம்பெங்கும் ஒரு வித பக்தி உணர்வு, இறை உணர்வு - எப்படிச் சொல்வது என்று புரியாத ஒரு உணர்வு.  சென்னை நகரிலிருந்து வந்த ஒரு பக்தர்கள் குழு மதியம் மலையேற்றம் தொடங்கி மாலை பிரதோஷ கால அபிஷேகத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தார்கள்.  அனைவரும் சிவபூதகண இசைக்குழு ஒன்றினைச் சேர்ந்தவர்கள்.  அவர்களது இசைக்கருவிகளையும் எடுத்துக்கொண்டு மலையேற்றம் செய்து வந்தவர்கள் அவர்களது இசைக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தார்கள்.  சுமார் பதினைந்து நிமிடம் வாத்திய இசை மழை! ஆஹா என்னவென்று சொல்வது அந்த இசையை.  கேட்கக் கேட்க, உடல் முழுவதும் அப்படி ஒரு அதிர்வு அலைகள் பரவின.  கேட்கக் கேட்க அந்த இசை ஏதோ செய்ய ஆரம்பித்தது.  அந்த இசை குறித்து தட்டச்சு செய்யும் போது உடலில் அதிர்வு அலைகள் பரவியது. அவர்கள் இசைக்க, பூசாரி இறைவனுக்கு ஆரத்தி காண்பிக்க, மனதெங்கும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஆனந்தமும் அங்கே இருந்த அனைவருக்கும் கிடைத்தது.  வந்தார்கள், இசைக்கருவிகளை இசைத்தார்கள், இறைவனை மனதார வணங்கினார்கள், பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்கள், புறப்பட்டு விட்டார்கள். இரவு புறப்பட்டு சென்னைக்கு காலை நேரம் சென்றடைய வேண்டுமாம்.  இது வரை அப்படி ஒரு இசையைக் கேட்டிராத எனக்கு அவர்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும், அவர்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை கூட அப்போது வரவில்லை. அவர்கள் அங்கிருந்து புறப்பட்ட பிறகுதான் அந்த எண்ணம் தோன்றியது. இல்லையென்றால் அவர்களின் தொடர்பு எண்ணையாவது வாங்கி இருப்பேன்.  


கோயில் வளாகத்தில் அலைபேசி கேமரா போன்றவை பயன்படுத்தத் தடை விதித்திருந்தார்கள் என்பதால் அந்த அற்புத சிவபூதகண இசையை என்னால் சேமித்துக் கொள்ள முடியவில்லை என்பதில் கொஞ்சம் ஆதங்கமும் உண்டு. அவர்கள் சென்ற பிறகு கோயிலில் தொடர்ந்து எல்லா சன்னதிகளிலும் பூஜைகள், ஆரத்தி நடந்து முடிந்தது.  அதன் பிறகு பிரசாதமாக பஞ்சாமிருதமும் தயிர் சாதமும் கிடைத்தது தொன்னைகளில். கோயில் வளாகத்திலேயே சிறிது நேரம் அமர்ந்து பிரதோஷ கால அபிஷேகத்தில் கிடைத்த அனுபவங்களை எண்ணிப் பார்த்து மனதில் மகிழ்ச்சியுடன் திளைத்திருந்தேன்.  இரவு உணவாக கோதுமை ரவை உப்புமாவும் தேங்காய் சட்னியும் தயாராகி எங்களுக்காகக் காத்திருந்தது என்று தெரிய அன்னதானக் கூடத்தில் சென்று சாப்பிட்டோம்.  அங்கே இருந்து வெளியே வந்து சிறிது நேரம் காத்திருந்தோம். இரவு தங்குவதற்கு அங்கே இருந்த கூடங்களில் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் சரவணன்.  கூடங்கள் பெரும்பாலும் சாதாரண தரை தான்.  கோயிலில் வேலை பார்க்கும் சிலர் அந்த கூடங்களை சுத்தம் செய்து கொண்டிருக்க, நாங்கள் காத்திருந்தோம்.  இரவு ஏழு மணிக்கு மேல்தான் ஆகியிருந்தது என்றாலும் அந்த மலைப்பகுதியில் அப்படி ஒரு அமைதி.  


இயற்கைச் சூழல், சின்னச் சின்ன ஓசைகள் கூட பெரிதாகக் கேட்கும் அளவிற்கு ஒரு அமைதி, அண்ணாந்து பார்த்தால் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் நம் கண் முன்னே, வெகு அருகிலேயே தெரிவது அற்புதமான காட்சியாக இருந்தது.  சமவெளிப் பகுதிகளிலிருந்து வானத்தைப் பார்க்கும்போது அத்தனை நட்சத்திரங்களை நம்மால் காண முடிவதில்லை. அன்றைய இரவு அந்த சதுரகிரி மலைப்பிரதேசத்தில் நாங்கள் அமர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்தபோது எத்தனை எத்தனை நட்சத்திரங்கள் கண்சிமிட்டி, பார்க்கும் அனைவரையும் பரவசம் கொள்ளச் செய்திருந்தது. அற்புதமான சூழலும் அந்த இடமும் எங்கள் அனைவரையும் அமைதியாக்கி இருந்தது. யாரிடமும் பேசாமல் இயற்கை எழிலை ரசித்தபடியே அமர்ந்திருந்தோம்.  பொதுவாக இயற்கைக் காட்சிகளைக் காணும்போது அவற்றை கேமராவிலோ, அல்லது அலைபேசியிலோ படம் பிடித்துக் கொள்வது வழக்கம் அல்லவா? ஆனால் இந்தப் பயணத்தில் படங்களோ, காணொளிகளோ அதிகம் எடுக்கவில்லை. மிகவும் குறைவான படங்களே இந்தப் பயணத்தில் எடுத்தேன். அதுவும் அலைபேசி வழியாக! கேமரா எடுத்துச் செல்லவே இல்லை. நேரடியாக, காட்சிகளை கண்டு ரசிப்பதில் இருந்த ஆர்வம், படம் எடுப்பதில் காண்பிக்க முடியவில்லை - கடந்த சில பயணங்களாகவே! 


அன்றைய இரவு எப்படிக் கழிந்தது, அடுத்த நாள் என்ன செய்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே. 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


24 கருத்துகள்:

  1. உங்கள் பரவசம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது... தொடர்கிறேன்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து ஊக்கம் தரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகமும் தரிசன அணுபவமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  3. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்திற்கு மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. இன்றைய வாசகம் அருமை. உண்மை.

    வெங்கட்ஜி, உங்கள் தரிசன அனுபவம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆமாம் இப்படியான சில தருணங்கள் நமக்கு ஒரு மோன நிலைக்குக் கொண்டு செல்லும். அதன் விவரிப்பைச் சொல்ல முடியாதுதான். நாம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருந்தால் அதை அனுபவிக்க இயலும்.

    அந்த இசை எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    மலையில் தங்குவது என்பது ஒரு இனிமையான அனுபவம் அதுவும் எந்தவித வசதிகளும் இல்லாமல்...அது தனி அனுபவம். உங்கள் பயண அனுபவங்கள் விவரணங்கள் வாசிக்கும் போது சதுரகிரி ரொம்பவே அழைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. செயற்கை வெளிச்சம் இல்லாத மலைகளில் இருந்து வானத்தைப் பார்க்கும்போது நக்ஷத்திரங்களைக்கொட்டி வைத்தது போலவே இருக்குமே !!! நேற்று கயிலை யாத்திரையை யூட்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். மானஸரோவரின் கரையில் கூடாரங்களில் தங்கி காலை ரெண்டரைக்கு வானத்தைப் பார்க்க எல்லோரும் வெளியில் வந்து உட்காந்த நேரம் வானத்தைக் காட்டினார்கள் ! ஹைய்யோ. !!!! யுளசி கோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செயற்கை வெளிச்சம் இல்லாத மலைகளில் இருந்து வானத்தைப் பார்த்தது மகிழ்ச்சியைத் தந்தது துளசி டீச்சர். வட இந்தியாவில் சென்ற மலைப்பகுதிகளில் இப்படி பார்த்தது உண்டு - மேககூட்டம்/பனி மூட்டம் இல்லாதிருந்தால்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. துளசி கோபால்

    பதிலளிநீக்கு
  9. https://youtu.be/UXBzZLdLyN4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டேன் - பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  10. வாசகம் அருமை.
    கோவில் செய்திகள் படிக்க நேரில் பார்த்த அனுபவம் கொடுத்தது.
    //எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் நம் கண் முன்னே, வெகு அருகிலேயே தெரிவது அற்புதமான காட்சியாக இருந்தது. //

    இரவு நேரத்தில் வானத்தில் வெகு அருகில் எண்ணிலடங்கா நடசத்திரங்களை பார்ப்பது மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  11. எல்லாம் வல்ல ஈசன் அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பிற்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா. நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  12. சிவ பூதகணத்தாரின் வாத்தியங்கள் நம்மை மெய் மறக்கச் செய்பவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெய் மறக்கச் செய்த இசை தான். நான் முதல் முறையாக கேட்டேன் என்பதால் இன்னும் அதிகம் பிடித்திருந்தது துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....