தொகுப்புகள்

வியாழன், 3 பிப்ரவரி, 2022

தமிழகப் பயணம் - இரயில் பயண ஸ்வாரஸ்யங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட சிந்தனையை சிறகடிப்போம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வெற்றி என்பது முடிவும் அல்ல; தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல... இரண்டுமே அடுத்தகட்ட வளர்ச்சிக்கானது.

 

******

 

செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 

 

ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ

 

Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி

 

சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்

 

மீன் செத்தா கருவாடு

 

பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி

 

தரங்கம்பாடி எனும் Tranquebar

 

திருக்கடையூர் கோவில்

 

திருக்கடையூர் - கல்யாண விசேஷங்கள்

 

பயணங்கள் முடிவதில்லை

 

பயண ஸ்வாரஸ்யங்கள்

 

பிரம்மா கோவில் - வங்கிகளில் தமிழாக்கம்



 

விடுமுறை முடிந்து மீண்டும் தலைநகர் திரும்ப வேண்டி, திருச்சியிலிருந்து இரயிலில் சென்னை வரை - அங்கிருந்து தில்லி வரை விமானப் பயணம். இரயில் பயணத்தில் கிடைத்த சில ஸ்வாரஸ்ய அனுபவங்கள் தமிழகப் பயணம் தொடர் பதிவுகளின் ஒரு பகுதியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள் இரயிலில் பயணிப்போம். 

 

*****

 

பிஸ்கெட் தாத்தா:  சென்னை நோக்கிய பயணத்தில்..... பல்லவன் ஸ்பெஷல் விரைவு வண்டியில்......  சாதாரண பெட்டியில் பயணிப்பதற்கும் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்..... பார்க்கக் குறைவான காட்சிகள்.... ஏதோ பேசினால் முத்து உதிர்ந்து விடுமோ என கஷ்டப்பட்டு வாயை மூடிக்கொண்டு பயணிக்கும் நபர்கள்

 

எதிர் இருக்கை தாத்தாவும் பாட்டியும் ஒரு பாக்கெட் Good Day Biscuits பாசத்தோடு பகிர்ந்து உண்டு கொண்டிருக்கிறார்கள்..... எனக்கு ஒரு பிஸ்கெட் கிடைக்குமா என என்னைப் போலவே பக்கத்து இருக்கைப் பையனும் அவர்களை பார்த்தபடியே பயணித்துக் கொண்டிருக்கிறார்..... 

 

பிஸ்கெட் கிடைக்குமா கிடைக்காதா? 🙂

 

*****

 

கதை மாந்தர்கள்: திருவரங்கம் இரயில் நிலையத்தில் இரயிலில் ஏறி எனது இருக்கை அருகே சென்றால், அங்கே ஒரு இளைஞர் அமர்ந்து இருந்தார். அழுக்கான கைலியும் சட்டையும் அணிந்து சூழலுக்கு சம்மந்தம் இல்லாமல் இருந்தார். சட்டைப் பையில் நான்கு ஐந்து முன்பதிவு செய்வதற்கான படிவங்கள்.....  

 

என்னுடைய இருக்கை எனச் சொல்ல பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டார்.  பேச்சுக் கொடுத்தேன். உங்களுடைய பயணச் சீட்டைக் காண்பியுங்கள் என்றால் பயணச் சீட்டு பரிசோதகரிடம் காண்பிப்பேன் என்கிறார்.  பக்கத்து இருக்கைக்கான முன்பதிவு செய்தவர் வந்ததும், "இந்த நாட்டில் எதுவும் சரியில்லை.  System முழுசா மாத்தணும்" னு ரஜினி மாதிரி சொல்லிட்டு கிளம்பிட்டார் சர்ர்னு...... 

 

கதை மாந்தர்களுக்குக் குறைவே இல்லை போங்க..... 🙂

 

*****

 

சுத்தம், சுகாதாரம்: பிஸ்கெட் தீர்ந்து விட்டது. எனக்குக் கிடைக்கல.... 🙂 அதாவது கொடுக்கல!  

 

அடுத்து பாக்கெட்டிலிருந்து வெளிவந்தது..... ஐம்பது பைசா சாக்லேட் இரண்டு... ஒன்றை எடுத்து பாசத்தோடு பாட்டியிடம் நீட்ட..... வெட்கத்தோடு வேண்டாம் என்றார்..... "சாக்லேட் சாப்பிடற வயசா இது...." என்று முழங்கையால் ஒரு இடி...... 🙂

 

இரண்டு சாக்லேட்டும் தாத்தாவே சாப்பிட்டு விட்டார்! அதன் பின் செய்ததைப் பார்த்து கொஞ்சம் கோபம் உண்டானது.... சாக்லேட் Wrapper இரண்டும் சுருட்டி இருக்கையின் கீழே போட்டு விட்டார்..... என்னதான் சுத்தம், சுகாதாரம், ஸ்வச் பாரத் என விதம் விதமா கூவினாலும் ஒவ்வொரு தனி மனிதனும் மாறும் வரை இங்கே எதுவும் மாறப் போவதில்லை.....

 

*****

 

காஃபி என்றொரு கண்ட்ராவி திரவம்.....: இரயிலில் கிடைக்கும் இந்த காஃபி எனும் திரவம் குறித்து எதுவும் சொல்லாமல் இருப்பது மேல் என்றே சொல்வேன்... ஆனாலும் இன்றைக்கு சொல்ல வேண்டியதாகி விட்டது எதிர் சீட் தாத்தாவால்..... 

 

நான் காஃபி வாங்கிட, தாத்தாவும் காஃபி வாங்கினார்.  பாட்டியிடம் கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..... "ஏண்டி..... டீ, காஃபின்னா விரும்பி சாப்பிடுவியே.... ஏன் வேண்டாம்னு சொல்ற....."

 

"ட்ரையின்ல நல்லா இருக்காது..... அதான் வேண்டாங்கிறேன்..... " 

 

அதற்கு தாத்தாவின் பதில்.....

 

"ஆம்....  நாம கொடுக்கற பத்து ரூபாய்க்கு Cafe Coffee Day Coffee- கிடைக்கும்...."

 

நீங்க அடிச்சு ஆடுங்க தாத்தா......

 

*****

 

பயணமும் இசையும்: ஒரு இசைப் பிரியரின் எண்ணம்......நான் ரசிக்கிற பாட்டை எல்லாரும் கேட்டே ஆகணும் கேட்டுக்கோ.....

 

சப்தமாக இரயிலில் பாட்டுக் கேட்டுக் கொண்டு வருகிறார்.... அதுவும் டப்பாங்குத்து பாட்டுகளாக....

 

நடுவே கொஞ்சம் போனால் போகிறது என "மண்ணில் இந்த காதல் அன்றி...." பாடலும், "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.... " பாடலும்......

 

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வோம்......

 

*****

 

பல்லவன் இரயிலும் வட இந்திய பயணச் சீட்டு பரிசோதகரும்..... :

 

எல்லோரிடமும் ஹிந்தியிலே பேசிக் கொண்டிருக்கிறார். எண்களைக் கூட ஹிந்தியில் தான் சொல்கிறார்..... "இக்கீஸ்... ஆகயேன் க்யா?"

 

இங்கே வந்து பல வருடம் ஆகிவிட்டது போலும்..... அலைபேசியில் பேசும்போது ஹிந்தியில் தமிழ் பேசியதைக் கேட்க முடிந்தது......🙂

 

நீங்க பாட்டுக்கு ஹிந்தி ஒழிகன்னு கத்திட்டே இருங்க, நாங்க எல்லா மாநிலத்துக்கும் வந்து அந்த மொழியை கத்துக்கிட்டு சமாளிப்போம் என்று சொல்லாமல் சொல்கிறார் போலும்....

 

*****

 

ஷூக்குள் சாவி: "டேய்... எங்கடா இருக்கே? வீட்டில தானே"  பின் சீட்டிலிருந்து ஏதோ ஒரு பெண்ணின் குரல்..... 

 

".... நீ வீட்டுல இல்லையா.... அர்ஜூன் இருப்பானா"  

 

"அவனும் இருக்க மாட்டானா? நான் சென்னைக்கு வந்துட்டு இருக்கேண்டா..... இப்ப என்ன செய்யறது?"

 

"..... சாவி ஷூ உள்ள இருக்குமா? சாவி வைக்க வேற இடமே கிடைக்கலியாடா உனக்கு.....?"

 

சரி நான் வீட்டுக்கு வந்து சாவி எடுத்து வீட்டை திறந்துக்குறேன்......

 

*****

 

டீச்சர் எடுத்த பாடம்: "டீச்சர்... இப்பல்லாம் டீச்சரா வேலை செய்யறது கஷ்டமா இருக்கு..... எத்தனை வேலை..... பேசாம வி.ஆர்.எஸ். வாங்கிக்கலாம்னு தோணுது..... "

 

திருவரங்கத்தில் ஏறிய ஏதோ ஒரு ஸ்கூல் டீச்சர், இரயில் பயணம் முழுவதும் அலைபேசி வழி பேசிக்கொண்டே வருகிறார்எனக்கு ஒரு டவுட்.... "ஸ்கூல் நினைவுல இரயிலில் பயணிகளுக்கு பாடம் எடுக்கறாரோ?" 🙂

 

*****

 

உண்ட களைப்பு: பிஸ்கெட்ஸ், சாக்கலேட், காப்பி, டீ, காரப் பொறி, பொங்கல், திரும்பவும் டீ......  வரிசையா சாப்பிட்டுக் கொண்டே இருந்ததில்......

 

உறக்கம் வந்து விட்டது எதிர் சீட் தாத்தாவுக்கு......

 

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு....

 

*****

 

கேட்டால் மட்டுமே கிடைக்கும்....: "இரயில் கோச்சில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட் வேலை செய்யலியே.... "

 

பின்னாலிருந்து ஒரு குரல்....

 

வட இந்திய டிக்கெட் பரிசோதகரிடம் கேட்க, சம்பந்தப்பட்ட நபரை அலைபேசி வழி அழைத்துச் சொன்னார். பிறகு வேலை செய்ய ஆரம்பித்தது...இங்கே எதுவா இருந்தாலும் கேட்டா தான் கிடைக்கும்.....

 

*****

 

இரயில் பயணத்தின் முடிவு: 

 

இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் இனிய பாடல்..... சக பயணியின் உபயத்தில்.....

 

செந்தமிழ் தேன்மொழியாள்.... நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்......

 

ஆஹா.....

 

பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி..... இனிதான பாடலுக்கு இடையே, "காரப்பொறி, கடலை மிட்டாய், சிப்ஸ், பிஸ்கெட்......." என்று விற்பனை செய்து கொண்டு வருகிறார் ஒரு சிப்பந்தி....

 

பல்லவன் இரயில் பயணமும் நிறைவுக்கு வந்தது.  மீண்டும் சென்னை விமான நிலைய அனுபவங்கள் தொடங்கும் என்று சொல்லிக்கொண்டு......

 

****

 

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

34 கருத்துகள்:

  1. உடன் பயணிப்போர் நன்றாகவே பொழுது போக உதவி இருக்கிறார்கள்.  உண்மையில் ரயில்களில் காபி கண்றாவியின் சிகரமாக இருக்கும் என்பதே என் அனுபவமும்!  தாத்தா தாத்தா என்கிறீர்களே..   என்ன வயதிருக்கும்?!  ஷூக்குள் சாவி பயமுறுத்துகிறது.  வெளியில் வைத்திருக்கும் ஷுக்களுக்குள் சமயங்களில் தேள் போன்ற ஜந்துக்கள் இருக்கும் எச்சரிக்கையாக இருங்கள் என்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக பயணிக்கும் போது இப்படியான சில மனிதர்கள் பொழுது போக நன்றாகவே உதவுகிறார்கள்.

      ஷுக்குள் சாவி - இதைவிட இன்னும் மோசமான ஒன்றை நான் பார்த்து இருக்கிறேன் தலைநகர் தில்லியில்.... சொல்வதற்கே அசிங்கமாக இருப்பதால் சொல்லப்போவதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. எல்லாமே சுவாரஸ்யமான தகவல்கள்.

    //ஒவ்வொரு தனி மனிதனும் மாறும் வரை இங்கே எதுவும் மாறப் போவதில்லை//

    இதுதான் ஜி உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. சாதாரண பெட்டியில் பயணிப்பதற்கும் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்..... பார்க்கக் குறைவான காட்சிகள்.... ஏதோ பேசினால் முத்து உதிர்ந்து விடுமோ என கஷ்டப்பட்டு வாயை மூடிக்கொண்டு பயணிக்கும் நபர்கள்…



    எதிர் இருக்கை தாத்தாவும் பாட்டியும் ஒரு பாக்கெட் Good Day Biscuits ஐ பாசத்தோடு பகிர்ந்து உண்டு கொண்டிருக்கிறார்கள்..... எனக்கு ஒரு பிஸ்கெட் கிடைக்குமா என என்னைப் போலவே பக்கத்து இருக்கைப் பையனும் அவர்களை பார்த்தபடியே பயணித்துக் கொண்டிருக்கிறார்.....



    பிஸ்கெட் கிடைக்குமா கிடைக்காதா? 🙂//

    ஹாஹாஹாஹா பிஸ்கட் கிடைத்ததா இல்லையா?!!!!

    ஆமாம் ஜி சாதாரணப் பெட்டியில் பயணிப்பதற்கும் குளிரூட்டப் பெட்டியில் பயணிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். சாதாரணப் பெட்டியில் நிறைய கதை மாந்தர்கள் கிடைப்பார்கள்!!! பெரும்பாலும் நான் சாதாரணப் பெட்டியில் பயணிப்பதை விரும்பினாலும் (இப்படியான சுவாரசியத்திற்காகவே பளஸ் ஜன்னல் இருக்கையைத் தேர்ந்தெடுத்து காட்சிகளைப் பார்க்க முடியும் அது தனி சுவாரசியம்!) ஒரு சில காரணங்களால் குளிரூட்டப்பெட்டியில் பயணிக்க வேண்டியிருக்கிறதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் குளிரூட்ட பெட்டியில் பயணிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது. மற்ற சமயங்களில் சாதாரண பெட்டிகளில் பயணிக்கும்போது நிறையவே அனுபவங்கள் கிடைக்கின்றன கீதா ஜி.

      பதிவு குறித்த தங்களது கருத்துரைகள் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. ஆகா!..

    ரயில் பயணத்தில் அழகான நேர்முக வர்ணனை..

    எப்படியாயினும் பயணங்கள் இனிமையானவை தான்!..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் இனிமையானவை, எனக்கு மிகவும் பிடித்தவை. பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் வர்ணித்தது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. கடைசில பிஸ்கட் கிடைக்கலையா!!!

    ரஜனி வசனம், ஹிந்தியில் தமிழ், தாத்தா - சாக்கலேட்!! தாத்தாவின் காபி கமென்ட்!!! ஹாஹாஹா

    கடுப்பு : தாத்தா குப்பையை கீழே போட்டது, ஆமாம் தனிமனிதன் திருந்தும் வரை எதுவும் உருப்படப் போவதில்லை. பயணச் சீட்டு பரிசோதகர் ஹிந்தியில் எண்களைச் சொன்னது அனுபவம் உண்டு..., பாட்டுகள், வீடியோக்களைச் சத்தமாக வைப்பது (நல்லகாலம் சில என் காதில் விழாது!!!)

    ஷூவுக்குள் சாவி!! ஆ கொஞ்சம் டேஞ்சர்!!

    பரவாயில்லையே ஜி சார்ஜர் பாயின்ட் வேலை செய்யலைன்னு சொன்னதும் வேலை செய்ய வைச்சுட்டாங்களே!!! அதுவே பெரிய விஷயம்!!!!

    சுவாரசியம்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸ்கட் கிடைக்கவே இல்லை கீதா ஜி.... அவருக்கே சரியாக போய் விட்டது. பதிவின் மற்ற பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. இவ்வாறான ஒரு ஈடுபாடு என்பதானது மனதிற்கு ஓர் உத்வேகத்தைத் தரும். பயணிப்போர் இவ்வாறாகக் கவனித்துககொண்டே செல்வது மனதிற்கும் சுகமளிக்கும். சில பயணங்களில் இந்த உத்தியைக் கடைபிடித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதிற்கு சுகம் அளிக்கும் ஈடுபாடு என்பது உண்மைதான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. சுவாரசியமாக இருக்கிறது.
    ஆரு நிமிட வாசிப்பில் ஒரு சிறிய பயணம் சென்ற அணுபவம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை வாசித்ததில் உங்களுக்கும் பயணம் சென்ற அனுபவம் கிடைத்ததாக சொன்னதில் மகிழ்ச்சி அரவிந்த். மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது
    ரயில் பயணத்தில் பார்த்த அனைவரை பற்றியுமான எண்ணங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. தாத்தா, பாட்டி வர்ணனைகளில் ஆரம்பித்து பயணித்த அனைவரையுமே நகைச்சுவை உணர்வோடு ஆராய்ந்து சொல்லிய விதத்தை ரசித்தேன். உங்களுடன் நாங்களும் பயணித்த உணர்வையும்,கூட பயணித்தவர்களின் குணநலன்களையும் கண்டுணர்ந்த அனுபவத்தை தங்கள் அழகான விமர்சனம் தந்து விட்டது.

    ஷூவுக்குள் சாவி வைப்பது பத்திரமான செயலா? அந்த உத்தியை யாராவது கண்டு கொண்டு விட்டால் என்ன செய்வது? போகட்டும்...எப்படியோ,இப்படியும் கவலைகள் இல்லாத மனிதர்களும் உலகில் இருக்கிறார்களே.:) அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. இன்றைய வாசகமும் மற்றும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. பயண அனுபவ தொகுப்பு அருமை.
    தாத்தா இப்படி செய்யலாமா> அவர் மற்றவர்களுக்கு அரிவுரை சொல்ல வேண்டியவர்.

    ஷூவுக்குள் சாவி இப்படி எல்லாம் வைக்கலாமா?
    இனிய பாடலும் கிடைத்து இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டியவர் இப்படி நடந்து கொண்டது சரி அல்ல. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. ரயில் பயண அனுபவங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்துகொண்ட ரயில் பயண அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி ராமசாமி ஜி.

      நீக்கு
  14. உங்கள் ரயில் பயண அனுபவம் சுவாரசியம்.

    ஷூவுக்குள் சாவி வைப்பது என்பது வியப்பாக இருக்கிறது.

    குளிரூட்டப் பெட்டி என்றாலும் உங்களுக்கும் சுவாரசியமான பயணமாக அமைந்திருக்கிறது என்பதை விட அதை நீங்கள் சுவாரசியமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் என்று சொல்வேன். எத்தனை பேருக்கு இப்படிச் சொல்ல வரும்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்தை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. உங்கள் ரயில் பயண அனுபவங்களை ஸ்வாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள். ரயிலில் காபி,டீ, சூப் எல்லாமே மோசமாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயிலில் உணவு வகைகள் சரியாக கிடைப்பதில்லை. வேறு வழியில்லாமல்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  16. அன்பின் வெங்கட்,
    என்றும் நலமுடன் இருங்கள்.
    ரயிலில் அதுவும் குளிரூட்டப் பட்ட பெட்டியில்
    பயணிப்பதை சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    நான் சென்ற ஏஸிப் பயணங்கள் டார்ச்சராகவே
    இருந்திருக்கின்றன.
    சத்தம் போடவே வண்டியில் ஏறினார்களோ
    என்று தோன்றும்.

    உங்களின் நல்ல குணம் எல்லாவற்றையும்
    வேடிக்கையாகக் கண்டு வந்திருக்கிறீர்கள்.!!!

    இது போலத் தாத்தா பாட்டி:)

    அன் ரிசர்வ்ட் பயணி,
    சாவி வைத்த இடம் சொல்லும் அம்மா,
    குத்துப் பாட்டு கேட்டவர்,
    விடாமல் பேசி வந்த ஆசிரியை
    அப்பாடி !!! நல்ல பதிவு வெங்கட். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....