அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி ஐந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஆயிரம் அடிகள் வாங்கிய கல் அழகிய சிற்பம் ஆகிறது; ஆயிரம் வலிகள் தாங்கிய மனம் வாழ்வை வெல்கிறது.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
யாரிவள்! பகுதி இருபத்தி இரண்டு - பால்காரருக்குப் பாடம்
தவறுகளை கண்டும் காணாததைப் போல இருப்பதை விட அதை சுட்டிக் காட்டவோ, தட்டிக் கேட்கவோ தயங்கவே வேண்டாம்! அமைதியாக இருந்தால் அது சரியென்று அல்லவா புரிந்து கொள்ளப்படும்!
சுட்டிப்பெண்ணுக்கு சுட்டித்தனத்துடன் தன்னைச் சுற்றி நிகழும் தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியமும், சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆர்வமும் இருந்தது. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் ஊக்கப்படுத்தவும் நபர்கள் இருப்பார்கள் என்றால் அவளால் எதிர்காலத்தில் நிச்சயம் சாதிக்கவும் முடியும் என்பது உறுதி!
அம்மா ரேஷன் கடைக்கு அனுப்பும் போதெல்லாம் செங்கல், டின் என்று வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் இவளும் மணிக்கணக்கில் நின்று வாங்கி வந்திருக்கிறாள். அடியில் அரைவட்டத்துக்கு நசுக்கிய எண்ணெய் கேனில் அளந்து ஊற்றிய மண்ணெண்ணெயை வாங்கிய போது இது சரியான அளவீடு அல்ல என்று தோன்றியது!! நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது இவளுக்குப் புரிந்தது!
இப்படித்தான் அம்மா வாங்கும் பாலில் தண்ணீர் அதிகமாக இருப்பதாக அக்கம் பக்கத்து வீடுகளில் பேசிக் கொள்வதை இவள் கேட்க நேர்ந்தது! இதற்கு ஏதாவது வழி செய்யணும் என்று யோசித்தாள்! அந்த பால்காரருக்கு தான் செய்யும் தவறு நிச்சயமாக புரிய வேண்டும்!
என்ன செய்யலாம் என யோசித்தாள்! சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாமலை' திரைப்படம் அப்போது தான் வெளிவந்திருந்தது! பக்கத்து வீட்டில் ரஜினி ரசிகரான ஒரு அண்ணா இருந்தார்! அவரது வீட்டில் ஆடியோ கேசட்டுகளில் ஒலித்த தவறு அலறிய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்ட போது பாடல் வரிகள் இவள் மனதில் பதிந்து போனது.
தன் ரத்தத்தில் ஒரு பாதி
பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா!
பிரித்தாலும் பாலோடு
தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா!
இதுவே சரியான வழியாக அவளுக்குத் தோன்றியது! அவர் இதைக் கேட்கணும்! இனிமே இப்படி பண்ணக்கூடாது!
அந்த நாளும் வந்தது! அம்மா! பால்ல்ல்!! என்ற அலறலோடு பால்காரர் படிகளில் ஏறி வரும் போது டேப் ரிக்கார்டரில் சரியாக இந்த வரிகளை சத்தமாக ஒலிக்க விட்டாள்! அதோடு விட வில்லை! அந்த வரிகளை உடனே ரிவைண்ட் செய்து இறங்கிச் செல்லும் போதும் கேட்க வைத்தாள்..🙂
இப்படிச் செய்த போது அநீதியை தட்டிக் கேட்டதால் இவளுக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது!! இப்படியெல்லாம் செய்தால் திரைப்படம் போல எல்லோரும் உடனே தன் தவறை உணர்ந்து விடுவார்கள் என்று எண்ணினாள்..🙂
இன்னும் இந்த சமுதாயத்தில் இவள் சந்திக்க வேண்டிய அனுபவங்கள் எவ்வளவோ இருக்கே! அப்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று புரியத் தான் போகிறது! எல்லோரும் அவரவர் இஷ்டப்படி தவறென்று தெரிந்தே செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதெல்லாம் காலம் தான் இவளுக்கு உணர்த்தும்!!
இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
வாசகம் : ஹும்... எபப்டியெல்லாம் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது!!!
பதிலளிநீக்குபால்காரரின் ரீயாக்ஷன் என்ன என்று சொல்லவில்லையே... கண்டுக்கிட்டாரா, இல்லையா?
நாங்கள் கறந்த பால் எப்போதாவது வாங்குவதோடு சரி... ரொம்ப நாட்களாகவே கவர் பால்தான்.
வாசகம் - இதுவும் கடந்து போகும் என்று தானே எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது! :)
நீக்குபால்காரர் கண்டு கொள்வாரா என்ன? அவர் எப்போதும் போல தண்ணீர் கலந்து கொண்டே தான் இருந்திருப்பார்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
பால்காரருக்கு கேட்டாலும் செவிடு போலவே சென்று இருபாபார்.
பதிலளிநீக்குஅப்படித்தான் இருக்க வேண்டும் கில்லர்ஜி. அவர் கண்டுகொண்டால் அவருக்கு லாபம் குறைந்து விடுமே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆதி! வாசகம் அழகான வாசகம். ஆனால் சில சமயம் என்னதான் அடி வாங்கினாலும் ...பழகிவிடுகிறது. வெல்கிறதா என்று கேட்டால் ம்ஹூம்....அதுவும் அப்படியே கடந்துவிடுகிறது. அப்படியே இத்தனை வருஷம் ஓட்டியாகிவிட்டது!
பதிலளிநீக்குஹாஹாஹா பால்காரர் ரஜனி ரசிகராவே இருந்தாலும் கூடக் கண்டிப்பாக அது உரைத்திருக்காது. அது படம் இது நிஜம்!!!
கீதா
வாசகம் குறித்த தங்களது கருத்துகள் சரி தான். பால்காரருக்கு உரைத்திருக்க வாய்ப்பில்லை கீதா ஜி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குசூப்பர் தட்டிக்கேட்கும் சுபாவம் அப்பவே! ஆனால் யதார்த்தம் புரிந்திருக்கும் சுட்டிப் பெண்ணிற்கு இன்னும் வாழ்க்கை அனுபவங்கள் ஏற்பட்ட போது.
பதிலளிநீக்குஎனக்கும் என் பல நினைவுகள் கூடவே வந்தது! என் பிறந்தவீட்டில் என் பெயர் சட்டம்பி! எழுதினால் இங்கு பதிவு போன்று ஆகிவிடும்! உங்கள் பதிவுகள் நிறைய நினைவுகளை எழுப்புகிறது. பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன் ஆனால் அதைக் குறித்தும் வைத்துக் கொள்ளவில்லை. அப்படியே மறந்தும் விடுகிறது!!
கீதா
சட்டம்பி - ஹாஹா... நல்ல பெயர். உங்கள் அனுபவங்களையும், நினைவுகளையும் எழுதுங்களேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி கீதா ஜி.
தட்டிக் கேட்க விரும்பும் சுட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.
நீக்குபாலில் தண்ணீர் கலக்காதே என்று பால்காரரிடம் சொல்வதும், பெற்றபிள்ளைகளை அரசியலுக்குக் கொண்டுவராதே என்று அரசியல்வாதிகளிடம் சொல்வதும் ஒன்றுதான்! இருந்தாலும் அநீதியைத் தட்டிக்கேட்கவேண்டும் என்று தோன்றுவதே ஒரு வெற்றிதான் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குவாரிசு அரசியல்! ஹாஹா.
நீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி இராய செல்லப்பா ஜி.
பால்காரர் தரும் பாலும் தண்ணீரும் இரண்டறக்கலந்தது. இங்கு எங்கள் பக்கங்களில் கறந்த பால்தான் வாங்குகிறோம். அதுவும் அப்படித்தான்.
பதிலளிநீக்குசிறிய வயதிலேயே உங்கள் எண்ணங்களின் அஸ்திவாரம் பலமாக இருக்கிறது. சிறப்பான விஷயம்
துளசிதரன்
கறந்த பால் என்றாலும், அதுவும் நம் கண்ணெதிரே கறப்பார்கள் இங்கே - ஆனாலும் தண்ணீர் கலந்து விடுவதுண்டு. பொதுவாக வடக்கே பால் நன்றாகவே இருக்கும். பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.
நீக்குஅருமையான வாசகம். எல்லாவற்றையும் கடக்கத் தான் வேண்டும்.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. நன்றி.
நீக்குவாசகம் அருமை. ஆதியின் நினைவுகள் அருமை.
பதிலளிநீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதட்டிக்கேட்கணும் என்ற எண்ணம் வந்ததே பெரிய விஷயம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.
நீக்கு