தொகுப்புகள்

வியாழன், 2 ஜூன், 2016

கூடை நிறைய சமோசா.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 14

அம்மா மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து ஓட்டுனர் ஷரத்-ஐ அழைத்தால் அவர் அலைபேசியை எடுக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைக்க, அவரும் அம்மா மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்தார் – கைகளில் யோங்க்சா மற்றும் கருப்பு அரிசியோடு.  வாங்களேன் நம்ம வீட்டுக்குப் போய் கருப்பரிசி சாதமும் யோங்க்சா சட்னியும் ஒரு பிடி பிடிக்கலாம்......என அன்புடன் அழைக்க, உங்கள் துணைவிக்கு வீண் சிரமம் எதற்கு? ஏதாவது உணவகத்திற்கு, சப்பாத்தி-சப்ஜி கிடைக்கும் உணவகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்என நாங்களும் அன்புடன் மறுத்தோம். “நீங்க கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!என்று சொல்லியபடி வண்டியை ஒரு உணவகத்திற்கு விட்டார்.

உணவகத்தின் வாயிலில் எங்கள் வண்டியைத் தவிர வேறு ஒரு வண்டியும் இல்லை. நாங்கள் மட்டுமே அன்றைய வாடிக்கையாளர்கள் போலும்.....  உள்ளே நுழைய, கல்லாவில் இருந்தவரைப் பார்த்தால் வட இந்தியரைப் போல இருக்க, வினவினோம்... ராஜஸ்தானிலிருந்து மூன்று நான்கு தலைமுறைகளாக இங்கேயே வியாபாரமாம். அண்ணன் தம்பிகள் மூன்று பேர் – மூவருக்கும் தனித் தனி உணவகங்கள். பெரிய கடை இல்லை என்றாலும், சின்னச் சின்ன கடைகள் – வியாபாரமும் சுமாராக இருக்கிறது என்று சொன்னார். 

கூடைக்குள் சமோசா... 
பேப்பர் போட்டு மூடி இருக்கு!

ஒரு பக்கத்தில் நிறைய ஸ்டால்கள் – பானி பூரி, சாட் சமாச்சாரங்கள் கூடவே தென்னிந்திய மசால் தோசை – மசால் தோசை இல்லாத இடமே இல்லை இந்தியாவில்! – அனைத்தும் மூடி இருக்க, கடைக்காரரே சொன்னார் – மாலை நேரத்தில் தான் வியாபாரம் சூடு பிடிக்குமாம். அவரது கல்லா அருகே இருந்த மேஜையில் ஒரு மூங்கில் கூடை.  அந்த கூடை நிறைய சமோசா வைத்திருக்கிறார்கள். காலையிலேயே செய்து வைத்து விட்டால் மாலை வரையோ, அல்லது அடுத்த நாள் வரையோ விற்றுக்கொள்ளலாம்.... கெட்டுப் போவது போலத் தெரிந்தால் இன்னுமொரு முறை எண்ணையில் போட்டு சுடச் சுட தந்து விடுவார்கள் போலும்!

சாப்பிட என்ன இருக்கிறது எனக் கேட்டால் “சமோசா, சாய்என்கிறார்!  சப்பாத்தி, பராட்டா, சப்ஜி என ஏதாவது இருக்கிறதா எனக் கேட்க கொஞ்சம் லேட் ஆகும் உட்காருங்க எனச் சொல்லி உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த சிலரை தட்டி எழுப்பி விட்டார். கொட்டாவி விட்டபடியே வந்து ஒருவர் மாவு பிசைய ஆரம்பிக்க, ஒருவர் வெங்காயம், தக்காளி வெட்ட ஆரம்பித்தார்....  அட இனிமே தான் கல்லையே போடப் போறாங்க டோய்.... என உட்கார்ந்து இதுவரை பார்த்த இடங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 

காத்திருந்து.... காத்திருந்து.....

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு சுடச்சுட சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள [dh]தாலும் வந்தது. கூடவே ஒரு தட்டில் சில வெங்காயம் மற்றும் தக்காளித் துண்டுகள், ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் Mixed Vegetable ஊறுகாய்..  இருந்த பசிக்கு அதுவே தேவாமிர்தமாக இருந்தது. ஆளுக்கு ஐந்தாறு சப்பாத்திகளை உள்ளே தள்ளிய பிறகு, நண்பர் தயிர் கிடைக்குமா எனக் கேட்க, கொஞ்சம் முழித்தார் – இனிமேல் தான் பால் கறந்து தயிர் உறை ஊற்றுவாரோ என நினைத்து “இல்லைன்னா பரவாயில்லை!என்று சொல்லி விட்டோம்.

வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான உணவகங்களில், அவர்களது உணவுகள் விரைவில் கிடைத்து விடுகின்றன என்றாலும் அவற்றை நம்மால் சாப்பிட முடியாது என்பது தான் நிதர்சனம்.  கொஞ்சம் பொறுத்திருந்தாலும் வயிற்றுக்கு கெடுதல் செய்யாத உணவாகத் தேடுவதே எங்கள் வேலையாக இருந்தது – பதினைந்து நாட்கள் பயணம் என்பதால் நடுவே ஒருவருக்கு வயிறு சரியில்லாமல் போனால் கூட மொத்த பயணத் திட்டமும் திண்டாட்டமாகி விடும்.......

கடைச் சிப்பந்திகளைத் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டதால் அவர்கள் மனதுக்குள் எங்களைத் திட்டியிருக்கலாம்....  என்றாலும் எங்கள் பசி தீர்ந்ததே அதற்கு அவர்களுக்கும் கடை முதலாளிக்கும் நன்றி சொல்லி புறப்பட்டோம் – உரிய கட்டணம் செலுத்தியபிறகு தான்! அதிகம் ஒன்றுமில்லை – ஐந்து பேர் சாப்பிட்டதற்கு 300 ரூபாய் மட்டுமே.....  அடுத்த வேளை உணவு இங்கே வரப் போவதில்லை – அவரின் அண்ணன் கடைத் தெருவில் நடத்தும் உணவகத்திற்கு – கொஞ்சம் கூட்டம் இருக்கும் கடைக்குப் போகலாம் என முடிவு செய்தபடி வெளியேறினோம்.

அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் – நாம் கடைசியாகப் போகப் போகும் இடம்! அங்கே கூட வேறுபாடுகள்....  அது என்ன என்பதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. உங்கள் அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. கூடை நிறைய சமோசா என்றதைப் பார்த்ததும் ஒருவேளை இதுதான் இருக்கிறது என்ரு அதை உங்கள் குழுவிற்கே தந்துவிட்டாரோ என்று நினைத்தோம்....

    அடுத்த பகுதிக்கு உங்களுடன் வர காத்திருக்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. கெட்டுப் போவது போல இருந்தால் மறுபடி எண்ணெயில் போட்டா... ஐயோ! 300 ரூபாய் ரொம்ப 'சீப்'தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. // கெட்டுப் போவது போலத் தெரிந்தால் இன்னுமொரு முறை எண்ணையில் போட்டு சுடச் சுட தந்து விடுவார்கள் போலும்!//
    வரிகளை இரசித்தேன்!

    தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. ஏதோ பசிக்குக் கிடைச்சதே, அதுவே பெரிய விஷயம். சமோசா எப்போதுமே எனக்குப் பிடிக்காத ஒன்று. இப்போ வேறே ஏற்கெனவே பண்ணி வைச்சிருக்கிறதாச் சொல்லிட்டீங்களா? இனிமேல் அதைச் சாப்பிடும்போதெல்லாம் யோசிக்கணும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. இந்த மாதிரி அனுபவம் எங்களுக்கு நாங்கள் ஜெய்ப்பூர் சென்றபோது ஏற்பட்டது. நாம் கேட்டபின் தான் செய்து தருகிறார்கள் சப்பாத்திமெலிதாக இருக்க வேண்டும் என்று என் மனைவி அவளுக்குத் தெரிந்த ஹிந்தியில் பத்லா சப்பாத்தி என்பாள் அவர்களிடம் எதையும் செய்யும் முனைப்பு இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. வடகிழக்கு மாநிலங்களின் சாப்பாட்டு அனுபவங்களையே தனியாக புத்தகமாகப் போடலாம் போலுள்ளதே! அங்கே ருசிக்கு சாப்பிட முடியாது போலும்! பசிக்குத் தான் சாப்பிட வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. வட மாநிலக்காரர்கள் சமோசா பிரியர்கள் போல! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  10. #கெட்டுப் போவது போலத் தெரிந்தால் இன்னுமொரு முறை எண்ணையில் போட்டு சுடச் சுட தந்து விடுவார்கள் போலும்!#
    சமோசா சாப்பிடும் ஆசையே போயிடிச்சே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....