தொகுப்புகள்

திங்கள், 30 ஜூன், 2014

நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்



ஏரிகள் நகரம் – பகுதி 18

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17

ஏரிகள் நகரம் தொடரின் பதினேழாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


வசதியாக ஒரு துப்பாக்கி கூட எடுத்துக் கொண்டு போய், பார்க்கும் மான்களைச் சுடலாம் போல இருக்கிறதே என நினைத்தேன். மான்களைச் சுடுவது இருக்கட்டும், உள்ளே இன்னும் நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று வீரப்பன் சொல்ல, காட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம்.  எங்களை காடு வா வா என அழைத்தது!

சீதாவனி காட்டுக்குள் நாங்கள் கண்டது என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!


எங்கள் ஓட்டுனர் வீரப்பன் கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு ஜீப்பினை காட்டுக்குள் செலுத்தினார். காட்டுக்குள் செல்ல பாதி தூரம் வரை நல்ல பாதை உண்டு.  அதில் வேகமாகச் சென்றது ஜீப் – வேகம் என்றால் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் தான் – அதற்கே சரீரம் முழுவதும் குலுங்குவது போன்ற உணர்வு – சாலை அப்படி!



பொதுவாகவே வனப்பகுதிகுள் செல்லும்போது மனிதர்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் – அப்போது தான் விலங்குகள் பயப்படாமல் வெளியே வரும். போலவே காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பு, எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் ஓசை, ஆங்காங்கே குரல் கொடுக்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள், எங்கிருந்தோ வரும் விலங்குகளின் சம்பாஷணைகள் ஆகியன கேட்க முடியும். அதை ஊர்ந்து கவனித்து ரசிக்கவும் முடியும்.



இந்த வனப்பகுதிக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாது மனிதர்கள் நுழைந்து விடுவதால், காட்டுக்குள் வந்த உடன் மனிதர்களுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. ஏதோ ஒரு டிஸ்கோத்தே போய் இரவு முழுவதும் அதீத சத்தமாக வெளிவரும் குத்துப் பாடல்களுக்கு கையில் சாராய புட்டிகளோடு ஆட்டம் போடுவது போல இந்த வனப்பகுதிக்குள் ஆட்டம் போடுவதைக் காண முடிந்தது. காட்டின் நடுவே ஓடும ஒரு சிற்றோடையின் அருகே அப்படி ஒரு மனித கும்பலைக் காண முடிந்தது.



வனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள். 



போதையேறிய ஒரு இளைஞர் போதையில், தலையில் பாட்டிலை வைத்துப் பிடித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். எங்கள் கையிலிருந்து கேமராக்களைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அதிகம் ஆடியதோடு விதம்விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்.  அவர்களின் நிலை கண்டு சிரித்தபடியே நாங்கள் நகர ஆரம்பித்தோம். பாட்டில்களை ஆங்காங்கே விசிறி உடைத்துப் போட்டார்கள்! அதை உடைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் அவர்களுக்கு.



காட்டுப் பகுதிக்குள் வந்து இப்படி கண்ணாடிகளை உடைத்துப் போடுவது அந்த இடத்தில் உலா வரும் விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்பதோ, வீசும் நெகிழி பைகளை உண்டு விலங்குகள் தங்களது முடிவினை கண்டுவிடக்கூடும் என்பதோ இந்த மனிதர்களுக்கு உறைக்கவே இல்லை. காட்டிலே இருக்கும் விஷம் கொண்ட பூச்சிகளை விட இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் என்ற நினைவுடனே பயணித்தோம்.



கொஞ்சம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்து விட்டோம். ஆங்காங்கே சில காலி இடங்கள். அவற்றின் அருகே வரும்போது வாகனம் ரொம்பவும் குறைவான வேகத்தில் சத்தமே வராத மாதிரி பயணிக்கிறது.  ஓட்டுனர் வீரப்பனின் பழக்கப்பட்ட கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது.  காட்டு வழியில் ஒரு நரியைப் பார்த்து விட எங்களிடம் அதைக் காண்பித்த்தோடு அங்கே வாகனத்தினை நிறுத்தினார். நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.



எத்தனை விதமான மரங்கள். அவற்றிலிருந்து தானாக ஒடிந்து விழும் கிளைகளைக் கூட ஒருவரும் எடுப்பதில்லை. அந்தக் கிளைகளை சுற்றி கரையான் போன்ற புழுக்கள் கட்டிய மண் வீடுகள், அவைக் கட்டி முடித்தபின் அதாவது உள்ளே இருக்கும் மரம் முழுவதும் அரித்துத் தின்று முடித்தபின் வீட்டைக் காலி செய்துவிட, அங்கே பாம்புகள் குடியேறிவிடுமாம்.  உள்ளே சென்று வெளியே வர ஏதுவாய் ஓரிரு வழிகளும் இருக்க, ஒரு துவாரம் வழியே பாம்பு தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நாக்கை நீட்டி நீட்டி உள்ளே இழுத்துக் கொள்ள, ஏதோ எங்களைப் பார்த்து சொல்வது போல தெரிந்தது – ஒருவேளை, எங்களைப் பார்க்க வந்ததில் மகிழ்ச்சி எனச் சொல்லி இருக்குமோ?



மேலும் சில நிமிடங்கள் கழித்து வாகனத்தினை மீண்டும் நிறுத்தினார் வீரப்பன். எதற்கு என கண்களை நாலா பக்கமும் சுழற்ற சற்றே அருகில் ஒரு மான் கூட்டம். நாங்கள் சத்தம் எழுப்பாமல், நின்று வனாந்தரத்தில் சுதந்திரமாய்த் திரியும் மான் கூட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.     நண்பர் தன்னுடைய NIKON CAMERA-வில் படங்கள் எடுக்க, நான் எனது CANON-ஐ பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.  சில நிமிடங்கள் அந்த மான்களுக்கு தாங்கள் படம்பிடிக்கப் படுகிறோம் எனத் தெரியவில்லை.



தொடர்ந்த க்ளிக் சப்தங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் அந்த மான்களின் கவனத்தினை ஈர்க்க, எங்களை கவனித்து விட்டன.  உடனே அடடே இந்த மனிதர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களே என்ற எண்ணத்துடன் காட்டுக்குள் இருந்த புதர்களுக்குள் ஓடி ஒளிந்தன. அங்கிருந்தபடியே எங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டிருக்கும் என்ற நினைவுடன் அங்கிருந்து நகர்ந்தோம்.



காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தோம் – அருகே தண்ணீர் ஓடிக்கொண்டிருகும் ஓசை கேட்க, ஆவலுடன் அந்த சப்தம் கேட்கும் இடம் வந்துவிடாதா என பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடமும் வந்தது - கோசி ஒரு சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் குறுகிய நதியின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருக்க, அந்த வழியின் மூலம் கோசியைக் கடக்கப் போகிறோம். அதற்கு முன்னர் அங்கே சற்றே இளைப்பாறுவோமா?

தொடர்ந்து பயணிப்போம்....                                            

நட்புடன்

வெங்கட்
புது தில்லி…..

வெள்ளி, 27 ஜூன், 2014

ஃப்ரூட் சாலட் – 97 – பழங்காசு – மருமகள் – தேனிலவு தம்பதிகள்





இந்த வார செய்தி:

தஞ்சாவூர் மெலட்டூர் கிராமத்து விவாசாயிகள், குறுவை சாகுபடி முடிந்தபின் விவசாயம் பார்க்க முடியாத காரணத்தினால் வேறு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம். வேறு யாரிடமோ வேலை செய்யாது தாமே வேலை செய்தால் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. அதனால் அவர்கள் வந்து சேர்ந்த இடம் – திருச்சியின் திருவரங்கம்.

காவிரி ஆறும் கொள்ளிடமும் சூழ இருக்கும் திருவரங்கத்தில் இந்த ஆறுகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ நிறைய மணல் இருக்கிறது. அதையும் தேவையில்லாத கருவை சுரண்டி அழிப்பது போல காவிரித் தாயின் வயிற்றைச் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.  ஆனால் இவர்களோ, அந்த காவிரி/கொள்ளிட மணலை தோண்டி, சலித்து அதில் புதைந்துள்ள பழைய நாணயங்களைத் தேடி எடுக்கிறார்கள்.

முன்பெல்லாம், அவர்களுக்குக் கிடைக்கும் செப்பு, தங்கக் காசுகளை பழைய கடைகளில் எடைக்குக் கொடுத்து விடுவார்களாம். இப்போதெல்லாம் சலித்து எடுக்கும் காசுகளை ஆராய்ச்சி மாணவர்களுக்கு விற்று விடுகிறார்கள்.  அதில் கிடைக்கும் பணம் அன்றைய வயிற்றுப் பாட்டிற்குப் போதுமானதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இங்கே கிடைக்கும் அரிய வகை, பழங்கால நாணயங்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. பொக்கிஷங்களான அக்காசுகள் பல மடங்கு விலை உடையதாக இருந்தாலும் இவர்களுக்குக் கிடைக்கப்போவதென்னவோ நூறு ரூபாய்க்குள் தான். 

இத்தொழிலில் ஐந்து குடும்பத்தினைச் சேர்ந்த 15 பேர் ஈடுபட்டுள்ளார்கள். காலை முதல் மாலை வரை ஆற்று மணலைச் சலித்து சலித்து வாழ்வாதாரம் தேடும் இவர்கள் வாழ்க்கை சலித்துப் போகாமல் இருக்க நிறைய காசுகள் கிடைக்கட்டும்....

முழுகட்டுரை இங்கே.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

சமையல்காரம்மா: அம்மா, வீட்டுல விருந்தாளி வந்துருக்காங்க. எலுமிச்சை ஜூஸ் குடுக்கலாம்னு பார்த்தா எலுமிச்சம் பழம் இல்லையே. என்ன பண்ணலாம்.

எஜமானி: அதுனால என்ன, அதான் டி.வி.யில் சொல்லிட்டே இருக்காங்களே, புது VIM LIQUID-ல 100 எலுமிச்சை சக்தி இருக்குன்னு.  அதில் இரண்டு சொட்டு உட்டு கலந்து கொடுத்துடலாம்!

இந்த வார குறுஞ்செய்தி:

HE SAID THAT THERE ARE ONLY TWO DAYS IN A YEAR, THAT NOTHING CAN BE DONE, ONE IS CALLED YESTERDAY AND THE OTHER IS CALLED TOMORROW, SO TODAY IS THE DAY TO LOVE, BELIEVE, DO AND MOSTLY LIVE – DALAI LAMA.

ராஜா காது கழுதை காது:

ரொம்ப நாளாச்சு இந்த தலைப்பில் எழுதி! – கேட்காமல் இல்லை ஆனாலும் எழுதவில்லை!

நேற்று பேருந்து நிலையத்தில் ஒரு பணியிலிருந்து பெரியவர் அமர்ந்திருந்தார். அருகிலேயே ஒரு துப்புரவுத் தொழிலாளி. சாலையை சுத்தம் செய்த பின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட நடைக்குப் பின் அமர்ந்து கொண்டிருந்த பெரியவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் எவ்வளவு ஓய்வூதியத் தொகை கிடைக்கிறது, எத்தனை மகன், மகள் என அடுக்கடுக்காய் கேள்விகள்-இடைவிடாத பதில்கள். கடைசியில் கேட்ட கேள்வி – மருமகள் வந்தாச்சா? அவள் நல்லவளா? எனக்கு கிடைத்த மருமகள் நல்லவள் – தினமும் காலையில் எழுந்து நான் வேலைக்குப் புறப்படும் முன் எல்லா பணிவிடைகளும் செய்வாள். மாலையில் வீடு திரும்பியதும் எனக்கு கால் பிடித்து விடுவாள்.  அதற்கு அந்த பெரியவர், பரவாயில்லையே, இவ்வளவு நல்லவளா உன் மருமகள் – காலெல்லாம் பிடித்து விடுகிறாளே! எனக்கேட்க, அப்படி பிடிக்கலைன்னா என் மகன் அவள திட்டி, ஒரு வழி பண்ணிடுவான் என்றார்!

ரசித்த காணொளி:

மனதைத் தொட்ட காணொளி – நீங்களும் பாருங்களேன்.....



இந்த வார புகைப்படம்:



WHAT AN IDEA SIR JI!

படித்ததில் பிடித்தது:

ஊட்டி குளிரவில்லை. சீசன் ஆரம்பிக்காததால் ஓட்டல்கள் காலியாக இருந்தன. குதிரையோட்டத்திற்காக நகரமே தன்னைப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தது. ஊட்டியில் கடுமையான குளிர்காலம் தவிர மற்ற நாட்களில் எப்போதும் தென்படுபவர்கள் தேனிலவு தம்பதிகள். ஒருவரோடு ஒருவர் பசை போட்டது போல ஒட்டிக்கொண்டு, பார்ட்னர் சொன்ன சின்ன ஜோக்குகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டு நேற்றிரவு ஞாபகங்களை கன்னத்தில் வெட்கச் சிவப்பாகத் தீட்டிக்கொண்டு இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத இளம் கணவன் மனைவிகள். இவர்களிடையே கூட அங்கங்கே சுருதி பேதங்களைக் கண்டேன்.

-          சுஜாதா எழுதிய தமிழ்நாடு 2000 மைல் எனும் பயணக் கட்டுரையிலிருந்து....

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 25 ஜூன், 2014

கேள்வியின் நாயகனே........... – தொடர் பதிவு



பழைய சினிமா படம் ஒன்றில் நடிகர் சிவக்குமார் “கேள்விக்கென்ன பதில்....  என் கேள்விக்கென்ன பதில்என்று டூயட் பாடி இருப்பார். பூரிக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டே இருந்தாலும், இன்னமும் தைரியமுடனும் தெம்புடனும் இருக்கும், அமெரிக்காவில் வசித்தாலும் மதுரைத் தமிழன் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நண்பர், சிவக்குமார் போலவே சில கேள்விகளை அவர் மனைவியிடம் கேட்காமல் [கேட்டால் எப்படியும் பூரிக்கட்டை பறக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதால்] பதிவுலக நண்பர்கள் பத்து பேரைக் கேட்டுள்ளார். அந்த பத்து பேரும் இன்னும் பத்து பத்து பேரை பதில் சொல்லக் கேட்க, ஒரு சங்கிலித் தொடர் இப்போது பதிவுலகில் ஓடிக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.



கேள்வியின் நாயகனாகிய மதுரைத் தமிழன் முதல் முதலாக அழைத்த பத்து பேரில் நானும் ஒருவன். அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே.....  பதில்களால் உங்கள் மனது சங்கடப்பட்டாலோ, கோபம் வந்தாலோ, சந்தோஷம் அடைந்தாலோ, மொத்தத்தில் நல்லதோ கெட்டதோ, எல்லாப் பெருமையும் மதுரைத் தமிழனுக்கே..... 

திருவிளையாடல் தருமி மாதிரி எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் என்று தப்பிக்க முடியாது செய்த நண்பர் மதுரைத் தமிழனுக்கு இன்னும் நிறைய பூரிக்கட்டை அடி கிடைக்க வாழ்த்தலாம் என்றாலும் எனது பூஞ்சையான மனது ஒப்புக் கொள்ள வில்லை!

வாங்க கேள்வி பதிலுக்குப் போகலாம்.

1.      உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கலப்படத்திற்கு நூறு வயது வாழ்வதெல்லாம் பகல் கனவு தான்.  அப்படி 100 வயது வாழ்ந்தால், 100-வது பிறந்த நாள் அன்று, ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று, 100 கிலோவில் பிறந்த நாள் கேக் வாங்கி பிறந்த நாள் கொண்டாடி அந்த கேக்கினை எல்லா குழந்தைகளுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவேன். இது வரை நான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதே இல்லையே! அக்குழந்தைகளுக்கு அன்றைய உணவுக்கான செலவும் என்னுடையதாக இருக்கும்.

2.      என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

இந்திய மொழிகளில் இன்னும் சில மொழிகளையாவது கற்றுக் கொள்ள வேண்டும் – இப்போதைக்கு குஜராத்தி.... தில்லியில் புதுசு புதுசா நிறைய குஜராத்தி வந்து சேர்ந்துட்டு இருக்காங்க! அவங்க பேசும்போது நம்மளை திட்டற மாதிரியே ஒரு உணர்வு!

3.      கடைசியாக  நீங்கள்  சிரித்தது எப்போது, எதற்காக?.

தினம் தினம் சிரிப்பா சிரிச்சுட்டு இருக்கேன்.....  இன்றைக்கு ஒரு ஜோக் படித்தேன்....  டீச்சர் [மைதிலி டீச்சர் இல்லை!] வகுப்பறையில் பாடம் எடுத்துட்டு இருக்காங்க. “ஒரு நாள் இந்த பூமியினை நாலா பக்கமும் தண்ணீர் சூழ்ந்து கொள்ளும், எல்லா உயிரினங்களும் அழிஞ்சு போயிடும். எல்லாமே சேதமாயிடும்அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு பையன் எழுந்து அவங்களை ஒரு கேள்வி கேட்டானாம் – “மிஸ்...  அன்னிக்கும் உங்க கிளாஸுக்கு வரணுமா? அவன் கவலை அவனுக்கு!  

4.      24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?

தலைநகர் தில்லியில் நான் இருக்கும் பகுதியில் பவர் கட் என்பது கிடையாது. அப்படி 24 மணி நேரம் மின்சாரத் தடை இருந்தால், வியர்வை சிந்தி உழைத்ததாய் நினைத்தபடியே அமர்ந்து விடுவேன் – வியர்வை சிந்தி உழைச்சு ரொம்ப நாளாச்சுப்பா!

5.      உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?....

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான் –

வாழ்க்கைப் பயணத்தினை நீங்கள் இருவரும் சேர்ந்து கடக்க வேண்டும் – உங்கள் பாதையில் ரோஜாப்பூக்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது, இடையிடையே சில முட்களும் இருக்கலாம். அதைத் தாண்டிச் செல்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது. எந்த விஷயத்திற்காகவும் உங்களுக்குள் சண்டையோ சச்சரவோ வந்து விடக்கூடாது – விட்டுக் கொடுத்தலில் இருக்கும் சுகம் வேறெதிலும் இல்லை.

6.      உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்?

எங்கே பார்த்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள் – படிக்க வேண்டிய வயதில் கடுமையான வேலைக்கு வந்து விடுகிறார்கள்.  அவர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்க விரும்புவேன்.

7.      உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்?

என் நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் – என் பிரச்சனைக்கு இது தான் தீர்வு என்று எவரால் நிச்சயமாக சொல்ல முடியுமோ – அவரிடத்தில்.  

8.      உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

தவறான செய்தி பரப்பும் நபரிடம் அவரது தவறினை எடுத்துச் சொல்வேன்.  கேட்க மறுத்தால், அதைப் பற்றி கவலைப் படமாட்டேன். என்னை நன்கு புரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்பதால், தவறான செய்தி பப்பும் நபரை விட்டுவிடுவேன்.
9.      உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?

அந்த நேரத்தில் அவரது தேவை தனிமை மட்டுமே....  நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த சந்தோஷமான நினைவுகளை நினைத்துப் பார், அந்த நினைவுகளில் உன் மனைவி தொடர்ந்து இருப்பார், உன்னை விட்டு அகல மாட்டார் என்று சொல்லி அவரை தனிமையில் விடுவேன்.


10.  உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

வாசிப்பு, மெல்லிசை கேட்பது, சின்னச் சின்னதாய் வீட்டு வேலைகள், தூக்கம் என பெரிய பட்டியலே இருக்கிறது. எதைச் சொல்ல எதை விட!

ஆஹா பத்து கேள்விகள் முடிந்து விட்டதா! 

கேள்விக்கு பதில் சொல்வது கூட பெரிய வேலையாகத் தோன்றவில்லை. இந்த கேள்விகளை கேட்டு நானும் பத்து பேரை மாட்டி விட வேண்டுமாம்....  அது தான் கடினமான விஷயம்.  என் வலையுலக நட்புகள் பலர் ஏற்கனவே மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.....  ம்....  சென்னை பித்தன் ஐயாவின் வழியை நானும் தொடர்வது நல்லது என்று தோன்றுகிறது. 

கேள்விகளுக்கு பதில் சொல்ல நினைக்கும் நண்பர்கள் சொல்லலாம். பதிவினை முடிப்பதற்கு முன் கேள்விகள் பற்றி நண்பர் நெய்வேலி பாரதிகுமார் சொல்வதைச் சொல்லி இப்பதிவினை முடிக்கிறேன்....

எண்ணங்கள் சிருஷ்டிக்கப்படும்போது கேள்விகளும் முளைக்கின்றன. எனக்கும் அப்படித்தான். சில கேள்விகளுக்குப் பதில் தேட முயன்றிருக்கிறேன். சில பதில்களை கேள்வியோடு பொருத்தமுடியாது திணறியிருக்கிறேன். சில கேள்விகள் இன்னும் சில கிளைக்கேள்விகளை பிறப்பித்திருக்கின்றது. சில கேள்விகள் பதில்களில்லாமல் பேயாட்டம் போடுகின்றது. இருப்பினும் கேள்விகளோடு வாழ்தல் அர்த்தமுள்ள வாழ்க்கையென்றே எனக்குப் படுகிறது. 

மீண்டும் சந்திப்போம்....


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.