அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட விலகிடுவேனா இதயமே பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
RELATIONSHIP
IS LIKE ONION, WHICH HAS MANY LAYERS OF TRUST AND CARE; IF WE TRY TO CUT IT, WE
WILL FIND NOTHING EXCEPT TEARS IN OUR TEARS.
******
பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை. ஆதலினால் பயணம் செய்வோம். தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர்
உங்களுக்கும் பயன்படலாம். இந்திரனின் தோட்டம்
என்ற தலைப்பில் இதுவரை
வெளியிட்ட பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி
கீழே!
பகுதி
ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின்
தோட்டம்.
பகுதி
இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்
பகுதி
மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி
ஒரு சாலைப் பயணம்
பகுதி
நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத்
தோட்டம்
பகுதி
ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்
பகுதி
ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு
பகுதி
ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்
பகுதி
எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்
பகுதி
ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா
பகுதி
பத்து - Himalayan Mountaineering Institute
பகுதி
பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway
அனுபவம்
பகுதி
பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்
பகுதி
பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT
பகுதி
பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா
பகுதி
பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா
பகுதி
பதினாறு - கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம்
பகுதி
பதினேழு - நாதுலா பாஸ் - சீன எல்லையில்…
******
இந்தப் பயணத்தொடரின் சென்ற பகுதியில் சிக்கிம் மாநிலத்தில் அமைந்திருக்கும்
நமது தேசத்தின் சீன எல்லைப்பகுதியான நாதுலா பாஸ் குறித்த சில தகவல்களை உங்களுடன்
பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தொடர்ந்து வேறு சில விஷயங்களை இந்தப்
பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். எல்லைப்பகுதியிலிருந்து புறப்பட்ட
எங்கள் வண்டிகள் அடுத்ததாக நின்றது வழியில் இருந்த ஒரு சிறு கிராமத்தில்! காலையில்
இதே வழியாகச் சென்றபோது வண்டிகளை நிறுத்தி, தேநீர் அருந்தியதோடு, மதியம்
திரும்பும் சமயம் முடிந்த உணவினை சமைத்து வைக்குமாறு அங்கே இருந்த கடையில்
சொல்லிச் சென்றிருந்தோம். சொல்லி வைத்தபடியே
எங்களுக்காக வீட்டு உணவு போலவே, மிகவும் எளிமையாக சாதம், dhதால், ஒரு சப்ஜி என
சமைத்து வைத்திருந்தார் அந்த கடையில் இருந்த பெண்மணி. அவரும் அவரது குழந்தைகளும் (எல்லோரும்
பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள்) சேர்ந்து எங்கள் அனைவருக்கும் உணவு அளித்து
எங்கள் வயிற்றுப பசியைப் போக்கினார்கள். எங்களுக்குத் தந்த உணவுக்காக அவர்கள்
வாங்கிக் கொண்ட பணம் குறைவு என்றாலும் எங்கள் அனைவருக்கும் வயிறும், மனதும்
ஒன்றாகவே குளிர்ந்தது. இது போன்ற குளிர்
பிரதேசங்களில் காய்கறிகள் குறைவாகவே கிடைக்கும். மலைப்பகுதி என்பதால் சில வித காய்கறிகள்
மட்டுமே அங்கே விளைகின்றன. விதம் விதமான காய்கறிகள் அங்கே விளைவதில்லை. இருக்கும் வசதிகளைக் கொண்டு உணவு
சமைத்து எங்களுக்குப் பகிர்ந்து கொண்ட அவர்களுக்கு நன்றி கூறி அங்கேயிருந்து
புறப்பட்டு நாங்கள் சென்ற இடம் எது? அங்கே என்ன சிறப்பு? தொடர்ந்து வரும் பத்திகளில் அது
குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
நமது எல்லைப் பகுதிகள் அனைத்தும் பலவித வீர சாகசக் கதைகள், மயிர்
கூச்செறியச் செய்யும் நிகழ்வுகள் என பல விஷயங்களை தம் உள்ளே புதைத்து வைத்த
பகுதிகள் என்று சொன்னால் மிகையாகாது. இந்த எல்லைப் பகுதிகளிலிருந்து வெகு
தொலைவில், பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நம் தமிழ்
மக்களுக்கு இந்த இடங்களில் நடக்கும் பல விஷயங்கள் தெரிவதே இல்லை. ஊடகங்களும் இணைய வெளியிலும்
சொல்லப்படும் பல தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது அரைகுறை செய்திகள்
மட்டுமே. நேரடியாக அங்கே
செல்லும்போது பல சாகசக் கதைகளை அங்கே இருக்கும் வீரர்களிடமிருந்து நேரடியாகப்
பேசித் தெரிந்து கொள்ளும் போது நமக்கு அவர்களின் உண்மையான நிலை புரியும். சில விஷயங்களை நேரடியாக பொது வெளியில் சொல்ல
முடியாது - காரணம் அவை அங்கே இருக்கும் வீரர்களுக்குப் பாதகமாக முடியலாம். அப்படி
ஒரு கதை குறித்த சில விஷயங்கள் தான் இந்தப் பகுதியில் பார்க்க இருக்கிறோம். இந்தியாவின் சீன எல்லைப் பகுதியில் கடல்
மட்டத்திலிருந்து 13000 அடி உயரத்தில், இப்பகுதியில் பணி புரிந்த இராணுவ வீரரான
பாபா ஹர்பஜன் சிங் என்பவருக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார்கள். அப்படி எதற்காக அவருக்கு கோவில் அமைத்து
இருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஹர்பஜன் சிங் என்கிற இராணுவ வீரர், இந்திய-சீனப் போர் சமயத்தில் எல்லையில்
இருக்கும் நமது படைக்குத் தேவையான பொருட்களை கொண்டு செல்லும்போது நாதுலா பாஸ்
சமீபத்தில் உருகி வரும் பனிமலையில் வீழ்ந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இறந்த பின்னரும் ஆவியாக வந்து சக
இராணுவ வீரர்களுக்கு தான் இறந்த இடத்தினைத் தெரியப்படுத்தியதாகவும், அந்த இடத்தில்
அவருக்குக் கோவில் அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாது இன்று வரை அங்கே
இருக்கும் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பாகவும், எதிர் வரும் பிரச்சனைகள் குறித்த
தகவலை அவர்களுக்கு உணர்த்திவிடுவதாகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இங்கே
இருக்கும் இராணுவ வீரர்கள். இங்கே இருக்கும்
கோவிலில் அவரது சிலை இருக்கிறது. தினமும் அவருக்கு உணவு படைக்கிறார்கள் என்பதோடு
இன்னமும் அவருடைய குடும்பத்தினருக்கு அவரது சம்பளம் அளிக்கப்படுகிறது என்றெல்லாம்
தகவல்கள் உண்டு. அது மட்டுமல்ல இந்த
எல்லைப்பகுதியில் நடத்தப்படும் இராணுவம் சம்பந்தமான அனைத்து கூட்டங்களிலும்
அவருக்கென்று ஒரு இருக்கை காலியாக வைக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
மனித உடலை வருத்தும் இந்தப் பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்கள்
அனைவருக்கும் ஒரு பாதுகாவலனாக, ஆபத்பாந்தவனாக பாபா ஹர்பஜன் சிங் அவர்கள் இருப்பதாக
இங்கே இருக்கும் அனைத்து இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் நம்பிக்கை
வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வீரரும்,
பாபாவுடனான அவரது அனுபவங்களைச்
சொல்லும் போது நமக்கும் உடல்
சிலிர்க்கிறது. அந்தப் பகுதி அப்படி
ஒரு அமைதியாக இருக்கிறது. தொடர்ந்து அந்த
இடத்தில் குரு வாணி என்று சொல்லப்படும் குரு நானக் அவர்களின் கீர்த்தனைகள்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள், இராணுவ வீரர்கள், அதிகாரிகள் என
பலரும் தொடர்ந்து இந்த இடத்திற்கு வருவதில் இருந்தே இந்த இடத்திற்கு இருக்கும்
மகத்துவம் உங்களுக்குப்புரியும். புராணக்கதைகள் சமூக கட்டமைப்பின் ஒரு பகுதியாக
இருக்கும் நமது நாட்டில், பாபா ஹர்பஜன் சிங் கோவில் அனைத்து தரப்பு மக்களுக்கும்
அமைதியான ஆலயமாக தனித்துவமாக இங்கே நிமிர்ந்து நிற்கின்றது. இங்கு விஜயம் செய்வது
ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில் பார்த்தோமானால் மக்களை ஒன்றிணைக்கும்
நம்பிக்கைக்கு உதாரணமாக இருக்கின்றது. அதே சமயம் இந்தப் பகுதியில்
பணிநிமித்தம் செல்லும் இராணுவ வீரர்களுக்கு பாபா ஹர்பஜன் சிங் நம்பிக்கையின்
கலங்கரை விளக்கமாக திகழ்கிறார் என்றும் சொல்லலாம்.
இந்த இடத்தில் இன்னும் சில வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றன. மிகப்பெரிய சிவன் சிலை ஒன்று
பிரம்மாண்டமாக (12 அடி உயரம் கொண்ட வெள்ளை நிறச் சிலை) உயர்தர Fiberglass Material
கொண்டு தயாரித்து இங்கே நிர்மாணம் செய்திருக்கிறார்கள். ரிஷிகேஷ் நகரில் இருக்கும் சிலை போலவே
இங்கேயும் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 18 JAK RIF என்கிற இராணுவத்தின்
பிரிவினால் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. பாபா ஹர்பஜன் சிங் கோவில் இருக்கும்
இடத்திலிருந்து சுமார் 10 நிமிட நடையில் (மலைப்பாதை) நம்மால் இந்த சிவன் சிலை
இருக்கும் இடத்தினை அடைந்து விட முடியும். நாங்கள் சென்ற சமயம் கட்டுமானப்பணிகள்
முடிவடையாத காரணத்தால் அந்த சிவன் கோவில் அருகே செல்லவில்லை. தொலைவிலிருந்தே படங்கள் மட்டும்
எடுத்துக் கொண்டோம். தூரத்தில் இருந்து
பார்க்கும்போதே மிகவும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது அந்த சிவபெருமானின்
பன்னிரண்டு அடி சிலை. சில மாதங்களுக்குள்
கோவில் வளாகம் முழுமையும் கட்டிமுடிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக
திறந்து வைக்கப்படும் என்று தெரிகிறது. மிகவும் அழகானது மட்டுமல்லாது
அமைதியானதுமான சூழலில் இந்தக் கோவில்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
இந்த இரண்டு கோவில்களுக்குச் சென்று பார்த்த பிறகு அங்கே இருக்கும், இராணுவ
வீரர்களால் நடத்தப்படும் ஒரு சிறு அருங்காட்சியகம் கண்டு அங்கிருந்து
புறப்பட்டோம். புறப்பட்டுச் சென்ற
இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில்
சொல்கிறேன். அது வரை தொடர்ந்து
பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
பாபா ஹர்பஜன்சிங் கதை நெகிழ்த்துகிறது. அந்த பிரம்மாண்டமான சிவன் கோயில் இந்நேரம் முழுமையாகக் கட்டப்பட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குகோவில் கட்டப்பட்டு இருக்கலாம் - ஆமாம். பாபா ஹர்பஜன் சிங் போன்றவர்களின் கதை நெகிழ்ச்சியானவையே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
அங்கு கிடைக்கும் பொருட்களை, காய்களைக் கொண்டு உணவு தயாரித்து உங்கள் அனைவருக்கும் அவர்கள் அன்புடன் அளித்தது பெரிய விஷயம் இல்லையா! நான் யோசித்தேன் போன பதிவைப் பார்த்ததுமே அந்த மலைப்பகுதியில் எங்கு கடைகள் இருக்கும் எங்கிருந்து பொருட்கள் கிடைக்கும் மக்களுக்கு என்று பல கேள்விகள் எழுந்தன.
பதிலளிநீக்குஇராணுவ வீரர் பாபா ஹர்பஜன்சிங்க் கதை நெகிழ்த்தியது. எவ்வளவு கதைகள் மற்றும் நம்பிக்கைகள்! இராணுவ வீரர்கள் வாழ்க. அவர்களை நாம் வணங்குவோம்.
கீதா
நம்பிக்கை தானே வாழ்வில் எல்லாமே. கிடைக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு வாழும் எளிமையான வாழ்வு - நல்லதே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
பெரிய சிவன் சிலை! இப்போது கோயில் கட்டுமானம் நிறைவடைந்திருக்குமோ?!
பதிலளிநீக்குஅதன் பின்னணியில் கொஞ்சம் பசுமை இருக்கிறதொ?வறண்ட மலையில் அந்த சின்ன அருவி....அழகு! Oasis! போல....
அருகில் செல்ல முடியவில்லை இல்லையா...சிவன் அருகில் செல்ல முடிந்திருந்தால் இந்த அருவியையும் இன்னும் நன்றாகக் கண்டிருக்கலாம்.
கீதா
பெரிய சிவன் சிலை - பார்க்கவே அழகு தான் கீதா ஜி.
நீக்குஅருகே சென்று பார்க்கமுடியாததில் எனக்கும் வருத்தம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பாபா ஹர்பஜன் சிங் கதை படித்திருக்கிறேன். கோவில் இப்போதான் பார்க்கிறேன். செண்டிமெண்ட்ஸ், நம்பிக்கைகள் இராணுவவீரர்களை திட மனது உடையவர்களாகச் செய்கிறது
பதிலளிநீக்கு//செண்டிமெண்ட்ஸ், நம்பிக்கைகள் இராணுவவீரர்களை திட மனது உடையவர்களாகச் செய்கிறது// - உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
தகவல் சிறப்பு...
பதிலளிநீக்குதகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகமும் கதையும் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.
நீக்குஹர்பஜன் சிங்
பதிலளிநீக்குகதை ஏற்கனவே படித்திருக்கின்றேன்.. மனதை நெகிழ்த்துகின்ற சம்பவம்..
பிரம்மாண்டமான சிவ பெருமானின் அந்த கோயில் கண்ணில் நிறைகின்றது..
பதிவு சிறப்பு..
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சிக்கிம் சென்றபோது நாங்களும் பாபா ஹர்பஜன்சிங் கோயிலுக்கு சென்றுவந்தோம் வெங்கட் ஜி
பதிலளிநீக்குநீங்களும் இங்கே சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சிவன்சிலை அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குசிவன் சிலை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பாபா ஹர்பஜன் சிங் கோவில் ...சிறப்பு
பதிலளிநீக்குவெள்ளை நிறத்தில் பளிச்சிடும் சிவபெருமான் அழகு
பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.