தொகுப்புகள்

புதன், 7 ஜூன், 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பத்தொன்பது - சோம்கோ லேக்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LITTLE ADJUSTMENT IS ALWAYS BETTER THAN LENGTHY ARGUMENT; AND A MEANINGFUL SILENCE IS ALWAYS BETTER THAN MEANINGLESS WORDS.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


பகுதி பதினாறு - கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம்


பகுதி பதினேழு - நாதுலா பாஸ் - சீன எல்லையில்… 


பகுதி பதினெட்டு - பாபா ஹர்பஜன் சிங் கோவில்


******


சென்ற பகுதியில் பாபா ஹர்பஜன் சிங் கோவில் குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இந்தப் பகுதியில் அங்கிருந்து நாங்கள் சென்று சேர்ந்த ஒரு அழகான ஏரி குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  அந்த ஏரியின் பெயர் சோம்கோ ஏரி.  ஆங்கிலத்தில் எழுதும்போது TSOMGO LAKE என்று எழுதினாலும் படிக்கும்போது T சேர்த்து உச்சரிப்பதில்லை. மிகவும் அழகான ஏரி இது.  பனிக்காலம் முழுவதும் உறைந்து காணப்படும் இந்த ஏரி கோடையில் மட்டுமே நீருடன் காட்சி தருகிறது.  சுற்றிலும் மலைப்பகுதி என்பதால் நடுவே அமைந்திருக்கும் இந்த ஏரி பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இந்த ஏரிக்கு தண்ணீர் எங்கே இருந்து வருகிறது என்றால், சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள் இருப்பதால், வெய்யில் காலத்தில் பனி உருகும்போது அவை மலைகளின் வழி கீழே சமதளத்திற்கு வந்து சேர்ந்து கொண்டு, இந்த ஏரி உருவாகி இருக்கிறது.  பனிக்காலம் முழுவதும் உறைந்து இருந்தாலும், இல்லை தண்ணீருடன் இருந்தாலும், இந்த ஏரியும் அந்த சூழலும் மிகவும் ரம்மியமான, நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 



பனிமூட்டத்தில் ஏரி….












நாதுலா பாஸ் வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இங்கே வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  சிறிய ஏரி தான் என்றாலும் அதன் அழகு அதிகம்.  நாங்கள் அங்கே வந்து சேர்ந்த சமயம், கொஞ்சம் கொஞ்சமாக பனிமூட்டம் ஆரம்பித்து விட்டது.  பனிமூட்டம் காரணமாக கொஞ்சம் குளிரும் அதிகரித்து இருந்தது.  வண்டிகளிலிருந்து இறங்கிய பின்னர் குளிர் நன்றாகவே தெரிய ஆரம்பித்தது. ஒரு சிலருக்கு உடல் வாகு காரணமாகவும் குளிர் அதிகம் தெரியும்.  அதே போல ஒரு சிலருக்கு எத்தனை குளிர் இருந்தாலும் குளிர் தெரிவதில்லை.  அங்கே நாங்கள் சென்றபோது நூற்றில் 99 பேர் குளிருக்குத் தகுந்த உடையணிந்து வந்திருக்க ஒரு இளம்பெண் மட்டும் இறுக்கமான ஒரு உடை அணிந்து, அதுவும் Sleeveless, முட்டிக்கு மேல் இருக்கும்படியான உடையை அணிந்து வர, அங்கே இருந்த மற்ற 99 பேரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் - என்னையும் சேர்த்து! ஒரு மூத்த பெண்மணி, “இவளுக்குக் குளிரே அடிக்காதா? இப்படி டிரஸ் போட்டு வந்திருக்காளே?” என்றார் - அது அனைத்து மக்களின் எண்ணத்தினை பிரதிபலிப்பதாகத் தோன்றியது எனக்கு.  உடை அணிவது அவரவர் விருப்பம், அவரவர் வசதி என்றாலும், இடத்திற்குத் தகுந்த மாதிரி உடை அணிந்து கொள்வதே நல்லது. அவர் உடை, அவர் இஷ்டம் இல்லையா… இந்த விஷயத்தினை இப்படியே விட்டு ஏரியின் அழகைப் பற்றியும் அங்கே இருக்கும் மற்ற விஷயங்கள் பற்றியும் பார்க்கலாம். 


நாங்கள் சென்று சேர்ந்த சமயம் பனிமூட்டம் ஆரம்பித்து இருந்தது என்பதால் மலைப்பகுதிகள் எதுவும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை - அத்தனை பனி மூட்டம். அந்த அமைதியான சூழலையும் ஏரியின் அழகையும் ரசித்தபடியே ஒரு உலா வந்தோம்.  அதுவும் ஏரியின் அருகே இருந்த வாகன நிறுத்தத்தினை விட்டு விலகி கொஞ்சம் நடந்து வந்தேன்.  ஏனெனில் வாகன நிறுத்தத்திற்கு அருகே மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அது மட்டுமல்லாது அங்கே இருக்கும் உள்ளூர் மக்கள் - குறிப்பாக (YAK) யாக் என்கிற விலங்கினை வளர்க்கும் மக்கள், அவர்களது அலங்கரிக்கப்பட்ட யாக் உடன் அங்கே நின்று கொண்டு, அந்த யாக் மீது உலா வரவும் நிழற்படங்கள் எடுத்துக் கொள்ளவும் சுற்றுலாப் பயணிகளை அழைத்தவண்ணம் இருந்தார்கள்.  நிறைய பேர் இப்படி யாக் உடன் இருந்ததால் அவர்களுக்குள் பலத்த போட்டி இருந்தது.  எத்தனை பேரை யாக் மீது உட்கார வைத்து உலா வர முடிகிறதோ, அத்தனை வருமானம் அவர்கள் பார்க்க முடியும் என்பதால் இப்படியான போட்டி. வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே இவர்கள் இப்படி யாக் மூலம் சம்பாதிக்க முடியும்.  அதன் பிறகு சம்பாத்தியம் குறைந்து விடும் என்பதால் எப்போதும் பலத்த போட்டி உண்டு.  


இப்படி சுற்றுலாவாசிகள் வரும்போது மட்டும் இவற்றின் மீது அமர்ந்து உலா வர வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்றாலும், இதைத் தவிர வேறு சில உபயோகங்களும் இந்த விலங்கினால் உண்டு. இதன் இறைச்சி சில நாடுகளில் உண்பதுண்டு.  சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் வரை மட்டுமே ஒரு யாக் உயிர் வாழும்.  இதன் மேல் இருக்கும் அடர்த்தியான முடியும் உடைகள் தயாரிக்க பயன்படுகிறது என்பதால் அதிலிருந்தும் சம்பாதிக்கிறார்கள்.  கடல் மட்டத்திலிருந்து 20000 அடி உயரம் வரை இந்த யாக் சுலபமாக உயிர் வாழும் என்றாலும், உயரம் குறைந்த பகுதிகளில் இவற்றால் உயிர் வாழ முடியாது.  வெப்பம் இதனால் தாங்கமுடியாது என்பதால் சமவெளிப்பகுதிகளில் இவை இருப்பதில்லை.  அப்படியே அதன் உரிமையாளர்கள் இப்படியான இடங்களில் அழைத்து வந்தால் சில நாட்களுக்குள் உயிரிழக்கும் அபாயம் உண்டு. அதிக வெப்பம் இதனால் தாங்க முடியாது என்றாலும், எத்தனை அதிக குளிர் இருந்தாலும் - அதாவது -40 டிகிரி செல்சியஸ் அளவு வரை குளிர் இருந்தால் கூட இதன் மீது இருக்கும் அடர்த்தியான முடியினால் இதனால் அந்தக் குளிரைத் தாங்க முடியும்.  நன்கு வளர்ந்த ஒரு யாக் சுமார் 1000 கிலோ வரை இருக்கும். இத்தனை எடை கொண்டதாக இருந்தாலும், இந்த விலங்கினால் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் முடியும்! ஒரு வித உறுமல் ஓசை எழுப்புவதால் இந்த யாக்கிற்கு ஆங்கிலத்தில் Grunting Ox என்ற பெயரும் உண்டு. 




இயற்கையின் படைப்பில் தான் எத்தனை எத்தனை   உயிரினங்கள்!  ஒவ்வொன்றுக்கும் விதம் விதமான வடிவங்கள், உபயோகங்கள் என வித்தியாசங்கள்.  இத்தனையும் படைத்த ஆண்டவனின் லீலையினை என்னென்று புகழ்வது. அந்த இயற்கை எழில் கொஞ்சும் சூழலினை அனுபவித்து ஒரு நடை நடந்த பிறகு நானும் யாக் மீது ஒரு உலா வரவும், சில படங்கள் எடுத்துக் கொள்ளவும் களத்தில் இறங்கினேன்.  பொதுவாக அந்த விலங்கினை நாம் துன்பப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் இருந்தாலும், அதனை வைத்திருக்கும் மனிதன் கொஞ்சமாவது சம்பாதித்தால் தான் அதற்கான உணவினை தர முடியும் என்பதற்காகவேனும் இப்படியான விஷயங்களில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது.  ஆள் ஒருவருக்கு 100 ரூபாய் வாங்கிக் கொண்டு, நம்மை யாக் மீது அமர வைத்து ஐம்பது நூறு அடிகள் எடுத்து வைத்து ஒரு சுற்று சுற்றியபின்னர் உங்களை கீழே இறக்கி விட்டு விடுகிறார்கள்.  இறங்குவதற்கு முன்னர் நீங்கள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நண்பர்களை விட்டு எடுத்துக் கொள்ளலாம்.  எங்கள் குழுவில் இருந்த பலரும் அங்கே இருந்த பல யாக் மூலம் இப்படி உலா வந்ததும், படங்கள், காணொளிகள் எடுத்ததும் நடந்தது.  சுமார் 45 நிமிடங்கள் இந்த இடத்தில் இருந்து இயற்கை எழிலை ரசித்த பிறகு அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம். 


இன்னும் நீண்ட தொலைவு பயணித்து சிக்கிம் தலைநகர் Gகாங்டாக் வரை செல்ல வேண்டும் என்பதால் எங்கள் பயணம் அந்த இடத்தினை விட்டு விலக மனமில்லாமல் தொடங்கியது.  நீண்ட நேரம் பயணத்திற்குப் பிறகு நாங்கள் எங்கள் தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.  சிறிது ஓய்வுக்குப் பிறகு, இரவு உணவுக்கு முன்னதாக எங்கள் குழுவில் இருந்த அனைவரும் தங்குமிடத்தில் இருந்த ஒரு சிறு வளாகத்தில் ஒன்று சேர்ந்தோம்.  பயிற்சி முழுவதும் ஒன்றாக இருந்த பின்னர் அன்றைய நாள் எல்லோரும் சேர்ந்து பயிற்சி குறித்தும், எங்கள் பயணம் குறித்தும் அளவளாவிய பின்னர் எங்களுடன் வந்திருந்த பயிற்சியைத் தந்த பயிற்சியாளருக்கு நன்றி சொன்னதோடு, அவருக்கு சின்னதாக பரிசும் வாங்கிக் கொடுத்தோம்.  அதற்காக எங்கள் அனைவரிடமும் ஒரு சிறு தொகை வசூலித்து அவருக்கு இரண்டு பரிசுப் பொருட்களைக் கொடுத்து அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்தோம். அந்த நிகழ்வில் சில நண்பர்கள் பாட்டுகள் பாடினார்கள் என்றால் சிலர் ஆடினார்கள்.  மிகவும் மகிழ்வான ஒரு மணி நேர நிகழ்வாக அந்த நிகழ்ச்சி நடந்தேறியது. அதன் பிறகு இரவு உணவும், கடைசி நாள் கொண்டாட்டங்களும் தொடர்ந்தன.  தொடர்ந்து நடந்த விஷயங்கள், அடுத்த நாளின் நிகழ்வுகள் போன்றவற்றை, இத்தொடரின் இறுதி பகுதியாக அடுத்த பகுதியில் சொல்கிறேன். அது வரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

20 கருத்துகள்:

  1. பொது இடங்களில் பார்த்து உடை அணிய வேண்டியது அவசியம்...பிறர் பார்க்கும் வண்ணம் அல்ல. ஆனாலும் அந்தப் பெண் அப்படி ஒன்றும் மோசமாக உடை அணியவில்லை போலவே.. குளிருக்கு ஏற்ற உடை அல்ல.. அவ்வ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோசமான உடை - அடுத்தவர் பார்வையில்! குளிர் காலத்தில் இப்படியான உடை அணிவது சரியல்ல! அவருக்கு தான் கெடுதல்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. யாக் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். உங்கள் யாக் உலாவில் ஒரு பயணி நைசாக யாக் தாண்டியதும் பின்னால் ஒரு உதை விடுகிறார். அது மிரண்டு ஓட ஆரம்பித்திருந்தால் என்ன ஆவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதை விடும் பயணி! - வேதனை. இப்படி சிலர் வந்துவிடுகிறார்கள் - போலி ஹீரோயிசம்! ஓட ஆரம்பிக்க வேண்டாம். யாக் பின்புறம் அந்த நபர் இருந்திருந்தால் போதும் - கழுதைகள் போல இவையும் பின்னங்கால்களால் தாக்குபவை! இப்படியும் சில மனிதர்கள் என்ற பெயரில் ஜந்துக்கள் இருக்கத்தான் செய்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. யாக் மாடு இதுதானே ஜி கவரிமா வகை ?

    உடையணிந்து அவரவர் சுதந்திரம் ஆனால் இடம், பொருள், ஏவல் என்பது முக்கியம்.

    காணொளி கண்டேன் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மாடு வகையா என்பதை அறிந்திலேன் கில்லர்ஜி. உடைக்கு இடம், பொருள், ஏவல் முக்கியம் - உண்மை.

      காணொளி கண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. யாக் தொடர்பான செய்தியை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாக் தொடர்பான செய்திகளை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. யாக் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். காலம் காலமாக சினிமா படங்களில் உருவான பழக்கம், கதாநாயகிகள் குளிர்ப்பிரதேசங்களில் குறைந்த உடை அணிவது.
    அதுவே இளசுகளின் ஃபேஶன் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாக் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      சினிமா மோகம் - சரியான அவதானிப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. ஏரி பனி படர்ந்திருந்தாலும் அழகு!!.

    யாக் பற்றிய விஷயங்கள் நல்லாருக்கு ஜி.

    பொது இடங்களில் உடை மிக முக்கியம். ஆனா இப்பொதைய trend ற்லு அந்தப் பெண் பரவாயில்லை...அதை விட மோசமாகப் பொதுஇடங்களில் அணிபவர்கள் இருக்காங்களே!!!!!!!!!...பெண்ணிற்குக் குளிர்வில்லையா? அதுவும் குளிர் கால் கைகளில் முதலில் தெரியுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரி மிகவும் அழகு தான் கீதா ஜி.

      பொது இடங்களில் உடை - அதிலும் சரியான வகை உடை முக்கியம் தான். கால்களில் தான் குளிர் முதலில் தெரியும். அதற்காகவே இங்கே காது, கைகள், கால்கள் ஆகியவற்றை மூடி வைத்திருக்கச் சொல்வார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. அழகான இடம். பனி விலகிய சமயத்தில் பார்த்தால் வேறு ஒரு அழகு உங்கள் வழியாக எங்களுக்கும் கிடைக்கும்.

    காணொளியில் அது யார் அப்படி Yak கை உதைக்கிறார்.? விலங்கு என்பதால் இப்படி உதைக்கலாமா? யாக் உரிமையாளர் அவரைத் திட்டுகிறாரோ? அல்லது கவனிக்கவில்லையோ. அப்படி உதைப்பதில் அது மிரண்டிருந்தாலோ? ஆபத்து இல்லையா? Senseless people! கோபம் வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனி விலகி இருந்த சமயத்தில் சென்றிருந்தால் இன்னும் சில அழகிய காட்சிகளைக் கண்டு ரசித்திருக்க முடியும்.

      யாக்-ஐ உதைக்கும் நபர் - Senseless People - உண்மை. வேதனையான நிகழ்வு தான். அங்கேயே அவரை சிலர் திட்டினோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. யாக் காணொளி படங்கள் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாக் படங்களும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. சோம்கோ ஏரி ... மிக அழகு

    யாக் செய்திகள் சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனு ப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....