அனைத்து நண்பர்களுக்கும்
இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்தப்
பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை – நம் துன்பங்களும் அப்படியே தான் – சார்லி
சாப்ளின்.
இந்த ஞாயிறில் மீண்டும் ஒரு ஹிந்தி மொழி குறும்படம் பற்றிய
தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு அனாதை இல்லம். அங்கே வசிக்கும் குழந்தைகளில் இரு சிறுவர்கள் –
ராஜு மற்றும் ஜும்ரூ தான் பிரதான கதாபாத்திரங்கள்.
இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது யாரேனும் வந்து கொடுக்கும் துணிகளை,
அளவு பார்த்து பிரித்துக் கொடுக்கிறார்கள்.
இல்லத்தின் அருகே இருக்கும் பள்ளிக்கு
வரும் குழந்தைகள் அனைவருமே போட்டுக் கொண்டு வரும் Coat மீது ராஜூவிற்கு அளவு
கடந்த ஆசை – தனக்கு யாரேனும் ஒரு கோட் கொடுக்க மாட்டார்களா என. ஒவ்வொரு முறை துணி மூட்டை
வரும்போதும் கோட் இருக்கிறதா எனப் பார்த்து ஏமாற்றத்துடன் இல்லத்தின் வாயில்கதவிற்கு
அருகே நின்று கோட் அணிந்து பள்ளி செல்லும் சிறுவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதே
அவனுக்கு வேலையாக இருக்கிறது. அந்த சமயத்தில்
கோட் அணிந்த ஒருவர் இல்லத்திற்கு வருகிறார்.
அவர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளில் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ள வந்திருப்பவர்.
பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு ராஜூவை பிடித்து விடுகிறது. தத்து எடுத்துக் கொள்ள வேண்டிய சம்பிரதாயங்களை ஆரம்பிக்கிறார்கள். இல்லத்திலிருந்து புறப்படும் முன்னர் ராஜூவை இல்லத்தில்
இருக்கும் பூங்காவில் சந்திக்கிறார் அந்த மனிதர். விரைவில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார்
ராஜூவிடம். வீட்டுக்கு வந்தா வேலை செய்யணுமா?
எனக் கேட்கும் சிறுவன் ராஜூ மனதைத் தொடுகிறார். பல இடங்களில் இப்படித்தான் நடக்கிறதே.
ஆமாம் – ”நீ படிக்கணும், ஹோம் ஒர்க் பண்ணனும், சாயங்கால வேளைகளில் என்னுடன் விளையாடணும்” இது தான் உனக்கு வேலை என்று
சொல்கிறார். சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட, ராஜூ அந்த மனிதரை அணைத்துக் கொண்டு
விடுகிறார். அங்கிருந்து விலகிச் செல்கிறார்.
அந்த மனிதரும் அங்கே இருந்து செல்கிறார். செல்லும்
முன்னர் பூங்காவில் கழற்றி வைத்த கோட்-ஐ மறந்து விடுகிறார். பூங்காவிலேயே கிடக்கிறது அந்தக் கோட். அதன் பின்னர் அந்த மனிதர் வந்தாரா? ராஜூவிற்கு ஒரு
வீடு கிடைத்ததா? அவன் ஆசைப்பட்ட படி கோட் கிடைத்ததா? என்பதையெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்
இந்தக் குறும்படத்தில்.
சுமார் 15 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம். மனதைத் தொட்ட குறும்படம். உங்களுக்கும் இந்தக் குறும்படம் பிடிக்கலாம்! பார்த்து
விட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று
தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன்.
அங்கேயும் சென்று பார்க்கலாம்!
நண்பர்களே, இந்தக்
குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி